Published:Updated:

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

பக்கத்து வயல் - ஆர்.குமரேசன்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

பக்கத்து வயல் - ஆர்.குமரேசன்

Published:Updated:
சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

த்தீஸ்கர் என்றவுடனேயே நக்சலைட்கள், மாவோயிஸ்ட்கள் நடமாடும் பகுதி என்ற எண்ணம்தான் அனைவருக்கும் வரும். சமீபத்தில், அங்குள்ள சுக்லா மாவட்டத்தில் எல்லைக் காவல்படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட ஈரம்கூட இன்னமும் காயாத நிலையில் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றுவதில் தவறில்லைதான்.

ஆனால், துப்பாக்கிகளின் சப்தங்களும், பரபரப்புமே மட்டும் நிறைந்தது அல்ல சத்தீஸ்கர் மாநிலம். நக்சல் எனப்படும் திரைக்குப் பின்னால், அமைதியாகவும், அழகாகவும் சிரித்துக்கொண்டிருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் உண்மை முகம் வெளியுலகம் அறியாதது. சத்தீஸ்கரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. குறிப்பாக, அந்த மாநிலத்தின் விவசாயம் பற்றிய பல தகவல்கள் ஆச்சர்யப்பட வைப்பவை. சமீபகாலமாக விவசாயத்துக்காகப் பல நல்ல திட்டங்களை மாநில அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ‘தாம்தரி’ (Dhamtari) என்ற மாவட்டத்தில் இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்கள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தைச் செழிப்பாக வைத்திருக்கும் மகாநதி, இந்த மாவட்டத்தி்ன் வழியாகத்தான் செல்கிறது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த மாவட்டம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

வடமாநிலங்களில் முதன்முறையாக இங்கு ‘கிஸான் பஜார்’ என்ற பெயரில் உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான ‘இ-ஆக் ஷன் சென்டர்’ சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்துக்கான பயிற்சி மையம் மற்றும் இயற்கை விளைபொருள்களுக்கான கண்காட்சி, விற்பனை மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

100 கிராமங்களை முழுமையான இயற்கை விவசாயக் கிராமங்களாக மாற்றுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இத்தனை செயல்களுக்கும் காரணமாக இருப்பவர், தாம்தரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரசன்னா. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த பிரசன்னா, அடிப்படையில் கால்நடை மருத்துவர். ‘பசுமை விகடன்’ இதழின் தீவிர வாசகர்.

தமிழகத்தில் இருக்கும் பல முன்னோடி விவசாயிகள், இயற்கை விவசாயப் பயிற்சியாளர்களை அழைத்து வந்து தாம்தரி மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார், பிரசன்னா. ரசாயனத்தை அதிகளவு பயன்படுத்தும் தாம்தரி மாவட்ட விவசாயிகள், கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்துக்குள் அடியெடுத்து வைத்து வருகிறார்கள். அங்கு நடந்துவரும் நல்ல மாற்றங்களைத் தெரிந்துகொள்வதற்காகத் தாம்தரிக்கு பயணமானோம்.

தமிழ்நாட்டைவிட, சத்தீஸ்கரில் வெயில் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்் இருந்தாலும், காற்றில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும். ஆனால், அங்கு ஈரப்பதம் இல்லாததால், சுளீர் எனச் சுடுகிறது. ஆண்கள், பெண்கள் அனைவரும் துணியால் தலை, முகம் அனைத்தையும்  முழுமையாக  மூடிய படியேதான் நடமாடுகிறார்கள். பார்க்கும் இடமெல்லாம் மாடுகள் கூட்டம் கூட்டமாக அலைகின்றன, சாலைகளில் நம் ஊரைப்போல் நெரிசல் இல்லை. சைக்கிள் பயன்பாடு அங்கு அதிகமாக இருப்பதும் நெரிசல் இல்லாததற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

விவசாயத்தைப் பொறுத்தவரை, நவீன தொழில்நுட்பங்கள் இன்னமும் அவர்களுக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை. சோலார் மின் மோட்டார் தற்போதுதான் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள விவசாயிகள், தொன்மையான விவசாய முறைகளைக் கைவிடவில்லை. அதேநேரம், ரசாயன இடுபொருள்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். நெல், இவர்களின் பிரதான விவசாயமாக இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் காய்கறிப் பயிர்கள் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

முதல் உழவர் சந்தை!

இவர்கள் விளைவிக்கும் காய்கறிகளை நம்மூரைப் போலவே கமிஷன் ஏஜென்டுகளிடம்தான் விற்பனை செய்தாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. காய்கறி கொடுத்தால் உடனடியாகப் பணம் பட்டுவாடா நடக்காது. பணத்துக்காக விவசாயிகள் அலைக்கழிக்கப்படும் நிலை இருக்கிறது. இந்தச் சிக்கலால்தான் பெரும்பான்மையான விவசாயிகள் காய்கறிச் சாகுபடி பக்கம் கவனம் செலுத்துவதில்லை. ஒருசில காய்கறி விவசாயிகள், தங்கள் விளைபொருள்களைக் கமிஷன் கடைகளுக்குக் கொண்டு செல்லாமல், தாங்களாகவே சாலையோரங்களில் அமர்ந்து விற்பனை செய்துகொள்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையை மாற்ற விரும்பிய மாவட்ட  ஆட்சியர் பிரசன்னா, தமிழ்நாட்டைப் போலவே, உழவர் சந்தை ஒன்றை தாம்தரியில் தொடங்கியுள்ளார். ‘கிஸான் பஜார்’ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த உழவர் சந்தைதான், வடமாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல் உழவர் சந்தை’ என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!


வடமாநிலங்களில் உள்ள மார்க்கெட்களை ‘மண்டி’ என அழைக்கிறார்கள். அங்கு ஒவ்வொரு பகுதியிலும் ‘மண்டி’ என்ற பெயரில் இடம் இருக்கிறது. ஆனால், பல இடங்களில் மண்டிகள் பயன்பாடு இல்லாமல் இருக்கின்றன. தாம்தரியில் உள்ள மண்டி மார்க்கெட்டும் அப்படிக் காலியாக இருந்த இடம்தான். இந்த இடத்தில்தான் கிஸான் பஜாரை அமைத்திருக்கிறார், பிரசன்னா. காலை 8 மணிக்கு கிஸான் பஜாருக்குள் நுழைந்தோம். விவசாயிகளும் நுகர்வோரும் ஒரே இடத்தில் சந்திப்பது அம்மக்களுக்குப் புதிய அனுபவம் என்பதை, அவர்களின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை வைத்தே புரிந்துகொள்ள முடிந்தது.

நமது உழவர் சந்தையைப் போலவே, கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 46 கடைகள் இருந்தன. காலை 8 மணி முதல் 11 மணி வரை கிஸான் பஜார் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், 8.30 மணிக்கே பெரும்பாலான கடைகளில் பொருள்கள் விற்றுத் தீர்ந்திருந்தன. கடந்த ஏப்ரல் 6-ம் தேதி துவங்கப்பட்ட கிஸான் பஜார், அடுத்த சில நாள்களிலே பிரபலமாகிவிட்டது. சாலையோரங்களில் பொருள்களை வைத்துக்கொண்டு நாள் முழுவதும் வெயிலில் கஷ்டப்பட்ட விவசாயிகள், காலையில் இரண்டு மணி நேரத்தில் தங்கள் பொருள்களை விற்பனை செய்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். இந்தக் கிஸான் பஜாரின் வெற்றி, மாநில அரசை யோசிக்க வைத்திருக்கிறது. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இதைப்போன்ற கிஸான் பஜார்களை அமைக்கும் யோசனையில் இறங்கியுள்ளது அரசு. முதற்கட்டமாகத் தலைநகர் ராய்ப்பூரில் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

வியாபாரிகளை ஒழிக்கக் கட்டுப்பாடுகள் கிஸான் பஜாரில், பல விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பேசிய, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கௌதம், “மாவட்ட ஆட்சியர் இப்படியொரு யோசனையைச் சொன்னபோது, இது சாத்தியப்படுமா என்ற எண்ணம், எங்களைப் போன்ற அதிகாரிகளுக்கு இருந்தது. ‘இதை அமைக்கக்கூடாது’ என உள்ளூர் வியாபாரிகள் மூலமாக எதிர்ப்புகள் வந்தன. ஆனால், ஆட்சியர் இதைத் துணிச்சலாகச் செயல்படுத்தியதுடன், எங்களையும் நம்பிக்கையுடன் ஈடுபட வைத்தார். தற்போது இதன் வெற்றி எங்களை ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது” என்றவர், “கிஸான் பஜாரில் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், எங்களிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயி வைத்திருக்கும் மொத்த நிலத்தின் பரப்பு, அதில் இருக்கும் பயிர்கள், பயிர்களின் அறுவடைக்காலம், கிடைக்கக்கூடிய உத்தேச மகசூல் போன்ற தகவல்களை சொல்லி பதிவு செய்துகொள்ள முடியும். பதிவு செய்ய முன்வரும் விவசாயியின் தோட்டத்தை, கிராம நிர்வாக அதிகாரி, விவசாய அதிகாரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து,கொடுத்துள்ள தகவல்களை உறுதி செய்வர்.

அதன் பிறகு, அவருக்குப் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை கொடுக்கப்படும். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் படமும் அட்டையின் உள்புறம் இருக்கும். அந்தப் புகைப்படங்களில் உள்ளவர்கள் மட்டுமே கிஸான் பஜாரில் விற்பனையில் ஈடுபட முடியும். அதேபோல, சம்பந்தப்பட்ட விவசாயியின் மகசூல் காலம் முடிந்த பிறகு, அதே பொருளை அவர் சந்தைக்குக் கொண்டு வரமுடியாது. அடுத்த சாகுபடியை முறையாகப் பதிவு செய்திருந்தால் மட்டுமே கொண்டுவர முடியும். இதுபோன்ற நடைமுறைகளால் வியாபாரிகள் உள்ளே வருவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இந்தச் சந்தையில் பொருள்களை விற்பனை செய்யும் விவசாயிகள், அதிகபட்சமாக ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதும் முக்கிய விதி. இதனால் போக்குவரத்துப் பிரச்னை தீர்க்கப்படுவதுடன், தோட்டத்தில் அறுவடை செய்த அடுத்த சில மணி நேரங்களிலேயே நுகர்வோர் கைகளுக்குப் பொருள்கள் கிடைக்கின்றன’’ என்றார்.

வகைதொகை இல்லாமல், ரசாயனங்களை அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு இழுப்பது கடினமான செயல். ஓரிரு விவசாயிகளை மாற்றுவதே கடினமான நிலையில், நூறு கிராமங்களை இயற்கை விவசாயக் கிராமங்களாக மாற்றும் பணியை முன்னெடுத்திருக்கிறார், பிரசன்னா. இதைச் சாத்தியமாக்க, அவர் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. அதைவிட ஆச்சர்யம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தொல்குடிகளின் வாழ்வியல் முறைகள். இவற்றைப் பற்றி அடுத்த இதழில்...  

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

வனப்பொருள்கள் மூலம் வருமானம்

மூலிகைகள் மற்றும் வனத்தில் கிடைக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் முக்கியமான மாவட்டமாக இருக்கிறது தாம்தரி. சித்தா, ஆயுர்வேத மருத்துவத்துக்கான மூலப்பொருள்கள் சந்தையில் பொருள்களுக்கான விலையை நிர்ணயிப்பதில் தாம்தரிக்கு முக்கியப் பங்குண்டு.

காடுகளில் கிடைக்கும் மரங்களின் காய்கள், பழங்கள், பூக்கள், பிசின்கள் போன்றவற்றை வனத்துறையிடம் வாங்கி அதைப் பொடியாக்கி விற்பனை செய்யும் தொழில், இங்கு அதிகளவில் நடக்கிறது. அஸ்வகந்தா முதல் சிறுகுறிஞ்சான் வரை இங்கு எல்லாமே கிடைக்கிறது. ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடிக்கும் மேலாக இந்த வணிகம் நடைபெறுகிறது. வனங்களை அழிக்காமல், அதே நேரத்தில் வனங்களில் கிடைக்கும் மூலிகைகளை, மரங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சந்தைப்படுத்தும் இவர்களது சிந்தனை, தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். மதுவின் மூலமாக வருமானம் பார்க்கும் இழிசெயலை விட்டுவிட்டு, இதுபோன்ற இயற்கையில் கிடைக்கும் வருமானங்கள் பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

ஒரு நாள் வியாபாரம்... ஒரு மணி நேரத்தில்!

வியாபாரத்தை முடித்து, கூடையுடன் கிளம்பிய விவசாயிகள் சீதாபாய், விஷ்வாசா இருவரிடமும் பேசினோம். “கிஸான் பஜார் எங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எங்களுக்கு நெல் விவசாயம்தான் பிரதானம். கொஞ்சமாகக் காய்கறி விதைத்திருக்கிறோம். அதைத் தினமும் சாலையோரமாக அமர்ந்து விற்பனை செய்வோம்.

வெயிலில் அமர்ந்து நாள் முழுவதும் விற்பனை செய்ய வேண்டியிருக்கும். சாலையோரம் என்பதால் வாகனங்கள் மோதிவிடுமோ என்று பயத்துடனேயே இருக்க வேண்டியிருக்கும். தினமும் 300 ரூபாய் சம்பாதிப்பதற்கே ரொம்பக் கஷ்டப்பட வேண்டும். ஆனால், இந்தக் கிஸான் பஜாரில், நாங்கள் கொண்டுவரும் காய்கறிகள் ஒரு மணி நேரத்திலேயே விற்று விடுகின்றன. தினமும் 500 ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைக்கிறது. அதோடு, மற்ற வேலைகளைச் செய்யவும் நேரம் கிடைக்கிறது” என்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்!

குழந்தைப் பேறு கொடுக்கும் மருதமரம்!

தமிழ்நாட்டில் பார்க்கும் இடமெல்லாம் வேப்பமரம் இருப்பதுபோல, தாம்தரி மாவட்டத்தில் காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது, மருதமரம். சாலையோரங்கள், வரப்போரங்கள், வீடுகள் என எங்கு பார்த்தாலும் மருதமரம் இருக்கிறது. இதற்குக் காரணம் மருதமரத்தை இவர்கள், தங்கள் பிணி நீக்கும் மருத்துவராகப் பார்க்கிறார்கள்.

இந்த மரத்தின் பட்டை பல்வேறு நோய்களைத் தீர்க்கும் குணமுள்ளது என்பதால், அந்தப் பட்டையைப் பொடி செய்து பயன்படுத்துகிறார்கள். ‘அர்ஜுனா பவுடர்’ என்ற பெயரில் மருத மரப்பட்டைப் பொடி இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது. இந்தப் பொடியை 5 கிராம் முதல் 10 கிராம் அளவுக்கு எடுத்து, வெந்நீரில் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்கிறார்கள். இது ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்கள் ஆகியவற்றைத் தடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆண்களின் விந்தணுக்களைப் பலமுள்ளதாக்குவதால், குழந்தை இல்லாத தம்பதிகள் இதைத் தொடர்ந்து உட்கொண்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism