Published:Updated:

இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!

இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்! பக்கத்து வயல் ஆர்.குமரேசன்

இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்! பக்கத்து வயல் ஆர்.குமரேசன்

Published:Updated:
இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!

சென்ற இதழ் தொடர்ச்சி...

னங்களையும், இயற்கை வளங்களையும் பழங்குடிகளைவிட யாராலும் சிறப்பாகப் பாதுகாக்க முடியாது. காடுகளை, அவர்கள் வெறும் மரங்களும் புதர்களும் நிறைந்த இடமாகப் பார்ப்பதில்லை. கடவுளாக, தங்களின் மூதாதையராக, பிள்ளைகளைக் காக்கும் காப்பாளனாகப் பார்க்கிறார்கள். எந்தத் பழங்குடியும் காடுகளைச் சேதப்படுத்துவதேயில்லை. அவர்களுக்குத் தேவையானதை இயற்கை அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. ‘அள்ளிக்கொடுக்கிறதே’ என்பதற்காக அவர்களும் தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதுமில்லை; எதிர்பார்ப்பதுமில்லை. உலகெங்கும் இருக்கும் தொல்குடிகளுக்கான பொது குணம் இதுதான்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடிகள் (தொல்குடிகள்) அதிகம் வசிக்கிறார்கள். அவர்களுக்காகப் பல சிறப்புச் சட்டங்கள் அங்கே இருக்கின்றன. எந்தப் பழங்குடியினரும், உடனடியாக அரசுப் பணியில் சேர முடியும். அதற்கு அவர்கள் வனங்களை விட்டு நிலப்பரப்புக்கு வந்தாக வேண்டும். ஆனால், அரசாங்க வேலை என்ற எலும்புத்துண்டுக்குப் பெரும்பாலான பழங்குடிகள் ஆர்வம் காட்டுவதில்லை. தாம்தரி மாவட்டத்தில் உள்ள மகாநதி அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆங்காங்கே பல குட்டி மலைகள் இருக்கின்றன. அதிலுள்ள வனங்களில் பழங்குடிகள் வசிக்கிறார்கள். சில மலைகளில் ஓரிரு குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன.

இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!

எதிர்பார்ப்பும் இல்லை... ஏமாற்றமும் இல்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!


பழங்குடிகளின் விவசாய முறைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன. அவர்கள், ரசாயன இடுபொருள்களைப் பயன்படுத்துவதில்லை. வீரிய விதைகளை விதைப்பதில்லை. பருவம் தவறியும் விதைப்பதில்லை. அந்தந்தப் பகுதியில் விளையும் பயிர்களைத் தவிர, வேறு பயிர்களை விதைப்பதில்லை. மண்வெட்டி போன்ற ஆயுதத்தால் மண்ணை கொத்தி கிளறி விடுவதோடு சரி, உழவு செய்வதில்லை. பெரும்பாலும் நெல் அல்லது சிறுதானியங்களை மட்டுமே பயிர் செய்கிறார்கள். சரியான பருவத்தில் விதைத்துவிட்டு, வந்து விடுகிறார்கள். அடுத்து அவர்கள் வயலுக்குச் செல்வது அறுவடைக்குத்தான். பறவைகள், விலங்குகள், பனி, வெயில், மழை, பூச்சி, நோய் என எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அறுவடையின்போது என்ன கிடைக்கிறதோ, அதுதான் அவர்களுக்கானது. ‘இந்த ஆண்டு இதுதான் இயற்கை அன்னை நமக்கெனக் கொடுத்த கொடை’ எனக் கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

சவாலே சமாளி!

பழங்குடிகள்தான் பாரம்பர்ய விவசாயத்தை இன்னமும் கைவிடாமல் செய்து வருகிறார்கள். அதே நேரம் சமவெளியில் உள்ள விவசாயிகள் நிலத்தில் கொட்டும் ரசாயன உரங்களுக்கு அளவேயில்லை. இவர்கள் மத்தியில் இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, அவர்கள் கவனத்தை இயற்கை வழி விவசாயத்தின் பக்கம் திருப்புவது மிகவும் கடினமான ஒரு செயல். கிட்டத்தட்ட கல்லில் நார் உரிப்பதைப் போன்றது. ஆனாலும், அந்த முயற்சியைத் துணிச்சலாகக் கையிலெடுத்திருக்கிறார், சத்தீஸ்கர் மாநிலத்தின், தாம்தரி மாவட்ட ஆட்சியர் பிரசன்னா.

இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!

இதுகுறித்துப் பேசியவர், “நான் ‘பசுமை விகடன்’ படிக்கும்போதெல்லாம், தமிழகத்தில் நடந்துவரும் இயற்கை விவசாயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதே நேரத்தில், நான் பணியாற்றக்கூடிய மாவட்டத்துக்கும் இந்த நன்மை கிடைக்க வேண்டும் என்று தோன்றும். அந்த எண்ணத்தில் உருவானதுதான், ‘நூறு கிராமங்களை இயற்கை விவசாயக் கிராமங்களாக மாற்றும் திட்டம்’. ‘இதெல்லாம் சாத்தியம் இல்லாத ஒன்று’ என அதிகாரிகள் ஆரம்பத்தில் தயங்கினார்கள். ‘தாம்தரி மாவட்டத்தில் மட்டும் கரீப் பருவத்தில் 40 ஆயிரம் டன், ரபி பருவத்தில் 30 ஆயிரம் டன் ரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவு உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளை எப்படி இயற்கை விவசாயத்துக்குத் மாற்றுவது’ எனக் கேட்டார்கள். ‘நிச்சயம் இது சவாலான பணிதான் என எனக்குத் தெரியும். ஆனாலும், இதைச் செய்தே ஆக வேண்டும்’ என அவர்களிடம் வலியுறுத்தியபோது ஒத்துக் கொண்டார்கள். இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக, ஒரு தாலூகாவை மட்டும் எடுத்து, அதிலுள்ள நூறு கிராமங்களைத் தேர்ந்தெடுத்தோம். அந்தக் கிராமங்களில் எங்கள் மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள், நேரில் சென்று மக்களிடம் இயற்கை விவசாயத்தின் தேவையை எடுத்துச் சொல்லி வருகிறார்கள். அதே நேரம் ரசாயன உரங்களின் தீமைகளையும் எடுத்துச் சொல்கிறார்கள். இங்குள்ள உரக்கடைகள் ஆண்டுதோறும், உரங்கள் விற்பனை செய்வதற்கான உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. அந்த விதி எங்களுக்கு உதவியாக இருந்தது. எங்கள் திட்டம் செயல்படுத்தும் பகுதியில் ஆறு உரக்கடைகள் இருக்கின்றன. நடப்பு ஆண்டுடன் அவர்களது உரிமம் முடிவுக்கு வருகிறது. அவர்களுக்கு அடுத்த ஆண்டுக்கான விற்பனை உரிமத்தை ரத்துச் செய்ய இருக்கிறோம். இதனால், விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். சிலர், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வாங்குவார்கள் என்றாலும் பயன்பாடு பெருமளவில் குறையும்.

இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!

ரசாயன உரங்களைத் தடுக்கும் அதே நேரத்தில் அவர்களுக்குத் தேவையான இயற்கை உரங்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த நூறு கிராமங்களிலும், அடுத்த பருவத்தில் என்னென்ன பயிரிடுவார்கள், மொத்தம் எத்தனை கிலோ உரம் தேவைப்படும் என்ற விவரங்களைச் சேகரித்துவிட்டோம். அவர்களுக்குத் தேவையான இயற்கை உரங்களைத் தயாரிக்கும் பணி தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு திட்டங்களின் கீழ் சில பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பல விவசாயிகளின் நிலங்களில் மண்புழு உரத்தொட்டிகள் அமைக்கப்பட்டு, மண்புழு உர உற்பத்தி நடந்து வருகிறது. பஞ்சகவ்யா உள்ளிட்ட இடுபொருள்கள் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் எங்கள் அதிகாரிகளும் பணியாளர்களும் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களை மனதளவில் இயற்கை விவசாயத்துக்குத் தயார் செய்யும் வேலைகளைச் செய்து வருகிறார்கள். இங்கு நடக்கும் இந்த மாற்றம் படிப்படியாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த முயற்சிக்கு மாநில அரசு அனைத்து வகையிலும் உதவியாக இருக்கிறது” என்றார் பிரசன்னா.

இங்கு வருவதற்கு முன் பணியாற்றிய மாவட்டத்தின் பாரம்பர்ய ரகமான ‘ஜீராபூல்’ (சீரகச் சம்பா வகை) நெல் ரகத்தை மீட்டெடுத்து, அந்த நெல்லுக்குச் சர்வதேச சந்தையில் தனி மதிப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் பிரசன்னா. அதைப் பற்றி

அடுத்த இதழில்...

இயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்!

பாடம் சொல்லும்  பழங்குடியினர்!

பழங்குடிகளைப் பற்றிச் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார், பிரசன்னாவின் மனைவி பிரதீபா. இவர் கால்நடை மருத்துவர். “அந்த மக்களைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். உண்மையிலேயே நாமெல்லாம் வாழ்றது வாழ்க்கையில்லை. அவங்க வாழ்றதுதான் வாழ்க்கை. அவங்க இடத்துக்குச் சிலமுறை போயிருக்கேன். வீட்டுக்குள்ள கால் வைக்கவே எனக்குக் கூச்சமா இருந்தது. அந்தளவுக்கு வீட்டைச் சுத்தமாக வெச்சிருக்காங்க.

அங்கே தேவைக்கு அதிகமா எந்தப் பொருளும் இல்லை. குளிக்காம சமைக்கிறதில்லை. இருக்கிறதை வெச்சு, நிம்மதியா வாழ்றது எப்படிங்கிறதுக்கு அவங்கதான் வாழும் உதாரணம். ‘அரசாங்க வேலை தர்றோம், பசங்களுக்குப் படிப்பு தர்றோம், காட்டுக்குள்ள இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க... நாட்டுக்கு வந்திடுங்க’னு அரசாங்கம் சொல்லுது. ஆனாலும், ‘நீங்க கொடுக்குற எதுவும் எங்களுக்குத் தேவையில்லை... எதுக்காகவும் எங்க மண்ணை இழக்கமாட்டோம்’னு சொல்ற அவங்களோட மன உறுதி, நாமெல்லாம் கத்துக்க வேண்டிய பாடம்.

பணத்துக்காகவும், பொருளுக்காகவும், வாழ்தலுக்காகவும் நம்ம பிறந்த இடத்தை விட்டு, பெற்றோர்களை விட்டு, எவ்வளவோ தூரம் போய்ப் பிழைக்கிறோம். ஆனா, எந்த வசதியுமே இல்லைன்னாலும் எங்க மண்தான் முக்கியம்னு இருக்காங்க. அவங்களை நினைச்சா இப்பவும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு” என்றார், நெகிழ்ச்சியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism