Published:Updated:

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

நீர் மேலாண்மை ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

நீர் மேலாண்மை ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

ண்ணீர்ச் சேமிப்பு இன்றைய காலகட்டத்தில் சர்வதேசத் தேவையாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, தமிழகம் வறட்சியைச் சந்தித்து வந்தாலும், இந்த ஆண்டு அதிகரித்துள்ள வெப்பத்தாலும் பொய்த்துப்போன பருவமழையாலும் நிலவும் வறட்சி, வரலாற்றுப் பதிவாக ஆகிவிட்டது. ஆண்டுக்கணக்கில் வற்றாத கிணறுகள்கூட வற்றிக் கிடக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீருக்குப் பதிலாகக் காற்றுதான் வருகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் வகையில் நபார்டு வங்கி, தொண்டு நிறுவனங்கள் மூலமாக மழை நீர் மற்றும் நிலத்தடி நீர்ச் சேமிப்புக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களைச் செயல்படுத்திவரும் விவசாயிகள், அதன் பலன்களைத் தற்போது உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த கிராமமும் வறட்சியில் வாடிக்கிடக்கும் கடுமையான சூழலிலும் நிலக்கடலைச் சாகுபடி செய்து முடித்திருக்கிறார், மதுரை மாவட்டம், பேரையூர் தாலூகா, பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வனராஜ்.

“எங்க ஊர் நெல் விவசாயத்துக்குப் பேர் போனது. ஒரு காலத்துல ஊரை ஒட்டுன இடங்கள்ல இறவை விவசாயம் ஓஹோனு நடந்துச்சு. இப்ப மழைக்காலத்துல மட்டும்தான் நெல் சாகுபடி நடக்குது. ஊருக்கு வெளியே கரட்டுப் பக்கமா இருக்கிற காடுகள்ல சோளம், கம்பு, கானைனு (கொள்ளு)புன்செய்ப் பயிர்களைத்தான் போடுவாங்க.

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

சில இடங்கள்ல பருத்தியும் விதைப்பாங்க. எங்களுக்கும் ஊருக்கு வெளியே கரட்டுக்குப்  பக்கத்துல நிலம் இருக்கு. தாத்தா காலத்துல நன்செய்ப் பயிர் பண்ணலாம்னு ஒரு கிணறு வெட்டியிருக்காங்க. அதுல இருக்கிற தண்ணி அப்பா காலத்திலேயே வத்திப்போச்சு. அதுக்குப் பிறகு, மானாவாரியாத்தான் விதைச்சுட்டு இருந்தோம்” என்ற வனராஜ் தொடர்ந்தார்...

“நான், புதுச்சேரியில ஒரு கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்தேன். அப்பா திடீர்னு இறந்துபோகவும், அம்மாவை பாத்துக்கிறதுக்காக ஊருக்கு வந்திட்டேன். இங்கே விவசாயம் பாக்கலாம்னு முடிவு பண்ணி, கிணத்துக்குள்ளேயே ஒரு போர்வெல் போட்டேன். அதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. அதனால, மானாவாரியாகச் சோளம், கம்பு, பருத்தினு விதைச்சிட்டு இருந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்ன, சக்தி டிரஸ்ட்ல இருந்து வந்து பண்ணைக்குட்டை பத்தி சொன்னாங்க. நானும் ஏற்கெனவே பண்ணைக்குட்டை பத்தி தெரிஞ்சு வெச்சிருந்தேன். அவங்களே குட்டை எடுத்துக் கொடுக்கிறோம்னு சொன்னதால நான் ஒப்புக்கிட்டேன்.

என்னோட நிலம் கரட்டுக்குக் கீழே இருக்கு. மழை பெஞ்சா தண்ணியெல்லாம் எங்க நிலத்தைத் தாண்டி ஓடியே போயிடும். அந்த மாதிரி அமைப்பான எங்க நிலத்துல, கிணத்திலிருந்து 200 அடி தூரத்துல ஒரு பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுத்தாங்க. என்னோட நல்ல நேரம், குட்டை எடுத்த கொஞ்ச நாள்லயே மழை கிடைச்சது. குட்டை நிறைஞ்சு வழிஞ்சது.

ஒரு மாசம் கழிச்சுப் பார்த்தா, என்னோட கிணத்துக்குள்ள தண்ணி கசிஞ்சுகிட்டு இருந்துச்சு. கொஞ்ச நாள்லயே கசிவுகள் அதிகமாகி கிணத்துல தண்ணி ஊற ஆரம்பிச்சது. பண்ணைக்குட்டையில இருந்த தண்ணி, ரெண்டு மாசத்துல வத்திப் போனாலும், கிணத்துல தண்ணி ஊறிக்கிட்டே இருந்துச்சு.  அந்தத் தண்ணியை வெச்சு வெண்டை, தக்காளி, கொத்தவரை, வெங்காயம்னு ரெண்டு ஏக்கர் நிலத்துல விதைச்சேன். நான் ரசாயன உரம் போடாம, இயற்கை முறையிலதான் விவசாயம் செஞ்சேன். நல்லபடியா பராமரிச்சதால, ஓரளவுக்கு வருமானம் கிடைச்சது. இதைப்பாத்துட்டு, இன்னும் சில விவசாயிங்களும் பண்ணைக் குட்டை எடுத்தாங்க. அவங்களுக்கும் கிணத்துல தண்ணி ஊறுச்சு. இந்தக் கடுமையான வறட்சியிலேயும் எங்க ஊர்ல பண்ணைக்குட்டை எடுத்த விவசாயிங்க மட்டும்தான், காய்கறிச் சாகுபடி செய்றோம். இந்தச் சமயத்துலயும் என்னோட கிணத்துல தண்ணி இருக்குது. இப்போ, நிலக் கடலையையும் அறுவடை செஞ்சிருக்கேன். புல் பூண்டுகளெல்லாம் காய்ஞ்சிப் போன  இந்த வறட்சி காலத்திலேயும் விவசாயம் செய்ய முடிஞ்சதுக்குக் காரணம், பண்ணைக்குட்டைதான்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார், வனராஜ்.

நிலத்தில் நீர் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்கும் நுட்பங்கள் குறித்து சக்தி அறக்கட்டளை நிர்வாகி, கவிஞர் சக்தி ஜோதியிடம் பேசினோம். “மலையிலிருந்து வழிஞ்சு வர்ற மழைத்தண்ணி, நிலத்துல வாய்க்கால்கள் வழியா ஓடி, ஆறுகள்ல கலக்கும். ஆறிலிருந்து கடைசியா கடல்ல கலக்கும். இதுதான் அடிப்படை. மலையிலிருந்து வர்ற தண்ணி, சமதள நிலங்கள்ல கொஞ்சம் வேகம் குறைஞ்சு ஊர்ந்து போகும். இதனால சமதளப் பகுதிகள்ல நிலத்தடி நீர்ப் பெருகி விவசாயம் சிறப்பா நடக்கும். ஆனா, மலையடிவாரப் பகுதிகள்ல வேகமா வர்ற தண்ணி நிக்காம ஓடிடும். இதனால நிலத்துக்குள்ள தண்ணி இறங்கிறது இல்லை. நம்ம நாட்டுல பெரும்பாலான இடங்கள்ல மலைகள், குன்றுகள் இருக்கு. அதன் அடிவாரப்பகுதிகள், சுற்று வட்டாரப்பகுதிகள் பெரும்பாலும் வறட்சியாத்தான் இருக்கும்.

முன்னாடியெல்லாம் நிலத்தை அப்பப்ப உழவு செஞ்சு, பண்படுத்தி வெச்சிருப்பாங்க. ஊருக்குப் பொதுவான வாய்க்கால், ஓடை, குளம், குட்டை, கண்மாய் எல்லாத்தையும் மக்களே சுத்தப்படுத்திப் பராமரிச்சுப் பாதுகாத்தாங்க. ஆனா, கால ஓட்டத்துல விவசாயிகள் வேற வேற வேலைகளுக்கு போய்ட்டதால, தங்களோட சொந்த நிலத்தையே முறையா உழுது பராமரிக்க முடியாத நிலையில, பொது நீராதாரங்களைக் கண்டுக்காமலேயே விட்டுட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

ஒரு குளம் நிறைஞ்சு, அடுத்த குளம், அது நிறைஞ்சு அதுக்கடுத்த குளம்னு திட்டமிட்டு அமைச்ச நம்ம நீர்ப்பாசன முறை, வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாததால பயனில்லாமப் போச்சு.

மேட்டு நிலத்துல பெய்ற தண்ணி, பள்ளத்தை (ஆற்றை) அடையும் வரை உள்ள சரிவான பகுதிதான் ‘நீர் வடிப்பகுதி.’ நீர்வடிப்பகுதின்னாலே அங்கே தண்ணி நிக்காம ஓடிப்போயிடும்னு அர்த்தம். இது மாதிரியான இடங்கள், இந்தியா முழுக்க நிறைய இருக்கு. இந்த மாதிரி பகுதிகள்ல
சில அறிவியல்பூர்வமான அமைப்புகளை ஏற்படுத்துனா, வேகமா ஓடுற தண்ணி, தவழ்ந்து போகும். அதனால நிலத்துக்குள்ள தண்ணி போகும்னு கண்டுபிடிச்சாங்க. 1980-கள்ல இருந்து இந்த அமைப்புகள் நடைமுறையில் இருக்கு.

தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட 100 நீர்வடிப்பகுதிகள்ல இதுமாதிரியான அமைப்புகளை அமைக்குற பணியை நபார்டு வங்கி செயல்படுத்திக்கிட்டு இருக்கு. அந்தப் பகுதியோட நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துறது மட்டுமல்லாம, அங்க உள்ள விவசாயிகளோட வாழ்வாதாரத்தை உயர்த்துற திட்டங்களையும் செயல்படுத்துது, நபார்டு வங்கி.

இந்த வேலையை வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரகவளர்ச்சித் துறை, வனத்துறை ஆகிய நாலு துறைகள் தனித்தனியா செயல்படுத்திட்டு இருந்தாலும், நபார்டு வங்கி வேளாண்மைத் துறையோட இணைஞ்சு இந்தப் பணியைச் செய்யுது. இதுக்காகத் தமிழ்நாடு முழுக்க 40 செயல் வழிகாட்டு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. அதுல எங்க நிறுவனமும் ஒண்ணு” என்ற சக்திஜோதி, தொடர்ந்தார்...

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...


“மலையிலிருந்து வர்ற தண்ணியை அங்கங்க தடுத்து, தேக்கி, வேகத்தைக் குறைச்சு அனுப்பும்போது நிலத்துக்குள்ள தண்ணி இறங்கும். இதை மலையடிவாரத்துல இருந்து ஆத்துல சேர்ற இடம் வரைக்கும் தொடர்ச்சியா செஞ்சாதான் முழுமையான பலன் கிடைக்கும். பேரையூர் தாலூகா, பாப்பிநாயக்கன்பட்டியில அந்த வேலையைத்தான் நாங்க செஞ்சிருக்கோம்.

தரிசு நிலங்கள்ல நீராதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது, அந்த நிலங்களுக்கு ஏற்ற தோட்டக்கலைப் பயிர் அல்லது வனப்பயிர்களைச் சாகுபடி செய்ய ஊக்கப்படுத்துறதோட, தேவையான செடிகளையும் கொடுக்குறோம்.

நபார்டு வங்கி, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ரெண்டும் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துறாங்க. இந்தத் திட்டம் மூலமா, வரப்பு எடுக்குறது, பண்ணைக்குட்டை அமைக்கிறது, செடிகள் நடவுனு ஆகுற மொத்த செலவுல 84 சதவிகிதம் மானியமாகக் கிடைச்சுடும். விவசாயி தன்னோட பங்களிப்பா 16 சதவிகிதம் கொடுக்கணும். அதை உடல் உழைப்பாகவோ இல்லைன்னா வேலை செய்ற தொழிலாளர்களுக்குக் கூலியாகவோகூட கொடுத்துக் கழிச்சுக்கலாம்” என்ற சக்திஜோதி நிறைவாக,

“இதில்லாம, திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியில நபார்டு வங்கியின் திட்டமான காலநிலை மாற்றத்துக்கான திட்டத்தையும் நாங்க செயல்படுத்திகிட்டு இருக்கோம். இதுமூலமா, ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைக்கிறது, கிணற்று நீர் செறிவூட்டம், அசோலா வளர்ப்பு, கால்நடைத் தீவன வளர்ப்புனு பல பணிகளைச் செஞ்சிகிட்டு இருக்கோம். இதுக்கெல்லாம் மூலமா இருக்கிறது நபார்டு வங்கிதான். ஒவ்வொரு விவசாய நிலத்தையும் மழை நீர்ச் சேமிப்புக் கலனா மாத்தினாத்தான் எதிர்காலத்தைச் சமாளிக்க முடியும்’’ என்றார்.

தொடர்புக்கு,
சக்திஜோதி: 98652 81618.

மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்

மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் முறைகள் குறித்து சக்திஜோதி சொல்லிய தகவல்கள் இங்கே...

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

நீர் உறிஞ்சு குழிகள்

மலை அமைந்திருக்கும் நீர் வடிப்பகுதிகளிலிருந்து நீர் உறிஞ்சு குழிகளை அமைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும். மலையின் அடிவாரத்தில், மலையைச் சுற்றி ஒரு கன மீட்டர் அளவுக்கு, ஓர் அடி இடைவெளியில் வரிசையாகக் குழிகள் எடுக்க வேண்டும். அவற்றிலிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு, அடுத்த வரிசையில் குழிகள் எடுக்க வேண்டும். இரண்டு வரிசைகளில் உள்ள குழிகளும் ‘ஜிக்ஜாக்’ முறையில் இருக்க வேண்டும். அடுத்து சற்று இடைவெளியில் மூன்றாவது வரிசையில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகள் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை, மலைக்கு எதிர் திசையில் போட்டுக் கரை அமைக்க வேண்டும். இந்த அமைப்புக்கு ‘வாட்’ (WAT-Water Absorption Trench) அல்லது ‘நீர் உறிஞ்சு குழி’ என்று பெயர்.

மலையிலிருந்து வேகமாக ஓடிவரும் மழைநீர், மண்ணையும் அடித்துக்கொண்டு வரும். அந்த மண் இந்தக் குழிகளில் வந்து விழும். மழை நீர், மூன்று வரிசை குழிகளிலும் நிரம்பி, தேங்கிப் போகும். அப்படிப் போகும்போது, நீரோடு வந்த மண்ணெல்லாம் குழிகளில் சேகரமாகிவிடும். அந்தக் குழிகளில் தேங்கும் நீர், நிலத்துக்குள் இறங்கும்.

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

நில வரப்புகள்

வாட் அமைப்புக்கு அடுத்தபடியாக, அப்பகுதியின் நில அமைப்பைப் பொறுத்து, விவசாய நிலங்களில் வரப்புகள் அமைக்க வேண்டும். நிலத்தின் பள்ளமான பகுதியில் வரப்பை ஒட்டி, ஒன்றரை அடி முதல் மூன்று அடி வரை அகலவாக்கில் வரப்பு அமைக்க வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளியில் இதைத் தொடர்ச்சியாக அமைக்க வேண்டும். இந்த வரப்பின் நீளம் 10 அடி முதல் 20 அடி வரையும், அகலம் ஒன்றரை அடி முதல் மூன்று அடி வரையும் இருக்கலாம்.

குழியெடுக்கும்போது கிடைக்கும் மண்ணை, எதிர்ப்பக்கம் கொட்டிக் கரை அமைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மழைநீர், அந்தக் குழிகளில் தேங்கி, நிலத்துக்குள் இறங்கும். அது மட்டுமல்லாமல், நிலத்தின் சத்தான மேல் மண், நிலத்தை விட்டுப் போகாமல், குழிக்குள்ளேயே தங்கிவிடும். இந்தக் குழிகள் நிரம்ப ஏழு முதல் பத்து ஆண்டுகள் ஆகும். இந்த அமைப்புக்கு ‘டிரன்ச் கம் ஃபீல்ட் பண்டு’ (Trench Come Field Bund) எனப் பெயர்.

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

பண்ணைக்குட்டை

வரப்பமைத்து முடித்த பிறகு, முக்கியமாக அமைக்க வேண்டியது, பண்ணைக்குட்டை. ஒவ்வொரு நிலத்திலும், நில அமைப்புக்கு ஏற்ப சிறியதாகவோ பெரியதாகவோ நிச்சயம் ஒரு பண்ணைக்குட்டை இருக்க வேண்டும். நீள, அகலம் எப்படி இருந்தாலும் ஆழம் 5 அடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். பண்ணைகுட்டைகளின் கரைகளில் கால்நடை தீவனங்களை வளர்க்கலாம். காட்டாமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் கரை பலமாகும். அதிக நிலப்பரப்பு இருப்பவர்கள் இரண்டு, மூன்று பண்ணைக்குட்டைகள் வரை எடுக்கலாம். நீர் இருப்பைப் பொறுத்து மீன் வளர்ப்பிலும் ஈடுபடலாம்.

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

உலர் தடுப்பணை

மலைகளிலிருந்து இறங்கிவரும் நீர், ஓடைகள் வழியாக ஓடிக் குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை அடையும். அப்படிச் செல்லும்போது ஓடையின் பக்கவாட்டு பகுதிகளை அரித்துக்கொண்டு ஓடும். அந்தமாதிரி அரிமானம் ஏற்படும் இடங்களில் ஓடையின் பக்கவாட்டுப் பகுதிகளில் கற்களை அடுக்கி, அரிமானத்தைத் தடுக்க வேண்டும். அதன் பிறகு, தேவையான இடங்களில் கற்களை அடுக்கி வைத்து, தடுப்பணைகளை அமைக்க வேண்டும். இதற்கு, ‘உலர் தடுப்பணை’ (LRCD-Loss Rock Check Dam) எனப் பெயர். ஓடைகளில் வரும் நீர், இந்தத் தடுப்பணைகளால் தடுக்கப்பட்டு, வேகம் சற்று மட்டுப்பட்டுக் கல் இடுக்குகள் வழியாக வழிந்தோடும். அதேபோல மண், சிறுகற்கள் உள்ளிட்டவை நீரோடு அடித்து வரப்படும் மற்ற பொருள்களும் இங்கே தடுக்கப்படும். ஓடை குறுகியதாக இருக்கும் இடத்தில்தான் உலர் தடுப்பணைகளை அமைக்க வேண்டும்.

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

கம்பி வலை தடுப்பணை

உலர் தடுப்பணைகளுக்கு அடுத்தபடியாக ஓடை அகலமாக உள்ள இடங்களில் கம்பி வலை தடுப்பணைகளை அமைக்க வேண்டும். இந்த இடங்களில் உலர் தடுப்பணைகள் அமைத்தால் நீரில் அடித்துக்கொண்டு போய்விடும். அதனால் கம்பி வலை அமைத்து, அதில் கற்களை அடுக்கி தடுப்பணை அமைக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் கேபியான் தடுப்பணை (Gabion Check Dam) என்பார்கள்.

நில உட்புற அமிழ்வுக் குட்டை

நிலத்துக்குப் பண்ணைக்குட்டை எத்தனை முக்கியமோ, ஓடைக்கு நில உட்புற அமிழ்வுக் குட்டை அத்தனை முக்கியம். ஓடைகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மூன்றடி முதல் நான்கடி வரை பள்ளம் எடுத்துக் குட்டைகளை உருவாக்க வேண்டும். ஓடையில் வரும் நீர், இந்தக் குட்டைகளில் தேங்கி, அதன் பிறகு, வழிந்துபோகும் வகையில் இந்த அமைப்புச் செயல்படும். இதன் மூலம் ஓடையில் ஓடும் நீர், வரத்து குறைந்த பிறகும், சில நாள்களுக்குக் குட்டையில் நீர் இருக்கும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்படுவதுடன், அருகில் உள்ள நீராதாரங்களில் நீர்மட்டம் உயரும். இந்த அமைப்புக்கு நில உட்புற அமிழ்வுக் குட்டை என்று பெயர்.

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

தடுப்பணை

இறுதியாக ஓடைகளில் தேவையான இடங்களில் சிமென்ட் மூலமாகக் கட்டித் தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும். இந்தத் தடுப்பணைகள் மூலமாகத் தண்ணீர் தேங்கி, பிறகு வழிந்து ஓடும். இதனால் ஓடைகளின் பக்கவாட்டு பகுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குட்டைகள், கிணறு, போர்வெல் போன்ற நீராதாரங்களில் நீர்மட்டம் உயரும்.

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

கிணற்று நீர் செறிவூட்டும் குழி

கிணற்றிலிருந்து மூன்று அடி தூரத்தில் குழியெடுக்க வேண்டும். ஒரு கன மீட்டர் அளவில் எடுக்கப்படும் இந்தக் குழியில் சிமென்ட் வளையங்களை (உறை) ஒன்றின் மீது ஒன்றாக மூன்று வளையங்களை வைக்க வேண்டும். வளையத்தின் அடிப்பகுதியில் கூழாங்கற்களை அரையடி உயரம் இட வேண்டும். அதற்கு மேல் ஓர் அடி உயரத்துக்குப் பெரிய கற்களை இட வேண்டும். இந்த இரண்டு கற்களுக்கும் இடையில் ஒரு பி.வி.சி குழாயை வைத்து, அந்தக் குழாயின் மறுமுனை கிணற்றுக்குள் இருப்பதுபோல் அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, உறை முழுவதும் மணலால் மூடி விட வேண்டும். இப்போது இதில் விழும் மழைநீர், கற்களால் வடிகட்டப்பட்டு, கிணற்றுக்குள் சென்று சேகரமாகும். அதே நேரத்தில் நிலத்துக்குள்ளும் கசிந்து ஊடுறுவும்.

வறண்ட பகுதிகளுக்கான திட்டம்!

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் குறித்து நபார்டு வங்கியின் துணைப் பொது மேலாளர் நாகராஜனிடம் பேசினோம். “மலை முகட்டிலிருந்து பள்ளத்தாக்கு வரை செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், வறண்ட நிலங்களை வளமாக்கும் அருமையான திட்டம். இதன் மூலம் நிலத்தின் மேல்மண் அரிக்காமல் தடுக்கப்படுகிறது. அதோடு, பெய்யும் மழை நீரையும் சேமிக்க முடிகிறது. தென்தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாகப் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.

மானாவாரி, தரிசு நிலங்கள் இந்தத் திட்டத்தால் உயிர்பெறுகின்றன. நீர் உறிஞ்சு குழிகள், தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள் என இடத்துக்கு ஏற்ற நீர்ச் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படுகின்றன. நபார்டு வங்கி, இந்தத் திட்டங்களைத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகச் செயல்படுத்துகிறது. திட்டம் செயல்படும் பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் இணைந்த ஒரு குழுவை உருவாக்கி, அக்குழுவின் பங்களிப்புடன் செயல்படுத்துவதால், இந்தத் திட்டம் 100 சதவிகிதம் ஜனநாயக முறையில் செயல்படுகிறது. வறண்ட பகுதிகளில் நீராதாரங்களை உருவாக்கிக் கொடுத்து, அதில் அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற மரக்கன்றுகளை நடவு செய்து கொடுப்பதுடன், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் கொடுப்பதால் இந்தத் திட்டம் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism