Published:Updated:

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6

நேரடி விற்பனை... நிச்சய லாபம்! சந்தை அனந்து - தொகுப்பு: க.சரவணன்

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

கர்நாடக மாநிலத்தின் பெல்காம் பகுதிக்கு ஒரு விவசாயியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். நான் சென்றிருந்தபோது, அந்த ஆண்டுக்கான பருவமழை தொடங்கியிருந்தது. அதனால், வழி நெடுகிலும் பசுமையாக இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் உழவுப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. பெரும்பாலும் மாடுகள் மூலம்தான் உழுது கொண்டிருந்தனர், விவசாயிகள்.

அந்த இதமான சூழலில் பெலவாடி எனும் கிராமத்திலுள்ள லட்சுமி லோக்குர் எனும் பெண் விவசாயியைச் சந்திப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். மும்பையில் பைகள் தைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த லட்சுமி, தன் தந்தைக்கு உடல்நலம் குன்றியதன் விளைவாக, ஊர் திரும்பித் தங்களின் 22 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.

சாலையில், லட்சுமியின் தோட்டம் இருக்கும் இடம் குறித்து விசாரித்தால், ‘நிறைய எருமைகளை வெச்சுக்கிட்டு இயற்கை விவசாயம் செய்றாங்களே. அவங்களா’ என்று கேட்டு வழி சொல்கிறார்கள். அந்தளவுக்குப் பிரபலமாக இருக்கிறார், லட்சுமி. அதற்குக் காரணம் அவரது இயற்கை விவசாயம்தான். அப்பகுதியின் முன்னோடி இயற்கை விவசாயியாகவும் திகழ்கிறார், லட்சுமி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6

ஆரம்பத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை ஆரம்பித்து 22 ஏக்கர் என விரிவுபடுத்தியிருக்கிறார். பெல்காமில் உள்ள ஒரு கல்லூரியில் வேளாண்மை பற்றிய ஒரு பட்டயப் படிப்பை முடித்துவிட்டுத்தான் தனது விவசாயத்தை ஆரம்பித்திருக்கிறார், லட்சுமி. ஆரம்பத்திலிருந்தே இயற்கை விவசாயம்தான் எனத் தெளிவாக முடிவெடுத்துக் களம் இறங்கியிருக்கிறார், லட்சுமி. பாரம்பர்ய இயற்கை வேளாண்மையை மட்டுமே கடைப்பிடித்து வருவதால், பொருளாதார ரீதியிலும் நீடித்த, நிலையான, தற்சார்பான விவசாயத்திலும் எடுத்துக் காட்டாக விளங்குகிறார். ஆரம்பக்கால வருமானத்துக்காக எருமைகளை வளர்த்து அவற்றின் பாலை விற்பனை செய்ய ஆரம்பித்தார். அவற்றின் சாணத்திலிருந்து மண்புழு உரம் தயாரித்து விற்று, கொஞ்சம் கொஞ்சமாகப் பண்ணையை விரிவு படுத்தியிருக்கிறார்.

முன்னோர் கடைப்பிடித்து வந்த, காக்கை கூடு கட்டுவதை வைத்து மழைக் கிடைக்கும் அளவைக் கணிக்கும் முறையை லட்சுமி கடைப்பிடிக்கிறார். அதற்கேற்றவாறு திட்டமிட்டு வெற்றிகரமாக விவசாயமும் செய்துவருகிறார். காக்கை, மரத்தின் உள் பக்கம் கூடு கட்டினால் நல்ல மழை வரும், வெளிப் பக்கத்தில், கிளைகளின் கடைசி ஓரத்தில் கூடு கட்டினால் குறைவாகத்தான் பெய்யும் என்பது இவரது அனுபவம். ஊடுபயிர், கலப்புப்பயிர், பொறிப்பயிர் என எல்லா நுட்பங்களையும் கடைப்பிடிக்கிறார். வேம்பு, எலுமிச்சை, தேக்கு போன்ற நீண்ட காலப் பயிர்கள், கொடிவகைக் காய்கறிகள், கிழங்குகள், கீரைகள், வெங்காயம், பூண்டு, நெல், கோதுமை, பருத்தி என விவசாயம் செய்துவருகிறார். நுண்ணுயிர் உரங்கள், இ.எம், ஜீவாமிர்தம் போன்றவற்றைத்தான் இடுபொருள்களாகப் பயன்படுத்துகிறார்.

அயராமல், அர்ப்பணிப்புடன் இயற்கை விவசாயம் செய்தாலும், இவரது வெற்றிக்குக் காரணம், இவரது நேரடி விற்பனை முறைதான். விற்பனை குறித்து அவரிடம் பேச்சு கொடுத்தபோது, “என்னுடைய விளை பொருள்களுக்கான முக்கியச் சந்தை தார்வாட். தவிர பெல்காம், பெங்களூரு, மங்களூரு வரை பொருள்கள் செல்கின்றன.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6

என்னுடைய வாகனத்தில் விளைபொருள்களை ஏற்றிக்கொண்டு, நானே நேரடியாக விற்பனை செய்கிறேன். இப்படி வாரம் இருமுறை செல்கிறேன். எனக்கு அங்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு என்னிடம் வாங்கிச் செல்கிறார்கள். நானே எனக்கு உருவாக்கிக்கொண்ட சந்தை இது.

தரமான விளைபொருள்களைக் கொண்டு செல்கிறேன்; விலை நிர்ணயமும் செய்கிறேன். அதனால்தான், பொருளாதார ரீதியாக உயர்ந்திருக்கிறேன்” என்று சொன்ன லட்சுமி, நம்மை அழைத்துக்கொண்டு தார்வாட் நகரத்துக்குச் சென்றார்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6


தார்வாட்டில்தான், கர்நாடக மாநிலத்தின் பிரபலமான வேளாண் பல்கலைக்கழகம் இருக்கிறது. அந்த நகர்தான் லட்சுமிக்கு முக்கியச் சந்தை. அந்நகரிலுள்ள வேளாண் துறை அதிகாரிகள்கூட லட்சுமியின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அதேபோல வாரத்தில் ஒரு நாள், பெல்காமிலுள்ள ‘ஆல் இண்டியா ரேடியோ’ அலுவலகத்தில் தன்னுடைய இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்கிறார்.

அவர் சென்று சேர்வதற்கு முன்பே, அவரின் வாடிக்கையாளர்கள் காத்திருக் கிறார்கள். அவர் கொண்டு சென்ற காய்கறி களையும் கீரைகளையும் வேகமாக வாங்குகிறார்கள், வாடிக்கையாளர்கள். சிறிது நேரத்திலேயே விற்பனையை முடித்துவிட்டார், லட்சுமி. அதற்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. பக்கத்து அலுவலகத்திலிருந்து உரத்த குரலில் சிலர் பேசுவது கேட்டது. என்னவென்று விசாரித்தபோது, ‘‘எங்கள் அலுவலக வளாகத்துக்குத்தான், முதலில் வந்து காய்கறிகளை விற்பனைச் செய்ய வேண்டும்’’ என அந்த அலுவலர்கள் லட்சுமியிடம் அன்பாகச் சண்டைப் போட்டதைப் பார்த்தோம். 

லட்சுமி லோக்குர் போல விவசாயியே விற்பனையாளராக மாறினால்தான் விவசாயிகள் தற்சார்பு அடைய முடியும். அதற்குத் தரமான விளைபொருள்களை இயற்கை முறையில் விளைவிக்க வேண்டியதும் அவசியம்.

 -விரிவடையும்

தொடர்புக்கு,
இ.மெயில்: laxmilokur@gmail.com

அங்ககச் சான்றிதழ் அவசியமா?

நாங்கள் சென்னையில் ரீஸ்டோரைத் தொடங்கியபோது, அங்ககச்(இயற்கை)சான்றிதழைப் பெறுவது பெரும் செலவைக் கொடுக்கும் விஷயமாக இருந்தது. எல்லா அமைப்பு சிக்கல்களையும் போல இதையும் நாம் விலகி நடந்துவிட வேண்டும். ஏனென்றால், இயற்கைப் பொருளா, இல்லையா? என்பது உற்பத்தி முறையில்தான் உள்ளதே தவிர, சான்றிதழில் இல்லை. அது வழிமுறையைச் சார்ந்ததேயன்றி, விதிகளைச் சார்ந்ததல்ல. விவசாயியைச் சார்ந்ததேயன்றி, விளைபொருளைச் சார்ந்ததல்ல. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே ரீஸ்டோரில், அங்ககச் சான்றிதழ் விஷயத்தை எதிர்கொண்டோம். நம்பிக்கையை முதன்மையாகக் கொண்ட வழிமுறையைப் பின்பற்றத் தொடங்கினோம். அது நடைமுறையில் வெற்றி பெறவும் செய்தது.

இயற்கையில் விளைந்த பொருள்தானா என்பதை அறியவும், அந்த விஷயத்தில் ஒவ்வொரு விவசாயியின் அக்கறையை அறியவும் நாங்கள் சோதனைகளைப் பயன்படுத்தாமலில்லை. திடீரென அவர்களின் பண்ணைகளைப் பார்வையிடுதல், அந்த இடத்திலேயே சோதனை செய்தல் எனப் பல வழிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். ஆனால், முக்கியமான விஷயம், நம்பிக்கை அடிப்படையில் நாங்கள் உருவாக்கியிருக்கும் உறவுகள்தான். சில நேரங்களில், “பயிர் வாடிடுச்சு, இயற்கை முறையில் என்ன செய்யணும்னு தெரியல. அதனால, ரசாயனத்தைச் தெளிச்சுட்டேன். இந்த முறை நம்ம பொருள்கள ரீஸ்டோருக்கு கொடுக்க முடியாது” என்று அலைபேசியில் அழைத்துச் சொல்லும் நேர்மையான விவசாயிகள் இருக்கிறார்கள். சமூகத்தின் மற்ற இடங்களைப் போலவே, இங்கேயும் புல்லுருவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்களுக்கு அப்படித் தெரியவரும் போது, அப்படிப்பட்ட விவசாயிகளை, விவசாயக் குழுக்களை எங்களின் தொடர்பிலிருந்தே நீக்கி விடுகிறோம்.

நிறுவன ரீதியான அங்ககச் சான்றிதழ் பெறுவது, விவசாயிகளுக்குப் பெரும் செலவை ஏற்படுத்தும். மேலும், விவசாயிகளின் எண்ணிக்கை பெருகினால்தான், அந்த நிறுவனங்களுக்கு வருமானமும். எனவே, அங்ககச் சான்றிதழ் அளிக்கும் எல்லா நிறுவனங்களுமே நேர்மையாக நடக்குமா என்பது சந்தேகமே! பெரும்பாலும், சான்றிதழ் என்பது ஏற்றுமதிக்குத் தேவைப்படுகிறது.

அந்தத் தேவையை ஒட்டியே அது வளர்ந்தும் வருகிறது. எனவே, மூன்றாம் தரப்பு நிறுவனங்களைச் சாராமல், உள்ளூர்ச் சூழலுக்கு உகந்த, விவசாயிகள் சார்ந்த தீர்வுகளையே நாம் இந்த விஷயத்தில் முன்னிறுத்த வேண்டும். அதனால்தான், விவசாயிகளுக்கிடையிலேயே சுய கட்டுப்பாட்டுடன், கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ள PGS (Participatory Guarantee System) இந்தியாவில் நல்ல வடிவம் பெற்று வருகிறது. மேலும், பெரும்பாலான முக்கிய இயற்கை வேளாண் அமைப்புகளும் குழுக்களும் இதை ஆதரிக்கின்றன.