அனைவருக்கும் பசுமை வணக்கம்!
மரபணு மாற்று விதைகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள உணவுப்பயிர்களை, இந்தியாவில் அறிமுகம் செய்துவிட வேண்டும் எனப் பல ஆண்டுகளாகவே பன்னாட்டு நிறுவனங்கள் ஒற்றைக்காலில் நிற்கின்றன.
இத்தகையச் சூழலில், மரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவில் பயிரிட அனுமதியளிக்கும் குழுவான ஜி.இ.ஏ.சி, அண்மையில் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மரபணுமாற்று கடுகு ரகத்தை வணிகரீதியில் சாகுபடி செய்ய அனுமதி வழங்கலாம்’ எனப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
‘‘தற்போது உள்ள ரகங்களைவிட மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை 30% அதிக மகசூலைக் கொடுக்கும். உணவு எண்ணெய் இறக்குமதிக்காகவே ஆண்டுக்கு 120 கோடி டாலர் செலவழிக்கிறோம்’’ எனப் புள்ளிவிவரங்களும் சொல்லப்படுகின்றன.
ஆனால், ‘‘நமது பாரம்பர்ய ரகக் கடுகு மூலம், சரியான சாகுபடி தொழில்நுட்பங்களைப் பின்பற்றி வழக்கத்தைவிட 30 சதவிகிதத்துக்கு மேல் நல்ல விளைச்சலை, நம் விவசாயிகள் பெற்றுவருகிறார்கள். உண்மை நிலை இப்படி இருக்க, மரபணு கடுகு நமக்கு எதற்கு? ‘மரபணு மாற்றுப் பயிர்கள்’, சூழலுக்கும் உயிரின பன்மயத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை’’ எனச் சூழலியல் ஆர்வலர்கள் எதிர் குரல் எழுப்பி வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான ‘சுதேசி ஜக்ரான் மஞ்ச்’கூட மரபணு மாற்றப்பட்ட கடுகு அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய மண்ணில் மறைக்கப்படும், மறக்கடிக்கப்படும் பாரம்பர்யங்களை மீட்டெடுக்கும் வகையில் பாரம்பர்ய மாடுகள், பாரம்பர்ய உடை, பாரம்பர்ய யோகா... போன்றவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வருவது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுதான். தற்போது இதே அரசின் கண்முன்பாகவே பாரம்பர்யமிக்க சுதேசி விதைகளின் உயிர், ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கப்போகிறதா அல்லது நல்வினையாற்றப்போகிறதா!
- ஆசிரியர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism