Published:Updated:

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

சாரதா ஆஸ்ரமத்தில் சங்கமித்த விவசாயிகள் இயற்கைபொன்.செந்தில்குமார், ச.புகழேந்தி - படங்கள்: தே.சிலம்பரசன்

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

சாரதா ஆஸ்ரமத்தில் சங்கமித்த விவசாயிகள் இயற்கைபொன்.செந்தில்குமார், ச.புகழேந்தி - படங்கள்: தே.சிலம்பரசன்

Published:Updated:
போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!
போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

டந்த ஏப்ரல் 30-ம் தேதி காலை 6.30 மணிக்கே விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரம வளாகத்துக்கு விவசாயிகள் வருகை தரத் தொடங்கிவிட்டனர். பசுமை விகடனும், ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தின் அக்ஷ்ய க்ருஷி கேந்திராவும் இணைந்து நடத்திய ‘இயற்கை விவசாயிகள் சங்கமம்’ நிகழ்ச்சிக்குத்தான் இப்படி விவசாயிகள் ஆர்வமாக வந்திருந்தனர். தமிழ்நாடு முழுவதிலிமிருந்து சுமார் 1,000 விவசாயிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி, முன்னோடி விவசாயிகளின் அனுபவப் பகிர்வுகள், விவசாயப் பாடல்கள், மெளன நாடகம்... என ஒரு நாள் முழுக்க விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமைந்தது.

நிகழ்ச்சியில் துவக்க உரை ஆற்றிய க்ருஷி கேந்திராவின் இணை இயக்குநர் சத்யப்ராணா மாஜி, ‘‘விவசாயிகளுக்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நினைத்தவுடன், பசுமை விகடன் இதழ்தான் நினைவுக்கு வந்தது. சாரதா ஆஸ்ரமத்தில் உள்ள க்ருஷி கேந்திராவில் விவசாயிகளுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறோம். பாரம்பர்ய விதை வங்கி, இயற்கை விவசாய மாதிரிப்பண்ணை, மழைநீர்ச் சேகரிப்பு செயல் விளக்கம்... எனப் பலவற்றை விவசாயிகளின் நலன் கருதி, சேவை நோக்குடன் செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன’’ என்றார்.

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்ஷ்ய க்ருஷி கேந்திராவின் இயக்குநர் யதீஸ்வரி ஆத்மவிகாசப்பிரியா அம்பா தனது தலைமை உரையில், ‘‘விவசாய விஞ்ஞானிகள் ஒரு துறையில் நிபுணராக இருந்தால் போதும், ஆனால், விவசாயிகள் பல துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அதாவது, வானிலை, பூச்சியியல், நோய் மேலாண்மை, நீர் மேலாண்மை... எனப் பல்துறை அறிவு இருந்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நம் விவசாயிகள் ஒவ்வொருவரும் மாபெரும் விஞ்ஞானி தான். ரசாயன விவசாயத்தில் நொந்து போன விவசாயிகள், இயற்கை விவசாயத்தின் மூலம் பாரம்பர்ய நெல் ரகங்களை விதைத்து, நல்ல விளைச்சல் பெற்று வருவதை நேரடியாகவே பார்த்து வருகிறோம். தற்போது எங்களின் சேமிப்பில் 212 பாரம்பர்ய ரக நெல் விதைகள் உள்ளன. இந்த அரிய ரகங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியோடு, இன்னும் பல ரகங்களையும், சிறுதானிய விதைகளைச் சேகரிக்கும் பணியையும் செய்து வருகிறோம். ஆஸ்ரமத்தில் உள்ள க்ருஷி கேந்திராவில் நடைபெறும் பயிற்சிகள், பயிலரங்குகள், விதை சேமிப்பு... போன்றவற்றை விவசாயிகள் பயன்படுத்துக் கொள்ள அழைக்கிறோம்’’ என நம்பிக்கை வார்த்தைகளை விதைத்து அழைப்பு விடுத்தார்.

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

அடுத்து, விழுப்புரம் மாவட்ட முன்னோடி விவசாயி சுந்தரம் பேசும்போது, ‘‘மரப்பயிர்கள் சாகுபடியில் எனக்குக் கொஞ்சம் அனுபவம் உண்டு. அனுபவ அறிவு மூலமாக என்னுடைய நிலத்தில் மரப்பயிர்கள் நன்றாக வளர்தைத் தெரிந்துகொண்டேன். என்ன வகையான மரங்களை வளர்க்கலாம் எனத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ‘பசுமை விகடன்’ இதழ் என் கைக்குக் கிடைத்தது. அதுதான் நான் இந்த அளவுக்கு உயரக் காரணமாக அமைந்தது.  மரச்சாகுபடி செய்யும் பண்ணைகளுக்கு நேரடியாகச் சென்றேன். கோயம்புத்தூர், வன மரபியல் ஆராய்ச்சி நிறுவனப் பயிற்சியில் மர வகைகள், பலன் கொடுக்கும் காலம், சந்தை வாய்ப்புகள் குறித்துத் தெரிந்துகொண்டேன்.அதன் பிறகு, ஏற்கெனவே சாகுபடி செய்துள்ள, பழ மரங்களுக்கு இடையில் குமிழ், மலைவேம்பு மரங்களை நடவு செய்தேன்.

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

சில இடங்களில் மண்ணுக்கு அடியில் பாறை இருந்தது. அதனால், அங்கு நன்றாக வளரும் வேங்கை, மகோகனி, சிவப்புச் சந்தனம், ரோஸ்வுட், பூவரசு, காட்டுவாகை, சிலவாகை, இலவம்பஞ்சு மாதிரியான மரக் கன்றுகளை நடவு செய்தேன். எல்லா மரங்களுக்கும் மேட்டுப்பாத்தி அமைத்து, இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு அமைத்துள்ளேன். அந்த இலைகள் மட்கி, நிறைய மண்புழுக்கள் உருவாகிவிட்டது. அதனால், இப்போது உழவு ஓட்டும் செலவு மிச்சமானது. தற்சமயம் என்னுடைய  57 ஏக்கர் நிலத்தில், 16 ஆயிரம் மரங்கள் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன. நானும் விவசாயத்தை லாபகரமாகச் செய்ய முடியும் என்று சாதிச்சுக் காட்டியிருக்கேன்’’ என்றார்.

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி ‘புளியங்குடி’அந்தோணிசாமி தனது வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, ‘‘ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்டு, கடன் சுமை தாங்காமல் வெந்து, வெதும்பி நின்றவன் நான். இந்த நேரத்தில் இயற்கை விவசாயம்தான் கைகொடுக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன். இயற்கை விவசாயம்தான், என்னைப் பல நூறு ஏக்கருக்குச் சொந்தக் காரனாக மாற்றியுள்ளது. இயற்கையை நம்பியவர்கள் என்றும் தோற்றுப்போக மாட்டார்கள்.

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இயற்கை விவசாயத்தைவிட ரசாயன முறை விவசாயத்தில் கூடுதல் விளைச்சல் எடுத்தால், இரண்டு ஏக்கர் நிலமும், வேளாண் செம்மல் விருதும் கொடுக்கிறேன் என்று, பசுமை விகடன் மூலம் சவால் விட்டேன். இதுவரை ஒருவர்கூட, சவாலை எதிர்கொள்ள வரவில்லை. இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற அனுபவமே ஆசான்’’ என்றார் உறுதியாக.

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

அடுத்து மேடை ஏறிய, சாமுண்டீஸ்வரி ஐ.பி.எஸ் (காவல் கண்காணிப்பாளர் - தமிழ்நாடு போலீஸ் அகாடமி) பேசும்போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராகத்தான் கலந்துகொள்ள வந்தேன். ஆனால், சாரதா ஆஸ்மரத்தின் விவசாயச் சேவையைப் பார்த்தபோதும், அனுபவ விவசாயிகளின் உரையைக் கேட்ட போதும், என் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ‘வயல்வெளியே பல்கலைக்கழகம், விவசாயிகளே பேராசிரியர்கள்..’ என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லிச் சென்றதை, இங்கு நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. பசுமை விகடன் இதழில் வெளியாகும் நுட்பங்களைப் பயன்படுத்தி, போலீஸ் அகாடமி வளாகத்தை, பசுமை நிறைந்த அகாடமியாக மாற்றி வருகிறோம். கடந்த ஆண்டு சென்னையைப்  புரட்டிப் போட்ட வார்தா புயலில் சுமார் 500 மரங்கள் சாய்ந்துவிட்டன. அந்தச் சமயத்தில், புயல் மூலம் சாய்ந்த மரங்களை நிமிர்த்தி, மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்பதை வாட்ஸ் அப் மற்றும் பசுமை விகடன் மூலம் அறிந்துகொண்டேன். அதன்படி களத்தில் இறங்கி வேலை செய்தோம். இப்போது, புயலில் சாய்ந்த சுவடே தெரியாமல், பசுமைக்கட்டி மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. அந்த மரங்களைப் பார்க்கும்போது, நிறைந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது’’ என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

போலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது!

அக்ஷ்ய க்ருஷி கேந்திராவின் பொது மேலாளர் சிவக்குமார், பாரம்பர்ய விதைகள் சேமிப்பு அனுபவங்கள் மற்றும் நெல்சாகுபடி நுட்பங்களை விரிவாக விளக்கினார்.  செயல் அலுவலர் சரவணன் நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கியதோடு, ஆஸ்மரத்தின் இயற்கை விவசாயப் பண்ணைக்கு விவசாயிகளை அழைத்து சென்று, செயல் விளக்கமும் செய்து காட்டினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சாரதா ஆஸ்மரத்தின் கணினிப் பயிற்சி மாணவிகள் நிகழ்த்திய நீர் சேமிப்பு பற்றிய மெளன நாடகம் எல்லோரையும் சிந்திக்க வைத்தது.

இடையிடையே, கருத்துகள் நிரம்பிய விவசாயப் பாடல்கள், தாகம் தீர்க்க மோர், எலுமிச்சைப் பழச்சாறு, சுவையான மதிய உணவு, சலுகை விலையில் பாரம்பர்ய நெல் விதைகள், அனைவருக்கும் சாரதா ஆஸ்ரமம் வழங்கிய நினைவுப் பரிசு, ‘மரம்’ கருணாநிதி கொடுத்த மரக்கன்றுகள் என... மாலை 6.30 மணி ஆகியும் பிரிய மனமில்லாமல் விவசாயிகள் வீடு திரும்பினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism