Published:Updated:

பாரம்பர்யத்தை விதைத்த விதைத் திருவிழா..!

பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்பர்யத்தை விதைத்த விதைத் திருவிழா..!

விழாத.ஜெயகுமார், துரை.நாகராஜன் - படங்கள்: பா.காளிமுத்து, ப.பிரியங்கா

பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜூன் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ‘தேசிய பன்மய விதைத் திருவிழா’ நடைபெற்றது. இவ்விழாவை, பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு, பாரத் விதை விடுதலைக் குழு, ஆஷா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. இவ்விழாவில் உத்தரகாண்ட், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விதைப் பாதுகாவலர்கள், அரசு அலுவலர்கள், சமூகச் செயற் பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து  பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் எனப் பலரும் விழா நடைபெற்ற 3 நாள்களிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில்... தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பத்திரிகையாளர் ஞானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  விழாவில் பேசிய ககன்தீப் சிங் பேடி, “மானாவாரிச் சாகுபடியில் அதிக விளைச்சல் எடுப்பதற்கான யோசனைகளை விவசாயிகளிடமே கேட்டு, அவரவர்களின் விருப்பப்படி விதைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். விதைகள்தான் ஒரு நாட்டின் விவசாய உற்பத்தித் திறனை நிர்ணயிக்கின்றன. அதில், முக்கியமானவை பாரம்பர்ய விதைகள். இவை அதிகமான வறட்சியையும் தாங்கி வளரும்.

பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!
பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!

மானாவாரி சாகுபடியில் நெல்லைத் தவிர்த்து விட்டுச் சிறுதானியங்கள், பயறு வகைகள் போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம். சிறிதளவு மழையை வைத்துக்கொண்டு, நீடித்த மகசூலை எடுக்கப் பாரம்பர்ய சிறுதானிய விதைகளே சிறந்தவை. இந்த விதைத் திருவிழாவைப்போலப் பல விழிப்புஉணர்வுத் திருவிழாக்கள் நடக்க வேண்டும். பாரம்பர்ய ரகங்கள் காக்கப்பட வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில், “நமது பாரம்பர்ய விதைகளைக் கையில் எடுக்க வேண்டும். அவற்றைக் காப்பதுபோல விதைக்கு உயிர் கொடுக்கும் மண்ணையும் காக்க வேண்டும். மண் வளமாக இருந்தால்தான் விதைகள் முளைக்கும். மண்ணும் மண்புழுக்களும் இல்லை எனில் விதைகள் வளராது. மண்புழுக்கள்தான் மண்ணின் சொத்து” என்றார்.  விழாவை ஒருங்கிணைத்து நடத்திய பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்துவிடம் விழா குறித்துப் பேசினோம். “மக்களிடையே பாரம்பர்ய விதைகள் பற்றிய விழிப்புஉணர்வு பெருகிவருகிறது. விழாவில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மக்களின் பங்களிப்பு அதிகமாகவேயிருந்தது. விதைப் பாதுகாவலர்களைக் கவுரவப்படுத்தவே இந்த விழா நடத்தப்பட்டது. இந்த விதைத் திருவிழா மக்களும் விவசாயிகளும் கூடும் விழாவாக அமைந்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது” என்றார்.

பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!

இவ்விழாவில் 80-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான பாரம்பர்ய விதைகளை விவசாயிகள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைத்திருந்தனர். மேலும் நெல், பயறு வகைகள், முளைக்கட்டிய தானியங்கள், புத்தக அங்காடிகள், மாடித்தோட்ட உபகரணங்கள், விதைப்பந்துகள் உருவாக்குதல், பாரம்பர்ய காய்கறி விதைகள், நூலிழைகளான துணிகள் மற்றும் சிறுதானிய உணவகம் என விதைத் திருவிழா களை கட்டியிருந்தது. மாநகரத்தில் உள்ள மக்களுக்கும், பாரம்பர்யத்தை விதைக்கும் விழாவாக, இந்த விதைத் திருவிழா அமைத்திருந்தது.

கடுகு மட்டுமல்ல... கத்திரி, மக்காச்சோளமும் நுழையும்!

விதைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ‘மரபணு மாற்றுப் பயிர்களும் உணவு அரசியலும்’ என்ற தலைப்பில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஒருங்கிணைத்த கருத்தரங்கு நடந்தது.

“எந்தவொரு அரசும் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களை மக்களின் மீது திணிக்கக்கூடாது. அது மாட்டுக்கறியாகட்டும், மரபணு மாற்று விதைகளாகட்டும்...” என்று அறிமுகம் கொடுத்து, கருத்தரங்கைத் துவக்கி வைத்தார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயற்கை ஆர்வலர் பாமயன், “இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டவை. வேளாண்மையை வைத்துத்தான் எல்லாப் பொருளாதார முடிவுகளும் எடுக்கப்பட்டன. இந்தியாவில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டு, நம்முடைய தற்சார்பு விவசாயமே அழிக்கப்பட்டுவிட்டது. இதை எதிர்த்து வலுவாகப் போராட அப்போது முடியவில்லை. ஆனால், இப்போது போராட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் பி.டி பருத்தி விதைகள் விற்பனையில் 95 சதவிகிதம் மான்சான்டோ கம்பெனியிடம் இருக்கிறது. விதை உரிமையை மற்றவர்களிடம் கொடுத்ததன் விளைவுதான் இது” என்றார்.

பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!

கருத்தரங்கில் பேசிய சித்த மருத்துவர் கு.சிவராமன், “புற்றுநோய்க்குப் புகையிலையும் ஒரு காரணம் என்பதை உலகம் அறியவே 60 ஆண்டுகள் ஆயின. ‘கிளைக்கோசைடு’ என்ற களைக்கொல்லி தெளிக்கப்பட்ட உணவு பொருளைச் சாப்பிடும் மனிதர்களுக்கு ஆபத்து என்ற தகவலை 2006-ம் ஆண்டிலேயே நாம்மாழ்வார் போன்ற இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்தனர். பிறகு, 2015-ம் ஆண்டு கிளைக்கோசைடு மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று ஆய்வறிக்கைகள் தெரிவித்தன. உடனே, ஐரோப்பிய நாடுகள் இந்தக் களைக்கொல்லியைத் தடை செய்துவிட்டன.

ஆனால், இந்தியாவில் 2017-ம் ஆண்டிலும் உரக் கடைகளில் இந்தக் களைக்கொல்லி கிடைக்கிறது. இதுதான் இந்தியாவின் நிலை. அதனால்தான் மரபணுமாற்று விதைகளை வேண்டாம் என்கிறோம். புதிது புதிதாக நோய்கள் வந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் அன்றாடம் பயன்படுத்தும் கடுகு, கத்திரிக்காய் போன்றவற்றில் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தைப் புகுத்துவது நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல” என்றார்.

பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!

உணவு மற்றும் வர்த்தகக் கொள்கை ஆராய்ச்சியாளர் தேவேந்தர் சர்மா, “அமெரிக்காவில் 41 சதவிகித மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மரபணு மாற்று உணவுப் பொருள்களும் ஒரு காரணம். 1945-ம் ஆண்டிலேயே டிடிடி(DDT) பூச்சிக்கொல்லியைப் பற்றி அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை எழுதியது. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து டிடிடி தடை செய்யப்பட்டது. பிறகு ஜி.எம் கோல்டன் அரிசி பற்றி எழுதியது. அதுவும் அப்படியே நின்றுவிட்டது. இப்போது மரபணு மாற்று விதைகளைப் பற்றியும் எழுதியுள்ளது. இப்போதே நாம் சுதாரித்துக் கொண்டால்தான் உண்டு.

மரபணு மாற்று கடுகு குறித்தான சோதனை அறிக்கையை, மத்திய அரசு மக்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அதைப் பற்றிய உண்மையான புரிதல் மக்களிடம் ஏற்படும். இப்போது மரபணு மாற்றுக் கடுகை அனுமதித்துவிட்டால், ஏற்கெனவே ஜி.இ.ஏ.சியின் அனுமதி பெற்ற மரபணு மாற்றுக் கத்திரி, மக்காச்சோளம் ஆகியவை எல்லாம் உள்ளே நுழையும். அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது” என்றார்.

பாரம்பர்யத்தை விதைத்த   விதைத் திருவிழா..!

கருத்தரங்கில் நிறைவாகப் பேசிய ஆஷா அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் களப் போராளியுமான கவிதா குருகந்தி, “மக்கள் தொகை பெருகிவிட்டது என்கிறார்கள் ஆட்சியாளர்கள். உண்மையில் இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இவர்கள் மக்கள்தொகை பெருக்கம் என்பதைக் காரணமாக வைத்து மரபணு மாற்றுப் பயிர்களைக் கொண்டு வர இருக்கிறார்கள். இதை மக்களும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை. பிறகு யார் பயனடைவதற்கு இதைக் கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.

ஏற்கெனவே வீரிய விதை போன்ற தொழில்நுட்பத்தால் விளைச்சல் நன்றாகத்தான் இருக்கிறது. மரபணு மாற்று விதைகள் உள்ளே வருவதால், மரபணு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைதான் வளரும். இந்தத் தொழில்துறை நூறு வகையான உணவுப் பொருள்களுக்கான மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரயிருக்கிறது. அதில் ‘துளசி’யும் அடக்கம். மத்தியில் ஆட்சி நடத்தும் பி.ஜே.பியோ, மாநிலத்தில் ஆட்சி நடத்தும் அ.தி.மு.கவோ தங்கள் தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றுப் பயிர்களைக் கொண்டு வரமாட்டோம் என்றிருக்கிறார்கள். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றட்டும். மக்களாகிய நாம், நம்முடைய நிலையில் உறுதியாக நிற்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. நம் குரலையும் உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றார் உறுதியாக. கருத்தரங்கில் நடிகை ரோகிணி, மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில், இயற்கை ஆர்வலர் அறச்சலூர் செல்வம் ஆகியோர் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராகத் தங்களுடைய கருத்தைப் பதிவு செய்தனர்.