Published:Updated:

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்...  ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்
பிரீமியம் ஸ்டோரி
News
மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்

மகசூல்ஆர்.குமரேசன்

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்...  ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்

லைப்பகுதி விவசாயிகளுக்கு ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறது இந்த வேளாண்மை முறை. தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாய முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான், ஏராளமான மலைப்பகுதி விவசாயிகள் இயற்கை வழி விவசாயத்துக்கு மாறியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன். தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் வாழை, நார்த்தை, எலுமிச்சை, காபி, மிளகு என ஐந்தடுக்குச் சாகுபடி செய்து அசத்திவருகிறார்.

திண்டுக்கல் மாவட்ட நிலப் பகுதிக்குத் திலகம் வைத்ததுபோல் அமைந்திருப்பது சிறுமலை. இந்த மலைக்குப் பயணம் என்றாலே உற்சாகம் தன்னால் வந்துவிடுகிறது. கோடை மழையின் உபயத்தால் மலைத்தாவரங்களில் புதுத்தளிர்கள் விட்டு மலையே பசுமை போர்த்திக் காணப்படுகிறது. இந்த ரம்மியமான சூழல் கொண்ட சிறுமலைப்பகுதியில் சிறுமலைப் புதூர் என்ற குட்டி கிராமத்தில் பாண்டியனின் தோட்டம் இருக்கிறது. ஊருக்குக் கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாண்டியனின் தோட்டத்துக்கு நடந்தோ ஜீப் மூலமாகவோதான் செல்லமுடியும். வாடகை ஜீப்பின் மூலமாகப் பாண்டியனின் தோட்டத்தை அடைந்தோம். பண்ணையில் நுழைந்தவுடன் பெரியளவில் காய்த்திருந்த கடாரங்காய்ச் செடிகள் நம்மை வரவேற்றன. தோட்டத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரித்துக் கொண்டிருந்த பாண்டியன் நம்மைக் கண்டதும் சந்தோஷமாக வரவேற்றுப் பேசஆரம்பித்தார்.

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்...  ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போ 30 ஆயிரம்... இப்போ 30 லட்சம்!

“எனக்குச் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பக்கத்துல இருக்கிற சித்தரேவு கிராமம். அரசுப் போக்குவரத்துக் கழகத்துல டிரைவரா இருந்ததால வேலைக்குப் போறதுக்கு வசதியா சொந்த ஊர்லிருந்து திண்டுக்கல்லுக்குக் குடி வந்துட்டோம். இப்போ ரிட்டயர்டு ஆகிட்டேன். நான், முப்பது வருஷமா திண்டுக்கல்-சிறுமலை ரூட் பஸ்லதான் டிரைவரா இருந்தேன். முதல் முதல்ல சிறுமலைக்கு வந்தப்பவே எனக்கு இந்த ஊரோட கிளைமேட் ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. அதனால, வேற ரூட் கேக்காம இந்த ரூட்லயே வேலை பார்த்தேன். தினமும் இந்தப் பகுதியிலேயே போய்வர இருக்கவும், சிறுமலையில் நிலம் வாங்கணும்னு ஆசை வந்தது. அதுக்குத் தோதா இந்த இடம் அமைஞ்சது. இந்த இடத்தை வாங்கிக் கிட்டத்தட்ட இருபது வருஷம் ஆச்சு. அப்போ நிலத்துக்குப்போக ஒத்தயடிப்பாதை மட்டும்தான் இருந்துச்சு. இப்போ ஜீப் போற அளவுக்குப் பாதையாகியிருக்கு. நான் ரெண்டு ஏக்கரையும் முப்பதாயிரம் ரூபாய்க்குத்தான் வாங்கினேன். இப்போ நிலம் வளமா மாறி இருக்குறதால ஏக்கர் முப்பது லட்ச ரூபாய்க்கு கேக்கறாங்க” என்ற பாண்டியன் தொடர்ந்தார்...

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்...  ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்

சொந்தக்காசில் சூனியம்

“சின்ன வயசுலிருந்தே எனக்கு விவசாயம் செய்றதுல ஆர்வம். ஆனா, அதுக்கான வாய்ப்பு அமையல. இந்த இடத்தை வாங்கிப் போட்டும், உடனடியா விவசாயத்தை ஆரம்பிக்க முடியல. 2002-ம் வருஷம்தான் விவசாயத்தை ஆரம்பிக்க முடிந்தது. புதரா இருந்த இடத்தைச் சுத்தம் செஞ்சு, வாழை நடவு செஞ்சேன். இடையில எலுமிச்சை வெச்சேன். நல்ல மகசூல் கிடைக்கணு மேங்கிறதுக்காக இஷ்டத்துக்கு ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கொடுத்தேன். ஆனா, வருஷா வருஷம் செலவு அதிகமாகிட்டு இருந்ததே தவிர லாபம் கிடைக்கல. நாலஞ்சு வருஷம் தொடர்ந்து ரசாயனத்தைக் கொட்டவும் மண்ணும் மலடு தட்டிப்போச்சு.

அந்தச் சமயத்துலதான், ‘பசுமை விகடன்’ வெளி வந்துச்சு. அதுல இயற்கை விவசாயம் பத்தின விஷயங்களையும் ரசாயன உரத்தால வர்ற தீமைகளையும் தெரிஞ்சுகிட்ட பிறகுதான் நான் பண்ணிக்கிட்டிருந்த தப்பு உறைச்சது. ‘ஆஹா இத்தனை நாளா சொந்தக்காசுலயே சூனியம் வெச்சுட்டிருந்திருக்கோம்’னு தோணுச்சு. இனிமே இயற்கை விவசாயம்தான் செய்யணும்ங்கிற முடிவுக்கு வந்தேன். பசுமை விகடன்ல படிச்ச தகவல்களை வெச்சுக் கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். சில இயற்கை விவசாயிகளோட தோட்டங்களுக்கும் போய்ப் பார்த்துட்டு வந்தேன். அப்படித்தான், சிறுமலையிலேயே இயற்கை முறையில சாகுபடி செஞ்சிட்டு இருக்கிற ராஜேஷ்கண்ணாவோட அறிமுகம் கிடைச்சது. அவரும் மலைப்பயிர்களை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செஞ்சிட்டிருந்ததால, எனக்கு ரொம்ப வசதியாப்போயிடுச்சு” என்ற பாண்டியன், தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்து பேசினார்.

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்...  ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்

அசத்தும் ஐந்தடுக்குச் சாகுபடி

“ஐந்தடுக்கு முறை சாகுபடி பண்ணலாம்னு முடிவு செஞ்சு, தோட்டத்திலிருந்த பயிர்களையெல்லாம் அழிச்சுட்டு, புதுசா நடவு செஞ்சேன். ரெண்டு ஏக்கர் நிலத்துல 200 கிடா நார்த்தைச் (கடாரங்காய்) செடிகளை நடவு செஞ்சேன் (இது சமவெளிப் பகுதியிலும் வளரும்). அதுக்கு இடையில 200 எலுமிச்சைச் செடிகளை நடவு செஞ்சேன். ரெண்டுமே நாட்டு ரகங்கள்தான். கிடா நார்த்தை, எலுமிச்சை ரெண்டுக்கும் இடையில் பரவலா மலைவாழையை நட்டேன். அதுக்கடுத்து வெயில் கிடைக்கிற இடங்கள்ல, காபி செடிகளை நடவு செஞ்சேன். கல்யாண முருங்கை, சவுக்கு மரங்கள் இருக்கற இடங்கள்ல, கடைசியா மிளகு நடவு செஞ்சேன். கீழே ஓர் இடத்துல கிணறு வெட்டி, அங்கேயிருந்து குழாய் மூலமா தண்ணி கொண்டு வந்துதான் பாசனம் செய்றேன். ரெண்டு ஏக்கர் நிலத்துலயும் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருக்கேன்.

ரசாயன விவசாயம் செய்றப்போ, உரம் போட, பூச்சிக்கொல்லி தெளிக்கனு எப்பவும் ஆள்கள் தேவைப்பட்டுட்டே இருப்பாங்க. மலையில ஆள்களைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ஆனா, ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறுன பிறகு வேலையாள் தேவை குறைஞ்சுடுச்சு. பண்ணையில ஒருத்தர் மட்டும் வேலைக்கு இருக்கார். நான் தினமும் வந்துடுவேன். நாங்க ரெண்டு பேர் மட்டுமே எல்லா வேலைகளையும் பார்த்துடுவோம். அறுவடை சமயத்துல மட்டும் தேவைப்படுற அளவுக்கு ஆள்களைக் கூப்பிட்டுக்குவோம்.

நான் திண்டுக்கல்லிருந்து வரும்போதே சாணம், மாட்டுச் சிறுநீர் எல்லாம் கொண்டு வந்துடுவேன். இங்க தோட்டத்துல வெச்சு, ஜீவாமிர்தம் தயாரிச்சுக்குவோம். மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம் எப்பவுமே தோட்டத்துல தயாராக இருக்கும். தாண்டிக்குடி காபி போர்டு விஞ்ஞானி சௌந்தரராஜனும் அப்பப்போ ஆலோசனை சொல்றார். இதோடு ராஜேஷ் கண்ணா சொல்ற விஷயங்களையும் பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுக்கிறதையும் வெச்சு, நல்லமுறையில் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்” என்ற பாண்டியன்  பயிர்கள் பற்றிச் சொல்லத் தொடங்கினார்...

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்...  ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்

கடும் வெயிலிலும் மாறாத பசுமை

“கிடா நார்த்தை ஆறாவது வருஷத்துல இருந்து மகசூல் கொடுக்கும். இந்தச் செடிகளுக்கு ஏழு வயசாச்சு. போன வருஷம் சுமாரான காய்ப்பு இருந்துச்சு. இந்த வருஷம் நல்லா காய்ச்சிருக்கு. எலுமிச்சை அஞ்சாவது வருஷத்துல இருந்து மகசூல் கொடுக்கும். எலுமிச்சையில் ரெண்டு வருஷமாத்தான் மகசூல் எடுக்குறேன். வாழை 14 மாசத்திலிருந்து பலன் கொடுக்கும். தொடர்ந்து பக்கக்கன்றுகள் மூலமா வாழையில பலன் கிடைச்சுட்டே இருக்கும். இப்போதைக்கு இந்த மூணு பயிர்கள் மட்டும்தான் மகசூல் கொடுத்துட்டிருக்கு. இந்த வருஷம்தான் காபி காய்க்க ஆரம்பிச்சிருக்கு. மிளகு இன்னும் மகசூலுக்கு வரல. போன மாசம் வரைக்கும் கடுமையான வெயில். எப்பவுமே குளிர்ச்சியா இருக்கிற சிறுமலையிலயே வெயில் வாங்கு வாங்குனு வாங்கிடுச்சு. பல தோட்டங்கள்ல செடிகள் வாடிப்போச்சு. அதனால, நிறைய பேர் வெள்ளாமையே வைக்காம தோட்டத்தைச் சும்மா போட்டுவெச்சுட்டாங்க.

அந்த வெயில்லயும் என்னோட தோட்டம் பசுமையா இருந்ததைப் பார்த்து, அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு ஆச்சர்யம். அதுமட்டுமில்லாம, சீசன் இல்லாத நேரத்துல கூட என்னோட எலுமிச்சைச் செடிகள் காய்ச்சுக் குலுங்கிச்சு. அப்ப இந்தப் பக்கத்துல யார் தோட்டத்துலயும் காய்கள் இல்லை. இந்தப் பக்கம் சீசனே இனிமேல்தான் ஆரம்பிக்கும். நான் அதுக்குள்ள காய் பறிக்க ஆரம்பிச்சிட்டேன். இதுக்கெல்லாம் காரணம் ஜீவாமிர்தமும் மூடாக்கும்தான்.

என் தோட்டத்துல பயிர்களைச் சுத்தி மண்ணையே பார்க்க முடியாத அளவுக்குக் காய்ந்த இலைதழைகளை மூடாக்காகப் போட்டிருக்கேன். பயிர் இல்லாத இடங்கள்ல உயிர் மூடாக்கிருக்கும். அதனாலதான், மண் ஈரப்பதமாவும் செடிகள் பசுமையாவும் இருக்கு. இங்கிருந்து பண்ணைக் கழிவுகள் வெளியே போகாது. எல்லாமே மூடாக்காக மாறி, மட்கி மண்ணுக்கு உரமாகிடும்.

ரசாயன உரம் பயன்படுத்துனப்போ அடிக்கடி எலுமிச்சையில பூச்சி விழும். இயற்கைக்கு மாறுன பிறகு பூச்சித்தாக்குதலே இல்லை. நான் தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் முறையில விவசாயம் செய்றதால, வருஷம் முழுக்க மகசூல் கிடைச்சிட்டிருக்கு. சீசன் இல்லாத நேரங்கள்லயும் என்னோட காய் சந்தைக்கு வர்றதால, நல்ல விலை கிடைக்குது” என்ற பாண்டியன் வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

“முழுக்க முழுக்க இயற்கை முறையில விளைவிச்சாலும் எனக்குத் தனி விலையெல்லாம் கிடைக்கிறதில்ல. சந்தையில நிர்ணயிக்கிற விலைதான் கிடைக்குது. ஆனா, மத்தவங்களைவிட எனக்கு உற்பத்திச் செலவு குறைவு. அதில்லாம அதிக மகசூல் கிடைக்கிறதால, இந்த விலையிலேயே நல்ல லாபம் கிடைச்சுடுது. 

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்...  ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்

மொத்தம் 200 கிடா நார்த்தைச் செடிகள் காய்ப்புல இருக்குது. ஒரு செடியிலயிருந்து வருஷத்துக்கு 25 கிலோ கிடா நார்த்தை கிடைக்குது. 200 செடிகள்லிருந்து மொத்தம் 5 ஆயிரம் கிலோ கிடைக்கும். ஒரு கிலோ நார்த்தை சராசரியா 50 ரூபாய்னு விலை போகும். அந்த வகையில 2,50,000 ரூபாய் கிடைச்சுடும். 200 எலுமிச்சை செடிகள்லிருந்து வருஷம் 50 சிப்பம் (65 கிலோ) காய்கள் கிடைக்கும். ஒரு சிப்பம் 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். சில சமயங்கள்ல 8 ஆயிரம் ரூபாய் வரை கூட விற்பனையாகும். எப்படிப் பார்த்தாலும் ஒரு சிப்பத்துக்கு 4 ஆயிரம் ரூபாய்ங்கிற கணக்குல விலை கிடைச்சுடும். அந்த வகையில 50 சிப்பம் மூலமா 2 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைச்சுடும். வாழை மூலமா மாசம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்குது. அந்த வகையில வருஷத்துக்கு 1,20,000 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஆகமொத்தம், இந்த ரெண்டு ஏக்கரிலிருந்து வருஷத்துக்கு 5,70,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கிது. இதுல சம்பளம், அறுவடைக் கூலி, நான் வந்துபோற செலவு, இடுபொருள்கள் கொண்டு வர்ற செலவு, காய்களைச் சந்தைக்குக் கொண்டுபோக வண்டி வாடகை, மார்க்கெட் கமிஷன் எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வரை செலவாகும். எல்லாம் போக இப்போதைக்கு 3,70,000 ரூபாய் லாபமா நிக்குது. எலுமிச்சையிலயும் கிடா நார்த்தையிலயும் அடுத்தடுத்த வருஷங்கள்ல காய்ப்பு அதிகரிக்கும். அடுத்து, காபியும் மிளகும் மகசூலுக்கு வந்துட்டா, இன்னும் லாபம் கூடும்” என்ற பாண்டியன் நிறைவாக,

“என்னோட மனைவி சமீபத்துல இறந்துட்டாங்க. அவங்க இறந்ததுக்குப் பிறகு, இந்தத் தோட்டம்தான் எனக்கான ஆறுதலா இருக்கு. இங்கே வந்துட்டா, என்னோட சோகம், தனிமை எல்லாம் காணாம  போயிடுது. செடிகளோட பேசிக்கிட்டு, அதுங்களைப் பாத்துகிட்டிருக்கிறதுலயே மனசு லேசாகிடுது. ஓய்வுக்கப்புறம் வீட்டுல முடங்கிக் கிடக்காம விவசாயம் செய்றதால மனசும் உடம்பும் ஆரோக்கியமா, உற்சாகமாயிருக்குது. இன்னொரு விஷயம், மலைப்பயிர்கள்ல ஜீவாமிர்தம் பயன்படுத்துறப்போ, கிடைக்கிற விளைச்சலை அதிசயம்னுதான் சொல்லணும். அந்தளவு பலன் கிடைக்கிது. முன்னாடி மாசா மாசம் சந்தையில பணம் வாங்கினதும் உரக்கடைக்குப் போய்க் கணிசமான பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும். இப்போ அப்படியே பையில வெச்சுட்டு வீட்டுக்குப் போகமுடியுது” என்றார், சந்தோஷமாக. 

தொடர்புக்கு:
பாண்டியன்,
செல்போன்: 90254 93849

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்...  ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்

பூக்க வைக்கும் பெருங்காயம்

மலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்...  ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்


திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மலைப்பகுதியில் செயல்பட்டு வரும் காபி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் சௌந்தரராஜன் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“பாண்டியன் தோட்டத்துல இன்னிக்கு நல்ல மகசூல் கிடைக்கிறதுக்குக் காரணம் அவரோட ஆர்வமும் உழைப்பும்தான். இயற்கை விவசாயத்து மேல அவர் வெச்ச நம்பிக்கைக்கு இப்பப் பலன் கிடைச்சிருக்கு. பொதுவா, இயற்கை விவசாயம் செய்ற பண்ணையில பூச்சி நோய்த் தாக்குதல் குறைவாகத்தானிருக்கும். மண் வளமாகுறப்போ, பயிர் வளர்ச்சி நல்லாயிருக்குறதால, நோய் எதிர்ப்புச் சக்தி வந்துடும். ஒரு தாவரத்திலிருந்து காய்களையோ பழங்களையோ நாம எடுக்குறப்போ மறைமுகமா நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மாதிரியான சத்துகளை மண்ணுலிருந்து எடுக்குறோம். இந்தச் சத்துகளைத் திரும்பவும் மண்ணுக்குக் கிடைக்கிற மாதிரி செஞ்சுட்டா, எப்பவும் மகசூல் குறையவே குறையாது.

எந்தப் பயிராயிருந்தாலும் பூ பூக்குற சமயத்துல... 100 கிராம் பெருங்காயம், ஒரு லிட்டர் மீன் அமினோ அமிலம் ரெண்டையும் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்குத் தெளிச்சா அதிகப் பூக்கள் பூக்குறதோடு பூக்கள் உதிராமலுமிருக்கும். பயிர்களுக்கு வளர்ச்சியூக்கி, பூச்சிவிரட்டி, அடியுரம்னு எதைக் கொடுத்தாலும் வளர்பிறை சமயத்துல கொடுக்குறது சிறந்தது” என்றார்.

தொடர்புக்கு,
பேராசிரியர் சௌந்தரராஜன்,
செல்போன்: 91599 25320