Published:Updated:

‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா’ இதைச் சொன்னதும் நம்மாழ்வார்தான்!

‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா’ இதைச் சொன்னதும் நம்மாழ்வார்தான்!

ஃபேஸ்புக் புள்ளைங்களோட பணிவான கவனத்துக்கு....சாடல்ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா’ இதைச் சொன்னதும் நம்மாழ்வார்தான்!

ஃபேஸ்புக் புள்ளைங்களோட பணிவான கவனத்துக்கு....சாடல்ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

Published:Updated:
‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா’ இதைச் சொன்னதும் நம்மாழ்வார்தான்!

வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் இப்படிப் பற்பல சமூக வலைதளங்களைப் பயன்படுத்திக்கிட்டிருக்கிற தமிழ்கூறும் நல்லுலகுக்கு, இந்த ஜூனியர் கோவணாண்டியோட அநேக கோடி நமஸ்காரமுங்கோ! இந்தத் தடவை நம்ம பஞ்சாயத்து உங்கள்ல சிலர்கூடத்தான்.

இந்தச் சமூக வலைதளங்கள் வந்தாலும் வந்துச்சு... கேள்வி கேக்கறவங்களோட எண்ணிக்கை ரொம்ப ரொம்ப அதிகமாயிடுச்சு.  ஆனா, கேள்வியைக் கேட்டு விளக்கத்தை வாங்கறதைவிட, கேள்வியை வெச்சே ஒட்டுமொத்தமா ஒரு விஷயத்தையே காலி பண்ற அளவுக்குப் புதுக்கலாச்சாரம் பரவிக்கிட்டிருக்கிறத நினைச்சாத்தான் ரொம்ப ரொம்பப் பயமாயிருக்கு!

மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் பஞ்சகவ்யாவைப் பத்திப் பேசினத வெச்சுக்கிட்டு, அவரை டுபாக்கூர்ங்கிற அளவுக்கெல்லாம் தரம்தாழ்த்தி எழுதினதை என்னனு சொல்ல? நம்மாழ்வார் ஒண்ணும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்ல. சொல்லப்போனா, ‘மறைந்த ஒருவரை விமர்சிக்கிறதா’னு சிலர் கேள்விகளை வெச்சுக்கிட்டே இருக்காங்க. ஒரு மனிதன் மறைஞ்சுட்டா அவர் செய்த நல்லதையெல்லாம் எப்படிப் பெருமையோட சொல்லிக்கிறோமோ... அதேபோல, அவர் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டிப் பேசறதுல தப்பில்லனுதான் நான் நினைக்கிறேன். 

‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா’ இதைச் சொன்னதும் நம்மாழ்வார்தான்!

தன்னை விமர்சிக்கிறத ஏத்துக்கக்கூடிய பக்குவம் கொண்டவராத்தான் நம்மாழ்வார் கடைசிவரைக்கும் வாழ்ந்தார். தான் சொல்றதை மத்தவங்க நம்பியே ஆகணும்னு அவர் ஒத்தக்கால்ல நின்னதில்ல. ‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா. நம்ம புதுக்கோட்டை கணபதியோட வயலுக்குப் போங்க... முருகமங்கலம் சம்பந்தம் பிள்ளை வயலைப் போய்ப்பாருங்க. அவங்கள்லாம் சாதிச்சிருக்கிறதைத்தான் உங்ககிட்ட நான் சொல்றேன். அதையெல்லாம் நேர்ல பார்த்தபிறகு நம்பிக்கை வந்தா, இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிங்க. இல்லனா விட்டுடுங்க’ இப்படித்தான் பேசுவார்.

இதையெல்லாம் ரசாயன விவசாயத்துக்கு ஆதரவு காட்டுறவங்கள்ல பலபேரு விமர்சிச்சிருக்காங்க. உண்மையைப் புரிஞ்ச அவங்கள்ல பலபேரு, இயற்கை விவசாயம் பக்கம் மாறியிருக்காங்க. சரி நடந்துகிட்டிருக்கிற பஞ்சாயத்துக்கு வர்றேன். ‘பஞ்சகவ்யாவை மனிதர்கள் குடிக்கலாம். அது சகலவித நோய்களையும் தீர்க்கும்’னு நம்மாழ்வார் பேசினதைத்தான் இப்பச் சிலர் தங்களோட பேசு பொருளா கையில எடுத்திருக்காங்க. பயிர்களுக்குப் பயன்படுத்துறப்ப பஞ்சகவ்யா தந்த அற்புதமான மாற்றங்களை நேரடியா உணர்ந்த பிறகுதான், அதைத் தோள்ல தூக்கிச் சுமந்துகிட்டு ஊர் ஊரா ஓடினார் நம்மாழ்வார். அதுக்குப் பிறகு, மனிதர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்னு தெரியவந்ததும் தானும் பயன்படுத்த ஆரம்பிச்சார். பிறகுதான், ‘பஞ்சகவ்யாவைக் குடித்ததால், என் கண்ணாடியை இந்த வயதில் கழற்றும் அளவுக்கு எனக்குப் பார்வைக் கோளாறு நீங்கிவிட்டது’னு மேடைகள்ல சொல்ல ஆரம்பிச்சார்.

நம்மாழ்வார் சொல்லிட்டாரேங்கிறதுக்காக அதை அப்படியே ஏத்துக்கவேண்டிய தேவையில்லை. ஆனா, இதைப் பத்தி விமர்சிக்கிறதுக்கு முன்ன ஒரு விஷயத்தை யோசிச்சிருக்கலாம். அதுல தப்பிருக்குமா... இல்லையாங்கிறத பஞ்சகவ்யாவைக் கோயில்கள்ல இருந்து கழனிக்காடுகளுக்குக் கொண்டு வந்த டாக்டர் கொடுமுடி நடராஜன்கிட்டயே கேட்டிருக்கலாம்.

பழங்காலம்தொட்டே ஒவ்வொண்ணையும் தன்மேலேயே ஆராய்ச்சி செய்து பார்த்து, அதுல நன்மை கிடைக்கிற பட்சத்துல அதையே மருந்தாவும், உணவாவும் இன்னும் பல நுட்பங்களாவும் வருங்காலச் சந்ததிகள் பயன்படுத்துறதுக்காக நம்ம முன்னோர்கள் நமக்காகச் சொல்லி வெச்சிருக்காங்க. அந்த வகையில உருவான ஒரு பொருள்தான் பஞ்சகவ்யா. பசுமாட்டோட சாணம், மூத்திரம், பால், நெய், தயிர் இந்த அஞ்சு பொருளையும் குறிப்பிட்ட விகிதத்துல கலந்து, நம்ம ஊரு கோயில்கள்ல கொடுக்கிறது வழக்கமா இருந்திருக்கு. இப்பவும் பல கோயில்கள்ல கொடுக்கிறாங்க. பக்தர்களும் வாங்கிப் பயன்படுத்துறாங்க. இதைத்தான் தன்னோட ஆராய்ச்சி மூலமா பயிர்களுக்கும் பயன்படுத்த முடியும்னு எம்.பி.பி.எஸ் டாக்டரான கொடுமுடி நடராஜன் நிரூபிச்சார். விவசாயிகளும் பயன்படுத்திக்கிட்டு வர்றாங்க.

‘அடுத்தகட்டமா, இந்தப் பஞ்சகவ்யாவை மனிதர்கள்கிட்டயும் பரிசோதனை பண்ணிப் பார்த்தேன். ஹெச்.ஐ.வி நோயாளி ஒருவருக்குக் கொடுத்து அவர் தேறி வந்தார். அவரோட இறப்புத் தள்ளிப்போடப்பட்டது. ஆனா, ஒரு கட்டத்தில் பஞ்சகவ்யா (மருந்தாகத் தயாரிக்கப்பட்ட) பயன்படுத்தறதை அவர் நிறுத்திட்டார். அதனால, அந்த ஆராய்ச்சி முடிவடையல. இப்பவும் ஈரோட்டுல இருக்கிற ஒரு காப்பகத்துல இருக்கிற ஹெச்.ஐ.வி நோயாளிகள் சிலருக்கு இந்தப் பஞ்சகவ்யா மருந்தைக் கொடுத்துட்டு வர்றாங்க. பலபேரோட இறப்பு தள்ளிப் போடப்பட்டிருக்கு. இதுமாதிரிதான் நம்மாழ்வாரும் தன்னைச் சோதனைக்கு உட்படுத்திக்கிட்டார். பஞ்சகவ்யா மூலமா தானே குணமாகிவிட்டதை ஓர் ஆராய்ச்சி முடிவாத்தான், அவர் மேடைகள்ல சொல்ல ஆரம்பிச்சார்’னு சொல்றார் நடராஜன்.

‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா’ இதைச் சொன்னதும் நம்மாழ்வார்தான்!


ஆயிரம் இருக்கட்டும்... மாட்டோட கழிவுகளான சாணி, மூத்திரத்தை யெல்லாம் கலந்துசெய்த ஒரு திரவத்தை மருந்துனு சொல்றதை, இயற்கையைவிட்டு வெகுதூரம் விலகி வந்துட்ட இந்த நாகரிகச் சமூகத்தால ஏத்துக்க முடியாதுங்கிறது உண்மைதான். ஆனா, ஒரு விஷயத்தை இங்க சொல்லியே ஆகணும். இந்தப் பூமியில, ஒரு ஜீவனோட கழிவுதான் இன்னொரு ஜீவனோட உணவா பெரும்பாலும் இருக்குங்கிற உண்மையை நாம புரிஞ்சுக்கணும். நாய் எதைச் சாப்பிடும், பன்றிங்க எதைச் சாப்பிடும்கிறதெல்லாம் நமக்குத் தெரிஞ்ச விஷயம்தானே! பழம்னு சொல்லி நாம பெருமையோட சாப்பிடறோமே... அதுவும் கழிவுதானே. விதைகளை இந்தப் பூமியில பத்திரமா பாதுகாத்துச் சேர்க்கறதுக்காக, அதுமேல போர்த்தியிருக்கிற ஒருவிதமான கழிவுப் பொருள்தானே பழம். இப்படி அடுக்கிட்டே போகலாம்.

என்னோட சின்ன வயசுல பாட்டி, தாத்தா அக்கம்பக்கமிருக்கிற உறவுக்காரங்களுக் கெல்லாம் எப்படா தலைவலி, இடுப்பு வலி, முதுகுவலி வரும்னு எதிர்பார்த்துக்கிட்டே இருப்பேன்.  அந்த வலிகளுக்கெல்லாம் மருந்து வாங்கிட்டு வந்து கொடுக்குறதுல எனக்கு அவ்வளவு சந்தோஷம். ‘எலே நடுவுள்ளவனே... மடத்தார்கிட்ட போய்ப் புனுகு வாங்கிட்டுவா’னு சொல்லிட்டா போதும், சிட்டா பறந்துடுவேன். அதுக்குக் காரணம்... அந்தப் புனுகைத் தர்ற காட்டுப்பூனையைப் பாக்குறதுக்காத்தான். எங்க ஊரு மடத்துல, அந்தப் பூனையைக் கூண்டுல அடைச்சி வளர்ப்பாங்க. எப்பப் பார்த்தலும், சும்மா துறுதுறுனு உலாத்திக்கிட்டே இருக்கும். மடத்தோட பெரியவரை மடத்தார்னு சொல்லுவோம். அவர்தான், ஒரு குச்சியைப் பூனைக் கூண்டுக்குள்ள விட்டு, அங்க இருக்கிற கம்பியில ஒட்டிக்கிட்டிருக்கிற தைலம் மாதிரியான ஒரு பொருளைக் கொஞ்சம் போல வழிச்சி, சின்ன டப்பாவுல போட்டுக் கொடுப்பார். அதுதான் புனுகு. அது எங்கிருந்து வந்துச்சு... எப்படி வந்துச்சுனெல்லாம் அந்த வயசுல ஆராய்ச்சி பண்ணினதில்ல. இப்ப விசாரிச்சா... அந்தப் பூனையோட ஆசனவாயில் சுரக்குறதுதான் புனுகு. இதிலிருந்துதான் ஜவ்வாது உள்படப் பல வாசனை திரவியங்களையும் தயாரிக்கிறாங்க. அதைத்தான் மருந்தாவும் பயன்படுத்தறாங்க... அப்படிங்கிற உண்மைகள் தெரியவருது.

இதே காட்டுப்பூனை, காபி எஸ்டேட்டுங்கள் லயும் நிறைய உண்டு. இந்தப் பூனைங்க, காபி பழத்தை விரும்பிச் சாப்பிடும். கழிவு வெளியேறும்போது, காபிக் கொட்டை அதுல கலந்து வரும். இந்தக் காபிக் கொட்டைக்கு என்ன மவுசு தெரியுங்களா? இந்தோனேஷியா போன்ற சில நாடுகள்ல இப்படிக் கிடைக்கிற காபிக் கொட்டைகள்ல இருந்து காபித்தூள் தயாரிக்கிறாங்க. இதுதான் உலகத்துலயே மிக விலையுயர்ந்த காபித்தூள். உலகம் முழுக்க காபி பிரியருங்க, காட்டுப்பூனை காபினு கேட்டு வாங்கி விரும்பிக் குடிக்கிறாங்க.

முதலை, பல்லி, பன்றி, கழுதைனு இதுங்களோட கழிவையும் பலவிதமான நோய்களுக்கும் மருந்தா பயன்படுத்தியிருக்காங்க எகிப்துல. நம்ம ஊரு கிராமங்கள்ல விஷத்தைக் குடிச்சவங்களைக் காப்பாத்தறதுக்கு, மனிதக் கழிவைக் கரைச்சி வாயில ஊத்துவாங்க. இதனால பலபேரு உயிர் பிழைச்சிருக்காங்க. இன்னிக்கும் கிராமங்கள்ல இது நடைமுறையில இருக்கு.

காஞ்சூருனு ஒரு மூலிகைச் செடி உண்டு. இதப் பூனைக்காஞ்சி, செந்தட்டினு ஆரம்பிச்சு ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு பேர்ல அடையாளப்படுத்துவாங்க. சின்ன வயசுல பள்ளிக்கூடம் போறப்ப, இந்த இலையை உடம்புல தேய்ச்சிவிட்டுடுவானுங்க. சும்மா... அரிஅரினு அரிச்சி, அந்த இடமே தடிச்சி போய்த்  தாங்க முடியாம அழ ஆரம்பிச்சிடுவோம். இதுக்குக் கைகண்ட மருந்து என்ன தெரியுமா... நம்மளோட சிறுநீர்தான். அரிக்கிற இடத்துல சிறுநீரைக் கொஞ்சம் தடவிவிட்டா... நொடியில அரிப்பு காணாம போயிடும்.

ஆக, எதையும் முழுமையா ஆராயாம, உடனடியா விமர்சிச்சாலோ, எதிர்ப்புக் காட்டினாலோ நமக்குத்தான் நஷ்டம். இப்படித்தான், நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தைப் பிரபலப்படுத்தினப்பவும்.. ‘சாணியை வைத்துக் கொண்டு விவசாயமா... அதை மனிதன் சாப்பிடுவானா... அதன் மூலமாக விளைவிக்கப்பட்டதை மனிதர்கள் உண்டால் ஆபத்தாகிவிடாதா’னெல்லாம் பேசினாங்க எழுதினாங்க. இன்னிக்கு இயற்கை விவசாயம்கிறதுக்குக் கிடைச்சிருக்கிற மரியாதை... ரொம்ப உச்சத்துல இருக்கு. உலகமே அதை நோக்கித்தான் போயிக்கிட்டிருக்கு. இயற்கை விவசாயத்தைப் பத்தி நம்மாழ்வார் பேச ஆரம்பிச்சதுக்குப் பத்து, இருபது வருங்களுக்கு முன்னவரைக்கும் சாணம், குப்பை இதெல்லாத்தையும்தான் உரமா பயன்படுத்தினாங்க... பயிரை விளைவிச்சாங்க. அதையெல்லாம் சாப்பிட்டுத்தான் நம்ம முன்னோருங்க வாழ்ந்தாங்க. இப்படிச் சாப்பிட்டவங்களோட சந்தததிகள்தான் நாம அனைவருமேங்கிறத மறந்துடாதீங்க.

இதையெல்லாம் சொன்னதுமே, ‘நம்மாழ்வார் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்’னு நான் வக்காலத்து வாங்கறதா நினைக்கவேணாம். அவர் சொன்னதை ஆராய்ஞ்சு பார்த்து முடிவெடுக்கலாம். இதைத்தான் அவரே ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்துவார்.

இந்த விஷயத்துல பல பேருக்கு உறுத்தலா இருக்கிறது... ‘பசு’. ஆமாம், இந்தப் பசுமாட்டை இப்ப பலரும் இந்துத்வா அடையாளமா பார்க்கறாங்க. அதனால, காவியை எதிர்க்க நினைக்கறவங்க பலருக்கும் நம்மாழ்வார் சொல்ல வர்ற விஷயமும் உறுத்தலா இருக்கு. அய்யா சமூகப் போராளிகளே... கருப்பு பார்ட்டிங்க சொல்றாங்களேனு அதை ஆதரிக்கவும் வேணாம்... காவிகள் தூக்கிப் பிடிக்கிறாங்களேங்கிறதுக்காக எதிர்க்கவும் வேணாம். மெய்ப்பொருள் என்னங்கிறத நோக்கி நகர்ந்தா நல்லாயிருக்கும். என்ன நாஞ்சொல்றது?!

இப்படிக்கு
-ஜூனியர் கோவணாண்டி