Published:Updated:

இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்... இது கதிராமங்கலம் சாதனை!

இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்...  இது கதிராமங்கலம் சாதனை!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்... இது கதிராமங்கலம் சாதனை!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்... இது கதிராமங்கலம் சாதனை!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

Published:Updated:
இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்...  இது கதிராமங்கலம் சாதனை!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்... இது கதிராமங்கலம் சாதனை!

முன்பெல்லாம் வாழ்வின் அனைத்துத் தேவைகளும் தற்சார்புடையனவாகவே இருந்தன. வீட்டில் வளர்க்கப்பட்ட மாடுகளின் சாணத்தைக் கொண்டு, வெயில் காலமான சித்திரை மாதத்தில் வறட்டி தட்டிக் காய வைத்துச் சேமித்துக் கொள்வர் நம் முன்னோர். அதைத்தான் ஆண்டு முழுவதும் எரிபொருளாகப் பயன்படுத்துவர். அடுப்பில் கிடைக்கும் சாம்பலை உரக்குழியில் சேமித்து, நிலத்தில் இட்டு மண்ணை வளப்படுத்திக் கொள்வர். இப்படி ஒன்றின் கழிவை இன்னொன்றுக்குப் பயன்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டிருந்தனர். அதாவது, கால்நடைகள் மூலம் மண்ணுக்கு உரமும் கிடைத்தது; சமையலுக்கு எரிபொருளும் கிடைத்தது.  அதன் அடுத்த பரிமாணமாகச் சாண எரிவாயுக் கலன்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து வெளியாகும் கழிவை நிலத்தில் இடுபொருளாகப் பயன்படுத்தினர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்ததனால் இன்று கிராமங்களில்கூட சமையலுக்கு எரிவாயு சிலிண்டர்களைத்தான் பயன் படுத்துகிறார்கள். அதன் காரணமாகத் தான், விளைநிலங்களை அழித்து மீத்தேன் எடுக்கத் துணிகிறது அரசாங்கம்.

இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்...  இது கதிராமங்கலம் சாதனை!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாண எரிவாயு மூலம் சமையலும் எரிவாயுக் கலன் கழிவு மூலம் விவசாயமும் செய்துவரும் முன்னோடி விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். மீத்தேனைத் தேடி விளைநிலங்களைப் பாழாக்க வேண்டாம். கால்நடைக் கழிவுகளிலேயே மீத்தேன் தயாரிக்க முடியும் என்று சொல்கிறார்கள் இவர்கள். அவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துக்குமார்.

இந்த ஆண்டு சம்பாப் பட்டத்தில் பத்து ஏக்கர் பரப்பில் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வெற்றிகரமாக மகசூல் எடுத்திருக்கிறார். சாண எரிவாயுக் கலன் கழிவையே பிரதான இடுபொருளாகப் பயன்படுத்தி, ஏக்கருக்குச் சராசரியாக 28 மூட்டை (60 கிலோ) அளவுக்கு மகசூல் எடுத்துள்ளார்.

ஒரு பகல் பொழுதில் அறுவடையில் முனைப்பாக இருந்த முத்துக்குமாரைச் சந்தித்தோம். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பி.காம் வரைக்கும் படிச்சிருக்கேன். ஆரம்பத்துல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். எங்களுக்கு 12 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல 2 ஏக்கர்ல தென்னை இருக்கு. மீதி 10 ஏக்கர்ல சம்பாப் பட்டத்துல நெல் சாகுபடி செய்றோம். வைகாசி மாசத்துல 5 ஏக்கர்ல உளுந்து சாகுபடி செய்வோம். அதை அறுவடை செஞ்சதும் சணப்பு, தக்கைப்பூண்டு விதைச்சு, சம்பாப் பட்டத்துல நெல் சாகுபடிக்கு நிலத்தைத் தயார் செஞ்சு வெச்சிடுவோம். இங்க ஆற்றுப் பாசனம் இல்லை. போர்வெல்தான் பயன்படுத்துறோம்.

இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்...  இது கதிராமங்கலம் சாதனை!

இது மணல் கலந்த வண்டல்மண் பூமி. எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் நிலத்து மேல நிக்காம உள்ளே இழுத்துக்கும். இதனால நிலத்துல சேறே உருவாகாம இருந்தது. எங்களுக்கு அது பெரிய சவாலா இருந்துச்சு. இதனாலதான் 5 வருஷத்துக்கு முன்னாடி இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். அதுக்கப்புறம் மண் வளமாகி, நுண்ணுயிரிகள் பெருகி மண்ணு மாறுனது மட்டுமில்லாம, லாபகரமான மகசூலும் கிடைக்க ஆரம்பிச்சது” என்ற முத்துக்குமார் தொடர்ந்தார்...

“ஆரம்பத்துல பசுந்தாள் உரப்பயிர்களை விதைச்சு இலைதழைகள், மாட்டு எருனு போட்டுட்டு இருந்தோம். சாண எரிவாயுக் கலன் அமைச்ச பிறகு, அதுல கிடைச்ச கழிவை மட்க வெச்சு, பவுடர் நிலையில பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். 100 கிலோ மட்கு, ஒரு டன் எருவுக்கு நிகரான பலனைக் கொடுக்குது. இதை நிலத்துல போடுறதும் சுலபமா இருக்கு.  இந்தக் கழிவைத் திரவ நிலையில பூச்சிவிரட்டியா பயன்படுத்துறோம். எங்க நிலத்துக்கு அடியுரம் கொடுக்குறதில்ல. அதைக் கொடுத்தா களைகள் மண்டிடும். அதனால, நடவு செஞ்சு பத்து நாள் கழிச்சுதான் இடுபொருள்களைக் கொடுப்போம்” என்ற முத்துக்குமார் சாண எரிவாயுக் கலனைக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

“எங்க குடும்பத்துல 3 பேர் இருக்கோம். விவசாயத் தொழிலாளர் ஒருத்தரையும் சேர்த்து மொத்தம் நாலு பேருக்குத் தேவையான சமையலுக்குச் சாண எரிவாயுவைத்தான் பயன்படுத்துறோம். விவசாய வேலைகள் ஜரூரா நடக்குறப்ப, வெளியிலிருந்து ரெண்டு மூணு பேர் வேலைக்கு வருவாங்க. அவங்களுக்கும் சேர்த்துச் சமையல் செய்யவும் சரியா இருக்கும். தினமும் 25 கிலோவிலிருந்து 30 கிலோ சாணம் கிடைச்சால் போதும், 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு மூணு வேளை சமையலுக்குத் தேவையான எரிவாயு தாராளமா கிடைச்சுடும்.

இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்...  இது கதிராமங்கலம் சாதனை!

எங்ககிட்ட 4 மாடுகள், 4 கன்னுக்குட்டிகள் இருக்கு. தினமும் 50 கிலோவுக்கு மேல சாணம் கிடைக்குது. எல்லாத்தையுமே சாண எரிவாயு கலன்ல போட்டுடுவோம். எங்களோட தேவைக்குச் சரியா இருக்குது. கூடுதலா உற்பத்தியானாலும் கவலையில்லை. இதுல கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுடுமோனு கவலைப்பட வேண்டியதில்லை. ஆபத்தில்லாத எரிவாயு இது” என்று சொன்ன முத்துக்குமார், நிறைவாக நெல் சாகுபடியில் கிடைக்கும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இந்த வருஷம் சம்பாப் பட்டத்துல 1 ஏக்கர்ல சொர்ணமசூரி ரகத்தையும், 9 ஏக்கர்ல ஆத்தூர் கிச்சிலிச் சம்பா ரகத்தையும் சாகுபடி செஞ்சேன். சொர்ணமசூரி ரகத்தில் 27 மூட்டையும் கிச்சிலிச் சம்பாவில் 252 மூட்டையும் மகசூலாகியிருக்கு. இதுல பாதியை நெல்லாவும் மீதியை அரிசியாவும் விற்பனை செஞ்சேன். 27 மூட்டை  சொர்ணமசூரி, 126 மூட்டை கிச்சிலிச் சம்பா சேர்த்து மொத்தம் 153 மூட்டை நெல்லை... ஒரு மூட்டை 1,900 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 2,90,700 ரூபாய் கிடைச்சது.

126 மூட்டை கிச்சிலிச் சம்பா நெல்லை அரிசியாக்குனதுல 4,410 கிலோ அரிசி கிடைச்சது. இதை ஒரு கிலோ 65 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 2,86,650 ரூபாய் கிடைச்சது. அரிசி, நெல் விற்பனையில் மொத்தம் 5,77,350 ரூபாய் கிடைச்சது.

தவிடு, அரிசி குருணை எல்லாத்தையும் விற்பனை செஞ்ச தொகையைச் சேர்த்தா, ஆறு லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சிருக்கு. அதுல செலவெல்லாம் போக நாலு லட்ச ரூபாய் லாபமா நின்னுருக்கு. ஒரு ஏக்கருக்குனு பார்த்தா நாற்பதாயிரம் ரூபாய் லாபமா கிடைச்சிருக்கு” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
முத்துக்குமார்,
செல்போன்: 97914 80116

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பாப் பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்யும் முறை குறித்து முத்துக்குமார் சொல்லிய விஷயங்கள் இங்கே...

ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். சேற்றுழவு செய்து மண்ணைப் புளிக்க வைத்து 15 நாள்கள் கழித்து, நாற்றங்காலைச் சமப்படுத்தி 1 கிலோ விதைநெல்லைத் தூவ வேண்டும். 2 கிலோ கடலைப்பிண்ணாக்குடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில் ஒரு நாள் ஊறவைத்து... இதனுடன் 10 கிலோ சாண எரிவாயு மட்கு, 2 கிலோ வேப்பங்கொட்டைத் தூள் ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் ஊற வைக்க வேண்டும். இக்கலவையை விதைத்த 9-ம் நாள் நாற்றங்காலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். 11-ம் நாள் 5 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் ஜீவாமிர்தம், அரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும்.

ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் தலா 5 கிலோ சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவற்றைக் கலந்து விதைத்து, 45-ம் நாள் மடக்கி உழ வேண்டும். இதில் சேற்றுழவு செய்து 20 நாள்கள் அப்படியே விட வேண்டும். பிறகு 2 சால் உழவு ஓட்டி நிலத்தைச் சமப்படுத்தி, வரிசைக்கு வரிசை 50 சென்டி மீட்டர், குத்துக்குக் குத்து 25 சென்டிமீட்டர் இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த 10-ம் நாள் 150 கிலோ சாண எரிவாயு மட்குடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து புரட்டி, ஒரு நாள் வைத்திருந்து தெளிக்க வேண்டும். 12-ம் நாள் 15 லிட்டர் ஜீவாமிர்தத்தில் 7 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 20-25 நாள்களில் கோனே வீடர் மூலம் களைகளை மண்ணுக்குள் அழுத்தி விட வேண்டும். 40-ம் நாள் 100 கிலோ சாண எரிவாயு மட்குடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து புரட்டி, ஒரு நாள் வைத்திருந்து தெளிக்க வேண்டும். 40-ம் நாள் களையெடுக்க வேண்டும். 45 மற்றும் 55-ம் நாள்களில் 100 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் சாண எரிவாயு கழிவு நீரைக் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 80-90 நாள்களில் கதிர் வரத் தொடங்கும். 110-115 நாள்களில் அறுவடைக்கு வரும். அந்தந்த நெல் ரகங்களின் வயதைப் பொறுத்துக் கதிர் விடும் நாள்கள், அறுவடைக்கான நாள்கள் மாறுபடும்.

சாப்பிடுவதற்கு ஏற்ற ரகங்கள்

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, சொர்ணமசூரி ஆகிய இரண்டு ரகங்களுமே 135 நாள்கள் வயதுடையவை. அனைத்து வகையான மண்ணிலும் இவை விளையும். இரண்டுமே சன்ன ரகங்கள். சோறு சமைக்க உகந்த இந்த ரகங்கள், மருத்துவக் குணம் நிறைந்தவை.

வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பால்

“கலப்பினத்தில் 4 மாடுகள், 4 கன்னுக்குட்டிகள் இருக்கு. பால் மூலம் வருமானம் எதிர்பார்க்கிறதில்ல. அதனால வைக்கோல், தவிடு மட்டும்தான் தீவனமாகக் கொடுக்கிறோம். அடர் தீவனத்துக்குனு செலவு செய்றதில்ல. தினமும் மேய்ச்சலுக்கு விட்டுடுவோம். வாரத்துக்கு ஒரு தடவை களைச்செடிகளை அறுத்துப் பசுந்தீவனமாகக் கொடுப்போம். தினமும் 2 மாடுகள் மூலம் வீட்டுத்தேவைக்காக மூன்றரை லிட்டர் பாலை மட்டும்தான் கறப்போம். மீதியைக் கன்னுக்குட்டிகளுக்குக் குடிக்க விட்டுடுவோம். அதனால, கன்னுக்குட்டிகள் போஷாக்காக வளருது” என்கிறார் முத்துக்குமார்.

சாண எரிவாயுக் கலனுக்கு மானியம்!

இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்...  இது கதிராமங்கலம் சாதனை!சாண எரிவாயுக் கலனுக்கு அரசு வழங்கும் மானியம் குறித்துக் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சாண எரிவாயுக் கலன் தொழில்நுட்ப வல்லுநர் செல்வராஜ் சொன்ன தகவல்கள் இங்கே...

“மத்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தேசியச் சாண எரிவாயு, உர மேலாண்மை திட்டத்தின் கீழ்ச் சாண எரிவாயுக் கலன் அமைக்க 9 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு மூன்று வேளை சமையல் செய்ய 2 மாடுகள் வளர்த்தாலே போதுமானது. தினமும் 25 கிலோ அல்லது 30 கிலோ சாணம் தேவைப்படும். சாண எரிவாயுக் கலன் அமைக்க 100 சதுர அடி இடம் தேவை. இதற்கு மொத்தம் 20 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். இதில் அரசு மானியம் போக 11 ஆயிரம் ரூபாய் விவசாயி செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் அரசு மானியம் கிடைக்கும். அரசு மானியம் தேவைப்படுபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சர்வோதயா சங்கம் ஆகியவற்றை அணுகலாம்.

தொடர்புக்கு, செல்வராஜ், செல்போன்: 94422 49475