Published:Updated:

சிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்!

சிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்!
பிரீமியம் ஸ்டோரி
சிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

சிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
சிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்!
பிரீமியம் ஸ்டோரி
சிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்!

மிழகத்தில் இலவச விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள் லட்சக்கணக்கான விவசாயிகள். இந்த நிலையில், பணம் செலுத்தி மின் இணைப்பு பெறும் வகையில் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

‘ஐந்து குதிரைத் திறனுள்ள மின் மோட்டார் வைத்திருப்பவர்கள் 2,50,000 ரூபாய்; ஏழு குதிரைத் திறனுள்ள மின் மோட்டார் வைத்திருப்பவர்கள் 2,75,000 ரூபாய்; பத்து குதிரைத் திறனுள்ள மின் மோட்டார் வைத்திருப்பவர்கள் 3 லட்சம் ரூபாய் எனச் செலுத்தினால் 6 மாதங்களுக்குள் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் விவசாயிகள் பலன் அடைவார்கள்’ எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ‘பணம் செலுத்தினால்தான் மின் இணைப்பு கிடைக்கும்’ என்ற சூழல் உருவாகியிருப்பதால் இலவச மின்சாரம் கிடைக்கும் எனக் காத்திருந்த விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.

சிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்!

இதுகுறித்துப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன், “வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள் விவசாயிகள். இவர்களது பரிதாப நிலை தமிழக ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் ‘தட்கல்’ என்ற பெயரில் ஓர் அபத்தமான சிறப்புத்திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாய மின் இணைப்புக்காக லட்சக்கணக்கில் பணம் செலுத்துவதென்பது விவசாயிகளால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. அந்தளவுக்கு அவர்களது நிலை மோசமாக உள்ளது. தட்கல் திட்டத்தால் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பண முதலைகள்தான் பலன் அடைவார்கள். முக்கியமாக, பினாமி பெயரில் விவசாய நிலம் வாங்கி வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பணம் செலுத்தி விவசாய மின் இணைப்பைப் பெறப் போகிறார்கள்.

தட்கல் திட்டம் என்பது உண்மையாகவே விவசாயிகளுக்கு விரோதமானது. கடந்த 15 ஆண்டுகளாகச் சுமார் 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். ‘போர்வெல் அமைத்து, மின் மோட்டாருடன் தயார் நிலையில் உள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்’ எனக் கடந்த காலங்களில் தமிழக அரசு சொன்னது. இதை நம்பி ஒவ்வொரு விவசாயியும் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் செலவு செய்து போர்வெல் அமைத்து அதில் மோட்டார் பொருத்திவிட்டுக் காத்துக்கிடக்கிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில், அவர்கள் அமைத்த ஆழ்துளைக் கிணறுகள்கூட தூர்ந்து போயிருக்கும். மின் மோட்டார்களின் வாரன்ட்டி காலம் முடிந்து போயிருக்கும். இன்னமும் மின் இணைப்பு கிடைக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

ஏற்கெனவே சாதாரண பதிவு மற்றும் 10 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி இணைப்பு பெறும் சுயநிதி திட்டப் பதிவு ஆகியவற்றில் காத்திருக்கும் விவசாயிகளுக்குத்தான் நியாயமாக மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், அதை விடுத்து லட்சக்கணக்கில் பணம் செலுத்தினால் மின் இணைப்பு கிடைக்கும் என்று அறிவித்திருப்பது ஏமாற்று வேலையாகும்.

சிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்!

2004-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவியபோது, நூறே நாள்களில் 10,700 விவசாய மின் இணைப்புகள் வழங்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அவரின் பெயரால் ஆட்சி செய்யும் தற்போதைய ஆட்சியாளர்கள், அவரது கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுள்ளனர். ‘மின்மிகு மாநிலம், மின் உபரி மாநிலம்’ எனப் பெருமை அடித்துக் கொள்ளும் தற்போதைய ஆட்சியாளர்கள் 31 மாவட்டங்களுக்கு 10 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இது மிகவும் குறைவான எண்ணிக்கை. மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் மின் இணைப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தட்கல் திட்டத்தைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
 
“தட்கல் திட்டம் என்பது ஒரு கண்துடைப்புத் திட்டமாகும். விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம் எனக் காட்டிக் கொள்வதற்காகவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்கான இலவச மின்சாரத்துக்காகத் தமிழக அரசு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 1 குதிரைத் திறனுக்கு ஆண்டுக்கு 2,875 ரூபாய் வீதம் பணம் செலுத்துகிறது. தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறும் விவசாயிகளிடமிருந்து இந்தத் தொகையானது மறைமுகமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு குதிரைத் திறனுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கப்படுகிறது. இதை வங்கியில் முதலீடு செய்தால் 4.5 சதவிகிதம் வட்டி என்ற அடிப்படையில் 2,875 ரூபாய் பணம் கிடைத்துவிடும். இலவச மின்சாரம் எனப் பெயரளவில் சொல்லப்பட்டாலும், இது கட்டண மின்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும். இது விவசாயிகளுக்கான அரசு எனத் தமிழக ஆட்சியாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல” என்று குற்றம் சாட்டுகிறார் தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சா.காந்தி.

“கடந்த நான்கு ஆண்டுகளாகவே விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கப்படவே இல்லை. ஆண்டுக்கு 11,500 மில்லியன் யூனிட்தான் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நிரந்தரமாக, நீண்டகாலத்துக்கும் பலன் அளிக்கக்கூடிய சூரிய மின்சக்தித் திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயப் பம்ப்செட்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தியில் இயங்க வைக்க வேண்டும். இதனால் விவசாயிகள் மின்சாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது. ஓர் இடத்தில் மின்சாரத்தை உற்பத்திசெய்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு எடுத்துச்சென்று பயன்படுத்துவதால்தான் ஏராளமான மின் இழப்பு ஏற்படுகிறது. மின் கம்பிகள் உள்ளிட்டவற்றுக்கும் நிறைய செலவு செய்யவேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள விவசாய மின்மோட்டார்களுக்கு 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட மின் நிலையம் தேவைப்படுகிறது. இதில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் முடக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 20 லட்சம் விவசாயப் பம்ப்செட்டுகள் உள்ளன. ஆண்டுக்கு 5 லட்சம் பம்ப்செட்டுகள் வீதம் சோலார் சிஷ்டத்துக்கு மாற்றினால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அனைத்தையும் மாற்றிவிடலாம். இதனால் மின் உற்பத்தி மற்றும் நிலக்கரியின் தேவை பெருமளவு குறையும். காலதாமதம் செய்யாமல் போர்க்கால அடிப்படையில் இதனை நிறைவேற்றினால்தான் ஓரளவுக்காவது விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க முடியும்” என்றார்.

தங்கள் வாழ்வில் நிரந்தரமாக ஒளி ஏற்றுவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசு நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.