Published:Updated:

இனி, ரேஷன் கடைகளிலும் சிறுதானியம்! - நெல் திருவிழாவில் நல்ல அறிவிப்பு!

இனி, ரேஷன் கடைகளிலும் சிறுதானியம்! - நெல் திருவிழாவில் நல்ல அறிவிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி, ரேஷன் கடைகளிலும் சிறுதானியம்! - நெல் திருவிழாவில் நல்ல அறிவிப்பு!

கூட்டம்கு.ராமகிருஷ்ணன், தமிழ்பாரதன் - படங்கள்: க.சதீஷ்குமார்

இனி, ரேஷன் கடைகளிலும் சிறுதானியம்! - நெல் திருவிழாவில் நல்ல அறிவிப்பு!

யற்கை விவசாயத்தோடு பாரம்பர்ய நெல் ரகங்களையும் விவசாயிகளிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில்... ஆண்டுதோறும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழாவை நடத்துகிறார்கள் ‘கிரியேட்-நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பினர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் மூலமாக எளிமையாகத் தொடங்கப்பட்ட இந்த விழா, ஆண்டுக்காண்டு எழுச்சிபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இந்த ஆண்டுக்கான நெல் திருவிழா நடைபெற்றது.

கிரியேட்-நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் ‘நெல்’ ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சையில் இருந்துவரும் நிலையிலும் மன உறுதியுடனும் உற்சாகத்துடனும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.
தனது வரவேற்புரையில் ‘நெல்’ ஜெயராமன்,  ‘‘பல ஊடகங்கள் நெல் திருவிழாவுக்கு ஆதரவு கொடுத்தாலும், பசுமை விகடன்தான் எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஊக்கம் கொடுத்து வருகிறது. எங்களது அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து வெளியிட்டு உறுதுணையாயிருக்கிறது. நான் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் ஆனந்த விகடன், பசுமை விகடன் மூலமாகப் பல உதவிகள் கிடைத்ததை மறக்கமுடியாது’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். விழாவில் சிறப்பான முறையில் இயற்கை விவசாயம் செய்யும் 13 விவசாயிகளுக்கும் களப் போராளிகளுக்கும்  ‘நம்மாழ்வார் விருது’ வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர். விழாவில் 169 பாரம்பர்ய நெல் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. விழாவுக்கு வந்திருந்த விவசாயிகளுக்கு, அவர்கள் விரும்பும் ரகத்தில் 2 கிலோ விதை நெல் வழங்கப்பட்டது.

இனி, ரேஷன் கடைகளிலும் சிறுதானியம்! - நெல் திருவிழாவில் நல்ல அறிவிப்பு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய, மலேசியா நாட்டிலுள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தமிழ்ப் பிரிவு அதிகாரி சுப்பாராவ், “மலேசியாவில் இயற்கை விவசாயம் செய்யும் சீனர்கள் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரைத் தெய்வமாக வணங்குகிறார்கள். நம்மாழ்வார் சொன்னதுபோல் தங்களின் பண்ணைகளில் கிடைக்கும் பொருள்களிலிருந்தே இடு பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். வெளியிலிருந்து எந்தவொரு இடுபொருளையும் விலைக்கு வாங்குவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் ரசாயன உரங்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதால், நம் விவசாயிகள் கடனாளிகளாக மாறியுள்ளனர். எங்களது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அங்குள்ள விவசாயிகளுக்கு இடுபொருள்கள் தயாரிக்கும் முறை குறித்த கையேடுகளை வழங்குவதோடு, பயிற்சியும் அளித்து வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய நபார்டு வங்கியின் முதன்மைப் பொதுமேலாளர் நாகூர் அலி ஜின்னா, “தமிழ்நாட்டில் விவசாயப் பணிகளுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். நீர்நிலைகளைச் சீரமைப்பதற்கான குடிமராமத்துப் பணிகளுக்கு மட்டும் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் செலவிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தெலங்கானா மாநிலத்தில் 18 ஆயிரம் ஏரிகளை அம்மாநில அரசு புனரமைத்துள்ளது. இதனால், கடும் வறட்சி நிலவியபோதும் அம்மாநிலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது” என்றார்.

இனி, ரேஷன் கடைகளிலும் சிறுதானியம்! - நெல் திருவிழாவில் நல்ல அறிவிப்பு!

அடுத்து பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களையும் கூடவே அழைத்துச் செல்கிறார். அவர்களுக்கு வெளிநாடுகளில் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். அதுபோல விவசாயிகளையும் அழைத்துச் சென்று விளை பொருள்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நமது அரிசிக்குச் சந்தை வாய்ப்புகள் உள்ளன. விளைபொருள்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி, மானியமும் வழங்க வேண்டும்” என்றார்.

நிறைவாகப் பேசிய தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மதுமதி, “கடந்த காலங்களில் பொதுவிநியோகத் திட்டத்தில் சிறுதானியம் வழங்கப்பட்டது. அதேபோல, ரேஷன் கடைகளில் மீண்டும் சிறுதானியங்களை வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதனால், சிறுதானிய விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உணவு உற்பத்தி என்பது விவசாயிகள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதல்ல. வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் உற்பத்தி பெருகும். நான் எவ்வளவோ பணிகளுக்கிடையிலும் மதுராந்தகம் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்” என்றார். விழாவில், புதுச்சேரி வேளாண்மைத் துறைச் செயலாளர் மணிகண்டன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ், கேரள மாநில ‘நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.