Published:Updated:

ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!

ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!

மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!

மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Published:Updated:
ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!

ற்போது விவசாயிகளுக்கு முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை தண்ணீர் பற்றாக்குறைதான். மழை பொய்த்துப் போனதால் நீர்நிலைகள் அனைத்தும் வற்றிய நிலையில், நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. அதனால், விவசாய நிலங்களிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளும் வற்றிப் போய், விவசாயமே கேள்விக்குறியாகி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் குறைவான தண்ணீரிலேயே நன்கு விளையும் பயிர்களைச் சாகுபடி செய்த விவசாயிகள் ஓரளவுக்கு லாபம் எடுத்து வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஜெயரட்சகன்.

குறைவான தண்ணீர் மற்றும் குறைவான பராமரிப்பிலேயே நிறைவான லாபம் தரும் கொய்யாவைச் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார் இவர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்கனாபுரம் கிராமத்தில் இருக்கிறது இவரது கொய்யாத்தோப்பு. ஒரு காலை வேளையில் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்த ஜெயரட்சகனைச் சந்தித்தோம்.

ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!

“தாத்தா காலத்துல இருந்தே விவசாயம் செய்றோம். மக்காச்சோளம், நெல், நிலக்கடலை, கரும்புனு எல்லா பயிர்களையும் சாகுபடி செய்றோம். இந்த வட்டாரத்திலேயே முதன்முதல்ல கரும்பு நட்டது எங்க அப்பாதான். எட்டாவது படிக்கும்போது கால்ல வலி வந்து சிகிச்சை எடுத்துக்க ஆரம்பிச்சதுல, ரெண்டு வருஷம் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியல. அதுக்கப்புறம் அப்படியே வீட்டுலேயே இருந்துட்டேன். பதினேழு வயசுல அப்பா கூட விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இப்போ எனக்கு எழுபத்தியொரு வயசாகுது. இன்னமும் விவசாயம் செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.

ஆரம்பத்துல குப்பையைப் போட்டுத்தான் விவசாயம் செய்வோம். பசுமைப்புரட்சி வந்த பிறகு எல்லோரையும்போல நாங்களும் ரசாயன உரம் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அப்பா பண்ணுனதையே நானும் தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சேன். அதிகமா ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லியையும் உபயோகப்படுத்துனதுல செலவுதான் அதிகரிச்சது. ஒரு கட்டத்துல மகசூலும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.

1970-ம் வருஷம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்த சிதம்பர சுவாமிகள் கலந்துகிட்ட ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். அப்போ அவர் ‘உரம் போடக் கூடாது, உரம் போட்டா மண் மலடாயிடும். அடியுரமா மாட்டுச்சாணம் போட்டாப்போதும். பூச்சிகள் தாக்கினா பசுமாட்டு மூத்திரத்துல சிறியாநங்கை இலையை இடிச்சு ஊறப்போட்டு, அதுல தண்ணீர் கலந்து தெளிச்சாப்போதும்’னு சொன்னார். அதை நான் செஞ்சு பார்த்தப்போது நல்ல பலன் கிடைச்சது. ஆனாலும், பல வருஷமா ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் உபயோகப்படுத்திப் பழக்கப்பட்டதால உடனடியா இயற்கைக்கு அப்ப மாற முடியல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!

பத்து வருஷத்துக்கு முன்னாடி எங்க லயன்ஸ் கிளப் சார்பா ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் ஐயாவை அழைச்சுட்டு வந்து இயற்கை விவசாயம் சம்பந்தமா ஒரு கூட்டம் நடத்தினோம். அப்போ அவர், ‘விஷத்தை விளைவிக்கவும் கூடாது. விளைவிச்சு விற்பனை செய்யவும் கூடாது. இனிமேலும் இயற்கை விவசாயத்துக்கு மாறலைனா ரொம்பக் கஷ்டம். முன்னோடி விவசாயிகளா இருக்கிற நீங்களெல்லாம் இயற்கை விவசாயம் செஞ்சாத்தான் மற்ற விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவாங்க’னு சொன்னார். அதுக்கப்புறம்தான், ‘இயற்கைக்கு மாறணும்’னு முடிவெடுத்தேன்.

அதுவரை ரசாயன உரம் போட்டுட்டு வந்த கொய்யா மரங்களுக்குத் தொழுவுரம், மண்புழு உரம், வேப்பம்பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்குனு போட ஆரம்பிச்சேன். மகசூல் குறைவில்லாமக் கிடைக்க ஆரம்பிக்கவும் இந்த நாலு வருஷமா தென்னை, நெல்லுனு எல்லாத்தையும் இயற்கை முறையிலதான் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்” என்று முன்கதை சொன்ன ஜெயரட்சகன் தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே பேச ஆரம்பித்தார்...

“மொத்தம் 20 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 15 ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. தென்னை நட்டு 25 வருஷம் ஆச்சு. ஆரம்பத்துல அதிகளவு ரசாயன உரம் போட்டு வளர்த்ததால, இப்போ தண்ணி அதிகமாகத் தேவைப்படுது. அதோட தேவைக்கேத்த அளவு தண்ணி கொடுக்க முடியல. அதனால, காய்ப்பு சொல்லிக்கிற மாதிரி இல்ல. அரை ஏக்கர் நிலத்துல சப்போட்டா இருக்கு. இதை நட்டு ஒன்றரை வருஷம்தான் ஆகுது. இன்னும் காய்ப்புக்கு வரல. ரெண்டு ஏக்கர் நிலத்துல தேக்கு, சவுக்குனு மரப்பயிர்கள் இருக்கு. தண்ணி வசதியைப் பொறுத்து ஒரு ஏக்கர் நிலத்துல கறுப்புக்கவுனி, குள்ளக்கார்னு பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். ஒன்றரை ஏக்கர் நிலத்துல கொய்யா (லக்னோ-49) இருக்கு.

ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!

இப்போதைக்கு கொய்யா மட்டும்தான் வருமானம் கொடுத்திட்டு இருக்கு. அதுவும் இயற்கைக்கு மாறினதும் நல்லாவே விளையுது. வறட்சிக் காலத்துல கொஞ்சமா தண்ணி கொடுத்தாலும் காய்ப்புல குறை வைக்கிறதில்ல. அதனால எனக்குப் பிடிச்ச பயிரா இருக்குது கொய்யா” என்ற ஜெயரட்சகன், கொய்யா மூலம் கிடைக்கும் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு வயசாகிட்டதால சந்தைக்கு எல்லாம் அலைய முடியறதில்ல. பிள்ளைகளும் வெளியூர்ல இருக்காங்க. அதனால, பழ வியாபாரம் செய்ற முத்துலெட்சுமிகிட்டதான் அவ்வளவு பழத்தையும் விற்பனை செய்றேன். பறிச்ச கொய்யாவைத் தோட்டத்திலேயே எடை போட்டு, ஒரு கிலோ கொய்யாவுக்கு 27 ரூபாய்னு விலை கொடுத்து எடுத்துக்குறாங்க. அறுவடை செஞ்சதும் எனக்கு அலைச்சல் இல்லாம உடனே பணமாகிடுது. ஒன்றரை ஏக்கர் நிலத்துல 180 கொய்யா மரங்கள் இருக்கு. ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 90 கிலோவுக்குக் குறையாம கொய்யா கிடைக்குது. அந்தக் கணக்குபடி மொத்தம் 180 மரங்கள்ல இருந்து குறைஞ்சபட்சம் 16,200 கிலோ கொய்யா கிடைச்சுடும். ஒரு கிலோ 27 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா, வருஷத்துக்குக் குறைஞ்சபட்சம் 4,37,400 ரூபாய் வருமானம் கிடைச்சிடும். இடுபொருள், பறிப்புக்கூலி எல்லாத்துக்கும் சேர்த்து 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். அதைக்கழிச்சா மீதியெல்லாம் லாபம்தான்” என்ற ஜெயரட்சகன் நிறைவாக,

“இப்போ இருக்கிற நிலைமையில பராமரிப்புச் செலவும் தண்ணீர் தேவையும் குறைவா இருக்குற பயிர்களைச் சாகுபடி செஞ்சாதான் விவசாயி பிழைக்க முடியும். அந்தப் பயிருக்குச் சந்தையில விலையும் கிடைக்கணும். அது ரொம்ப முக்கியம். அந்த வகையில எனக்கு ஏத்த பயிரா இருக்குறது கொய்யாதான். கொய்யாவுக்கு எப்பவுமே தேவை இருக்கிறதால, விற்பனைக்குப் பிரச்னையேயில்லை. இயற்கை முறையில் கொய்யாச் சாகுபடி செஞ்சா தண்ணீர்த் தேவையும் குறையுறதோட லாபமும் அதிகமாகுது” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
ஜெயரட்சகன்,
செல்போன்: 94435 68169.

ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

கொய்யாச் சாகுபடி செய்வது குறித்து ஜெயரட்சகன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

லக்னோ-49 ரகக் கொய்யாவை வெயில் கொளுத்தும் பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களைத் தவிர்த்து, மற்ற மாதங்களில் நடவு செய்யலாம். என் அனுபவத்தில் ஆவணி, புரட்டாசி, தை, மாசி ஆகிய பட்டங்கள் நடவுக்கு ஏற்றவை. இவை மழைக்குப் பிந்தைய மாதங்கள் என்பதால் இப்பட்டங்களில் நடவு செய்யும்போது வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் கொய்யாவுக்கு ஏற்றவை.

தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது 18 அடி இடைவெளியில் 2 அடி சதுரம், 2 அடி ஆழத்துக்குக் குழிகள் எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 130 குழிகள் வரை எடுக்கலாம். குழிகளை ஒரு மாதம் ஆற விட வேண்டும். அதற்குள் குழிகளுக்கு அருகில் சொட்டுவான் இருக்குமாறு சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழிக்குள்ளும் ஒரு கூடை கண்மாய் வண்டல்மண், ஒரு கூடை மட்கிய மாட்டுச்சாணம், சிறிதளவு நிலத்து மண் ஆகியவற்றைக் கலந்து போட்டுத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மறுநாள் கன்று நடவு செய்து மேல் மண் கொண்டு குழியை நிரப்பித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 10 முதல் 12 நாள்கள் வரை மண்ணில் மிதமான ஈரப்பதம் இருக்கும்படி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எப்போதும் மண் சற்று ஈரமாக இருக்கும் வகையில் தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. கண்டிப்பாக நிலத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது.

ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!

நடவு செய்ததிலிருந்து 5 மாதங்கள் வரை தண்ணீர் மட்டும் பாய்ச்சினால் போதுமானது. வேறு ஊட்டங்கள் தேவையில்லை. நடவு செய்த 6-ம் மாதம் களை எடுத்து, ஒவ்வொரு கன்றைச் சுற்றியும் அரைக் கூடை அளவு மட்கிய சாணத்தைப் போட்டு, மண்ணைக் கிளறிவிட வேண்டும். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்கிய சாணத்தை இட்டு வர வேண்டும். செடிகள் செழிப்பாக இல்லையென்றால்... 1 டிராக்டர் எருவுக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 லிட்டர் இ.எம் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து ஒரு வாரம் வைத்திருந்து கன்றுகளுக்குக் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நடவு செய்த 7, 8, 9 மற்றும் 10-ம் மாதங்களில் பத்து லிட்டர் தண்ணீரில் 300 மில்லி அமுதக்கரைசல், 150 மில்லி பஞ்சகவ்யா, 50 மில்லி இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்து ஓர் ஆண்டு ஆன பிறகு, மாதம் இருமுறை இதே விகிதத்தில் இக்கரைசல்களைக் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகு, ஒவ்வொரு முறை இடுபொருள் கொடுக்கும்போதும் 50 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 10 கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அனைத்துக் கன்றுகளுக்கும் வைக்க வேண்டும். வெயில் காலத்தில் கொய்யாவின் இலைக்காம்புகளிலும் இலைக்கு அடியிலும் வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சிகள் தாக்கக்கூடும். அப்படித் தாக்கினால 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து முழுத் தாவரமும் நனையும்படித் தெளிக்க வேண்டும்.

நடவு செய்த 2 ஆண்டுகள் வரை அரும்புகள், பூக்களைக் கிள்ளிவிட்டுவிட வேண்டும். அதற்கு மேல் பிஞ்சு பிடிக்கவிடலாம். பூ பூத்ததிலிருந்து 3 மாதங்களில் காய் பறிக்கலாம். அதிக வெயில் இருந்தால் பூ பூப்பது தாமதமாகும். காய்கள், அடர்பச்சை நிறத்திலிருந்து வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறத்துக்கு மாறியதும் அறுவடை செய்துவிட வேண்டும்.

மரத்திலேயே பழுக்கவிட்டால் பழ ஈ, அணில்கள், பறவைகள் ஆகியவற்றால் பழங்கள் சேதமடைய வாய்ப்புண்டு. அதனால், மரத்தில் பழுக்க விடக்கூடாது. கொய்யாக் கன்றுகளை இயற்கை முறையில் நன்கு பராமரித்து வந்தால் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்க முடியும்.

ஐந்திலைக் கரைசல்

வேப்பிலை, நொச்சி இலை, ஆடு தீண்டாப்பாலை, வெள்ளை அருகு, ஊமத்தை ஆகியவற்றில் தலா 2 கிலோ எடுத்துத் தனித்தனியாக உரலில் இடிக்க வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 7 நாள்கள் ஊற வைத்து வடிகட்டினால், ஐந்திலைக் கரைசல் தயாராகிவிடும்.

10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் எனக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இக்கரைசல், கவாத்து செய்த இடத்தில் உள்ள நுண் கிருமிகளை அழிக்கும். தவிர வளர்ச்சியூக்கியாகவும் செயல்படும். அதனால், புதுத் தளிர்களில் பூக்கள் அதிகமாகப் பூக்கும்.

ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து

மரங்களின் கிளைகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளாமல் இருப்பதற்கும், கிளை மற்றும் தண்டுப்பகுதிகளுக்குள் சூரிய ஒளியும் காற்றும் நன்கு சென்று வருவதற்கு ஆண்டுக்கு ஒருமுறை பருவ மழைக்கு முந்தைய காலங்களில் கவாத்துச் செய்ய வேண்டும். இதனால் புதிய தளிர்கள், மொட்டுகள் விரைவாக உருவாகி காய்ப்பு அதிகரிக்கும்.

கவாத்து செய்த பிறகு உடனே தண்ணீர் விடக்கூடாது. 10 நாள்கள் வாடவிட்டுத் தண்ணீர்விட்டால் வேகமாகத் துளிர்விடும். கவாத்து செய்த 5 நாள்களுக்குள் ஐந்திலைக் கரைசலை மரம் முழுவதும் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் மூன்று முறை இக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.

இயற்கையில் விளைவதால் கூடுதல் விலை! 

ஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா!ஜெயரட்சகனிடம் இருந்து பழங்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்துவரும் முத்துலெட்சுமியிடம் பேசினோம். “நான் பேரையூர்ல பழக்கடை வெச்சிருக்கேன். ஜெயரட்சகன் ஐயா தோட்டத்துக் கொய்யாவை தொடர்ந்து வாங்குறேன். வழக்கமா இந்தப்பகுதியில கிலோ 25 ரூபாய்னுதான் கொய்யாவை வாங்குவோம். ஆனா, அவர் தோட்டத்து கொய்யாவுக்குக் கிலோவுக்கு 27 ரூபாய் கொடுத்து வாங்கிக்குவேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி அவர்கிட்ட கொய்யா வாங்கப் போனப்போ... அவர், ‘இது இயற்கையில விளைஞ்சது. தரம் நல்லா இருக்கும். அதனால, கொஞ்சம் கூடுதல் விலை கொடு’னு கேட்டார்.

ஆனா, நான் வழக்கமாக் கொடுக்குற 25 ரூபாய் விலை கொடுத்துத்தான் எடுத்துட்டு வந்தேன். அவர் தோட்டத்துப் பழம், நல்லா திரட்சியா பார்வையா இருந்தது. சுவையும் நல்லா இருந்துச்சு. அதிக நாள் வெச்சு விக்க முடிஞ்சது. நான் என்னோட வாடிக்கையாளர்கிட்ட ‘இது இயற்கையில விளைஞ்ச பழம்’னு சொல்லி விற்பனை செஞ்சேன்.

அதைச் சாப்பிட்டவங்க திரும்ப அந்தப்பழங்களையே கேட்டு வந்தாங்க. அதுல இருந்துதான் நான் அவர்கிட்ட தொடர்ந்து  வாங்க ஆரம்பிச்சேன். அவர் கேட்ட மாதிரி கிலோவுக்கு ரெண்டு ரூபாய் அதிகமாகக் கொடுத்துக் கொள்முதல் செஞசேன். இப்போ நான் தைரியமா இந்தப்பழம் சுவையா இருக்கும்னு அடிச்சுச் சொல்லி விற்பனை செய்ய முடியுது” என்றார்.

தொடர்புக்கு: முத்துலெட்சுமி,
செல்போன்: 70947 35047

இலைக்கருகலுக்கு இஞ்சி, பூண்டுக் கரைசல்

இலைகளில் தடித்த தன்மை, இலைக்கருகல் ஆகிய பிரச்னைகள் தென்பட்டால் தலா கால் கிலோ இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை உரலில் இடித்து, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 7 நாள்கள் ஊற வைத்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். நோய் சரியாகும் வரை வாரம் ஒருமுறை இக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.