‘இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும்போது, அது எப்படியாகிலும் தன்னைச் சீரமைத்துக் கொள்ளும். ஒரு மனிதனால் அதற்கு ஆபத்து உண்டாகுமேயானால் அது, அவனை திருப்பித் தாக்க சற்றும் தயங்காது. அப்போது, எந்தவொரு மனிதனும் இயற்கைக்கு முக்கியமல்ல. ஏனென்றால், இயற்கை அன்னைக்கு செல்லக்குழந்தைகள் என்று யாரும் இல்லை.’
‘வானிஷிங் ஸ்பீஸிஸ்’ (Vanishing Species) என்ற புத்தகத்தில் எழுத்தாளர் ரோமன் கிரே பூமியின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லியுள்ள வாசகம் இது.

சூரிய குடும்பத்திலிருந்து பிரிந்து வந்த கோள்களில் உயிர்கள் வாழும் ஒரே கோள் இந்த பூமிதான். இதை எந்தளவுக்கு மாசுப்படுத்துகிறோமோ அந்தளவுக்கு அதற்கான பலன்களை அனுபவித்துதான் வருகிறோம். அதிகரித்து வரும் பூமியின் வெப்பநிலை, பருவம் தவறி பெய்யும் மழை, எதிர்பாராத வறட்சி, மாசடைந்த

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காற்று என அதன் விளைவுகளைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பூமியை இப்படியே விடக்கூடாது அதைப் பாதுகாக்க வேண்டும். அதைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று 1970-ம் ஆண்டு முதல் 175 நாடுகளில் ‘உலக புவி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படும் உலகப் புவி தினத்தை முன்னிட்டு, அந்நாளில் சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில், ரெசிப்ரோசிட்டி பவுண்டேஷன் சார்பில் ‘இயற்கைக் கூடல்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ‘பசுமைவிகடன்’ ஊடக ஆதரவு வழங்கியிருந்தது.

‘இயற்கையுடன் இணைந்ததுதான் வாழ்க்கை’ என்பதைப் பறைசாற்றும் வகையில் அன்றாடம் நாம் உபயோகப்படுத்தும் பைகள், உணவுகள், உடைகள், வீட்டு உபயோகப்பொருள்கள் என அனைத்துமே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு இயற்கைக் கூடலில் பங்கேற்றனர்.
சிறுதானிய உணவுகள், இயற்கை குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் இன்னிசைக் கச்சேரி என்று நிகழ்ச்சி இயற்கையோடு இணைந்திருந்தது. விழாவுக்கு வந்திருந்திருவர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகத் துணிப்பைகள் வழங்கப்பட்டன. பெயரளவுக்கு இல்லாமல் முழு இயற்கைக் கூடலாகவே நிகழ்ச்சி நடைபெற்றது.