Published:Updated:

வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!

வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!
பிரீமியம் ஸ்டோரி
வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!

40 சென்ட்... தினமும் ரூ 1,500மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்

வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!

40 சென்ட்... தினமும் ரூ 1,500மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!
பிரீமியம் ஸ்டோரி
வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!
வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!

சென்னை என்றாலே... சட்டமன்றம், தலைமைச் செயலகம், போக்குவரத்து மிகுந்த சாலைகள், மெரினா கடற்கரை... போன்றவைதான் நினைவுக்கு வரும். ஆனால், பரபரப்பான அந்த மாநகரத்திலும் ஆங்காங்கே விவசாயம் நடந்து வருகிறது என்பது பலருக்கு ஆச்சர்யம் அளிக்கக்கூடும். அப்படி இன்னமும் விவசாயம் நடந்துவரும் ஒரு கிராமம், கவுல் பஜார். மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பின்புறம் இருக்கிறது, இக்கிராமம். பல்லாவரத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கு முல்லைப் பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், ராஜேந்திரன்.

விமான நிலையத்தின் பின்புறச் சுற்றுச்சுவரை ஒட்டி இருக்கிறது, ராஜேந்திரனின் பச்சைப்பசேல் மலர்த் தோட்டம். காலை நேரத்தில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ராஜேந்திரனைச் சந்தித்தோம். “எங்க ஏரியாவுல முன்னாடி முழுக்க விவசாயம்தான் இருந்துச்சு. இப்போ, ஆள் பற்றாக்குறையால கொஞ்ச இடத்துலதான் விவசாயம் நடக்குது. அதிகமா மல்லி, முல்லை, காக்கரட்டான்னு பூ விவசாயம்தான். எல்லோருமே ரெண்டு, மூணு வகையான பூக்களைச் சாகுபடி செய்வோம். அதோட காய்கறி, கீரையும் பயிர் செய்வோம். இப்போ தண்ணீர்ப் பற்றாக்குறையா இருக்கிறதால, கிணத்துல இருக்குற கொஞ்ச நஞ்ச தண்ணியை வெச்சு, முல்லைப் பூவை மட்டும் சாகுபடி செஞ்சுகிட்டிருக்கேன். கொஞ்சமா மிளகாய், அரைக்கீரை, சிறுகீரை, முருங்கை போட்டிருக்கேன்.

வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2015-ம் வருஷம் வெள்ளம் வந்ததுல தோட்டம் முழுசா அழிஞ்சுப் போச்சு. அப்புறமா எல்லாத்தையும் சீரமைச்சு, இப்போ விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலமிருக்கு. 40 சென்ட் நிலத்துலதான் முல்லைப் பூ இருக்கு. அதில்லாம இந்தப்பக்கம் பூப்பறிக்க ஆள் கிடைக்கிறதில்ல. அதனால குறைந்தளவுல நட்டாதான் சமாளிக்க முடியும்” முன்கதை சொன்ன ராஜேந்திரன், தொடர்ந்தார்.

“முல்லைப் பூ, வறட்சியில நல்லா வரும்னு சொன்னதால, வேலூர்ல இருந்து நாத்து வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன். வறட்சியிலும் முல்லைப் பூ நல்ல மகசூல் கொடுத்திட்டு இருக்கு. முதல்ல மல்லிகைப் பூ நடவு செஞ்ச நிலம்தான் இது. அதைப் பராமரிக்க முடியாமத்தான் முல்லைப் பூவுக்கு மாறினேன். 40 சென்ட் முல்லை, அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, மிளகாய், முருங்கைனு கிடைக்கிற வருமானத்தை வெச்சு, குடும்பத்தை நடத்திட்டு இருக்கேன்.

வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!

பக்கத்துல இருக்குற பல்லாவரம் மார்க்கெட்லதான் பூவை விற்பனை செய்றேன். தினமும் காலையில் பூவைப் பறிச்சு மார்க்கெட்டுக்குக் கொண்டு போயிடுவேன். சில நேரங்கள்ல என் நிலத்துக்கே வந்து பூவை வாங்கிக்கிறாங்க. ஒரு தடவை நடவு செஞ்சுட்டா, இருபது வருஷம் வரை பூப்பறிச்சுட்டே இருக்கலாம். நடவு செஞ்ச ஆறு மாசத்துல இருந்து, பூப்பறிக்க ஆரம்பிக்கலாம்” என்ற ராஜேந்திரன், முல்லைப் பூ கொடுக்கும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“இப்போ, ஒரு நாளைக்கு 10 கிலோ அளவுக்குப் பூ கிடைக்குது. மழைக்காலமா இருந்தா, தினமும் 50 கிலோவுல இருந்து 80 கிலோ வரைக்கும்கூட பூக்கள் கிடைக்கும். இப்போ ஒரு கிலோ பூ 150 ரூபாய்னு விற்பனையாகுது. அந்த வகையில தினமும் 1,500 ரூபாய் கிடைக்குது.
முழுக்க ரசாயன முறையிலத்தான் சாகுபடி செய்றேன். இதுல ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, பறிப்புக் கூலினு பாதியளவு செலவாகிடும். மீதி 750 ரூபாய் லாபமாக நிக்கும். நானும் என் மனைவியும் சேர்ந்து உழைக்கிறதால ஆள் கூலி குறையுது” என்ற ராஜேந்திரன் நிறைவாக, “விவசாயம்தான் எங்க குலத்தொழில். விவசாயம் பார்த்துதான் என் பசங்களைப் படிக்க வெச்சேன். ஆனா, அவங்க விவசாயம் பக்கம் வர்றதுக்கு யோசிக்கிறாங்க. இந்தப் பகுதிகள்ல இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம் போயிடும்னு தோணுது. ஏற்கெனவே விமான நிலைய விரிவாக்கம்னு ஆரம்பிச்சப்பவே விவசாயம் காலியாகுற சூழ்நிலை வந்தது. ஆனா, அந்த வேலைகளை நிறுத்திட்டதால இன்னமும் விவசாயம் பார்த்துட்டு இருக்கோம். விவசாயம் செய்யுறதுல பல நெருக்கடிங்க இருந்தாலும், மனசுக்கு நிம்மதியான தொழில் விவசாயம்தாங்கிறதை மறுக்க முடியாது” என்றுச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
ராஜேந்திரன்,
செல்போன்: 98845 08629

வளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ!

இயற்கையிலும் விளைச்சல் கிடைக்கும்!

ராஜேந்திரன் முழுக்க முழுக்க ரசாயன உரம் பயன்படுத்தி விவசாயம் செய்வதால், அவரிடம் இயற்கை முறையில் முல்லைச் சாகுபடி செய்வது குறித்து... திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மலர் விவசாயி ஹரிகிருஷ்ணனை செல்போனில் பேச வைத்தோம். “நான் இயற்கை முறையில் மல்லி, முல்லை, ரோஜானு பலவிதமான மலர்களைச் சாகுபடி செய்றேன். மலர்ச் சாகுபடி மூலம்தான், என்னோட மகனை வெளிநாட்டுல டாக்டருக்குப் படிக்க வைக்க முடிஞ்சுது. இயற்கை விவசாய முறையில மலர் சாகுபடி செய்யுறப்ப, இடுபொருள் செலவு பெரியளவுல குறையும். உங்கள் தோட்டத்துல விளையுற பூக்களுக்கு மார்க்கெட்ல தனி மவுசும் கிடைக்கும். யூரியா போட்டால், பூவோட அளவு சிறியது, பெரியதாக இருக்கும். பயிரைத் தாக்குற பூச்சிகளோட வருகையும் அதிகமாகும். அதனால, யூரியாவைப் போட்டா, பூவோட மகசூல் அதிகமாக வரும் என்பது உண்மையல்ல.

ரசாயன உரங்களுக்கு மாற்றா, குறைந்த செலவில பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், இயற்கை எருவைத் தயாரிச்சுப் பயன்படுத்தலாம். இதைத் தயாரிக்க வசதி இல்லையென்றால், பயோ பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம். பூச்சிகளை விரட்ட மூலிகைப் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தலாம். வேர்ப்புழுவைக் கட்டுப்படுத்த வேப்பம் பிண்ணாக்குப் பயன்படுத்தலாம்” என்று ஹரிகிருஷ்ணன் சொன்னதைக் கேட்டுக்கொண்ட ராஜேந்திரன், “என்னோட நிலத்துல சிறிய பரப்பளவுல இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். நல்ல மாற்றம் தெரிஞ்சா, முழுசா இயற்கை விவசாயத்துக்கு வந்துடுறேன். இப்போ மலர்ச் சாகுபடியை இயற்கை முறையில செய்யும் முடியும்ங்கிற எண்ணம் மனசுக்குள்ள வந்திருக்கு....” என நம்பிக்கையுடன் சொன்னார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

40
சென்ட் நிலத்தில் முல்லைப் பூ சாகுபடி செய்யும் விதம் குறித்து ராஜேந்திரன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

முல்லைப் பூவுக்குப் புரட்டாசிப் பட்டம் சிறந்தது. அனைத்து மண் வகைகளிலும் இது வளரும். தேர்வு செய்த 40 சென்ட் நிலத்தில், ஓர் உழவு செய்து 3 டன் தொழுவுரத்தைக் கொட்டிக் கிளறி, இரண்டு உழவு செய்ய வேண்டும். பிறகு 2 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து அதில் நான்கு அடி இடைவெளியில் முல்லைப் பூ நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்து 15 நாள்கள் வரை தினமும் தொடர்ச்சியாகத் தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மாதம் ஒருமுறை களைகளை அகற்றிவிட்டுப் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரத்தை இட வேண்டும். (இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா... போன்ற இடுபொருள்களைப் பயன்படுத்தலாம்) தேவையான பூச்சிக் கொல்லிகளையும் தெளிக்க வேண்டும். இப்படிப் பராமரித்தால், 120 நாள்களிலிருந்து பூக்கள் பூக்கத் தொடங்கும். 180 நாள்களுக்குப் பிறகு, முழு மகசூல் கிடைக்கும்.” 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism