Published:Updated:

ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?

ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?
பிரீமியம் ஸ்டோரி
ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?

சூழல்எம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: தி.விஜய்

ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?

சூழல்எம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: தி.விஜய்

Published:Updated:
ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?
பிரீமியம் ஸ்டோரி
ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில்... இக்கரை போழுவாம்பட்டி கிராமத்தையொட்டி ஈஷா யோக மையத்துக்குச் சொந்தமாகச் சுமார் 125 ஏக்கர் அளவு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தும் முறையான அனுமதி இன்றியும் விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ளதாகச் சில ஆண்டுகளுக்குமுன் புகார்கள் எழுந்தன. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்து, இக்கட்டடங்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளன என்ற செய்தி சமூக வலைதளங்கள், பத்திரிகைகள் போன்றவற்றில் வந்த வண்ணமிருந்தன.

இந்நிலையில், திடீரென்று ஈஷா யோகா மையத்தின் அனைத்துக் கட்டங்களுக்கும் அவசர அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?

வனம் மற்றும் நீராதாரங்கள் கொண்ட மலைப்பகுதிகள், மலைதளப் பாதுகாப்பு ஆணைய அதிகார வரம்பின்கீழ் வந்துவிடும். அப்படிப்பட்ட பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள், விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. 300 சதுர மீட்டருக்கு மேல் கட்டடம் கட்ட வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியர், நகர ஊரமைப்புத் துறை, வனத்துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை... எனப் பல துறைகளிடம் தடையில்லா சான்றுகளைப் பெற வேண்டும்.

ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் பகுதி மலைதளப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ்தான் இருக்கிறது. ஆனால், யாரிடமும் எந்த அனுமதியும் வாங்காமல் ஏகப்பட்ட கட்டடங்களைக் கட்டியிருக்கிறது என்று சொல்லி தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில்தான் தமிழக அரசு ஈஷா யோகா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி வழங்கியிருக்கிறது.

இவ்விவகாரம் குறித்துப் பேசினார் சூழலியல் ஆய்வாளர் மோகன்ராஜ். இவரின் குழுவினர் ‘ஈஷா உண்மையறியும் குழு’ என்ற பெயரில் இந்த பிரச்னை குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

“2006-ம் ஆண்டு வரை சிறிய அளவிலான கட்டுமானங்களைத்தான் ஈஷா மேற்கொண்டது.

2011-ம் ஆண்டுக்குப் பிறகுதான் யானைகளின் வழித்தடங்களை அடைத்துக் கட்டடங்களைக் கட்டியது. இதனால், வழித்தடத்தை இழந்த யானைகள் ஊருக்குள் நுழைய ஆரம்பித்தன. இதன் விளைவாக யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல்கள் தீவிரமாயின. கட்டடங்களைக் கட்டுவதற்காக அப்பகுதியிலிருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சூழலியலாளர்கள் ஈஷாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?

2012-ம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலராக இருந்த திருநாவுக்கரசு, ஈஷா மையத்தைப் பார்வையிட்டு ‘ஈஷாவின் கட்டடங்களுக்கு அனுமதி வழங்க முடியாது’ என மறுத்துவிட்டார். 17.08.2012 அன்று முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவருக்குத் திருநாவுக்கரசு அனுப்பிய கடிதத்தில்... ‘ஈஷா மையத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகும் ஈஷா மையம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பாக வெற்றிச்செல்வன் என்பவர், ஈஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து ஈஷா மையத்தை ஆய்வு செய்த கோவை மண்டலத்தின் நகர ஊரமைப்புத் துறைத் துணை இயக்குநர் சபாபதி, 03.09.2013 அன்று கோவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்திலும் ‘ஈஷாவின் கட்டடங்கள் விதி மீறிக் கட்டப்பட்டுள்ளன’ என்று புள்ளி விவரங்களோடு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தின் கடைசியில் ‘வன விலங்குகள் நடமாட்டத்துக்கு இடையூறாக உள்ள ஈஷா மையத்தின் கட்டடங்களுக்கு உரிமம் வழங்க, தடையில்லா சான்று வழங்கத் தேவையில்லை’ என்று சபாபதி குறிப்பிட்டுள்ளார்” என்ற மோகன்ராஜ், அதுகுறித்த சில ஆவணங்களை நம்மிடம் காட்டிவிட்டுத் தொடர்ந்து பேசினார்.

“வனத்தையொட்டி, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டது தொடர்பாக, அரசு தரப்பில் ஈஷா நிறுவனத்தினருக்கு எச்சரிக்கை அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் பல ஆயிரம் சதுர அடி பரப்பிலான கட்டடங்களை மூடிச் ‘சீல்’ வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதையுமே பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ஈஷா, அடுத்ததாக ஆதியோகி சிலையை எழுப்ப ஆரம்பித்தது. மூன்று ஏக்கர் பரப்பில்... 112 அடி உயரச் சிவன் சிலை, ஒரு லட்சம் சதுர அடியில் வாகன நிறுத்துமிடம், நான்கு மண்டபங்கள், பூங்கா என மலைப்பகுதி பாதுகாப்பு விதிகளை மீறிச் சட்டத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்டன. இதை எதிர்த்து வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் பி.முத்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், ‘நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதியான ராஜ வாய்க்கால் கால்வாயும் ஈஷாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?

ஈஷாவின் விதி மீறலுக்குப் பல்வேறு திசைகளிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் திரளத் தொடங்கிய நேரத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி ஆதியோகி சிலையைத் திறந்து வைக்க வந்தார். பிரதமர் வந்த காரணத்தால், ஈஷா மையத்தின் அத்தனை கட்டடங்களுக்கும் முறைகேடாக அவசர அவசரமாக அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

மலைதளப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் உள்ள பகுதியில் இப்படிக் கட்டடங்கள் கட்டவே கூடாது. கட்டிய பிறகும் அனுமதி வழங்க முடியாது. அவற்றை இடித்துத்தான் தள்ளியிருக்க வேண்டும். ஆனால், முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசிய ஜக்கி வாசுதேவ், ‘நாங்கள் வனங்களுக்கு அருகிலேயே இல்லை’ என்று தெரிவித்துள்ளார். அது எவ்வளவு பெரிய பொய் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஏற்கெனவே கட்டி முடித்த கட்டடங்களுக்கு இனிமேல் கட்டப்போவதுபோல ஆவணங்களைச் சமர்ப்பித்து அனுமதி வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியில், ‘கட்டுமான உத்தேசங்களுக்கான அனுமதி’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. பிரதமரின் வருகைதான் அனைத்துக்கும் காரணம். பிரதமரின் வருகைக்கு முன்பு வரை கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், ‘ஈஷா விதிகளை மீறியிருக்கிறது’ என்ற வாதத்தில் உறுதியாகத்தான் இருந்தது. அதற்குச் சாட்சி அரசு அதிகாரிகள் சமர்ப்பித்திருக்கும் அறிக்கைகள்தான்.

வழக்கமாக ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தனித்தனியாகத்தான் தடையில்லாச் சான்று கொடுப்பார்கள். ஆனால், ஈஷாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் ஒன்பது துறை அதிகாரிகள் ஒரே கடிதத்தில் கையெழுத்துப் போட்டுத் தடையில்லாச் சான்று வழங்கியிருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே தடையில்லாச் சான்று வழங்க முடியாது என்று உறுதியாக இருந்த வனத்துறைதான், ஈஷாவுக்கு முதல் அனுமதியை வழங்கியிருக்கிறது” என்ற மோகன்ராஜ் நிறைவாக,

ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?

“உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அடிக்கடி ஈஷாவுக்குச் செல்கிறார். பி.ஜே.பி கட்சித் தலைவர்கள் யார் வந்தாலும் ஈஷாவுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஈஷா ஓர் அதிகார மையமாகச் செயல்படுதைப் போலத் தோன்றுகிறது. நரசிபுரத்திலிருந்து ஈஷா வரையிலும் 14 கிலோமீட்டர் தூரத்துக்குத் தமிழக அரசு சாலை அமைத்துக் கொடுத்துள்ளது. இயற்கையான சூழலை அழித்து விதிகளை மீறி, வன உயிரினங்கள் பாதிக்கப்படும் வகையில் கட்டடங்களைக் கட்டியுள்ள ஈஷாவுக்கு ஏன் எல்லோரும் இவ்வளவு அனுசரணையாக இருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக எதிர்கட்சிகளும் வாய் மூடிக்கிடக்கின்றன” என்றார்.

இந்த அவசர அனுமதி குறித்துக் கோயம்புத்தூர் மாவட்ட வனப் பாதுகாவலர் ராம சுப்பிரமணியனிடம் பேசினோம். “நாங்கள் வெறுமனே அனுமதி கொடுத்து விடவில்லை. ‘இடையூறாக இருக்கும் இரண்டு மூன்று கட்டடங்களை இடிக்க வேண்டும். பழைய சாலையைப் பயன்படுத்தக் கூடாது’ உள்ளிட்ட நிபந்தனைகளோடுதான் அனுமதி கொடுத்துள்ளோம்” என்றவரிடம்,

‘நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசர அவசரமாக அனுமதி வழங்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்டோம்.

“அந்த வழக்குகளுக்கும் வனத்துறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வளவு நாள்களாக இழுத்துக்கொண்டிருக்கும் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவுதானே ஒழிய, ஈஷாவுக்குச் சாதகமான நிலைப்பாடு என்பதெல்லாம் அறவே இல்லை” என்றார் மழுப்பலாக.

இதுகுறித்த ஈஷா மையம் சொல்லும் விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்காக ஈஷா மைய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். “உங்கள் கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள்” என்றார்கள். நாம் உடனே அனுப்பி வைத்தும் அவர்கள் அதற்குப் பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து ஈஷா மையத்தின் சார்பில் ஏதேனும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டால், அதைப் பிரசுரிக்கப் ‘பசுமை விகடன்’ தயாராக உள்ளது.

தற்போது, ‘நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசரமாக அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மீது வெள்ளியங்கிரி மலைவாழ் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நீதிமன்றம், சரியான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.

“விதிகள் மீறப்படவில்லை!”

ஷாவுக்கு அனுமதி அளித்தது குறித்துக் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் பேசியபோது, “எங்களை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கச்சொன்னார்கள். நாங்கள் கொடுத்தோம் அவ்வளவுதான். நாங்கள் ஆய்வு செய்தவரை அங்கு விதிகள் மீறப்படவில்லை.

ஆய்வு செய்தது மட்டும்தான் நாங்கள்; அனுமதி கொடுத்தது மலைதளப் பாதுகாப்பு ஆணையம. நான் இதில் எதுவும் சொல்லக்கூடாது. என் பேட்டியெல்லாம் போட வேண்டாம்” என்றபடி தொடர்பைத் துண்டித்துவிட்டார்.