Published:Updated:

‘எந்திரன்’ பசுக்களைக் காக்க இவ்வளவு அக்கறையா?

‘எந்திரன்’ பசுக்களைக் காக்க இவ்வளவு அக்கறையா?
பிரீமியம் ஸ்டோரி
‘எந்திரன்’ பசுக்களைக் காக்க இவ்வளவு அக்கறையா?

சாடல்ஜூனியர் கோவணாண்டி

‘எந்திரன்’ பசுக்களைக் காக்க இவ்வளவு அக்கறையா?

சாடல்ஜூனியர் கோவணாண்டி

Published:Updated:
‘எந்திரன்’ பசுக்களைக் காக்க இவ்வளவு அக்கறையா?
பிரீமியம் ஸ்டோரி
‘எந்திரன்’ பசுக்களைக் காக்க இவ்வளவு அக்கறையா?

சுக்களின் நவீன காவலர்... காலாவின் பால்யகாலத் தோழர்... ஓபிஎஸ்ஸின் கெழுதகை நண்பர்... இபிஎஸ்ஸுக்கு இனியவர்... அப்புறம் நடிகர்-நடிகைகளுக்கு இஷ்டமானவர்... பெருமைமிகு பாரதத்தின் மேன்மைமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்த அடிமை தேசத்து ஜூனியர் கோவணாண்டி வணக்கம் சொல்லிக்கிறான்.

எங்க ஊருல கிறுக்குத்தனமா யாரைப்பத்தியாவது போட்டுக்கொடுத்தா, ‘பத்தவெச்சுட்டியே பரட்டை’னு நக்கலடிப்போம். இப்ப உங்களப் பார்த்தும் அப்படியேதான் கேக்கத் தோணுது.

‘எந்திரன்’ பசுக்களைக் காக்க இவ்வளவு அக்கறையா?

‘அது யாரு பரட்டை... நான் என்னத்த பத்தவெச்சேன்’ங்கிறீங்களா?

முதல்ல உங்களுக்குப் பரட்டையைப் பத்தி நான் சொல்லியே ஆகணும். ஏன்னா... அவரு உங்களுக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவர். இப்போதைக்குத் தமிழ்நாட்டோட ஆட்சியையே அவர வெச்சு, வளைச்சுட முடியும்கிற அளவுக்கு ரொம்பப் பழையவர்... மன்னிக்கணும் ரொம்பப் பெரியவர். அதாங்க சூப்பர் ஸ்டாரு ரசினிகாந்து. அவர் நடிச்ச ‘16 வயதினிலே’ படத்துல அவரோட பேரு பரட்டை. விடிஞ்சாலும் பொழுதுபோனாலும் வில்லங்கம் பண்றதுதான் வேலையே. அதனால, ‘பத்த வெச்சுட்டியே பரட்டை’ங்கிற டயலாக் எங்க ஊருல ரொம்ப ஃபேமஸுங்கோ!

இப்ப நீங்களும் வழக்கம்போல ஒரு விஷயத்தைப் பத்தவெச்சுட்டு, சூப்பரா ஃபாரினுக்குப் பறந்துட்டீங்க. இந்த அக்னி நட்சத்திர நேரத்துல, இந்தியா முழுக்க ஏற்கெனவே வறுபட்டுக்கிடக்கு. நீங்க என்னடான்னா... ‘மாட்டிறைச்சி’ விவகாரத்தைக் கிளறி, அந்தச் சூட்டை இன்னமும் அதிகப்படுத்திட்டு ஜெர்மனி, பிரான்ஸுனு குளிர்தேசங்களுக்குக் கொண்டாடப் போயிட்டீங்க.

நம்ம ஊருல விவசாயிங்க உங்கள சந்திக்க அனுமதி கேட்டா, கிடைக்கிறதில்ல. ஆனா, வெளிநாட்டுக்குப் போனாலும்கூட நடிகைங்களைச் சந்திக்க மறுக்கிறதில்ல. இதைப் பத்தி எந்த ஜந்துவும் இங்க கேள்வி கேக்கல. ஆனா, பாவம் அந்த நடிகையைக் காய்ச்சி எடுக்கறானுங்க ஆளாளுக்கு. ‘அந்த நடிகை ஏன், கால் மேல கால் போட்டுக்கிட்டுப் பிரதமருக்கு முன்னாடி போஸ் கொடுத்தாங்க. கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாத ஜென்மம்’னு புத்திசாலி புள்ளைங்க எல்லாம் வாட்ஸ்அப், டிவிட்டர், ஃபேஸ்புக்னு சும்மா வறுத்தெடுக்கறாங்க. ஆனா, ‘நாகரிகம் தெரியாத நடிகை பிரியங்கா சோப்ராவைச் சந்திக்கறதுக்கு, நவநாகரிகமிக்க இந்திய பிரதமர் ஆர்வம் காண்பிச்சார்?’னு ஒரு ஜந்துவும் கேக்கல. ஏன்ன, நடிகைங்கன்னா இளக்காரம்... பிரதமர்னா... பேரதிகாரம்!

சரி, அது பிரதமரோட தனிப்பட்ட விஷயம். அவரு யாரை வேணும்னாலும் எங்க வேணும்னாலும் பார்த்துட்டு போகட்டும். அவருக்கு ஜால்ரா தட்டுற ஜென்மங்கள் எத்தனை காதுங்களை வேணும்னாலும் கிழிச்சுட்டுப் போகட்டும் ஆனா, தன் நாட்டு பிரஜைகளான விவசாயிகளை ஏன் சந்திக்கலங்கறதுதான் கேள்வியே. நடிகையைக் கலாய்க்கிற எந்த ஜந்துவும், இதைப் பத்தியெல்லாம் பிரதமர்கிட்ட கேட்ட மாதிரியே தெரியலை.

இப்ப நான் மாட்டிறைச்சி விஷயத்துக்கு வாறேன். விவசாயிங்களான நாங்க எதை மேய்க்கிறது... எதைத் தேய்க்கிறது... எதைத் திங்கிறது... எப்ப புள்ளபெத்துக்கிறதுனெல்லாம் முடிவு பண்றதுக்கு நீங்க யாரு? இந்தப் பாழாப்போன காங்கிரஸ், பாழாப்போறதுக்குத் துடிச்சிக்கிட்டிருக்கிற பி.ஜே.பி, அடையாளமே தெரியாம போயிக்கிட்டிருக்கிற அ.தி.மு.க, அடையாளத்தை நிலைநாட்டத் துடிக்கிற தி.மு.கனு நாட்டுல இருக்கிற எந்த அரசியல் கட்சிகிட்டயும் கேட்டுக்கிட்டு நாங்க மாடுகளை வளர்க்க ஆரம்பிக்கல... மாட்டுக்கறியைத் திங்க ஆரம்பிக்கல. எந்தக் காலத்துல ஆரம்பிச்சுதுனே கண்டுபிடிக்க முடியாத காலத்திலிருந்தே ஆடு, மாடுகளை மேய்க்கிறதும்... அதுங்களோட கறியை எங்கள்ல, சிலர் திங்கிறதும் மரபணுவுல ஊறிப்போன விஷயம். இதுக்கெல்லாம் உங்ககிட்ட அனுமதி கேட்க வேண்டிய தேவையே இல்லை. ஆடு, மாடு, கோழினு வளர்க்கிறதும், தேவைக்குத் தகுந்தபடி விக்கிறதும், தேவை வந்தாலோ நோய்நொடினு விழுந்தாலோ, வயதாகிட்டாலோ அதையெல்லாம் அடிச்சுச் சாப்பிடறதும் காலகாலமா நடக்குது. விருப்பப்படறவங்க சாப்பிடுவாங்க... மத்தவங்க வித்துட்டுக் காசு பாப்பாங்க இதுலயெல்லாம் எதுக்காக உங்க சட்டத்தை நீட்டறீங்க.

அரசாங்கம்கிற அமைப்பை உருவாக்கினதே... ஒருவருக்கு ஒருவர் அடிச்சுக்கிட்டு நிக்காம, சட்டதிட்டங்களைப் போட்டு சரிசமமா வாழறதுக்காகத்தான். இந்த விஷயம் சரிவர நடக்குதானு கண்காணிக்கத்தான் உங்களையெல்லாம் காவலர்களா உக்கார வெச்சுருக்கோம். எங்க வரிப்பணத்துல சம்பளத்தை வாங்கிக்கிட்டு வேலை பார்த்துட்டிருக்கீங்க. இதுதானே நிஜம். ஆனா, இத அத்தனையையும் மறந்து, வானத்துல இருந்து குதிச்சவங்கனு மனசுல நினைச்சுக்கிட்டு, என்னிக்கி கோட்சூட் போட்டுக்கிட்டு வெள்ளக்காரன் கணக்கா திரிய ஆரம்பிச்சீங்களோ அன்னிலிருந்து இந்தியாவுக்கே சனியன் பிடிச்சுருச்சி. அதாவது, நேரு காலத்துல இருந்தேதான் சொல்ல வர்றேன்.

வெள்ளக்காரன் கோட்சூட் போட்டுக்கிட்டு மிரட்டினது... இந்தியர்களை அடிமைகளா நினைச்சுக்கிட்டுத்தான். அடிமைகளாத்தான் நடத்திக்கிட்டும் இருந்தான். ஆனா, அவன் போன பிறகும் நீங்கள்லாம் கோட்சூட்டைக் கழட்டவே இல்லை. அந்த வெள்ளக்காரன்கூட அடுத்த நாட்டுக்காரங்களத்தான் அடிமைகளா நடத்தினான். அவனோட நாட்டுக்குப் போயி பாருங்க... எங்கயாச்சும் தனிமனித சுதந்திரம், உணவு, உடைனு எதுலயாவது அரசாங்கங்கள் தலையிடுதா? ஆனா, நீங்க எந்த ஒரு விஷயத்துலயும் தலையிடாம இருக்கிறதே இல்லை. அதுவும் நம்மள அடிமைப்படுத்தின வெள்ளக்காரன் போட்டுக் கிட்டிருந்த கோட்சூட்டைப் போட்டுக்கிட்டு, நம்ம நாட்டை விட்டு அவன் போனபிறகும், அவன் சொல்றது எல்லாத்தையும் இன்னிக்கு வரைக்கும் செய்துகிட்டிருக்கீங்க. சொந்த நாட்டு மக்களையே அடிமைகள் மாதிரி வதைக்கப்பார்க்கறீங்க.

இப்படித்தான் அந்த வெள்ளக்காரனுங்க பேச்சைக் கேட்டுக்கிட்டுப் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்து நாடு முழுக்க ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு எல்லாரையும் கட்டாயப்படுத்தினீங்க. அத்தனையையும் எங்க தலையில கட்டி, எங்களோட பாரம்பர்ய விவசாயத்தைக் காலி செய்தீங்க. சாணி, குப்பைனு போட்டுக் கடனஒடன வாங்காம விவசாயம் செய்துகிட்டிருந்த எங்களை, நிரந்தரக் கடனாளிகளா மாத்திப் போட்டீங்க.

அடுத்தாப்ல வெண்மைப் புரட்சினு சொல்லிக்கிட்டு, பால் விஷயத்துல கை வெச்சீங்க. நாடு முழுக்கப் பால் குடிக்கறதுங்கிறது ஒரு விஷயமாவே இருந்ததில்ல. குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் குடிச்சிட்டிருந்தாங்க.

அந்தப் பழக்கத்தை அத்தனை பேருகிட்டயும் பரவவிட்டு, நாட்டுமாடுகள்ல போதுமான பால் கிடைக்கலனு, புதுசா ஒரு பிரச்னையைக் கிளப்பிவிட்டீங்க. இதுக்காக வெளிநாட்டுல இருந்து மாடுகளையும், மாடுகளோட விந்தையும் இறக்குமதி பண்ணி, நாடு முழுக்க அதைப் பரப்பிவிட்டு, எங்களோட நாட்டுமாடுகளைக் கிட்டத்தட்ட காணாம செய்திட்டீங்க. எங்களோட வயல்ல உழவு செய்யவும், பயணம் செய்யவும்,  வயலுக்கு உரம் தரவும்தான் மாடுகளை வளர்த்தோம். உங்கள மாதிரி பால் குடிக்கிறதுக்காக இல்ல. ஆனா, அது மொத்தத்தையும் காலி பண்ணிட்டு, இப்ப மாட்டைக் காப்பத்தப்போறோம்னு கிளம்பி நிக்கறீங்களே.

மாடுகளை அடிச்சி தின்னா பாவம்னு சொல்றீங்க. ஆனா, அதோட பாலை மெஷின் வெச்சுக் கறந்து, குடிச்சி காலி பண்றீங்க. இது எந்த ஊர் நியாயம்? பசு எங்க தெய்வம்னு சொல்ற நீங்க, அதோட பாலை மட்டும் கறந்து குடிக்கறது சரியா. நீங்க சொல்றது எப்படிருக்குன்னா... பாலியல் பலாத்காரம் பண்றது தப்பு... ஆனா, முத்தம் கொடுக்கிறது, கட்டிப் பிடிக்கறது, கையப்பிடிச்சு இழுக்கிறது தப்பில்லங்கிற மாதிரி இருக்கு.

சரி, உங்க வழியிலயே வர்றேன். மாட்டிறைச்சி சாப்பிடறது பாவம்னே வெச்சுக்கலாம். மாட்டுக்கு ஆதரவு தர்ற உங்கள்ல பல பேரு மாட்டுக்கறியைச் சாப்பிடறதில்லைனே வெச்சுக்கலாம். இப்படி மாட்டுக்கே எதிர்ப்பு காட்டற நீங்க, நாடு முழுக்க அத்தனை மக்களும் சாப்பிடற உணவு விஷயத்துல மட்டும் எகனமொகனயா ஏன் நடந்துக்கறீங்க. மரபணு மாற்றப்பட்ட விதை விஷயத்தைத்தான் சொல்றேன். வெள்ளக்காரன் எல்லா விதைகள்லயும் கண்டகண்ட ஜீவன்களோட மரபணுவைக் கலந்துவிட்டு, புதுப்புது விதைகளா உருவாக்கிட்டிருக்கான். அதுல தவளையோட மரபணுவை எடுத்து, தக்காளியை உருவாக்குற முயற்சியில இருக்கான். ஏன்னா... தவளையோட தடிமனான தோலோட குணம் தக்காளியிலயும் இருந்தா, தக்காளி பல மாசங்களுக்குக் கெட்டுப்போகாதாம். இது மாதிரி கடுகு, கோதுமை, நெல்னு எல்லாத்துலயும் எதை எதையோ புகுத்தி, நம்ம பாரம்பர்ய விதைகளைக் காலி பண்ணப் பாக்குறான்.

சைவமா இருக்கிற தாவரங்களை அசைவமாக்குறான். இந்த மரபணு இத்யாதியெல்லாம் நம்ம நாட்டுக்குள்ள வந்துட்டா... அதுக்குப் பிறகு ‘முனியாண்டி விலாஸ் அசைவம்’, ‘சரவண பவன் உயர்தரச் சைவம்’னு போர்டு வைக்க வேண்டிய அவசியமே இருக்காதுங்கிறது மட்டும் உண்மை.
இந்த அநியாயத்துக்கு மட்டும் எப்படி மோடிஜி... அனுமதி கொடுக்கறீங்கஜி. ஒண்ணு நல்லா புரியுது... உங்க ஆருயிர் அண்ணன் மன்மோகன் சிங்ஜி புறக்கடை வழியா எப்படியெல்லாம் வெள்ளக்காரனுங்களோட பன்னாட்டு விதை நிறுவனங்களை உள்ளுக்குள்ள கொண்டு வந்தாரோ... அந்த வேலைகளைக் கொஞ்சம்கூட மாறாம செய்துக்கிட்டிருக்கீங்க. என்ன, அவரு கதர் ஜிப்பாவைப் போட்டுக்கிட்டு செஞ்சாரு... நீங்க காவி ஜிப்பா. இதுதான் வித்தியாசம்.

ஏய்யா... நாட்டுல ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள் குவிஞ்சி கிடக்கு. நிலமெல்லாம் கட்டடங்களா முளைச்சிட்டிருக்கு; ஏரி, குளம் குட்டையெல்லாம் காணாம போயிட்டிருக்கு; ஆறுகளெல்லாம் சாக்கடையா மாறிக்கிடக்கு அதையெல்லாம் சரிப்படுத்தி, விவசாயிங்களோட வாழ்க்கையில ஒளியேத்த வேண்டியிருக்கு. ‘விவசாய விளை பொருளுங்களுக்கு உற்பத்தி செலவுக்கு மேல 50% கூடுதல் விலை வெச்சி கொடுக்கணும்னு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கொடுத்த அறிக்கை தூசு படிஞ்சி போயிருக்கு.

இப்படி ஆயிரத்தெட்டு விஷயங்கள் கண்ணுக்கு முன்னாடி கபடி ஆடிக்கிட்டிருக்கு. அதையெல்லாம் விட்டுப்போட்டு, மக்களோட கவனத்தைத் திசைதிருப்புறதுக்காக மாட்டிறைச்சி விவகாரத்தைக் கையில எடுத்து, சொறிசிரங்கைக் குரங்கு நோண்டினது மாதிரி எதுக்காக நோண்டிக்கிட்டே இருக்கீங்க.

பசுவுக்காக இப்படிப் பரிஞ்சுகிட்டுப் பேசறீங்களே... அந்தப் பசுக்கள் எல்லாம் நம்ம மனுஷமக்க மாதிரி இயல்பா பாலுறவு வெச்சு சந்தோஷப்பட்டிருக்கானு கொஞ்சம் யோசிச்சீங்களா. அதுங்களா காட்டு மேட்டுல அலைஞ்சி திரியும். அங்கே, அதுங்களுக்குச் சந்தோஷம் வந்தா, ஏதோ ஒரு காளையோட சேர்ந்து கருத்தரிக்கும்... கன்னுபோடும். அதுல, காளை கன்னுங்கள உழவுக்காக வெச்சுக்கிட்டு, பசுங்கன்னுங்கள மறுபடியும் கன்னு போடறதுக்காக பயன்படுத்துவோம். இதைத்தானே காலகாலமா செய்திட்டிருந்தோம்.

ஆனா, எங்களோட பொலிகாளைகளை எல்லாம் காலி பண்ணி, வெளிநாட்டு மாடுகளோட சினை ஊசியைப் போட்டு, அதுங்களோட பால் உணர்வை மழுங்கடிச்சதோட... பால் கறக்கும் எந்திரமா மட்டும் மாத்தினது யாரு? உங்களுக்கு முன்ன ஆட்சியில இருந்தவங்கதானே.

எங்க பாட்டன், முப்பாட்டன், பாட்டி, பூட்டியெல்லாம் மாடு வளர்த்தாங்க. ஒரு நாளும் மடிநோய், கலப்புத்தீவனம் இவையெல்லாம் அவங்க பார்த்ததே இல்லை. அவங்க பாலுக்காக மாட்டை வளர்க்கல. உணர்வோட வளர்த்தாங்க. இன்னிக்கு நாட்டுமாடெல்லாம் எப்படி இருக்கும்னு தெரியாம, பல தலைமுறைங்களே இங்க பிறந்து வளர்ந்தாச்சு. காங்கேயம் காளையை ஆசைப்பட்டு வளர்க்கிற ஒரு விவசாயிகிட்ட, ‘இது என்ன பூம்பூம் மாடு வளர்க்கிறீங்க’னு பக்கத்துத் தோட்டக்காரரு கேட்கற அளவுக்கு நிலைமை மோசமா இருக்கு. அந்த அளவுக்குத் திட்டம்போட்டு, சட்டம் போட்டு நம்முடைய நாட்டு மாடுகளை மறக்கடிச்சாச்சி.

மொத்தத்துல இப்ப இருக்கிற மாடுங்க எல்லாமே எந்திரன்கள்தான். அதுங்கள இயல்பா உறவுகொள்ள விடறதில்ல, சினை ஊசியைத்தான் போடுறோம்: இயல்பான உணவுகளைச் சாப்பிட விடறதில்ல, செயற்கைத் தீவனங்களைத்தான் தர்றோம்; இயல்பா பால் கறக்கறது இல்லை, மெஷினை வெச்சுத்தான் கறக்கிறோம்.

இப்படி மாடுங்களோட நிஜமான குணங்கள் அத்தனையையும் அழிச்சுட்டு, அந்த எந்திரன்களை ‘கோமாதா’னு கும்மி அடிக்கிறது எதுக்காக? இதுக்கு நடுவுல சில சாமியாருங்க கிளம்பி வந்து, ‘வயதான மாடுகளை இறைச்சிக்காக விக்க வேணாம், அதுங்களோட சாணம், சிறுநீரை வெச்சு நிறைய பொருள்கள் தயாரிக்கலாம். அதன் மூலமும் ஒரு வருமானம் வரும்’னு பிரசாரத்துல குதிச்சிருக்காங்க. அதைச் செய்ய வேணாம்னு யாரு தடுத்தா... தராளமா செய்துட்டு போங்க. அது உங்க விருப்பம். அதேமாதிரி, மாட்டிறைச்சியைச் சாப்பிடறதும், அதுக்காக மாடுகளை விக்கிறதும் மத்தவங்களோட விருப்பம். இதுல ஏன் சட்டத்தை நுழைக்கறீங்க?

ஹலோ மிஸ்டர் மோடிஜி, நாங்க ரொம்பப் பாவம்ஜி. ஏற்கெனவே உங்கள மாதிரியான அரசியல்வியாதிங்களோட விளையாட்டால நொந்து கிடக்கிறோம். மறுபடி மறுபடி எங்க வாழ்க்கையில விளையாடாதீங்க.

‘எலேய் தம்பி... மாட்டுக்கிட்ட விளையாடதே... எட்டி உதைச்சி படாத இடத்துல பட்டுடப்போகுது. பார்த்து சூதனமா நடந்துக்கோ’னு ஊர்ல சொல்லுவாங்க. அதையே சொல்லி முடிச்சுக்கிறேனுங்க.

- ஜூனியர் கோவணாண்டி