Published:Updated:

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!
பிரீமியம் ஸ்டோரி
நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

அறிவிப்புஜி.பழனிச்சாமி - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

அறிவிப்புஜி.பழனிச்சாமி - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

Published:Updated:
நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!
பிரீமியம் ஸ்டோரி
நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

‘கேரளா மாநிலத்தில் இருப்பதுபோல தென்னை மரங்களிலிருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என்பது தமிழகத் தென்னை விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. சமீபத்தில் அதை நிறைவேற்றியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நீரா சம்பந்தமாகக் கேள்வி எழுப்பியபோது, ‘நீரா பருகினால் இளமை திரும்பும் அந்த அளவுக்கு அதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன’ என்று பதிலளித்தார் முதலமைச்சர் பழனிசாமி.

முதலமைச்சர் இவ்வளவு பெருமையாகக் குறிப்பிடும் நீராவால் விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா என்பது குறித்துச் சில விவசாயப் பிரதிநிதிகளிடம் பேசினோம்.

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புஉணர்வு இயக்க மாநிலத்தலைவர் டி.வேலாயுதம், “நீரா என்பது தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் ஒரு வகை பானம். ஏற்கெனவே தென்னை மரங்களின் பாளையில் இருந்து பதநீர் மற்றும் கள் ஆகிய பானங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் கள் இறக்கத் தடை உள்ளதால் தென்னை மரங்களில் பதநீர் மட்டும் இறக்கப்படுகிறது. பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி, சர்க்கரை தயாரிக்கப்படுகின்றன.

சீவப்பட்ட தென்னம் பாளைகளிலிருந்து வடியும் திரவத்தை, உள்பக்கம் சுண்ணாம்பு பூசப்பட்ட மண் கலயங்களில் சேகரித்தால் அது பதநீர். சுண்ணாம்பு பூசப்படாமல் சேகரித்தால் அது கள். ஆனால், அதே திரவத்தைக் குளிர் நிலையில் உள்ள பிரத்யேகமான கலனில் பிடித்துக் குளிர் நிலையிலேயே பாதுகாத்து வைக்கப்படும் திரவம்தான் நீரா. இது எப்போதும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே இருக்க வேண்டும். இல்லாவிடில் அது கள்ளாக மாறிவிடும்.

தென்னம் பாளைகளிலிருந்து வடியும் நீராவை மாசுபடாமல் நன்கு சுத்தமாகச் சேகரிக்கக்கூடிய கருவியை, கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் இயங்கிவரும் மத்தியத் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் வடிவமைத்துள்ளது. பனிக்கட்டி பெட்டியினுள் வைக்கப்பட்டுள்ள கலயத்தில் நீரா சேகரிக்கப்படுவதால் அந்த நீரா நொதிப்பதில்லை; கள்ளாக மாறுவதுமில்லை. அதை நேரடியாகப் பருகலாம். மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி விற்பனையும் செய்யலாம்.

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

நன்கு பராமரிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிலிருந்து நாள் ஒன்றுக்குச் சராசரியாக 2 லிட்டர் நீரா இறக்க முடியும். ஒரு பாளையில் இருந்து 30 முதல் 40 நாள்கள் வரைதான் நீரா வடியும். பிறகு, அடுத்த பாளையைத் தயார் செய்து அதில் கலனைப் பொருத்தலாம். இவ்வாறாகத் தென்னை மரத்தில் உள்ள மூன்று பாளைகள் மூலம் 6 மாதங்கள் வரை நீரா இறக்க முடியும். நீரா, எளிதில் புளித்துவிட கூடியது. அதனால், இதைப் புளிக்காமல் பாதுகாக்கப் பல தொழில்நுட்பங்கள் பயன்ப டுத்தப்படுகின்றன. அவற்றில் பரவலாகப் பயன்படுத்துவது ‘பாஸ்டர்’ எனும் முறை. நிசின் என்னும் வேதிப்பொருளும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மையசுழற்சி முறையில் நீராவில் மிதக்கும் மாசுப்பொருள்களை நீக்கி, நுண்ணுயிரிகளை அழிக்க வேண்டும். பிறகு, நீராவைப் பதப்படுத்திக் குளிரூட்டம் செய்யப்பட்ட பெட்டிகளில் அடைத்து, ஓர் ஆண்டு வரை சேமித்து வைக்க முடியும். பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக இது பார்க்கப்படுவதால், கேரளாவில் நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பு இதற்குக் கிடைத்துள்ளது. ஏற்றுமதித் தரம் வாய்ந்த ‘நீரா சர்க்கரை’ ஒரு கிலோ 750 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

நன்கு பராமரிக்கப்பட்ட வீரிய ரகத் தென்னை மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 140 முதல் 200 தேங்காய்கள் வரை அறுவடை செய்ய முடியும். இதன்மூலம் ஆண்டு வருமானமாகக் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் கிடைக்கும். ஆனால், நீரா இறக்கி விற்பனை செய்யும்போது மாதம் 1,500 ரூபாய் வீதம் 6 மாதங்களில் 9 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும். அழிந்துவரும் தென்னை விவசாயத்தைக் காப்பாற்றவும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கிடைத்துள்ள வரப்பிரசாதம்தான் நீரா.

இதன் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகிய மூன்றையும் விவசாயிகளே நேரடியாகச் செய்யும் விதத்தில் திட்டங்கள் கொண்டு வர வேண்டும்” என்றார்.

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி, “நீரா ஊட்டச்சத்து மிக்க பானம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், தென்னை மரங்களிலிருந்து மட்டும்தான் நீரா இறக்க முடியும் என்பதுபோல ஒரு மாயத்தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள். இது தவறு. தென்னை மரங்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில்தான் அதிகளவில் இருக்கின்றன. ஆனால், பனை மரங்கள் மாநிலம் முழுவதும் உள்ளன. தென் மாவட்ட மக்கள் பலரின் ஜீவாதாரமே பனைதான். எனவே, நீரா பட்டியலில் பனை மரங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்ய உள்ள தடையையும் நீக்க வேண்டும். கேரளாவில் கள் உள்ளது. பீகாரில் மதுவிலக்கு உண்டு. ஆனால், கள்ளுக்குத் தடையில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும். தென்னை, பனை விவசாயிகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க இது அவசியம்.

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

தென்னை மரங்களிலிருந்து நீரா இறக்குவது, தொடர்ந்து அதைக் குளிரூட்டும் மையங்களுக்குக் கொண்டு செல்வது, எப்போதும் அதை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே வைத்திருப்பது என்பதெல்லாம் நிறைய செலவு பிடிக்கும் வேலைகள். இந்தத் தொழில்நுட்பத்தைத் தனி ஒரு விவசாயி மேற்கொள்ள முடியாது. எனவே, நீராவுக்கு அனுமதி என்கிற அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், அதை இறக்கிப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்களைத் தென்னை விவசாயிகள் அறிந்து கொள்ளும்படி பயிற்சிகள் கொடுக்க வேண்டியது அவசியம். மேலும் அரசே நீராவைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையான பலன்கள் விவசாயிகளைச் சென்றடையும்” என்றார்.

தென்னை மரங்களிலிருந்து நீரா இறக்கி விற்பனை செய்து வருகிறார் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முதலமடை கிராமத்தில் வசிக்கும் தென்னை விவசாயி முத்து. அவரிடம் நீரா குறித்துப் பேசினோம்.

“பாலக்காடு உழவர் உற்பத்தியாளர் கம்பெனி என்கிற விவசாயிகள் கூட்டமைப்புதான் தென்னை விவசாயிகள் இறக்கும் நீராவைக் கொள்முதல் செய்கிறது. இதைப் பதப்படுத்திப் புட்டியில் அடைத்து விற்பனை செய்யும் வேலையையும் மேற்கொண்டு வருகிறது. இதேபோல் கேரளா முழுவதும் பல நிறுவனங்கள் நீரா விற்பனையைக் கையில் எடுத்துள்ளன. அதிக மழை பொழியும் மாநிலமான கேரளத்தில் நீரா விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. அதன் மருத்துவக் குணங்களைச் சுட்டிக்காட்டி மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையைத் துரிதப்படுத்தி வருகிறது கேரள அரசு.

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

நீராவைக் காய்ச்சித் தயாரிக்கப்படும் சர்க்கரையின் விலை அதிகம் என்பதால் சராசரி மக்களிடம் அது போனியாகவில்லை. வசதி வாய்ப்புள்ள சிலர், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். பனிக்கட்டி, குளிர்பதனப் பெட்டி, புதிதாக வடிவமைக்கப்பட்ட சேகரிப்புக் கலயம் போன்ற நீரா இறக்கத் தேவையான உபகரணங்களை விவசாயிகளே காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை உள்ளது. அந்தச் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், நீரா இறக்கும் தொழில்நுட்பம் தெரிந்த ஆட்களால்தான் தென்னை மரங்களில் ஏறி அதை இறக்க முடியும். கேரளாவில் அதற்கான மரம் ஏறிகள் உள்ளனர். கேரளாவில் பள்ளி, கல்லூரிகளில் நீராவின் நன்மைகள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அதனால், கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை அதிகரித்து வருகிறது” என்றார்.

‘நீரா விஷயத்தில் எச்சரிக்கை தேவை’ என்று குரல் கொடுத்து வரும் விவசாயிகள் முறையீட்டுக் கூட்ட உறுப்பினர் ராமனாதன், “தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள், நீராவைத் தென்னை விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள பொன் முட்டையிடும் வாத்து என்கிற அளவுக்குப் பேசி வருகிறார்கள். உண்மையில் கேரளா சமாசாரம் வேறு. அதிக மழைப்பொழிவும் நீர்வளமும் உள்ள கேரளாவில், ஒரு தென்னை மரத்திலிருந்து ஒரு நாளைக்கு 5 லிட்டர் நீரா கூடக் கிடைக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியல்ல. இது வறட்சியான பகுதி. தினமும் 120 லிட்டர் தண்ணீர் பாசனம் செய்து வளர்க்கப்படும் தென்னையிலேயே, ஒரு நாளைக்கு 2 லிட்டர் அளவுதான் நீரா கிடைக்கும். தவிர நீராவைப் பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டிகள், உபகரணங்கள் போன்றவை தடையில்லாமல் இயங்க, தடைபடாமல் மின்சாரம் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இவையெல்லாம் சாத்தியமா என்று யோசிக்க வேண்டும். அதனால் தீர ஆராய வேண்டியது அவசியம்.

தமிழக அரசு, வெறுமனே நீரா குறித்துப் பெருமையடித்துக் கொண்டு இருக்காமல்... நீரா இறக்கி விற்பனை செய்வதற்கான வழிமுறைகளைத் தெளிவுபடுத்தும் வேலைகளைச் செய்ய வேண்டும்” என்றார்.

எப்படி இருந்தாலும் சரி... நலிந்துவரும் தென்னை விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் மருந்தாக நீரா இருந்தால் சரிதான்.

தேவை சட்டத்திருத்தம்

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!நீரா குறித்து மத்தியத் தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல துணை இயக்குநர் பாலசுதாகரியிடம் பேசினோம். “1937-ம் ஆண்டில், ஆங்கிலேய அரசு கொண்டு வந்த மதுவிலக்குச் சட்டம் 11 மற்றும் 19-ம் பிரிவுகளில் ‘கள்’ என்கிற  போதைப்பொருள் பட்டியலில் நீரா சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலிலிருந்து நீரா நீக்கப்பட வேண்டும். அதற்கான சட்டத்திருத்தம் வரையறுக்கப்பட்டு, அது சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஏகமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் நீரா சம்பந்தமாக முதலமைச்சர் கொடுத்த அனுமதி நடைமுறைக்கு வரும். நடைபெறும் கூட்டத்தொடரில் நீராவைக் கள் என்கிற பட்டியலிலிருந்து நீக்க, சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்றார்.

அரசு நிறுவனம்தான் விற்பனை செய்யும்!

நீரா... இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் நீரா குறித்துப் பேசினோம். “தமிழ்நாட்டில் விரைவில் நீரா இறக்கப்படும். அதற்கான விதிமுறைகளை வகுக்கும் வேலைகள் முதலமைச்சர் பழனிசாமியின் கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றன. எந்த ஒரு நிறுவனத்துக்கும் தனியார் அமைப்புக்கும் நீரா இறக்கி விற்பனை செய்யும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. அரசு சார்ந்த நிறுவனம்தான் அப்பணியை மேற்கொள்ளும்” என்றார்.