Published:Updated:

மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!

மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!
பிரீமியம் ஸ்டோரி
மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!

பாரம்பர்யம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!

பாரம்பர்யம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

Published:Updated:
மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!
பிரீமியம் ஸ்டோரி
மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!

ம் முன்னோர்கள் வாழ்வில் அங்கம் வகித்த பொருள்கள், கருவிகள், தொழில் நுட்பங்கள் யாவுமே பல வகைகளிலும் சிறப்புமிக்கவை. பன்னெடுங்காலமாக வழிவழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தொழில்நுட்பங்கள் கடந்த நூற்றாண்டிலிருந்து அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது, வேதனையான விஷயம்.

இத்தகைய சூழ்நிலையிலும் நமது பாரம்பர்ய கருவிகள், தொழில்நுட்பங்களின் மகத்துவம் தெரிந்தவர்கள் பலர், அவற்றை அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள். அந்த வகையில், பாரம்பர்யமான கருவிகளை மீட்டெடுத்துப் பயன் படுத்துவதோடு மட்டுமல்லாமல், தொழில்நுட்பங்களை இலவசமாகவும் கற்றுத்தந்து வருகிறது, திருவாரூர் மாவட்டம், திருவிழிமிழலை கிராமத்தில் இயங்கிவரும் கோசாலை.

கோ ரக்ஷன் சமிதி அறக்கட்டளையினர் நிர்வகித்து வரும் இக்கோசாலை குறித்து, 25.6.2013-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘அற்புதப் பலன்கள் கொடுக்கும் அடிமாடுகள்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!

கோசாலையில் பராமரிக்கப்பட்டு வரும் மாடுகளின் கழிவுகளைக் கொண்டு விபூதி, பல்பொடி, சாம்பிராணி போன்ற பொருள்கள் தயாரிப்பது குறித்து அப்போது எழுதியிருந்தோம். தற்போது, இக்கோசாலையில், மாடுகள் மூலம் இயங்கும் மரச்செக்கு, சுண்ணாம்பு பத்தாயம், மண்குதிர், பனையோலைப் பொருள்கள் தயாரிப்பு எனப் பலவகைகளில் பாரம்பர்ய முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோசாலையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அதன் நிர்வாகி ஆடிட்டர் குருபிரசாத்திடம் பேசினோம். “இது திருவாடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலம். கோசாலைக்காக நன்கொடையா வந்தது. இங்க 60 மாடுகளுக்கு மேல இருக்கு. இதெல்லாம், பால் வற்றின பசுக்கள், காளை மாடுகள்னு பல காரணங்களால் கைவிடப்பட்டவை.

இந்த மாடுகளை இங்க ஆரோக்கியமாப் பராமரிக்கிறோம். அது ஒரு பக்கம் இருந்தாலும், பாரம்பர்யமான பொருள்கள், கருவிகள், தொழில் நுட்பங்களை மீட்டெடுக்கலாமேனு எங்களுக்கு யோசனை வந்தது. அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டு, மாடுகள் மூலமா இயங்குற மரச்செக்கை அமைக்க முடிவு பண்ணினோம்.

அதுக்கான மரத்தச்சரைத் தேடி அலைஞ்சப்போ, தஞ்சாவூர்ல இருந்த கலியபெருமாள் பத்திக் கேள்விப்பட்டோம். இவர், ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி மரச்செக்கு செஞ்சுட்டு இருந்தவர். அதுக்கு இப்போ மரியாதை இல்லாமப் போனதால வேற தொழிலுக்கு மாறியிருந்தார். அவரைக் கையோட அழைச்சிட்டு வந்து கோசாலையிலேயே நிரந்தரமாகத் தங்க வெச்சிட்டோம். அவர்தான் இந்த மரச்செக்கை உருவாக்கினார். உளி, சுத்தியல் மட்டும் பயன்படுத்தித் தனியாளா இதைச் செஞ்சிருக்கார்” என்ற குருமூர்த்தி, மாடுகள் மூலம் இயங்கிக் கொண்டிருந்த செக்கைக் காட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!

“மின் மோட்டார்ல இயங்கக்கூடிய மரச்செக்கைவிட, மாடுகள் மூலம் இயங்கக்கூடிய மரச்செக்கு சிறப்பானது. மாடுகள் ரொம்ப மெதுவா சுத்துறதால எண்ணெய்க் கொஞ்சம்கூட சூடாகாது. இதுல ஆட்டுற எண்ணெய், உடலுக்கு ஆரோக்கியமானது.இதுல 13 கிலோ எள்ளு போட்டால், 6 லிட்டர் வரை நல்லெண்ணெய் கிடைக்கும். அதுக்கு மூணு மணி நேரம் ஆட்ட வேண்டியிருக்கும். தேங்காய், கடலை போடும்போது எண்ணெய் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும்.

காலையில 6 மணியிலிருந்து 9 மணி வரை; மதியம் 3 மணியிலிருந்து 6 மணி வரை; மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரைனு தினமும் 3 முறை செக்கு ஓட்டுவோம். இதுமூலமா ஒரு நாளைக்கு  18 லிட்டர் எண்ணெய் எடுக்குறோம். மாதத்துக்கு 25 நாள் செக்கு இயக்குறது மூலமா, மொத்தம் 450 லிட்டர் எண்ணெய் கிடைக்குது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் எல்லாமே லிட்டர் 250 ரூபாய்னு விற்பனை செய்றோம்.

இதுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கு. இப்போதைக்குக் கோசாலையின் நன்கொடையாளர்கள், கோசாலை பணியாளர்களுக்கு விற்பனை செஞ்சது போக, மீதியை உள்ளூர் மக்களுக்கு மட்டும் விற்பனை செஞ்சுட்டு இருக்கோம். நிறைய பேர் எண்ணெய் கேட்டு வர்றதால, கூடுதலா இரண்டு மரச்செக்கு அமைக்கப் போறோம்.

மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!

செக்கு இழுக்கக்கூடிய மாடுகளுக்கு நல்ல ஊட்டமா தீவனம் கொடுக்க வேண்டியிருக்குறதால, தீவனத்துக்கு அதிகச் செலவாகுது. 3 ஜோடி மாடுகள் இருக்கு. மாடுகளுக்கு அதிகமா சிரமம் கொடுக்கக் கூடாதுங்கறதால ஒரு ஜோடியை மூணு மணி நேரம் மட்டும்தான் பயன்படுத்துவோம். இந்த மாடுகள் பிருந்தாவன் காளை மாடுகள். இந்த மாடுகளோட பூர்வீகம் உத்தரப் பிரதேசம். நீண்டநேரத்துக்குக் கடுமையா உழைக்கும். சோர்வு அடையாது. வெள்ளையாவும் நல்ல உயரமாவும் இருக்கும். கம்பீரமான தோற்றமா இருந்தாலும் சாந்தமான குணம் கொண்டது இந்த மாடுகள். ஜோடி மாட்டோட நிலைக்கு ஏற்பத் தன்னை மாத்திக்கிட்டு வேலை பார்க்கும்” என்ற குருபிரசாத், கோசாலையின் மற்ற பாரம்பர்யப் பொருள்கள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“சுண்ணாம்பு, மணல், வெல்லம் கலந்து மூணு நாள் புளிக்க வெச்சு, இந்த வட்ட வடிவிலான சுண்ணாம்பு பத்தாயத்தை உருவாக்கினோம். இந்தப் பத்தாயத்துக்குள்ள சூழலுக்கு ஏற்ற மாதிரி வெப்பநிலை நிலவும். 6 அடி உயரம், மூன்றரையடி விட்டத்துல இதை அமைச்சிருக்கோம். இதுல 400 கிலோ விதைநெல்லைச் சேமிக்கலாம். நெல்லைக் கொட்டி வெச்சுட்டா, பல வருஷங்களுக்குக் கெடாமல் இருக்கும். இதேபோலச் செவ்வக வடிவிலான சுண்ணாம்பு பத்தாயம், மண்குதிர் ரெண்டையுமே உருவாக்கி இருக்கோம்.

அதேமாதிரி இங்க இருக்குற ஆயிரக்கணக்கான பனை மரங்களோட ஓலைகள்ல இருந்து மலர்ச்செண்டு, அலங்கார மாலை, தடுக்கு, பனையோலை பெட்டிகளைத் தயார் செய்றோம். கோசாலை நன்கொடையாளர்களுக்கு இதையெல்லாம் அன்பளிப்பாகக் கொடுத்துகிட்டு இருக்கோம். கண்காட்சிகள்ல விற்பனையும் செய்றோம்” என்ற குருபிரசாத் நெல் வயலுக்கு அழைத்துச் சென்றார்.

மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!

“கோசாலையில் இருக்கிற மாடுகளோட கழிவுகளைப் பயன்படுத்தி, ஒன்பது ஏக்கர் நிலத்துல இயற்கை முறையில பாரம்பர்ய நெல் சாகுபடி செய்றோம். இந்தப் பகுதிகள்ல பச்சைக்கிளிகள் அதிகம். நெல்மணிகளைச் சாப்பிட எங்க வயலுக்கு நூற்றுக்கணக்கான கிளிகள் வரும். அதை நாங்க விரட்ட மாட்டோம். இன்னும் சொல்லப்போனால், கிளிகள் வரும் நேரத்துல நாங்க வயல் பக்கமே போக மாட்டோம்.

கிளிகளுக்கு உணவு கொடுக்கணுங்கறது தான் எங்களோட நோக்கம். கிளிகளோட எச்சம் மண்ணுக்கு உரமாகிடுது. கிளிகள் சாப்பிட்டது போக, ஏக்கருக்கு 15 மூட்டை அளவுலதான் மகசூல் கிடைக்குது. இதை அரிசியா மாத்தி கோசாலையில் உள்ளவங்களுக்கு உணவு சமைக்கப் பயன்படுத்திக்கிறோம். மீதமுள்ள அரிசியைக் கோசாலை நன்கொடை யாளர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திடுவோம். மாடுகளுக்காக 6 ஏக்கர் குத்தகை நிலத்துல கோ-4 பசுந்தீவனம் சாகுபடி செய்றோம். அடுத்து எண்ணெய்க்குத் தேவையான எள், கடலையையும் நாங்களே சாகுபடி செய்யலாம்னு இருக்கோம்” என்ற குருபிரசாத் நிறைவாக,

“பனையோலைப் பொருள்கள் தயாரிக்க, மரச்செக்குச் செய்ய, மண்குதிர், சுண்ணாம்பு பத்தாயம் செய்யத் தொழில்நுட்பங்கள் தேவைப்படுறவங்களுக்கு நாங்க இலவசமாவே பயிற்சி கொடுக்கிறோம். அவங்களுக்கு உணவும் இலவசம். ஆர்வமுள்ளவங்க எங்க கோசாலைக்கு எப்ப வேணாலும் வந்து பயிற்சி எடுத்துக்கலாம்” என்றார்.

தொடர்புக்கு,
குருபிரசாத்,
செல்போன்: 94444 11772

மரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை!

மாடுகளுக்கு மூலிகை உணவு!

கோசாலையின் மேலாளர் மாலதி, “கோசாலையில் இருக்கிற மாடுகளுக்கு வாரம் ஒரு தடவை மூலிகை உணவு கொடுத்துக்கிட்டு இருக்கோம். அதனால, இங்குள்ள மாடுகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமா இருக்கு.

ஒவ்வொரு மாட்டுக்கும் தலா 100 கிராம் பிரண்டை, முருங்கைக்கீரை, சோற்றுக்கற்றாழை, தலா 15 கிராம் மஞ்சள், மிளகு, சீரகம்னு கலந்து உரல்ல இடிச்சு வெல்லம் கலந்து... மாட்டைக் குளிப்பாட்டி வெறும் வயிற்றில் ஊட்டி விடுவோம். அதில்லாம வாரம் ஒருமுறை ஒரு கைப்பிடி வேப்பிலையும், அகத்திக் கீரையும் கொடுப்போம். இதனால் மாடுகள் ஆரோக்கியமா இருக்கு. இந்தப் பகுதியில் மற்ற மாடுகளுக்குக் கோமாரி நோய் தாக்கினப்போ, எங்க மாடுகள் ஆரோக்கியமா இருந்துச்சு” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism