Published:Updated:

3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை
பிரீமியம் ஸ்டோரி
3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ராபர்ட்

3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ராபர்ட்

Published:Updated:
3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை
பிரீமியம் ஸ்டோரி
3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

பொதுவாக, வேளாண்மைத்துறை நடத்தும் பயிர் விளைச்சல் போட்டிகளில் ரசாயன விவசாயிகள்தான் கலந்துகொண்டு பரிசுகளைப் பெறுவார்கள். ஆனால், இயற்கை முறையில் நிலக்கடலை விளைவித்துப் பயிர் விளைச்சல் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், ஐயப்பன் இருவரும். ஆய்வுக் குழு நடத்திய சோதனையின்போது, ஹெக்டேருக்கு 10,168 கிலோ ஈர நிலையிலான நிலக்கடலையை மகசூல் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. நான்கு நாள்கள் காய்ந்த நிலையில், ஏக்கருக்கு 1,840 கிலோ காய்ந்த நிலக்கடலை மகசூல் கிடைத்துள்ளது.

அறுவடை செய்த நிலக் கடலையை மூட்டை பிடித்துக்கொண்டிருந்த பிரகாஷ், ஐயப்பன் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். நிறைந்த சந்தோஷத்துடன் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

நம்மிடம் பேசிய பிரகாஷ், “நாங்க இரண்டு பேரும் உறவினர்கள். எனக்குச் சொந்த ஊர் கொத்தம்பட்டி. ஐயப்பனோட ஊர், குரும்பூண்டி. ரெண்டு பேருமே விவசாயக் குடும்பம்தான். இது, எங்களோட சொந்தக்காரங்க நிலம். முதுகுளம் என்கிற கிராமத்துல அமைஞ்சிருக்கு. எங்க நிலத்துல தண்ணீர் இல்லை. அதனால, இந்த மூணு ஏக்கர் நிலத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்றோம். இயற்கை விவசாயத்துக்கு வந்ததற்கான காரணம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும், ‘பசுமை விகடன்’ புத்தகமும்தான்.

இங்க போர்வெல்லுல (ஆழ்துளைக் கிணறு) போதுமான அளவு தண்ணீர் இருக்கு. ஐயப்பன், 9 மாடுகளும் 35 ஆடுகளும் வெச்சிருக்கார். அதனால எருவுக்குப் பஞ்சமில்லை. தாராளமா எரு போடுறதால மண் நல்ல வளமா இருக்கு. நிலத்தை, இயற்கை விவசாயத்துக்கு மாத்துனதுல இருந்தே ரசாயன விவசாயத்துக்கு இணையா மகசூல் கிடைச்சுட்டு இருக்கு. போன வருஷம் ஏக்கருக்கு எட்டு டன்னுங்கிற கணக்குல எரு போட்டு மக்காச்சோளம் சாகுபடி செஞ்சோம். பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம்னு கொடுத்ததுல ஏக்கருக்கு 23 மூட்டை மகசூல் கிடைச்சது” என்றவர் தொடர்ந்தார்...

“இந்த வருஷம் ஏக்கருக்கு 15 கிலோ வீதம் சணப்பு விதை விதைச்சோம். வழக்கமா எட்டுக் கிலோதான் விதைப்பாங்க. நாங்க அதிகளவுல விதைச்சதால, சணப்பு நெருக்கமா முளைச்சுக் களைகள் வரலை. நாப்பது நாள் கழிச்சு நிலத்துல வளர்ந்திருந்த சணப்பையை மடக்கி உழுதோம். இதுமூலமா, மண்ணுக்குத் தேவையான தழைச்சத்தும் நிறைவாகக் கிடைச்சது. சணப்புக்கே சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுதான் தண்ணீர் கொடுத்தோம். அதை மடக்கி உழுது பத்து நாள் கழிச்சு எரு போட்டு நிலக்கடலை விதைச்சோம். நிலக்கடலைக்கு வழக்கமான இயற்கை இடுபொருள்களோடு, நிலக்கரி சாம்பல் திரவத்தையும் (ஹியூமிக் அமிலம்) கொடுத்தோம். அதனால, பயிர் நல்லா செழிப்பா விளைஞ்சது. செடிகள்ல அதிக எண்ணிக்கையில கிளைகள் உருவாகி காய்களும் திரட்சியா இருந்துச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

சுற்று வட்டார விவசாயிகள் எல்லோருமே ஆச்சர்யப் பட்டுட்டாங்க. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி இல்லாமலே இவ்வளவு சிறப்பா விளைஞ்சிருக்குதானு ஆய்வுக்கு வந்த வேளாண் துறை அதிகாரிகளே கேட்டாங்க.

மூணு ஏக்கர்ல நிலக்கடலைச் சாகுபடி செஞ்சிருந்தோம். இயற்கை முறையில விளைஞ்சதால நல்ல சுவையும் இருக்கு. மரச்செக்கு வெச்சிருக்கிற இயற்கை விவசாயிகள், சந்தை விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிக்கிட்டாங்க” என்ற பிரகாஷ் வருமானம் குறித்துச் சொன்னார்.

“மூணு ஏக்கர்ல 5,520 கிலோ நிலக்கடலை மகசூலாச்சு. ஒரு கிலோ 57 ரூபாய்னு 5,200 கிலோ அளவுக்கு விற்பனை செஞ்சுட்டோம். மீதி 320 கிலோவை இருப்பு வெச்சிருக்கோம். அந்த வகையில், 5,520 கிலோவுக்கும் கணக்குப் போட்டால் 3,14,640 ரூபாய் வருமானம் கிடைக்கும்.  இதுல எல்லா செலவும் போக 2,23,140 ரூபாய் லாபமா நிக்கும். ஒரு ஏக்கருக்குன்னு பாத்தா 74,380 ரூபாய் லாபம் வரும். நூறு நாள்ல இந்த அளவுக்கு லாபம் கிடைக்கிறது, எங்களுக்கு நிறைவா இருக்கு. அதே நேரத்துல நிலக்கடலைக்காக பரிசு வாங்கினதும் மகிழ்ச்சியா இருக்கு. அடுத்த முறை முதல் பரிசு வாங்கணும்ங்கறதுதான் எங்களோட ஆசை” என்று சொல்லி விடைகொடுத்தார் இன்முகத்தோடு.

தொடர்புக்கு,
பிரகாஷ்,
செல்போன்: 96267 17272

3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

பஞ்சகவ்யா தயாரிப்பு!

இதற்கு ஒன்பது பொருள்கள் தேவைப்படும். நாட்டு மாடு, கலப்பின மாடு என எந்த வகையான மாட்டிலிருந்து கிடைக்கும் பொருள்களையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

தயாரிப்பு முறை: கடலைப் பிண்ணாக்கை ஒரு மணி நேரத்துக்கு முன்பே நீரில் ஊற வைத்து விடவும். பின்பு, எல்லா பொருள்களையும் மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் கலந்து நிழலில் வைக்கவும். தூசு, தும்பு படாமல் இருக்க, மெல்லிய துணியால் வேடுகட்டி வைக்கலாம். தினமும் இந்தக் கலவையைக் கலக்கி விட வேண்டும். இதனால், மீத்தேன் வாயு வெளியேறி, நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகும். ஏழு நாள்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும். இதன்மூலம் ஏறத்தாழ 20 லிட்டர் பஞ்சகவ்யா கிடைக்கும்.

10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம் (கீரைக்கு மட்டும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்). ஒருமுறை தயாரித்த பஞ்சகவ்யாவை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இது எல்லா பயிர்களுக்கும் தெளிக்கவல்ல வளர்ச்சி ஊக்கியாகும். விதைநேர்த்தி செய்யவும் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு, 30 லிட்டர் பஞ்சகவ்யாவுடன் 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசனநீருடன் கலந்துவிடலாம்.

இதனால் மண்வளம் கூடும்; அதிக பூக்கள் பூக்கும்; காய் கனிகள் சுவையாக இருக்கும். பூச்சி நோயும் எளிதில் அண்டாது. விளைச்சலும் கூடுதலாகக் கிடைக்கும். பயிர் வளர்ச்சி குன்றி இருக்கும்போது, இதைத் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை பயிர்களுக்குத் தெளித்து வரலாம்.

இப்படித்தான் செய்யணும் நிலக்கடலைச் சாகுபடி!

ரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலைச் சாகுபடி செய்யும் விதம் குறித்து பிரகாஷ் சொன்ன விஷயங்கள் இங்கே...

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில், 15 கிலோ சணப்பு விதைகளை விதைத்து, ரோட்டோவேட்டர் மூலமாக மண்ணை லேசாகக் கிளறிவிட வேண்டும். பிறகு, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 40-ம் நாள் சொட்டுநீர்க் குழாய்களை எடுத்துவிட்டுச் சணப்பு செடிகளை மடக்கி உழுது பத்து நாள்கள் விட வேண்டும். பிறகு, 6 டன் எருவைக் கொட்டி உழுது, நிலத்தைச் சமப்படுத்தி... 80 கிலோ விதைக்கடலையை விதைக்க வேண்டும். விதைக்கு விதை 4 அங்குலம், வரிசைக்கு வரிசை 6 அங்குலம் இடைவெளி விட வேண்டும். பிறகு, அதற்கேற்றவாறு சொட்டுநீர்க் குழாய்களை அமைத்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும்.

விதைத்த 15, 25, 35 மற்றும் 45-ம் நாள்களில், பாசனத் தண்ணீரோடு 3 லிட்டர் ஹியூமிக் அமிலத்தைக் கலந்து விட வேண்டும். 25-ம் நாள், 150 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும்.

35-ம் நாள் 125 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மூலிகைப் பூச்சி விரட்டியும், 40-ம் நாள் 125 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் ஹியூமிக் அமிலத்தையும், 50-ம் நாள் 125 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமினோ அமிலத்தையும், 65-ம் நாள் 125 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் கடல்பாசி திரவத்தையும் கலந்து தெளிக்க வேண்டும். 98-ம் நாளுக்கு மேல் நிலக்கடலை அறுவடைக்குத் தயாராகிவிடும்.

3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம்! - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

மீன் அமினோ அமிலம்

ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் பிளாஸ்டிக் வாளியில் போட்டு காற்றுப் போகாமல் மூடி வைத்தால், 40-ம் நாள் தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள்  இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இத்திரவத்திலிருந்து துளிகூட கெட்ட வாடை வீசாது. பழ வாடை வீசும். இப்படி வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்று அர்த்தம்.

மீன் அமினோ அமிலம் என்பது வளர்ச்சி ஊக்கி. இதைத் தெளித்தால் பயிர்கள் பசுமைகட்டி வளர்ந்து நிற்கும். 10 லிட்டர் நீரில் 500 மில்லி அமினோ அமிலத்தைக் கலந்து தெளிக்கலாம். ஒருமுறை தயாரிக்கும் அமினோ அமிலத்தை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும்போது அமிலத்தை எடுத்துக்கொண்டு வாளியை நன்றாக மூடி வைக்கவேண்டும். நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்தத் திரவத்தைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

மூலிகைப் பூச்சிவிரட்டி


நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி, ஆடாதொடா, வேம்பு போன்ற இலை தழைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து ஏழு நாள்களுக்கு ஊற வைத்தால் பூச்சிவிரட்டி தயார். அதன் பிறகு, வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். மாட்டுச் சிறுநீர் என்பது அருமையான கிருமிநாசினி. அதைக் கலப்பதால் நோய் விரைவாகக் கட்டுப்படும். மாட்டுச் சிறுநீர் கிடைக்காவிட்டால் தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம். பத்து லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சிவிரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். இப்படி தெளிக்கும்போது பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி மற்றும் புழுக்களை விரட்டும். ஏழு நாள்களுக்கு மேல் ஊறவைத்தால், பயிர் வளர்ச்சி ஊக்கியாக இது மாறிவிடும். அதை வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism