Published:Updated:

செலவைக் குறைத்த ஜீரோ பட்ஜெட்...

செலவைக் குறைத்த ஜீரோ பட்ஜெட்...
பிரீமியம் ஸ்டோரி
செலவைக் குறைத்த ஜீரோ பட்ஜெட்...

சந்திப்பு: துரை.நாகராஜன் - படம்: க.பாலாஜி

செலவைக் குறைத்த ஜீரோ பட்ஜெட்...

சந்திப்பு: துரை.நாகராஜன் - படம்: க.பாலாஜி

Published:Updated:
செலவைக் குறைத்த ஜீரோ பட்ஜெட்...
பிரீமியம் ஸ்டோரி
செலவைக் குறைத்த ஜீரோ பட்ஜெட்...

ந்தியாவில் இயற்கை விவசாயம் குறித்துப் பரப்புரை செய்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவர் ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர். ‘ஜீரோ பட்ஜெட்’ என்ற பெயரில் இயற்கை வேளாண்மைக் கோட்பாடுகளை வகுத்து இந்திய விவசாயத்துக்குச் சமர்ப்பணம் செய்திருக் கிறார், பாலேக்கர். பெரும்பாலும் வட மாநிலங்களில் மட்டுமே ஜீரோ பட்ஜெட் விவசாயம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில்... சுபாஷ் பாலேக்கரைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியது, ‘பசுமை விகடன்’. 2007-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம், தமிழகத்திலேயே முதல் முறையாக... திண்டுக்கல் மாவட்டத்தில் ஜீரோ பட்ஜெட் பயிற்சியை நடத்தியது, பசுமை விகடன்.

நான்கு நாள்கள் நடந்த அந்தப் பயிற்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஈரோட்டில் பசுமை விகடன் நடத்திய ஜீரோ பட்ஜெட் பயிற்சியிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி எடுத்துக்கொண்டனர். இதன்பிறகுதான் தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது, சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் முறையை ஏராளமான விவசாயிகள் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

செலவைக் குறைத்த ஜீரோ பட்ஜெட்...

பீஜாமிர்தம் (விதை நேர்த்திக்கான கலவை), ஜீவாமிர்தம் (இடுபொருள்), வாபாஸா (மண்ணில் காற்றோட்டத்துக்கான இடைவெளி), மூடாக்கு ஆகிய நான்கு அடிப்படைக் கோட்பாடுகளையும்; பூச்சி விரட்டிகளாக அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம், நீம் அஸ்திரம்  ஆகியவற்றையும் கொண்டதுதான் ஜீரோ பட்ஜெட் விவசாயம். இதில் முக்கியமான விஷயம்... இடுபொருளாக இருந்தாலும் சரி, பூச்சிவிரட்டியாக இருந்தாலும் சரி அவற்றுக்கான மூலப்பொருள்களை வெளியிலிருந்து வாங்கக்கூடாது என்பதுதான். அவை அனைத்தும் பண்ணையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் ஜீரோ பட்ஜெட் முறையின் முக்கியக் கோட்பாடு.

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாய முறையைக் கடைப்பிடித்து வெற்றிபெற்ற விவசாயிகள் பலர் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குழுக்களாக இணைந்து ஜீரோபட்ஜெட் விவசாயத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து, ‘உதயேந்திரன் இயற்கை வேளாண்மை குழு’ சிறப்பான முறையில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறது. அக்குழுவினரை ஜீரோ பட்ஜெட் சிறப்பிதழுக்காகச் சந்தித்துப் பேசினோம்.

தங்களது வேளாண்மை முறை குறித்துப் பேசிய குழுவின் தலைவர் தாந்தோணி, ‘‘உதயேந்திரன் இயற்கை வேளாண்மைக்குழு ஆரம்பிச்சு ஏழு வருஷம் ஆகுது. எங்க கிராமத்துல மொத்தம் 6 பேர்தான் இயற்கை விவசாயிகளாக இருக்கோம். எங்க கிராமத்துக்குள்ளேயே நாங்க ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தகவல்களைப் பரிமாறிக்குவோம். யாராவது ஒருத்தரோட நிலத்துல ஏதாவது புதுசா முயற்சி செஞ்சா, எல்லோரும் ஒண்ணா சேர்ந்துதான் முடிவெடுப்போம். எல்லோரும் ஒரே நேரத்துல ஒரே பயிரைப் பயிரிடுறது இல்ல. வேற வேற பயிர்களைத்தான் பயிர் செய்வோம்” என்று சொல்லிவிட்டு குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய வீரராகவன், “4 வருஷத்துக்கு மேல, நெல், கத்திரி, உளுந்து, நிலக்கடலை, எள்னு ஜீரோ பட்ஜெட் விவசாயத்துலதான் செய்துகிட்டு இருக்கேன். இந்த முறையில் இடுபொருள் வெளியில இருந்து உள்ளே வரக்கூடாது. நிலத்துல நாமளே உற்பத்தி செஞ்சதா இருக்கணும். கண்டிப்பா ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு நாட்டு மாடு அவசியம். அதேமாதிரி விளைபொருள்களை மதிப்புகூட்டி விற்பனை செய்தால் நிச்சயமா லாபம் கிடைக்கும்.

செலவைக் குறைத்த ஜீரோ பட்ஜெட்...

ஜீரோ பட்ஜெட் விவசாயத்துல விவசாயம் செய்யும்போது பூச்சித்தாக்குதல், நோய்த்தாக்குதல் குறைவு. ஒவ்வொரு போகத்துக்கும் பயிரை மாத்தி மாத்தி சாகுபடி செய்து, மண்ல சத்துகள் குறைஞ்சு போகாம பார்த்துக்கிறோம். குறிப்பா பாரம்பர்ய ரகங்களைத்தான் அதிகமாப் பயன்படுத்துறோம். செலவு குறைஞ்ச ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிச்சா மண்ணுல நுண்ணுயிர்கள் அதிகமாகப் பெருகி மண் வளமாகுது. ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறின பிறகு, செலவு குறைஞ்சு லாபம் அதிகமாயிடுச்சு” என்றார்.

இக்குழுவில் உறுப்பினராக உள்ள செல்வராஜ், “நான் 2 ஏக்கர் நிலத்துல கிச்சிலிச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பானு பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்துட்டு இருக்கேன். நம்ம நிலத்துல இருக்குற இலைதழைகள்; நம்ம மாடுகள்கிட்ட இருந்து கிடைக்குற சாணம், மூத்திரம்னு நிலத்துக்குள்ள இருக்குற பொருள்களை மட்டும்தான் பயன்படுத்துறோம். இப்போதான் கறுப்புக்கவுனி நெல் போட்டு அறுவடை செஞ்சு முடிச்சேன். இயற்கையில் விளைஞ்ச அரிசிக்குத் தனி மவுசு இருக்கு. ஜீரோ பட்ஜெட் முறையில் விளைச்சலும் நல்லா இருக்குது. எங்களோட விளைபொருள்களை வியாபாரிங்களுக்கு விற்பனை செய்றதில்லை. எங்க குழு மூலமா நேரடி விற்பனை செய்றோம். அதனால, நுகர்வோருக்குக் குறைவான விலையில் இயற்கை பொருள்களைக் கொடுக்க முடியுது. எங்களுக்கும் போதுமான லாபம் கிடைக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய சரண்ராஜன், “நான் 5 வருஷமா இயற்கை விவசாயம்தான் செய்றேன். எனக்கு 2 ஏக்கர் நிலமிருக்கு. நெல், எள், உளுந்து, காய்கறினு சுழற்சி முறையில பயிர் செய்றேன். ஜீரோ பட்ஜெட் முறையில் விதை, நடவு, உழவு, அறுவடை மட்டும்தான் செலவு. மத்ததுக்கு செலவில்லை. பயிரைப் பத்தி கவலைப்பட வேண்டியதில்லை. ரசாயன உரம் பயன்படுத்தினப்போ செலவு அதிகமா இருந்துச்சு. இப்போ செலவு குறைஞ்சு லாபம் அதிகமாயிடுச்சு” என்றார்.