Published:Updated:

வந்தாச்சு 'ரீசார்ஜ் ஸ்பிரேயர்'...போயாச்சு பெட்ரோல் செலவு !

படங்கள்: எல். ராஜேந்திரன் என்.சுவாமிநாதன்

வந்தாச்சு 'ரீசார்ஜ் ஸ்பிரேயர்'...போயாச்சு பெட்ரோல் செலவு !

படங்கள்: எல். ராஜேந்திரன் என்.சுவாமிநாதன்

Published:Updated:

கண்டுபிடிப்பு

##~##

இயற்கை வழி விவசாயமோ... ரசாயன விவசாயமோ... பூச்சிக்கொல்லி, பூச்சிவிரட்டி என்று தெளிப்பதற்கான செலவுத் தொகை கூடிக் கொண்டே போகிறது. காரணம்... ஆள் பற்றாக்குறை, பெட்ரோல் விலை உயர்வு போன்றவைதான். இந்நிலையில், மின்சாரம் மற்றும் சூரியசக்தி மூலம் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியால் இயங்கும் தெளிப்பானை (ஸ்பிரேயர்) வடிவமைத்திருக்கிறார்... திருநெல்வேலி மாவட்டம், கடையம், தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் ராஜா பியூலா. இது, இடுபொருள் தெளிப்புக்கான செலவுத் தொகையை பலமடங்கு குறைத்திருப்பது... மிகமிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சமாகும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வயர் இல்லாத விளக்குப் பொறி' ஒன்றை வடிவமைத்ததன் மூலம், ஏற்கெனவே பசுமை விகடன் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் இந்த டேவிட் ராஜா பியூலா. 10.02.11 தேதியிட்ட இதழில் 'வந்தாச்சு வயர்லெஸ் விளக்குபொறி... பூச்சிக்கொல்லி செலவு இனி இல்லவே இல்லை' என்ற தலைப்பில் அதுபற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.

தன்னுடைய கண்டுபிடிப்பை சமீபத்தில் திருநெல்வேலியில் வைத்து விவசாயிகள் முன்பாக செய்முறை விளக்கம் கொடுத்த டேவிட் ராஜா பியூலா, அதைப் பற்றி நம்மிடமும் விவரித்தார். ''நடைமுறையில இருக்கற ஸ்பிரேயரோட இன்ஜின், பெட்ரோல்ல இயங்கக் கூடியது (சிலர், மண்ணெண்ணெய் பயன்படுத்துவார்கள். இதன் காரணமாக, இன்ஜின் அடிக்கடி பழுதாகிவிடும்).

ஒரு ஹெக்டேர் நெல்லுக்கு மருந்தடிக்க, ரெண்டு லிட்டர் பெட்ரோல் தேவைப்படும். எப்படி பார்த்தாலும் ஒரு போகத்துக்கு குறைந்தபட்சம் அஞ்சு முதல் பத்து தடவை வரை ஸ்பிரேயர் பயன்படுத்த வேண்டியிருக்கும். அந்த வகையில ஒரு போகத்துக்கு குறைஞ்சது பத்து லிட்டர் பெட்ரோல் செலவாகிடும். இப்ப பெட்ரோல் விக்குற விலையில... இது கொஞ்சம்கூட கட்டுப்படியாகறதில்ல. இந்த சிக்கலைத் தீர்க்கத்தான்... ரீசார்ஜ் பேட்டரியில இயங்குற ஸ்பிரேயரை வடிவமைச்சுருக்கேன்.

வந்தாச்சு 'ரீசார்ஜ் ஸ்பிரேயர்'...போயாச்சு பெட்ரோல் செலவு !

இந்த ஸ்பிரேயர், 16 லிட்டர் பிடிக்கக்கூடியது. 12 வோல்ட் 7 ஆம்ப் ரீசார்ஜ் செய்யக்கூடிய சின்ன மின்சார மோட்டாரால இது செயல்படுது. காலையில இதை பயன்படுத்த திட்டமிட்டிருந்தா... முதல் நாள் ராத்திரி சார்ஜ் செய்துக்கலாம். ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தினா, அஞ்சு மணி நேரத்துக்கு தொடர்ச்சியா பயன்படுத்தலாம். சூரிய சக்தி மூலமாவும் ரீசார்ஜ் செய்றதுக்கான வசதியையும் உருவாக்கியிருக்கேன். ஸ்பிரேயரோட ஹெல்மெட்டையும் இணைச்சுருக்கேன். அதுல 'போட்டோ செல்' பொருத்தியிருக்கேன். இந்த போட்டோ செல், சூரிய சக்தியை கிரகிச்சு, பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொடுத்துடும்.

மின்சாரத்துல ரீசார்ஜ் பண்ணி, 5 மணி நேரம் தெளிச்சா சார்ஜ் தீர்ந்துடும். அதுக்குப் பிறகும் தெளிச்சாக வேண்டிய தேவை இருந்தா... சூரிய சக்தியைப் பயன்படுத்திக்கலாம். இல்ல, மொத்தமுமேகூட சூரிய சக்தி மூலமாவே இயங்கற மாதிரியும் செய்துக்கலாம்.

ஒரு தடவை செலவு செய்து, இந்தக் கருவியை தயாரிச்சுக்கிட்டா... பெட்ரோல் செலவைப் பத்தி கவலைபடத் தேவையேயில்லை. இதை வடிவமைக்க 8,500 ரூபாய் செலவாகும். ஒரு ஹெக்டேருக்கு ரெண்டு லிட்டர் பெட்ரோல் தேவைப்படும். இன்னிய தேதிக்கு 140 ரூபாய் இதுக்கு செலவாகுது. ஆனா, ஒரு தடவை ரீசார்ஜ் செய்தா... ரெண்டு ஹெக்டேருக்கு அடிக்கலாம். இதுக்கு அதிகபட்சமா அரை யூனிட் கரன்ட் செலவாகும். இதுக்கான செலவு 60 பைசாதான். சூரிய சக்தினா... இந்தச் செலவு கூட இல்லை'' என்று சொன்னார்.

வந்தாச்சு 'ரீசார்ஜ் ஸ்பிரேயர்'...போயாச்சு பெட்ரோல் செலவு !

இந்தத் தெளிப்பானில் பொருத்தப்பட்டிருக்கும் தெளிப்புக் குழாய்... நீட்டி, சுருக்கும் வசதி கொண்டதாக இருக்கிறது. மா, வாழை, நெல்லி மாதிரியான மரப்பயிர்களுக்கு தெளிக்கும்போது, குழாயை நீட்டிக் கொள்ள முடியும். இதை இயக்குவதும் மிக சுலபமானதாகவே இருக்கிறது.

தொடர்புக்கு
டேவிட் ராஜா பியூலா,
செல்போன் : 94862-85704

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism