Published:Updated:

ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!

ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!
பிரீமியம் ஸ்டோரி
ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!

50 சென்ட்... 8 மாதங்கள்... ரூ 1.4 லட்சம்மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!

50 சென்ட்... 8 மாதங்கள்... ரூ 1.4 லட்சம்மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Published:Updated:
ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!
பிரீமியம் ஸ்டோரி
ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!

றுவல், பொரியல், துவையல், சாப்ஸ், வடை, கட்லெட், மசியல், ரோஸ்ட், சிப்ஸ், குழம்பு... எனப் பலவித சுவையான உணவு வகைகளைச் சேனைக்கிழங்கு கொண்டு சமைக்க முடியும். திருமணம் முதலான நிகழ்வுகளில் படைக்கப்படும் சைவ விருந்துகளில் சேனைக்கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு. உண்பவர்களைச் சுவையில் திளைக்க வைக்கும் சேனைக்கிழங்கு, அதை விளைவிப்பவர்களையும் வருமானத்தில் திளைக்க வைக்கிறது.  ‘தேவையைப் பொறுத்து எப்போது வேண்டுமானாலும் அறுவடை செய்யலாம் என்பதோடு, அறுவடை செய்த கிழங்குகளை நீண்ட நாள்கள் வரை சேமித்து வைக்கலாம்’ என்பதுதான் சேனைக்கிழங்கின் சிறப்புகள். இக்கிழங்குக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதால், பலர் இதை ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதைத் தனிப்பயிராகச் சாகுபடி செய்து வருகிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கனகசபாபதி.

ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுந்தரராஜபுரம் எனும் கிராமத்தில் கனகசபாபதியின் தோட்டம் இருக்கிறது. சேனைக்கிழங்கு அறுவடைப் பணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனகசபாபதியைச் சந்தித்துப் பேசினோம்.

“பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு வேலைக்குப் போனேன். பத்து வருஷம் வேலை பார்த்துட்டு, இப்போ சொந்தமா பிரஸ் வெச்சு நடத்திக்கிட்டு இருக்கேன். விவசாயம் குடும்பத் தொழில்ங்கிறதால அதையும் விடாம செஞ்சிட்டு இருக்கேன். முன்னாடி காய்கறி, சேனைக் கிழங்குனு பயிர் பண்ணிட்டு இருந்தோம். அதுக்கு ரசாயன உரத்த அடியுரமா போடுவோம். பூச்சி தாக்குனா அடுப்புச் சாம்பலைத் தூவி விடுவோம். வேற எதுவும் செய்யமாட்டோம்.  என் மனைவிக்குச் சிகிச்சை எடுக்கிறதுக்காக, நாலு வருஷத்துக்கு முன் ஓர் உளவியல் மருத்துவர்கிட்ட போனோம். அவர்தான் பாரம்பர்ய இயற்கை உணவுகள் பத்தியும் இயற்கை விவசாயம் பத்தியும் சொன்னார். அதோட, இயற்கை விவசாயம் செஞ்சுட்டு இருக்கிற கருப்பசாமியையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். கருப்பசாமி, வானகத்துல நம்மாழ்வார் ஐயாகிட்ட பயிற்சி எடுத்தவர்.

ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!

கருப்பசாமிகிட்டதான், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு, பூச்சிவிரட்டி தயாரிப்பு, பலதானிய விதைப்புனு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். அவர்தான் எனக்குப் ‘பசுமை விகடன்’ புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார். பயிற்சி எடுத்துக்கிட்ட பிறகு, பலதானிய விதைப்பு செஞ்சு நிலத்தை வளப்படுத்தி... காசினி கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, பாலக்கீரைனு 10 கீரை வகைகளைச் சாகுபடி செஞ்சேன். எல்லாமே நல்லா விளைஞ்சது. அடுத்து 20 வகைக் கீரைகளையும் தக்காளியையும் சாகுபடி செஞ்சேன். அதுலேயும் நல்ல மகசூல் கிடைச்சது. அதுக்குப் பிறகு முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். இப்போ நாலு வருஷம் ஆகுது. போன ஆடிப்பட்டத்துல இயற்கை முறையில சேனைக்கிழங்கை நடவு செஞ்சேன். அதுதான் இப்போ அறுவடையாகிட்டு இருக்கு” என்ற கனகசபாபதி, அறுவடை செய்த சேனைக் கிழங்குகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.  “இது மொத்தம் நாலரை ஏக்கர். முழுக்கவே கரிசல் மண்தான். எட்டு வருஷத்துக்கு முன்னாடி அரை ஏக்கர் நிலத்துல தென்னை போட்டேன். அடுத்த அரை ஏக்கர் நிலத்துல அகத்தி, முருங்கையை நட்டிருக்கேன். 60 சென்ட் நிலத்துல சேனைக்கிழங்கு போட்டிருக்கேன். இதுல 10 சென்ட் நிலத்துல விதைக்கிழங்குக்காக விரலிக்கிழங்குகளை நட்டிருக்கேன். மீதி நிலத்தைக் கீரைகள், சிறுதானியங்கள் போடுறதுக்காகத் தயார்ப்படுத்தி வெச்சிருக்கேன். முன்பெல்லாம் ரசாயன உரம் போட்டுதான் சேனை சாகுபடி செஞ்சேன். இந்தமுறை முதல் முறையா இயற்கையில் சேனைக்கிழங்கு சாகுபடி செஞ்சிருக்கேன். நான் எதிர்பார்த்ததைவிட நல்லாவே வந்திருக்கு” என்ற கனகசபாபதி, நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!“பொதுவாவே சேனைக்கிழங்கை நீண்ட நாட்களுக்குச் சேமிச்சு வைக்க முடியும். இயற்கை முறையில் விளைவிச்சா 10 மாசம் வரை வெச்சிருக்கலாம்.  பிறகு நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம். சிவகாசியில் இயற்கை விவசாயிகள் சேர்ந்து நடத்துற ‘தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை’யில் கிழங்கை விற்பனை செய்றேன். ஒவ்வொரு வாரமும் ஞாயித்துக்கிழமை மட்டுமே நடக்கிற இந்தச் சந்தையில நல்ல விலை கிடைக்குது. தேவைக்கேத்தபடி கிழங்குகளை அறுவடை செய்றேன்.

இதுவரை 1,240 கிலோ கிழங்கை அறுவடை செஞ்சிருக்கேன். ஒரு கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலமா 49,600 ரூபாய் வருமானமா கிடைச்சிருக்கு. இன்னும் 2,400 கிலோ வரை கிழங்கு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதையும் அறுவடை செஞ்சு, கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 96 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் 50 சென்ட் நிலத்துல இருந்து 1,45,600 ரூபாய் கிடைச்சுடும். விதைப்பில் இருந்து அறுவடை வரைக்கும் மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதைக் கழிச்சா எப்படியும் 85,600 ரூபாய் லாபமா நிக்கும். அடுத்த முறை விதைப்புக்கு இங்கேயே கிழங்கு கிடைக்கிறதால, அடுத்த போகத்துல இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும்” என்று சொல்லிச் சந்தோஷமாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
கனகசபாபதி,
செல்போன்: 94431 56003

ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு!

ஆடிப் பட்டம் ஏற்றது!

ரை ஏக்கர் நிலத்தில் சேனைக்கிழங்கு சாகுபடி செய்வது குறித்துக் கனகசபாபதி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

சேனைக் கிழங்கு சாகுபடி செய்ய சித்திரை, ஆடிப் பட்டங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். செம்மண், கரிசல் மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் ஏற்றவை. சேனைக்கிழங்கின் வயது 8 முதல் 10 மாதங்கள்.

தேர்வு செய்த அரை ஏக்கர் நிலத்தில், சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காயவிட வேண்டும். ஆனி மாதம் 2 டன் தொழுவுரத்தை நிலத்தில் கொட்டிப் பரப்பி விட வேண்டும். பிறகு உழவு செய்து 15 நாட்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். மறுநாள் 5 அடி அகலம் 8 அடி நீளத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்குள்ளும் ஓர் அடி இடைவெளியில் அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஒரு பாத்தியில் 32 குழிகள் எடுக்கலாம். அரை ஏக்கர் பரப்பில் ஊன்ற 600 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும். ஒரு முழு விதைக்கிழங்கை நான்கு, ஆறு, எட்டு என எத்தனை துண்டுகளாக வேண்டுமானாலும் வெட்டி நடவு செய்யலாம். ஆனால், வெட்டும்போது கிழங்கின் நடுப்பகுதியில் உள்ள முளைப்புப் பகுதி, அனைத்துத் துண்டுகளிலும் இருக்குமாறு பார்த்து வெட்ட வேண்டும். முளைப்புப்பகுதி இல்லாவிட்டால் முளைக்காது.

பிறகு ஒரு குழிக்கு ஒரு துண்டு கிழங்கு வீதம் ஊன்ற வேண்டும். ஊன்றும் கிழங்கு விரலிக்கிழங்காக இருந்தால், குழிக்கு இரண்டு கிழங்காக ஊன்ற வேண்டும். விதைத்த அன்று தண்ணீர் கொடுக்க வேண்டும். சேனைச் சாகுபடிக்கு நிலம் எப்போதுமே ஈரப்பதமாக இருக்க வேண்டும். ஆனால், நிலத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது. அதிகமாகத் தண்ணீர் தேங்கினால் கிழங்கு அழுகிவிடும். தண்ணீர் கட்டுவதைவிட வடிப்பதுதான் முக்கியம்.

கிழங்கு ஊன்றிய அடுத்த நாள்... நாட்டுச்சோளம், நாட்டுக்கம்பு, தினை, குதிரைவாலி, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, துவரை, எள், நிலக்கடலை, ஆமணக்கு, சூரியகாந்தி, மல்லி, கடுகு, வெந்தயம், சோம்பு, தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி, கானம் ஆகியவற்றைக் கலந்து விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையிலும் 1 கிலோ அளவு என மொத்தம் 20 கிலோ விதைகளைக் கலந்து பரவலாகத் தூவி, தண்ணீர் விட வேண்டும். இவற்றில் பூவெடுக்கும் சமயத்தில் அறுத்து, அந்தந்த இடத்திலேயே போட்டுவிட வேண்டும். இவை, நிலத்துக்கு மூடாக்காகவும் அடியுரமாகவும் இருந்து மண்ணை வளப்படுத்தும். களைகளும் கட்டுப்படுத்தப்படும்.

விதைத்த 40 நாள்களுக்குப்பின் சேனைக்கிழங்கு கூம்பு வடிவில் முளைவிட்டு வெளியில் வரும். விதைத்த 120-ம் நாளுக்கு மேல் தளிர் (பக்கத்தண்டு) வரும். அந்த நேரத்தில் களையெடுத்து மண் அணைக்க வேண்டும். மண் அணைத்த மறுநாள் 40 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 500 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 100 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் ஒரு கைப்பிடியளவு வைக்க வேண்டும். தொடர்ந்து அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். விதைத்த 180-ம் நாளுக்கு மேல் மூன்றாவது தளிர் வரும். விதைத்த 7-ம் மாத இறுதியில் தண்டுகள் காய ஆரம்பிக்கும். விதைத்த 8-ம் மாதம் தண்டுகள் முழுவதும் காய்ந்து வளைந்துவிடும். இப்படித் தண்டுகள் பழுத்துத் தானாக மடங்கினால் கிழங்கு அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் நோய்கள், பூச்சிகள் தாக்குவதில்லை. 8-ம் மாதத்திலிருந்து தேவையைப் பொறுத்து அறுவடை செய்யலாம்.

விரலிக்கிழங்கே விதைக்கிழங்கு!

“அறுவடை செய்த சேனைக் கிழங்கிலிருந்து தனியாக நீட்டிக் கொண்டிருக்கும் சின்னக் கிழங்குதான் விரலிக்கிழங்கு. இதைத் தனியே எடுத்துச் சேகரித்து வைத்து, விதைக்கிழங்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை சேனைக்கிழங்கு ஊன்றும்போதும் தனியாகக் குறைந்த இடத்துல இந்த கிழங்கைச் சாகுபடி செய்துவந்தால், அடுத்த முறைக்கான விதைக்கிழங்காக இதையே பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் விதைக்கிழங்குச் செலவு மிச்சமாகும். மேலும், நாமே விதைக்கிழங்கை உற்பத்தி செய்யும்போது தரமாகவும் மண்ணின் தன்மைக்கு ஏற்றதாகவும் இருக்கும். வெளியில் வாங்கி நடவு செய்தால், முளைப்புத்திறனைத் தெரிந்துகொள்ளவே பல நாள்கள் ஆகும்” என்கிறார் கனகசபாபதி.