Published:Updated:

குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...

குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...

சூழல்ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...

சூழல்ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...
குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...

குளங்கள், வாய்க்கால்கள் போன்றவற்றைச் சீரமைக்கும் விதமாகக் குடிமராமத்துத் திட்டத்தை அறிவித்து, அதை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. சுற்றுச்சூழல் மீது அக்கறைகொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலர், இத்திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களது மாவட்டத்தைச் செழிப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவராகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வினய், மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறார்.

குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


நீர்நிலைகளைத் தூர்வாருவதோடு மட்டும் நிற்காமல் நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றிப் புனரமைக்கும் பணிகளையும் செய்துவருகிறார். இதனால், ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளம் எனத் தொடர்ச்சியாக உள்ள அனைத்துக் குளங்களும் வாய்க்கால்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணி சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. தவிர, தமிழக அளவில் நடந்த குடிமராமத்துப் பணிகள் தொடர்பான கூட்டத்தில், திண்டுக்கல்லில் நடந்துவரும் பணி தமிழக அரசு உயரதிகாரிகளின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தில் அந்தந்தப் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றையும் ஈடுபடுத்தியிருக்கிறார் வினய். ஒவ்வொரு தொழிற்சாலையும் சமுதாய மேம்பாட்டுக்கான பங்களிப்பைச் செலுத்தும் வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவிட வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளின் பங்களிப்பை நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிக்கு மடை மாற்றியுள்ளார் வினய். இப்பணியில் ஈடுபடும் நிறுவனமே அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சம்பந்தப்பட்ட நீர்நிலைகளையும் வரத்து வாய்க்கால்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பல நீர்நிலைகள் புத்துயிர் பெற்று அடுத்துவரும் மழைக்காகக் காத்திருக்கின்றன.

குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...

இந்தத் திட்டத்தில் பணியாற்றி வரும் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜிடம் பேசினோம். “கிழக்குப் பகுதியில் கரந்தமலை, மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை, தெற்குப் பகுதியில் சிறுமலை, வடக்குப் பகுதியில் ரங்கசாமி மலை என நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டது திண்டுக்கல் மாவட்டம். இது காவிரியின் வடிநிலப்பகுதியில் இருக்கக்கூடிய மேட்டுப்பகுதியாக இருந்துவருகிறது. இந்த மாவட்டத்தில்தான் குடகனாறு உற்பத்தியாகி அமராவதி ஆற்றில் கலக்கிறது. புவியியல் அமைப்பின்படி, இந்த மாவட்டம் சரிவான அமைப்பில் அமைந்துள்ளது. இயல்பான சரிவு என்பது ஒன்று முதல் மூன்று சதவிகிதம். ஆனால், இந்த மாவட்டம் மூன்று முதல் ஏழு சதவிகிதம் சரிவாக அமைந்துள்ளது.

அதனால், சராசரி மழையளவைவிட அதிகமாக மழை பெய்யும்போது மட்டுமே நீர்நிலைகள் பெருகி, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற நிலை உள்ளது. கடந்த ஆறேழு ஆண்டுகளாகச் சராசரி அளவில் 60 சதவிகித அளவுதான் மழை பெய்துள்ளது. இதனால், மழை நீரை முழுமையாகச் சேகரிக்க முடியவில்லை. ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளிலும் குறைந்தளவே சேகரிக்கவேண்டிய நிலை உருவானது. ஒவ்வொரு நீர்நிலையையும் இணைக்கவேண்டிய வாய்க்கால்கள் முழுமையாக இல்லாமல், ஆக்கிரமிப்புகளாலும், புதர் மண்டிப்போய்த் தூர்ந்துப்போயுள்ளதாலும் மழை நீர் முழுமையாக நீர்நிலைகளை வந்தடைய முடியாத நிலைதான் இருந்தது. இதனால், மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்து வறட்சி ஏற்பட்டது. பாசனத்துக்கும், குடிதண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு நீடித்து வருகிறது” என்ற பிரிட்டோராஜ் தொடர்ந்தார்...

“இந்த நிலையைத் தற்காலிகமாக இல்லாமல் நீண்டகால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தோடு பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால்வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார் மாவட்ட ஆட்சியர்.

குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...

அப்போது, நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பாலும் தூர்ந்து போனதாலும்  அரசு வரைபடத்தில் சுருங்கிப் போயிருக்கும் விஷயம் ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. உடனடியாக, வரைபடம் மற்றும் அரசு ஆவணங்களில் உள்ள பரப்பளவுக்கு நீர்நிலைகளையும் வாய்க்கால்களையும் சரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

முதல்கட்டமாக, சிறுமலையிலிருந்து குடகனாறு வரையுள்ள 29 கிலோமீட்டர் தூர நீர்வழிப்பாதையைச் சரி செய்தோம். இந்த நீர்வழிப்பாதையில் 18 குளங்கள் இருக்கின்றன. நீர்நிலைகளைப் புனரமைத்து, கரைகளைப் பலப்படுத்தி, களிங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் திண்டி மா வனம், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகளும்; அம்பிகா காட்டன் மில், நாகா ஃபுட்ஸ், எஸ்.எஸ்.எம் கல்வி நிறுவனம், எஸ்.எம்.பி.எம் பள்ளி, ஓம்சாந்தி பள்ளி உள்படப் பல நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்தோடு கைகோத்தன. அந்தந்தப் பகுதிகளிலிருந்த விவசாயிகள், பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை அளித்துவருகிறார்கள்.

இத்திட்டத்தில், திண்டுக்கல் நகரைச் சுற்றியிருக்கும் ஏழு குளங்களையும் முழுமையாகப் புனரமைத்து, கரைகளைப் பலப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலமாக, மழைநீர்ச் சேகரமாகி நகரின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மாவட்ட ஆட்சியரின் முயற்சியால்தான் இது சாத்தியமாகியுள்ளது” என்றார் பிரிட்டோராஜ்.

இப்பணியில் தன்னார்வலராகச் செயல்பட்டுவரும் சமூக ஆர்வலர் பாலாஜி, “வெறுமனே குடிமராமத்துங்கிற பேர்ல, குளங்களை மட்டும் தூர்வார்றதுல எந்தப் பிரயோஜனமும் இல்லைங்கிறதை கலெக்டர் புரிஞ்சுகிட்டு வரத்து வாய்க்கால்களையும் முழுமையா புனரமைக்கணும்னு உத்தரவு போட்டார்.

இன்னிக்குப் பிரச்னை தீர்ந்தா போதும்னு இல்லாம, எதிர்காலத்தையும் மனசுல வெச்சு நீர்நிலைகளை முழுமையா புனரமைச்சது பாராட்டுக்குரிய விஷயம். ஒவ்வொரு பணியையும் கலெக்டர் நேர்ல பார்வையிட்டுத் தேவையான ஆலோசனைகளைச் சொன்னதோடு நல்லா வேலை செய்றவங்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதாலதான் இந்த வேலை இத்தனை சிறப்பா நடந்திருக்கு. இனி, அஞ்சாறு வருஷத்துக்குக் குடிமராமத்துகூடத் தேவைப்படாதுங்கிற அளவுக்கு முழுமையா நடந்து முடிஞ்சிருக்குப் பணிகள். இதுல நாங்களும் (திண்டி மா வனம் அமைப்பு) பங்கெடுக்க வாய்ப்புக்கொடுத்த கலெக்டருக்கு எங்கள் அமைப்பு சார்பா நன்றிகள்” என்றார்.

குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...

நீர்நிலைகள் புனரமைப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வினயிடம் பேசினோம். “திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை எப்போதும் குடிநீர்ப் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். நிலத்தடி நீர் மட்டமும் ஆழத்துக்குச் சென்றுவிட்டது. அதே நேரத்தில் பெய்யும் மழைநீரைச் சேமித்து வைக்கும் வகையில் நீர்நிலைகள் இல்லை என்பது வருத்தமான செய்தியாக இருந்தது. அதை மாற்ற முடிவெடுத்தோம். சக அதிகாரிகளையும் அழைத்து, ஆலோசித்து ஒரு திட்டத்தை வகுத்தோம். அதன்படி, மலைகளில் பெய்யும் மழைநீரை முதலில் முறையாக அதன் வரத்து வாய்க்கால் வழியாகப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்குத் தடையாக உள்ளவற்றை அப்புறப்படுத்தி, அதன் போக்கில் போக வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டோம். அதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டபோது வாய்க்கால்களும் குளங்களும் சில இடங்களில் காணாமல் போயிருந்தன.

அதன்பிறகு, முறையாக அளந்து வரைபடத்தில் உள்ள அளவுக்கு வாய்க்கால்கள், குளங்களை அடையாளப்படுத்தினோம். ஆக்கிரமிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் அகற்றினோம். முதல் கட்டப்பணிகள்தான் நிறைவடைந்துள்ளன. பணிகள் இன்னமும் தொடரும். இதன் பலனாக, இன்றைக்குப் பல நீர்நிலைகள் முழுமையான பாதையுடன், பாரம்பர்ய வழித்தடம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இது பல ஆண்டுகளுக்குப் பலன்தரும்” என்ற வினய் நிறைவாக,

“இனிமேல் நீர்நிலைகளில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்பதற்காகத் தனியாக ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்திருக்கிறேன். அடிக்கடி ஆக்கிரமிப்பு நடைபெறும் இடங்களில் வேலி அமைத்திருக்கிறோம். இந்தப் பணி என்னால்தான் நடந்தது என்று அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆனால், அரசு ஊழியராக என் கடமையைத்தான் செய்துள்ளேன். இது ஊர்கூடி தேர் இழுத்த நிகழ்வு. இதில் பங்கெடுத்துள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்” என்றார்.

பசுமை விகடன் சார்பாக அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்..

ஒருங்கிணைக்க ஆட்களில்லை!

குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...


பிற மாவட்டங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் குறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் மாநிலத்தலைவர் அக்ரி வேலாயுதம், “அந்த காலத்துல குடியானவர்கள் (விவசாயிகள்) வீட்டுக்கு ஒருவர் வந்து நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற வழக்கம் இருந்தது.

ஆனா, இப்போது யாரும் வந்து செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அப்படியே ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைக்க அதிகாரிகளும் தயாராக இல்லை. அதனால், ஏதோவொரு தரப்பு மட்டுமே இந்த பணிகளைச் செய்து வருகிறது. பல மாவட்டங்களில் அரசு பணமே செலவு செய்யல. அதனால்தான் ஏரியில் மண் எடுத்துக்கோங்கன்னு அறிவிச்சது. விவசாயிகளும் ஓரளவு மண் எடுத்தாங்க. பிறகு, அதிலும் எதையதையோ சொல்லி முழுமையா செஞ்சு முடிக்கவில்லை” என்றார்.