Published:Updated:

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

சென்ற இதழ் தொடர்ச்சி...பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

 இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக, சிக்கிம் அறிவிக்கப்பட்டுவிட்டது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகள் இயற்கை விவசாய மாநிலம் என்ற இலக்கை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. ஆந்திர மாநில வேளாண் ஆலோசகராகச் சுபாஷ் பாலேக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா, கர்நாடகா, ஆந்திராவைவிட இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புஉணர்வும் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக அரசு இயற்கை விவசாய மாநிலம் என்ற இலக்கு பற்றி எந்த யோசனையும் இல்லாமல் இருப்பது வேதனை.

இந்நிலையில் மிகவும் பின்தங்கிய மாநிலமான சத்தீஸ்கர், இயற்கை விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது ஆச்சர்யமான விஷயம். இம்மாநிலத்தில், தாம்தரி மாவட்டத்தில் ஆட்சியராக இருக்கும் டாக்டர் பிரசன்னாவின் முயற்சியால், இயற்கை விவசாயம் மலரத் தொடங்கியுள்ளது.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

தாம்தரி மாவட்டத்திலுள்ள கோல்யாரி கிராமத்தைச் சேர்ந்த பாவர்லால்சேத்தியா என்ற விவசாயியைச் சந்திக்கச் சென்றோம். நீளமான வீட்டில் மூன்று தடுப்புகள் அமைக்கப்பட்டு, இரண்டு தடுப்புகளில் அவரது குடும்பத்தினரும் ஒரு தடுப்பில் மாடுகளும் இருந்தன. சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பாலும் நாட்டு மாடுகள்தான் வளர்க்கப்படுகின்றன. கலப்பின மாடுகளைப் பார்க்கவே முடியவில்லை. சாஹிவால், ராத்தி போன்ற நாட்டு மாடுகள் அவரது வீட்டில் இருந்தன. மாட்டுக்கொட்டகையின் வெளிப்பக்கம் சாண எரிவாயு கலன் அமைக்கப்பட்டுச் சமையலுக்கான எரிவாயு உற்பத்திசெய்யப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!


தொழுவத்திலிருந்து கழுவிவிடும் தண்ணீர் பாசன வாய்க்காலுடன் கலந்து வயலுக்குப் பாய்கிறது. அவரது குடும்பத்துக்குச் சொந்தமாக இருப்பது ஆறரை ஏக்கர் நிலம். மகன்கள், பேரன்கள் என அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசிப்பதால், குடும்ப உறுப்பினர்களே அனைத்து வேலைகளையும் செய்துகொள்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை, அரை ஏக்கர் நிலத்தில் மா மரங்கள் வைத்திருக்கிறார் பாவர்லால்சேத்தியா. அரை ஏக்கர் நிலத்தில் மஞ்சள் சாகுபடி முடித்திருக்கிறார். மற்ற இடங்களில் பேபிகார்ன் மக்காச்சோளம் பயிரிட்டிருக்கிறார். இதுவரை ரசாயன விவசாயம் செய்துவந்த பாவர்லால் சேத்தியா, சமீபகாலமாகத்தான் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்பியிருக்கிறார். இன்னமும் முழுமையாக இயற்கை விவசாயியாக மாறவில்லை.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

“நாங்கள் அதிகம் சாகுபடி செய்வது பேபிகார்ன் மக்காச் சோளத்தைத்தான். இதோடு வாழை, மஞ்சள் ஆகியவற்றையும் சாகுபடி செய்வோம். எங்களிடம் மாடுகள் இருப்பதால், அவற்றின் சாணத்தை வயலில் கொட்டி, மாடுகள் பூட்டிய கலப்பை மூலமாக உழவு செய்துதான் விதைப்போம். பூச்சி, நோய்த் தாக்குதலைத் தவிர்க்கவும் பயிர் வளர்ச்சிக்காகவும் ரசாயனங் களைப் பயன் படுத்துகிறோம். தற்போது ‘மாட்டின் கழிவுகளை வைத்தே விவசாயம் செய்யலாம். உரக்கடைகளுக்கு எதற்காகப் பணத்தைக் கொடுத்து அழுகிறீர்கள்?’ என வேளாண் அதிகாரிகள் சொன்னதால் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளேன். முதல் கட்டமாக ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் இயற்கை முறையில் பேபிகார்ன் விதைத்தேன். அவர்கள் சொன்னபடி மண்புழு உரம், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி போன்றவற்றைப் பயன்படுத்தினேன். வழக்கத்தைவிட கொஞ்சம் மாற்றம் தெரிந்தது.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடிச் செலவு 10 சதவிகிதம் குறைந்தது. மக்காச் சோளத்தட்டை நன்கு திடமாகவும் பச்சையாகவும் இருந்தது. சோள மணிகளும் நல்ல திரட்சியாக இருந்தன. அதன் பிறகு, இந்தமுறை இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் பேபிகார்ன் விதைத்திருக்கிறேன். நன்றாக உள்ளது. அடுத்தமுறை முழுமையாக இயற்கைக்கு மாறும் எண்ணத்தில் இருக்கிறேன். பேபிகார்ன் 70 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்வோம். ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து ஒரு போகத்தில் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்” என்ற பாவர்லால் சேத்தியா, “விவசாயிகளின் இடுபொருள் செலவைக் குறைக்கும் முயற்சியில் ஆட்சியர் இயற்கை விவசாயத்தை மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார். அவரது முயற்சிக்கு விவசாயிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். அவரது தோட்டத்தைச் சுற்றிவரும்போது நாட்டு வாழைகள் தார் விட்டிருந்தன. ‘தாரின் முனையில் உள்ள பூவை ஒடித்துவிட்டு, அதில் ஒரு பிளாஸ்டிக் கவரில் பஞ்சகவ்யா வைத்துக் கட்டி வைத்தால் காய் பெருக்கும்’ என நம்மாழ்வரின் தொழில்நுட்பத்தைச் சொன்னதும், அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. “உடனடியாகச் சோதனை முறையில் செய்து பார்க்கிறேன். சரியாக இருந்தால் அனைத்து வாழைகளிலும் இனி அதே முறையைப் பின்பற்றுகிறேன்” என்றபடி விடைகொடுத்தார் பாவர்லால் சேத்தியா.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

தாம்தரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஹரிராமை அவரது தோட்டத்தில் சந்தித்தோம். நெல், வாழை, காய்கறிகள், பப்பாளி எனப்பல பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறார் இவர். கத்திரியில் மூன்று ரகங்களை நடவு செய்திருக்கிறார். மொத்தம் பதினைந்து ஏக்கர் நிலம் இவருக்குச் சொந்தமாக இருக்கிறது. ஆறேழு மாடுகளும் இருக்கின்றன. நல்ல தண்ணீர் வசதி இருப்பதால் இத்தனை பயிர்களும் இவருக்குச் சாத்தியமாகின்றன. “நான் இன்னமும் முழுமையான இயற்கை விவசாயியாக மாறவில்லை. ஆனால், முன்பு பயன்படுத்தியதைவிட 80% ரசாயன இடுபொருள்களைக் குறைத்துவிட்டேன். இதனால், உரக்கடைச் செலவு வெகுவாகக் குறைந்திருக்கிறது.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

அதுவே எனக்குப் பெரிய லாபம்தான். மண்புழு உரம், பஞ்சகவ்யா, டிரைக்கோடெர்மா விரிடி போன்றவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகிறேன். இதனால் மகசூல் அதிகமாகக் கிடைக்கவில்லை என்றாலும், செலவு குறைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வீட்டு மாடுகளின் கழிவுகள்தான் இனி எனக்கு உரக்கடை. கலெக்டர் தேவையான பயிற்சிகளையும் உதவிகளையும் செய்துவருகிறார். இன்னும் கொஞ்ச நாள்களில் நான் முழுமையான இயற்கை விவசாயியாக மாறிவிடுவேன்” என்று  நம்பிக்கையுடன் சொன்னார் ஹரிராம்.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

‘ஆலோசனையும் அறிவுரையும் அடுத்தவர்களுக்கு மட்டும் இருக்கக்கூடாது. முதலில், நாம் அதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். அதை மெய்ப்பிப்பதுபோல, அவர் வசிக்கும் அரசு பங்களாவில் ஓய்வு நேரத்தை ஒரு விவசாயியாகவே கழிக்கிறார் ஆட்சியர் பிரசன்னா.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!


பங்களாவுக்கு முன்பிருக்கும் நிலத்தில், இயற்கை வழி விவசாயத்தில் நெல் சாகுபடி செய்து முடித்திருக்கிறார் இவர். அவரது வீட்டுக்குத் தேவையான பெரும்பாலான விளைபொருள்களை அவரே விளைவித்துக் கொள்கிறார். வீட்டுத்தேவைக்காக நாட்டுமாடு, கோழிகள் அனைத்தும் இருக்கின்றன. கொய்யா, மாதுளை, தென்னை, பப்பாளி, வாழை அனைத்தும் இருக்கின்றன. மேட்டுப்பாத்தி முறையில் கீரை விளைவித்திருக்கிறார். நாட்டு வெண்டை, தக்காளி, கொத்தவரை எனக் காய்கறிகள் ஒருபக்கம் இருக்கின்றன.

இது தொடர்பாகப் பேசிய ஆட்சியர் பிரசன்னா, “நாங்க விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்களாக இருந்தாலும் படிப்பு, வேலைனு விவசாயத்தை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டோம். அந்த எண்ணம் அடிக்கடி மனசை அரிச்சுக்கிட்டே இருக்கும். ‘பசுமை விகடன்’ வந்த பிறகு, விவசாயம் செய்யணும்ங்கிற எண்ணம் அதிகமாச்சு. அதுக்குப் பிறகுதான் பெரிய அளவுல செய்ய முடியலைனாலும், வீட்டுத்தோட்டமாவது அமைக்கலாம்னு முடிவு பண்ணி, வீட்டுல விவசாயம் செஞ்சிகிட்டு இருக்கோம். என் மனைவிக்கும் விவசாயத்துமேல ரொம்ப ஆர்வம். எங்க பசங்களுக்கும் சனி, ஞாயிற்றுக் கிழமைகள்ல விவசாயத்தைக் கத்துக் கொடுக்குறோம். குடும்பத்தோடு சேர்ந்து வீட்டுத் தோட்டத்துல விவசாய வேலைகளைப் பார்ப்போம்.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

நமக்குத் தேவையானதை நாமளே உற்பத்தி செஞ்சு சாப்பிடுற சுகமே தனி. இயற்கை விவசாய முறையில நெல், காய்கறிகள், கீரைகள், பழமரங்கள்னு எல்லாம் பயிர் செய்றோம். இப்ப ஊர்ல இருக்கற எங்க தோட்டத்துலயும் விவசாயம் நடந்துகிட்டிருக்கு. அதை என்னோட தம்பி பராமரிச்சுட்டிருக்காரு” என்றார்.

நிறைவாகப் பேசிய பிரசன்னா, “பசுமை விகடன் எனக்கு நிறைய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்திருக்கு. நிறைய மனிதர்களை அறிமுகப்படுத்தியிருக்கு. தமிழ்நாட்டுல எங்கோ ஒரு மூலையில இருக்கிற ஒரு விவசாயி புதுமையா செய்ற ஒரு விஷயம், இத்தனை கிலோமீட்டர் கடந்து சத்தீஸ்கர்லயும் நடக்குதுனா அதுக்குக் காரணம் பசுமை விகடன்தான்.

விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை, தொழில்நுட்பங்களை அள்ளி அள்ளிக் கொடுக்கிற பசுமை விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள். அதேபோல, தமிழ்நாட்டுல இருந்து என்னோட அழைப்பின்பேரில் இங்க வந்து, விவசாயிகளுக்கு இயற்கை விவசாய நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்த ஆலோசகர்களுக்கும் என்னோட நன்றி” என்றார் மகிழ்ச்சியாக. 

- முற்றும்

தொடர்புக்கு,
மின்னஞ்சல்: Prasanna4deepa@gmail.com

மக்களோடு மக்களாக ஆட்சியர்!

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!தமிழ்நாட்டிலிருந்து சத்தீஸ்கர் சென்று, அங்கே விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிகளை அளித்துவரும் யோகநாதனிடம் பேசினோம்.

“பசுமை விகடன் மூலமாதான் எனக்கு அறிமுகமானார் ஆட்சியர். எங்க மாவட்ட விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொடுங்கனு ஆர்வமா கூப்பிட்டாரு. எனக்கு இந்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்கிறதால, அந்த விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்கப் போனேன். பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், பூச்சிவிரட்டினு எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தேன். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இயற்கைமீது ஆர்வம் வரணுங்கிறதுக்காக பாரம்பர்ய உணவுத் திருவிழா நடத்தினோம். நம்ம ஊரு அதிகாரிங்களும் இதுபோல முயற்சி எடுத்தா நம்ம விவசாயிகளுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

அய்யா நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த தொழில்நுட்பங்களைப் பிற மாநில விவசாயிகளுக்கும் கற்றுக்கொடுக்குற வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த கலெக்டருக்கும் பசுமை விகடனுக்கும் நன்றி” என்றார் நெகிழ்ச்சியாக.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள்!

நகரி, துப்ரா ஆகியவை சத்தீஸ்கர் மாநிலத்தின் பாரம்பர்ய நெல் ரகங்கள். இவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்த ரகங்களை மீண்டும் மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரசன்னா. இது தொடர்பாகப் பேசிய வேளாண்மைத்துறை அலுவலர் மனோஜ், “நகரி, துப்ரா மாதிரியான பாரம்பர்ய ரகங்களுக்குப் போதுமான சந்தைவாய்ப்பு இல்லை என்பதால், அதைப் பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டும் சூழல் நிலவியது. இந்த முறை ‘ஆத்மா’ திட்டத்தில் நாநூறு ஏக்கரில் இந்த ரகங்களைச் சாகுபடி செய்திருக்கிறோம். சந்தை வாய்ப்புக்காக அரிசியாக மாற்றி விற்பனை செய்துவருகிறோம். எங்கள் மாவட்ட விவசாயிகள் கடின உழைப்பாளிகள். ஆனால், புதிய தொழில்நுட்பங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அவர்களுக்கு அந்தத் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வந்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள். அதிகளவில் ரசாயன இடுபொருள்களைப் பயன்படுத்தும் எங்கள் மாவட்ட விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம். தொடக்கத்தில் தயக்கம் காட்டியவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கள் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் இன்னும் சில ஆண்டுகளில், இயற்கை விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டமாகத் தாம்தரி இருக்கும். கிஸான் பஜார், நெல் விற்பனைக்கான மின்னணு ஏல மையம், இயற்கை விவசாயப் பயிற்சிக்கூடம் என விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

‘பசுமை’ காட்டிய பாதை! - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்!

மத்திய அரசின் விருது!

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேளாண்மைக்காக 50% முதல் 60% பணிகளைச் செய்ய வேண்டும். ஆனால், பல மாநிலங்கள் இதை முறையாகப் பின்பற்றுவதில்லை. இந்நிலையில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப்பணிகளை 80 சதவிகித அளவு விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தியதற்காக மத்திய அரசின் விருதை, இந்தாண்டு தாம்தரி மாவட்டம் பெற்றுள்ளது. கடந்த மே 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இந்த விருதை ஆட்சியர் பிரசன்னாவிடம் வழங்கினார்.