Published:Updated:

வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!
பிரீமியம் ஸ்டோரி
News
வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

2 ஏக்கர்... ரூ 2 லட்சம் லாபம்!மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

“ஆத்துத் தண்ணி கிடைக்கல; மழையும் கிடைக்கல. அதனால நெல் விவசாயமே கேள்விக்குறியாகிடுச்சு. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் குறைஞ்சளவு தண்ணியை வெச்சே நெல் சாகுபடி பண்ணி கணிசமான மகசூல் எடுத்திருக்கேன். அதுக்குக் காரணம், இயற்கை முறை விவசாயத்துல பாரம்பர்ய நெல் ரகத்தைப் பயிர் செஞ்சதுதான்” என்று இயற்கை விவசாயத்துக்கும் பாரம்பர்ய நெல் ரகத்துக்கும் கட்டியம் கூறுகிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பதிவிரிசூரியன் கிராமத்தில் உள்ளது முருகனின் நெல் வயல். ஒரு காலை வேளையில் அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த முருகனைச் சந்தித்தோம்.

வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“விவசாயம்தான் குடும்பத்தொழில். ஐந்தாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்கப்புறம் பள்ளிக்கூடத்துக்குப் போறதை நிறுத்திட்டு அப்பாவோடு சேர்ந்து விவசாயம் பாத்துக்கிட்டு இருந்தேன். பிறகு, மும்பைக்குப்போய் ஒரு கம்பெனில பத்து வருஷம் வேலை பார்த்துட்டு ஊருக்குத் திரும்பி வந்தேன். வந்தபிறகு, திரும்பவும் விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல முழுக்க முழுக்க ரசாயன உரம் பயன்படுத்திதான் நெல் சாகுபடி செஞ்சுட்டு இருந்தேன். என் வயலுக்குப் பக்கத்து வயல்காரர் சமுத்திரபாண்டி மகேஷ்வரன்ங்கிறவரோடது. அவரைச் சின்ன வயசுல இருந்தே நல்லா தெரியும். அவர் இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு வர்றார்.

தக்கைப்பூண்டு விதைப்பு, பஞ்சகவ்யா தெளிப்பு, அமுதக்கரைசல் பாசனம்னு அவர் நல்ல மகசூல் எடுக்குறதைக் கவனிச்சேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி அவர்கிட்ட இயற்கை விவசாயம் பத்திப் பேசினேன். அவர்தான், ரசாயனங்களோட தீமைகள் பத்தியும் இயற்கை விவசாயத்தோட நன்மைகள் பத்தியும் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார். இதோட ‘பசுமைவிகடன்’ புத்தகத்தைப் பத்தியும் சொன்னார். அதுல இருந்து பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சேன். அடுத்த போகத்துலேயே நானும் தக்கைப்பூண்டு விதைச்சு மடக்கி உழுதேன். சாகுபடிக்கு இயற்கை இடுபொருளைத் தயாரிச்சுப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். அதுல நல்ல பலன் தெரிஞ்சது. அப்புறம் முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். மூணு வருஷமா, பாரம்பர்ய ரக நெல்லைத்தான் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்” என்று இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன முருகன், தொடர்ந்தார்...

வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

“எனக்கு ரெண்டு ஏக்கர் நெல் வயல் இருக்கு. ரெண்டு ஏக்கர்லயும் சம்பா பட்டத்துல ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவை நடவு செஞ்சேன். இப்போதான் அறுவடையாகிருக்கு. எப்பவும் நான் வைக்கோலை விற்பனை செய்யமாட்டேன். அப்படியே மடக்கி உழுதிடுவேன். ஆனா, இந்த வருஷம் வைக்கோலுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு. அதனால வைக்கோலையும் விலைபேசி வித்திட்டேன். எப்பவும் நெல்லை நேரடியா விற்பனை செய்யமாட்டேன். நெல்லை அரைச்சு அரிசியாக்கிதான் விற்பனை செய்வேன்.

பணகுடி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல இருக்குற நண்பரோட கடையில வெச்சு, அரிசியை விற்பனை செய்திட்டு இருக்கேன். இதுபோகத் திருநெல்வேலி, தூத்துக்குடினு வெளியூர்களுக்கும் அனுப்புறேன். நான் கைக்குத்தல் அரிசியா விற்பனை செய்றதால, நிறையபேர் விரும்பி வாங்குறாங்க. கைக்குத்தல் அரிசியை ரொம்ப நாள் வெச்சுக்க முடியாது. அதனால ஆர்டரைப் பொறுத்து அப்பப்போ நெல்லை அரைச்சு விற்பனை செய்றேன்” என்ற முருகன், வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“ரெண்டு ஏக்கர் நிலத்துல 5,420 கிலோ நெல் அறுவடையாகியிருக்கு. மொத்த நெல்லையும் அவிச்சு வெச்சுட்டேன். தேவையைப் பொறுத்து நெல்லை அரைச்சு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இதைக் கைக்குத்தல் அரிசியா மாத்துனா 3,752 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்னு விற்பனை செய்றேன்.

வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

அந்தக் கணக்குல 3,752 கிலோ அரிசி மூலமா 2,62,640 ரூபாய் வருமானம் கிடைக்கும். ரெண்டு ஏக்கர் நிலத்துல 150 கட்டு வைக்கோல் கிடைச்சது. அதை, ஒரு கட்டு 300 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுவரை 700 கிலோ அரிசியை விற்பனை செஞ்சதுல 49 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. அரிசி முழுசா விற்பனை செஞ்சு முடிச்சுட்டா, வைக்கோல் விற்பனை செஞ்ச தொகையையும் சேர்த்து மொத்தம், 3,07,640 ரூபாய் வருமானமாக் கிடைச்சுடும். இதுல எல்லாச்செலவும் போக, 2,38,622 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்ற முருகன் நிறைவாக...

“இந்த வருஷம் மழை இல்லாததுனால ரசாயன உரம் போட்டுச் சாகுபடி செஞ்ச விவசாயிகள்,  லாரியில தண்ணீர் வாங்கிப் பாய்ச்சினாங்க. ஆனாலும், அவங்களுக்கு மகசூல் சரியா இல்லை. நான் குறைவான தண்ணீர் கொடுத்ததிலேயே இந்தளவு மகசூல் கிடைச்சது பெரிய விஷயம். அதில்லாம, வறட்சியினால வைக்கோல் மூலமாவும் கணிசமான லாபம் கிடைச்சுடுச்சு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
முருகன்,
செல்போன்: 96003 76861


சமுத்திரபாண்டி மகேஷ்வரன்,
செல்போன்: 75984 19861.

வறட்சி கொடுத்த பாடம்... இயற்கைக்கு மாறும் விவசாயிகள்!

வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!முருகனை இயற்கை விவசாயத்துக்கு மாற்றிய சமுத்திரபாண்டி மகேஷ்வரனிடம் பேசினோம். “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நான் இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். இந்த ஊர்ல முதல்ல இயற்கை விவசாயத்துக்கு மாறினது நான்தான். ஆரம்பத்துல என்னை எல்லோரும் ஒரு மாதிரி பேசினாங்க. அந்தச் சமயத்துல கறுப்புகவுனி, கருத்தக்கார், சேலம் சன்னா நெல் போட்டிருந்தேன். அதோட வளர்ச்சியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க.

ஆனாலும், இயற்கை விவசாயத்துக்கு மாற யாரும் முன் வரலை. முருகன்தான், முழு நம்பிக்கையோடு இயற்கை விவசாயத்துக்கு மாறினார். இயற்கைக்கு மாறினதும் அவருக்கு மகசூல் குறைவாத்தான் கிடைச்சது. இப்போ ஓரளவுக்கு நல்ல மகசூல் எடுக்கிறார். இந்தப் போகத்துல வறட்சியால எங்கப் பக்கத்து வயல்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கெல்லாம் குறைவான விளைச்சல்தான் கிடைச்சிருக்கு. ஆனா, முருகனுக்கும் எனக்கும்தான் அறுவடை வரை நெல் பயிர் கம்பீரமா வளர்ந்து நின்னுச்சு. ஓரளவுக்கு நல்ல மகசூலும் கிடைச்சிருக்கு. இதைப் பார்த்து இப்போ 8 விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுறோம்னு சொல்லிருக்காங்க” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ஓர் ஏக்கர் நிலத்தில் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா நெல் ரகத்தைச் சாகுபடி செய்யும் விதம் குறித்து முருகன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

பாரம்பர்ய நெல் ரகங்கள் அனைத்து வகை மண்ணிலும் விளையும். சம்பா பட்டத்துக்குக் கிச்சிலிச் சம்பா ஏற்ற ரகம். இதன் வயது 150 நாள்கள். சாகுபடிக்காகத் தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி, மூன்று நாள்கள் காய விட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 15 கிலோ என்ற அளவில் தக்கைப்பூண்டு விதையை விதைத்து, ஒரு சால் உழவு ஓட்டித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நான்கு நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி வந்தால், 45 நாள்களுக்குப் பிறகு தக்கைப்பூண்டு பூக்கத்தொடங்கும். அந்தச் சமயத்தில், அவற்றை மடக்கி உழுது, வயலில் தண்ணீர் கட்டி 10 நாள்கள் அழுகவிட வேண்டும்.

ஒரு ஏக்கர் நடவுக்கு ரெண்டு சென்ட் அளவில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஐந்து கிலோ விதை நெல்லை நான்கு மணி நேரம் வெயிலில் உலர்த்தி, சணல்சாக்கில் போட்டுக் கட்டி, தண்ணீர் தொட்டிக்குள் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடித்து இருட்டு அறைக்குள் 12 மணி நேரம் வைத்தால் விதைகள் முளைவிடும்.

முளைவிட்ட விதை நெல்லை ஓலைப்பாயில் கொட்டி... 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து விதைநெல் மேல் தெளிக்க வேண்டும். பிறகு, 30 நிமிடங்கள் அப்படியே உலர்த்தி நாற்றங்காலில் தூவி, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாசனம் செய்துவர வேண்டும். விதைத்த நான்காம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து பாசனத் தண்ணீரில் விட வேண்டும். எட்டாம் நாள், 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். இப்படிப் பராமரித்தால், 11-ம் நாளில் நாற்று நடவுக்குத் தயாராகிவிடும். 15-ம் நாளுக்குள் வயலில் நடவு செய்துவிட வேண்டும்.

10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்த கரைசலில் நாற்றுக் கட்டை மூழ்க வைத்து எடுத்து 10 நிமிடம் வைத்திருந்து முக்கால் அடி இடைவெளியில் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். ஒற்றை நாற்று முறையில் அதிகமாகத் தூர் வெடிக்கும். நெல் மணிகளும் திரட்சியாகயிருக்கும்.

நாற்றை நடவு செய்த 20-ம் நாளிலிருந்து 80-ம் நாள் வரை... 15 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பஞ்சகவ்யா (10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில்) கரைசலையும் பூச்சி விரட்டியையும் (10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பூச்சிவிரட்டி என்ற கணக்கில்) மாற்றி மாற்றிக் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

நடவு செய்த 20-ம் நாளிலிருந்து அடுத்த 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 20 மற்றும் 40-ஆம் நாள்களில் களையெடுக்க வேண்டும். 100 நாளுக்குமேல், கதிர்பிடிக்கும் தருவாயில், 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம் என்று கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 140-ம் நாளுக்குமேல் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஐந்து கிலோ மீன் கழிவு, ஐந்து கிலோ நாட்டுச் சர்க்கரைத்தூள் ஆகியவற்றைக் கலந்து காற்று புகாதவாறு மூடி, நிழலில் 45 நாள்கள் வைத்தால், பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும். இதுதான் மீன் அமினோ அமிலம். இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற கணக்கில் கலந்து தெளிக்கலாம்.

மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிப்பு

தலா மூன்று கிலோ சோற்றுக்கற்றாழை, பிரண்டை, தலா இரண்டு கிலோ வேப்பிலை, பப்பாளி, நொச்சி இலை, ஆமணக்கு இலை, ஊமத்தம் இலை, எருக்கன் இலை, ஆவாரை இலை, சுண்டைக்காய் இலை, ஆடுதீண்டா பாலை இலை ஆகியவற்றைப் பொடிப்பொடியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.

இஞ்சி ஒரு கிலோ, பூண்டு அரைக் கிலோ, பச்சை மிளகாய் இரண்டு கிலோ ஆகியவற்றை எடுத்து உரலில் இடித்து, இலைகளுடன் கலந்துகொள்ள வேண்டும். இவை மூழ்கும் அளவுக்குப் பசு மாட்டுச் சிறுநீரைச் சேர்க்க வேண்டும்.

பிறகு பாத்திரத்தை மூடி, அடுப்பிலேற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்ததும் தீயை அணைத்து 20 நிமிடம் ஆறவிட்டுத் திரும்பவும் அடுப்பிலேற்றிக் கொதிக்கவிட வேண்டும். இப்படி நான்கு முறை தொடர்ந்து கொதிக்க வைத்துப் பாத்திரத்தை இறக்கி, நிழலில் வைத்துக் காற்று புகாதவாறு மூடியின் மேல் துணி சுற்றிக் கட்ட வேண்டும்.

இரண்டு நாள்கள் கழித்து இக்கரைசலை வடிகட்டி பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம்.10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். இக்கரைசலை அதிக நாள்கள் வைத்துப் பயன்படுத்த வேண்டியிருப்பின் மாதம் ஒருமுறை இக்கரைசலுடன்... இஞ்சி, சோற்றுக்கற்றாழை, பிரண்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை ஒரு கிலோ அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். தேவைப்பட்டால் பசுமாட்டுச் சிறுநீர் சேர்த்துக் கொதிக்க வைக்கலாம்.