நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

19 ஏக்கர்... ரூ 15 லட்சம் - நெல், எள், வாழை, உளுந்து... சிறப்பான லாபம் கொடுக்கும் ஜீரோ பட்ஜெட்!

19 ஏக்கர்... ரூ 15 லட்சம் - நெல், எள், வாழை, உளுந்து... சிறப்பான லாபம் கொடுக்கும் ஜீரோ பட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
19 ஏக்கர்... ரூ 15 லட்சம் - நெல், எள், வாழை, உளுந்து... சிறப்பான லாபம் கொடுக்கும் ஜீரோ பட்ஜெட்!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

விவசாயத்துக்கான இடுபொருள் செலவைக் குறைக்க வேண்டும், விவசாயிகள் தற்சார்பு விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்... போன்ற காரணங்களுக்காகப் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சுபாஷ் பாலேக்கரால் வடிவமைக்கப்பட்டதுதான் ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை. பண்ணைக்குள்ளேயே மிகக் குறைவான செலவில் இடுபொருள்கள், பூச்சிவிரட்டிகளைத் தயாரிக்கும் முறையை உலகுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார், ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர். வட மாநிலங்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்ட அவரது வேளாண் வழிமுறைகளை, ‘பசுமை விகடன்’ தமிழகத்துக்கும் அறிமுகப்படுத்தியது.

19 ஏக்கர்... ரூ 15 லட்சம் - நெல், எள், வாழை, உளுந்து... சிறப்பான லாபம் கொடுக்கும் ஜீரோ பட்ஜெட்!

அதைத் தொடர்ந்து பலரும் ஜீரோ பட்ஜெட் விவசாய வழிமுறைகளைச் செய்து பார்த்ததில், அதன் சிறப்பை உணர்ந்து தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்திலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் ஏராளமான விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய வெற்றிகரமான ஜீரோ பட்ஜெட் விவசாயிகளில் ஒருவர்தான், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்.

மயிலாடுதுறையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொற்கை கிராமத்தில் 19 ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் செய்துவருகிறார் வெங்கடேஷ்.

ஒரு பகல்பொழுதில் வெங்கடேஷை அவரது பண்ணையில் சந்தித்தோம். “எங்க அப்பா, தாத்தா எல்லாருமே பெரியளவுல விவசாயம் செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்களுக்கு அடுத்து விவசாயம் செய்ய ஆள் இல்லாததால, எங்க குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களை 20 வருஷத்துக்கு முன்னாடியே விற்பனை செஞ்சுட்டோம். நான், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல இசைத்துறை உதவிப் பேராசிரியரா வேலை செஞ்சுட்டு இருக்கேன். ஆரம்பத்துல இருந்தே பசுமை விகடன் படிச்சுட்டு இருக்கேன். பசுமை விகடன்தான் எனக்கு விவசாயம் செய்யணுங்கிற ஆசையை ஏற்படுத்துச்சு. பசுமை விகடன்ல ஜீரோ பட்ஜெட் பத்தின கட்டுரைகளைப் படிச்சப்போ, அதுல எனக்கு ஆர்வம் ஏற்பட்டுச்சு. சுபாஷ் பாலேக்கர் நடத்தின ஒரு பயிற்சியிலயும் நான் கலந்துகிட்டேன். அதுக்கப்புறம் விவசாய ஆசை அதிகமாகி 2010-ம் வருஷம் புதிதாக நிலம் வாங்கி ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்ன வெங்கடேஷ் தொடர்ந்தார்.

19 ஏக்கர்... ரூ 15 லட்சம் - நெல், எள், வாழை, உளுந்து... சிறப்பான லாபம் கொடுக்கும் ஜீரோ பட்ஜெட்!

“மொத்தம் 19 ஏக்கர். 15 ஏக்கர் நன்செய்.

4 ஏக்கர் புன்செய். கிர், காங்கிரேஜ் மாடுகள் உள்பட மொத்தம் 11 நாட்டுப் பசுமாடுகளை வளர்க்கிறோம். தினமும் காலையிலயும் சாயங்காலமும் தோட்டத்துக்கு வந்துடுவேன். விடுமுறை நாள்கள்ல முழு நேரமும் இங்கதான் இருப்பேன். என்னோட நண்பர் மணிகண்டன்தான் எனக்கு விவசாயத்துல உறுதுணையா இருக்கார்.

பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி

போன ஏழு வருஷமா ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம்னு பயன்படுத்துறதால மண்ணுல அதிகளவுல நுண்ணுயிரிகள் பெருகி, நிலம் நல்ல வளமா மாறியிருக்கு. மண்ல ஈரப்பதம் இருந்துட்டே இருக்கு. அதனால பயிர்கள் வறட்சியைத் தாங்கி, நோய் நொடியில்லாம செழிப்பா வளருது. பூச்சித் தொல்லைகளும் இல்லை. வாழை, உளுந்து, எள், துவரைனு சாகுபடி செஞ்சாலும் அதிகமா சாகுபடி செய்றது, நெல்லைத்தான். எந்தப்பயிரா இருந்தாலும், விதையையோ அல்லது நாத்தையோ பீஜாமிர்தத்துல விதை நேர்த்தி செய்யாம விதைக்கமாட்டோம். விதைநேர்த்தி செய்றதால, முளைப்புத்திறன் நல்லா இருக்கு. இதோடு வேர் சம்பந்தமான நோய்களும் வர்றதில்லை. நெல்லுக்கு மட்டும்தான், ‘வரும் முன் காப்போம்’னு அக்னி அஸ்திரம் தெளிச்சு விட்டுடுவோம். மற்ற பயிர்களுக்குப் பூச்சிவிரட்டி தேவைப்படுறதில்லை.

19 ஏக்கர்... ரூ 15 லட்சம் - நெல், எள், வாழை, உளுந்து... சிறப்பான லாபம் கொடுக்கும் ஜீரோ பட்ஜெட்!

நெல்லுக்கு அடுத்து உளுந்து

வருஷா வருஷம் சம்பா பட்டத்துல 15 ஏக்கர் நன்செய்லயும் நெல் போட்டுடுவோம். குறுவை பருவத்துல 10 ஏக்கர் நிலத்துல மட்டும் நெல் போடுவோம். சம்பா பட்டத்துல சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பா, கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பானு பாரம்பர்ய நெல் ரகங்களைத்தான் சாகுபடி செய்றோம். குறுவை பட்டதுல கட்டைப் பொன்னி, குள்ளகார்னு ரெண்டு ரகத்தைச் சாகுபடி செய்வோம்.

சம்பா நெல் அறுவடைக்கு, ஒரு வாரத்துக்கு முன்னாடி பத்து ஏக்கர்லயும் உளுந்தை விதைச்சு விட்டுடுவோம். இதுக்கும் ஜீவாமிர்தம்தான் கொடுப்போம். பூ பூக்குற சமயத்துல புளிச்ச தயிரைத் தண்ணீர்ல கலந்து குவளையில மோந்து, செடிகள் மேல விசிறி அடிப்போம். மூணு மாசத்துல உளுந்து அறுவடைக்கு வந்துடும்” என்ற வெங்கடேஷ் புன்செய் நிலத்தில் மேற்கொண்டு வரும் விவசாயம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார் மணிகண்டன்.

“நாலு ஏக்கர் புன்செய் நிலத்துல மாடுகளுக்காக ஒரு ஏக்கர்ல பசுந்தீவனம் சாகுபடி செய்றோம். ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு ஒரு போகம் எள் போட்டு எடுத்திடுவோம். அதுல கிடைக்கிற எள்ளை மரச்செக்குல ஆட்டி எண்ணெய் எடுத்து விற்பனை செய்றோம். புன்செய் நிலத்துலயும் ஒன்றரை ஏக்கர் நிலத்துல வருஷத்துக்கு ஒரு தடவை உளுந்து போட்டுடுவோம். அரை ஏக்கர் நிலத்துல 500 வாழை மரங்கள் இருக்கு. வாழைக்கு இடையிலும் உளுந்து, துவரைனு ஊடுபயிர் சாகுபடி செய்வோம்” என்ற மணிகண்டனைத் தொடர்ந்து நிறைவாகப் பேசிய  வெங்கடேஷ்,

“ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், பீஜாமிர்தம்னு பயன்படுத்துறதால மண் வளமா மாறியிருக்கு. இதோட பயிர்களும் செழிப்பா வளர்ந்து பலன் கொடுக்குது. வாழை, நெல், உளுந்து, எள்னு சாகுபடி பண்றதுல 19 ஏக்கர் நிலத்துலயிருந்து வருஷத்துக்கு கிட்டத்தட்ட 15 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுட்டு இருக்கு” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.  

தொடர்புக்கு,
மணிகண்டன்,
செல்போன்: 81242 59564.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ஒரு ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் முறையில் நெல் சாகுபடி செய்வது குறித்து வெங்கடேஷ் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஒரு ஏக்கர் விதைப்புக்கு 7 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். இரண்டு சால் உழவு ஓட்டி... வேம்பு, நொச்சி, எருக்கன், ஆடாதொடை, நுணா ஆகிய இலைகளைக் கலந்து மொத்தமாக 20 கிலோ மற்றும் 20 கிலோ கன ஜீவாமிர்தம் ஆகியவற்றை நிலத்தில் இட்டு, ஒரு சால் உழவு ஓட்டி நாற்றங்கால் அமைக்க வேண்டும்.

ஒன்றரை கிலோ விதைநெல்லை, சணல் சாக்கில் கட்டி, பீஜாமிர்தத்தில் 24 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி, மூன்றாம் கொம்பு விதையாக நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். விதைத்த 3, 8 மற்றும் 15-ம் நாள்களில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும். 21-ம் நாளில் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும்.

சாகுபடி நிலத்தில் 2 சால் உழவு ஓட்டி, 200 கிலோ கன ஜீவாமிர்தம் போட்டு, ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, ஒற்றை நாற்று முறையில் வரிசைக்கு வரிசை 40 சென்டிமீட்டர், நாற்றுக்கு நாற்று 30 சென்டிமீட்டர் இடைவெளியில் குத்துக்கு ஒரு நாற்று என நடவு செய்ய வேண்டும். நடவுக்கு முன் நாற்றுகளைப் பீஜாமிர்தக் கரைசலில் மூழ்கவைத்து எடுத்து, நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்ய வேண்டும். தேவைப்படும் சமயத்தில் களைகளை அகற்ற வேண்டும்.

நடவு செய்த 5, 20 மற்றும் 35-ம் நாள்களில் பாசனநீரோடு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். நடவு செய்த 45, 60, 75 மற்றும் 90-ம் நாள்களில் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் குவளை(மக்கு) மூலம் பயிர்மீது பரவலாக விசிறியடிக்க வேண்டும். நடவு செய்த 60-ம் நாளுக்கு மேல், 10 லிட்டர் அக்னி அஸ்திரத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிர்கள்மீது தெளிக்க வேண்டும். பூ பூக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த தயிரை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நாம் விதைக்கும் நெல்லின் வயதைப் பொறுத்து அறுவடை காலம் மாறுபடும். கதிர் முற்றத் தொடங்கியதும் அறுவடை செய்யலாம். 

ஏக்கருக்கு 300 கிலோ உளுந்து

ஒரு ஏக்கர் நிலத்துல 300 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்குது. ஒரு கிலோ உளுந்து 80 ரூபாய்னு விற்பனையாகும். அந்த வகையில் 10 ஏக்கர் நிலத்துல கிடைக்கிற 3 ஆயிரம் கிலோ உளுந்து மூலமா 2,40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா வகையான செலவும் போக, 1,89,500 ரூபாய் லாபமா நிக்கும்.

துவரை மூலமா வருஷத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

மரச்செக்கு நல்லெண்ணெய்

“ஒரு ஏக்கர் நிலத்துல 200 கிலோ எள் மகசூலாகும். அதை மரச்செக்குல கொடுத்து ஆட்டுனா 80 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் 300 ரூபாய்னு விற்பனை செய்றோம். அது மூலமா 24 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல எல்லாச் செலவும் போக, 18 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்” என்கிறார், வெங்கடேஷ்

ஒரு லிட்டர் பால் 55 ரூபாய்

“மொத்தம் இருக்குற 11 பசு மாடுகள்ல 5 கன்றுக்குட்டி போக, மீதி 6 மாடுகள்தான் பருவத்துக்கு வந்த மாடுகள். எப்பவும் மூணு பசு மாடுகள் கறவையில் இருந்துட்டே இருக்கும். கன்றுக்குட்டிகள் குடிச்சது போக, தினமும் 20 லிட்டர் பால் வரை விற்பனை செய்றோம். ஒரு லிட்டர் பால் 55 ரூபாய் வீதம், தினமும் 1,100 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல மாடுகளுக்கான தீவனச் செலவு போக, தினமும் 500 ரூபாய் லாபமா நிக்கும். வருஷத்துக்கு 1,82,500 ரூபாய் லாபம் கிடைக்கும்” என்கிறார், வெங்கடேஷ்.

19 ஏக்கர்... ரூ 15 லட்சம் - நெல், எள், வாழை, உளுந்து... சிறப்பான லாபம் கொடுக்கும் ஜீரோ பட்ஜெட்!

வாழை மூலம் ரூ.60 ஆயிரம்!

“ஐந்நூறு மரங்கள் இருந்தாலும், 400 தார்கள்தான் விற்பனைக்குத் தேறிவரும். ஒரு தார் 200 ரூபாய்னு விற்பனையாகுது. நாநூறு தார்கள் விற்பனை மூலமா வருஷத்துக்கு 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச் செலவும் போக 60 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்” என்கிறார், வெங்கடேஷ்.

19 ஏக்கர்... ரூ 15 லட்சம் - நெல், எள், வாழை, உளுந்து... சிறப்பான லாபம் கொடுக்கும் ஜீரோ பட்ஜெட்!

அரிசி மூலம் ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்

“ஒரு ஏக்கர் நிலத்துல 24 மூட்டை நெல் கிடைக்கும். அதை அரிசியா அரைச்சா 768 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்னு விற்பனை செய்றோம். அதுமூலமா 53,760 ரூபாய் வருமானம் கிடைக்குது. 96 கிலோ குருணை மூலம் 2,880 ரூபாயும், 545 கிலோ தவிடு மூலமா 4,360 ரூபாயும் வருமானம் கிடைக்கும்.

ஆக மொத்தம் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி மூலம் 61,000 ரூபாய் வருமானம். இதுல எல்லாச் செலவும் போக, ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.

15 ஏக்கர் சம்பா பட்ட சாகுபடி, 10 ஏக்கர் குறுவை பட்ட சாகுபடி மூலமா ஒரு வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. நெல் சாகுபடி மூலமாகக் கிடைக்கிற வைக்கோலை மாடுகளுக்குத் தீவனமா வெச்சுக்குவோம்” என்கிறார், வெங்கடேஷ்