Published:Updated:

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7

எல்லோருக்கும் சோறு போடுமா இயற்கை விவசாயம்?சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன் - படம்: சி.சுரேஷ்

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7

எல்லோருக்கும் சோறு போடுமா இயற்கை விவசாயம்?சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன் - படம்: சி.சுரேஷ்

Published:Updated:
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

இன்னும் சில வெற்றிகரமான இயற்கைச் சந்தைகள் குறித்துப் பார்ப்பதற்கு முன்... ‘இயற்கை வேளாண்மையால் உலக மக்கள் அனைவருக்கும் சோறு போட முடியாது’ என்று தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்துப் பார்ப்போம்.

கொள்கை ரீதியாக இயற்கை வேளாண்மையை ஒப்புக் கொள்பவர்கள்கூட, ‘இயற்கை வேளாண்மையால் அதிக உற்பத்தி சாத்தியமா’ என்று ஐயப்படுகின்றனர். எந்தவொரு விஷயத்திலும், கிடைக்கும் நன்மை குறித்து யோசிக்கும்போதே, அதிலுள்ள சவால்களையும் யோசிப்பதே புத்திசாலித்தனம். இது, வேளாண்மைக்கும் பொருந்தும். அது ரசாயன விவசாயமாக இருந்தாலும் சரி, இயற்கை விவசாயமாக இருந்தாலும் சரி, நன்மை மற்றும் சவால்களை அலச வேண்டியது அவசியம். அதுகுறித்து தீவிரமாக விவாதிக்கவும் வேண்டும்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7

உலகம் முழுவதுமுள்ள விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி, அதன் மூலம் எவ்வளவு உற்பத்தியாகிறது என்று தெரிந்து கொண்ட பிறகுதான், உலகுக்கு உணவளிக்க முடியுமா, முடியாதா என்று சொல்ல முடியும். அதை விடுத்து, வெறுமனே பிதற்றுவது அவசியமற்றது. விவசாயத்துக்குள் ரசாயனங்கள் புகுத்தப்படுவதற்கு முன், காலங்காலமாக உலக மக்களுக்குச் சோறு போட்டது, இயற்கை விவசாய முறைதான். ஆனால், இடையில் திடீரென்று ஏற்பட்ட பஞ்சங்கள், மனிதர்களுக்குள் பயத்தை ஏற்படுத்திவிட்டன. இந்தப் பயத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன.

ஒரு சிறந்த வேளாண் முறை வழக்கொழிய வேண்டுமென்றால்... அதுகுறித்த அவதூறுகளைப் பரப்பி, மாற்று முறை குறித்த விஷயங்களைத் திணிக்க வேண்டும். இந்த வேலையைச் சரியாகச் செய்தன, பன்னாட்டு நிறுவனங்கள்.

அரசு புள்ளி விவரங்களின்படியும், பல்வேறு ஆய்வுகளின்படியும், உணவு உற்பத்தி என்றைக்கும் பற்றாக்குறையாக இருந்ததில்லை. உணவு விநியோகத்தில்தான் இன்று வரை பிரச்னை நிலவுகிறது. தற்போது தேவையைவிட இருமடங்கு தானியங்கள் நம்மிடம் கைவசம் உள்ளன.
அதற்குச் சமீபத்திய உதாரணம்கூட உண்டு. மத்தியில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அகில இந்திய மனித உரிமை அமைப்பான ‘மக்கள் சிவில் உரிமைக் கழகம்’ (PUCL), உணவு உரிமை குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், ‘இந்திய உணவுக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, ‘அப்படிக் கொடுத்தால், விலை வீழ்ச்சி ஏற்படும். கடலில் கொட்டினாலும் கொட்டுவோமே தவிர, இலவசமாகத் தர மாட்டோம்’ என்று சொன்னது. உடனே, ‘இது ஆலோசனை அல்ல, தீர்ப்பு’ என உச்ச நீதிமன்றம் கோபம் காட்டிய பிறகே, மத்திய அரசு வழிக்கு வந்தது. இதுபோலப் பல உதாரணங்கள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7இயற்கை விவசாயத்தால் நம் நாட்டின் உணவு மற்றும் நுண்ணூட்டச்சத்துத் தேவைகளை, நிச்சயம் பூர்த்தி செய்ய முடியும். சொல்லப்போனால் நீடித்த, நிலைத்த வாழ்க்கை முறைக்குச் சாத்தியமான ஒரே வழி இயற்கை விவசாயம்தான். உணவு பாதுகாப்பும் பாதுகாப்பான உணவும் இயற்கை விவசாய முறையில் மட்டுமே சாத்தியம். பெருகிவரும் இயற்கை விவசாயிக‌ளின் எண்ணிக்கையும், இயற்கைப் பொருள்களுக்கான சந்தையும் இதை உறுதி செய்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின், 58 உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த, 400 பன்னாட்டு வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை, ‘சிறு விவசாயிகளால் மேற்கொள்ளப்படும், நஞ்சற்ற‌ இயற்கை வழி வேளாண்மையே உலகின் பசியைப் போக்கும். ரசாயன விவசாயம், ஒற்றைப் பயிர் முறை, மரபணு மாற்றுப் பயிர்கள் போன்றவை, பசி மற்றும் ஏழ்மையைப் போக்கவோ சூழல், எரிசக்தி மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளவோ லாயக்கற்றவை’ என்று சொல்கிறது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ரோடெல் ஆராய்ச்சி நிறுவனம், 1981-ம் ஆண்டிலிருந்து இன்று வரை பண்ணை முறை சோதனையை நடத்தி வருகிறது. ஒரே பயிரை ரசாயன முறையிலும் இயற்கை முறையிலும் விளைவிக்கும் பரிசோதனையில் அது ஈடுபட்டு வருகிறது. இதுபோல், பல ஆண்டுகளாக, பல பயிர்களை அந்நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. உலகிலேயே நீண்ட நாள்களாக நடைபெறும் பயிர் சோதனை நடத்தி வரும் அமைப்பு இதுதான்.

அந்த நிறுவனம் தனது ஆய்வின் முடிவில், ‘முதல் 2 ஆண்டுகள் தவிர (அதுவும் சில பயிர்களுக்கு மட்டும்), தொடர்ந்து வரும் அனைத்து ஆண்டுகளிலும் இயற்கை வேளாண் முறைகள் மூலம்தான் அதிக மகசூல் கிடைக்கிறது’ என்று சொல்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல், இயற்கை வேளாண்மைதான் சிறந்தது, மேலானது என்று உலகுக்குப் பறைசாற்றி வருகிறது, இந்நிறுவனம். அதுகுறித்த விவரங்களை, https://rodaleinstitute.org/our-work/farming-systems-trial என்ற இணையதளத்தில் காணலாம்.

நமது நாட்டிலும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ‘மோடிபுரம் ஒருங்கிணைந்த ஆய்வு’ என்ற பெயரில், பல்வேறு மாநிலங்களில், 13 இடங்களில் நெல், கோதுமை, சோயா, இஞ்சி, பருத்தி, சோளம், கடுகு, வெண்டை, தக்காளி, மஞ்சள்... என 28 வகையான பயிர்களில் 3 ஆண்டுகளுக்கும் மேல், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உற்பத்தித்திறன், நிலைத்த தன்மை, லாபம் எனப் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்ததில், எல்லா பயிர்களுமே இயற்கை விவசாயத்தில் அதிக விளைச்சல் கொடுத்தன. பல பயிர்கள், ரசாயன விவசாயத்தில் கொடுப்பதைவிட

20 சதவிகிதம் கூடுதல் மகசூல் கொடுத்தன. சில பயிர்கள், 10 சதவிகிதம் மட்டும் கூடுதல் விளைச்சல் கொடுத்தன. ஆனால், எந்தப் பயிரிலும் ரசாயன விவசாய‌த்தைவிடக் குறைவாக மகசூல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

வழக்கம்போல இந்த ஆய்வு முடிவையும் அரசு வெளியிடவில்லை. ஆனால், பாராளுமன்றத்தில் நடந்த கேள்வி-பதிலின்போது இந்த ஆய்வின் முடிவு மேற்கோள் காட்டப்பட, ஆஷா (ASHA-Alliance for Sustainable and Holistic Agriculture) நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், தகவல் உரிமைச் சட்டம் மூலம் அந்த ஆய்வு குறித்த விவரங்களைப் பெற்றனர்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7 இயற்கை விவசாயம் குறித்த 450 ஆய்வுகளை உள்ளடக்கிய, ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது ஆஷா நிறுவனம். இயற்கை விவசாயத்தால், சோறு போட முடியாது என்று சொல்பவர்கள், கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. அதில் மண், உடல் நலம், நுண்ணுயிர்கள், நீடித்த நிலைத்த தன்மை, மகசூல் என இயற்கை வேளாண் முறையின் பயன்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. (Ecological Agriculture in India: Scientific Evidence on Positive Impacts & Successes, published by ASHA, Feb.2015/ பதிவிறக்கம் செய்ய http://vikalpsangam.org/static/media/uploads/Resources/ecological_agriculture_in_india_scientific__evidence.pdf).

இதேபோல், பல ஆய்வுகளில் இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் அதிக  மகசூல் குறித்துக் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வுகளை, நடுநிலை விஞ்ஞானிகள் முன்மொழிந்தாலும்கூட, சில ஊடகங்கள் தவிர, மற்றவை இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதனால், இந்த விவரங்கள் சாதாரண விவசாயிகளையும் பொதுமக்களையும் சென்றடையாமலே போய் விடுகின்றன. இயற்கை விவசாயம் குறித்த ஓர் ஆய்வின் முடிவுகளை http://www.pnas.org/content/112/24/7611.full.pdf என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இயற்கை விவசாயத்தால்... சூழல் சிறக்கும், பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்படும், வாழ்வாதாரம் பெருகும், ஆரோக்கியம் கிடைக்கும். மண்ணிலும், நீரிலும், காற்றிலும், மனித உடலிலும் உள்ள நச்சுகள் நீங்கும். இவையனைத்தையும்விட, விவசாயிகள் தற்சார்புடனும் கண்ணியத்துடனும் வாழ முடியும்.

இந்தியா, விதைப் பன்மயம் கொண்ட நாடு. மருத்துவ மற்றும் சத்துமிக்கப் பாரம்பர்ய விதைகள்; உவர் நிலத்தில் விளையக்கூடிய விதைகள்; வெள்ளம், வற‌ட்சி, பூச்சித்தாக்குதல் ஆகியவற்றையெல்லாம் தாங்கக்கூடிய விதைகள் இந்தியாவில் உள்ளன. எந்த அறிவுச் சொத்துரிமைக்கும் ஆட்படாமல், ஒரு திறந்த புத்தகமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த விதைகள் விவசாயிகளால் மிக நேர்த்தியாகச் சேமிக்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றன. பேராசையால், இந்த விதைகளை, இதன் உரிமைகளைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பது, இந்திய விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் செய்யும் அநீதி.

நலிந்துவரும் நம் உழவையும் உழவர் வாழ்வையும் தூக்கி நிறுத்தும் ஒரே வழி, இயற்கை விவசாயம்தான். இதுகுறித்த புரிதலுடனும் அர்ப்பணிப்புடனும் பணிகளை முன்னெடுப்போம், வாருங்கள்.

- விரிவடையும்