Published:Updated:

விதைச் சேமிப்பில் பாரம்பர்ய உத்திகள்!

விதைச் சேமிப்பில் பாரம்பர்ய உத்திகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
விதைச் சேமிப்பில் பாரம்பர்ய உத்திகள்!

6 மாதங்களுக்கு நொச்சி, வசம்பு... 36 மாதங்களுக்கு கோட்டை...தொழில்நுட்பம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன் - க.சதீஷ்குமார்

வெற்றிகரமான விவசாயத்துக்கு நல்ல மண் வளமும் தண்ணீர் வளமும் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்குத் தரமான விதைகளும் முக்கியம். பாரம்பர்ய விதைகளைப் பயன்படுத்திய காலக்கட்டத்தில் விதைக்காகவே குறிப்பிட்ட செடிகளை ஒதுக்கித் தரமான விதைகளை அறுவடை செய்து சேமித்து வைப்பார்கள் விவசாயிகள். இன்று பெரும்பாலான விவசாயிகள் அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படும் கம்பெனி விதைகளைத்தான் வாங்கி விதைக்கிறார்கள்.  

விதைச் சேமிப்பில் பாரம்பர்ய உத்திகள்!

ஆனால், இயற்கை விவசாயம் செய்துவரும் பல விவசாயிகள் மறு முளைப்புத்திறன் கொண்ட நாட்டு ரக விதைகளைப் பயன்படுத்துவதோடு, அவற்றை முறைப்படி சேமித்தும் வருகிறார்கள். எந்த விதையாக இருந்தாலும் அவற்றைச் சரியான முறையில் பக்குவப்படுத்திச் சேமித்து வைத்தால்தான் அதன் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும்.விதைகள் சிறப்பிதழுக்காகச் சில முன்னோடி விவசாயிகளைச் சந்தித்து விதை சேமிப்பு முறைகள் குறித்துப் பேசினோம். அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

திருவாரூர் மாவட்டம், வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனன், “அளவில் பெரிதாக இருக்கும் கொடிவகைக் காய்கறி விதைகளாக இருந்தால்... தோசை மாவு பதத்துக்கு ஈரச் சாணத்தைத் தண்ணீரில் கலந்து அதில் விதைகளைக் கொட்டிப் பிசைந்து உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டைகளை இளம் வெயிலில் இரண்டு நாள்கள் காய வைத்து, துணிப்பையில் சேமித்து வைக்க வேண்டும். இப்படிச் சேமிக்கப்பட்ட விதைகள் இரண்டு ஆண்டுகள் வரை வீரியம் குறையாமல் இருக்கும்.

கத்திரி, மிளகாய் போன்ற காய்கறிகளின் விதைகள் அளவில் சிறியவையாக இருக்கும். இந்த விதைகளைச் சாணத்தில் கலந்து வறட்டியாகத் தட்டி காய வைக்க வேண்டும். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து விதைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து விதைக்கலாம்.

நெல், பிரதான உணவுப்பயிர் என்பதால் நெல் விதைகளை நம் முன்னோர் தெய்வத்துக்கு இணையாக மதித்தனர். விதை நெல்லைக் கோட்டை கட்டிப் பாதுகாக்கலாம். குதிர் மற்றும் பத்தாயத்திலும் ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்கலாம். விதைநெல்லுக்காக அறுவடை செய்யும்போது கைகளால்தான் அறுவடை செய்ய வேண்டும். இயந்திரம் பயன்படுத்தினால் நெல்லில் உடைப்பு ஏற்படும். கதிர் அடிக்கும்போதும் நெல்லில் உடைப்பு ஏற்படாதவாறு கட்டையால் மெதுவாக அடிக்க வேண்டும்.     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விதைச் சேமிப்பில் பாரம்பர்ய உத்திகள்!

கதிரிலிருந்து பிரிக்கப்பட்ட நெல்லை 5 நாள்களுக்கு ஒருமுறை இளம் வெயிலில் 2 மணி நேரம் காய வைக்க வேண்டும். இதுபோல் 5 முறை காய வைக்க வேண்டும். இதை நம் முன்னோர் பேச்சு வழக்கில் ‘அஞ்சி காய்ச்சல்’ என்பார்கள். இப்படிக் காய வைக்கும்போது ஈரம் பதமாக வெளியேறுவதோடு விதை நெல்லில் பால் கட்டும் தன்மையும் உறுதியாகும். தொடர்ச்சியாகப் பல மணி நேரம் காய வைத்தால் விதை நெல்லில் உடைப்பு ஏற்பட்டுவிடும். காயவைக்கப்பட்ட நெல்லிலுள்ள கருக்கா, பதர், தூசி, அரைநெல் போன்றவற்றை நீக்கிவிட்டு, 60 கிலோ விதை நெல்லுக்கு 50 கிராம் வசம்பு, அரைக்கிலோ நொச்சி இலை எனக் கலந்து சணல் சாக்கில் கட்டி வைக்க வேண்டும். இதனால் பூச்சி, பூஞ்சணம் போன்றவை தாக்காது. இப்படி 90 நாள்கள் விதையை உறக்கத்தில் வைத்து, பிறகுதான் விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும். சணல் சாக்கில் கட்டி வைத்தால் 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கமுடியும்” என்றார்.

கோட்டை கட்டும் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ‘நெல் ஜெயராமன்’, “கோட்டை கட்டி வைத்தால் விதை நெல்லை 3 ஆண்டுகள் வரை தரம் குறையாமல் பாதுகாக்கமுடியும். விதை நெல்லை அஞ்சி காய்ச்சல் முறையில் காய வைத்துச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். விதைநெல் தாள்களை அறுக்கும்போது கிடைக்கும் வைக்கோலைப் பயன்படுத்திதான் கோட்டை கட்ட வேண்டும். கைகளால் அறுவடை செய்யப்பட்ட வைக்கோலில் மட்டுமே கோட்டை கட்ட முடியும்.  ஒரு கோட்டை என்பது 18 மரக்கால் (50 கிலோ) அளவு விதை நெல்லைப் பாதுகாக்க செய்யப்படும் அமைப்பு. இந்த அளவு கோட்டை கட்டும்போது கையாள்வது எளிது. 50 கிலோ விதை நெல்லைக் கோட்டை கட்ட 20 கிலோ வைக்கோல் தேவை.

வைக்கோலைக் கயிறுபோல் (வைக்கோல் பிரி) திரித்துக்கொள்ள வேண்டும். கோட்டையின் அடிப்பாகத்தில் பயன்படுத்த ஒரு மீட்டர் நீளத்தில் 3 பிரிகள் தேவைப்படும். இப்பிரியின் பெயர் ‘கண்டம்பிரி’. கோட்டையைக் கட்டுவதற்குத் தேவைப்படும் வைக்கோல் பிரிக்கு ‘கட்டுப்பிரி’ என்று பெயர். இவற்றை மூன்று மீட்டர் நீளத்தில் உருவாக்க வேண்டும். மொத்தம் 5 கட்டுப்பிரிகள் தேவைப்படும்.

பொதுவாக மாசி மாத மகா சிவராத்திரி, சங்கடஹர சதூர்த்தி ஆகிய நாள்களில் கோட்டை கட்டுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். மற்ற மாதங்களில் அமாவாசை அன்று கோட்டை கட்டுவார்கள். அதிலும் அதிகாலையில் கோட்டை கட்டுவது நல்லது.

ஒவ்வொரு கண்டம்பிரி மீதும் வைக்கோலைப் பரப்பி 6 மரக்கால் அளவு விதை நெல்லைக் கொட்டி, பிரியை இழுத்துக்கட்ட வேண்டும். பிறகு, ஒன்றன் மீது ஒன்றாக மூன்று கட்டுகளையும் அடுக்கி, முழுவதும் கட்டுப்பிரிகளைக் கொண்டு நன்கு சுற்றிக் கட்ட வேண்டும். வைக்கோல் முழுவதும் மறையுமளவுக்குச் சாணம் பூசி மெழுகி, 3 நாள்கள் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும். இதுதான் கோட்டை கட்டும் முறை.

விதைப்புக்குத் தேவைப்படும்போது மாலை 6 மணியளவில் குட்டைத் தண்ணீரில் கோட்டையை ஊற வைத்து, மறுநாள் காலை 6 மணிக்கு எடுத்து இரண்டு செங்கற்கள்மீது கோட்டையை நிறுத்தி வைத்து, லேசான வெயில் படுமாறு வைக்க வேண்டும்.

பத்து மணிக்குப் பிறகு, சணல் சாக்கு கொண்டு கோட்டையை மூடி வைக்க வேண்டும். அடுத்தநாள் காலை 6 மணியளவில் சணல் சாக்கினை நீக்கித் தண்ணீர் ஊற்ற வேண்டும். அன்று மாலை 4 மணியளவில் கோட்டையைப் பிரித்து விதை நெல்லை வெளியில் எடுத்தால் மூன்றாம் கொம்பு முளைப்பு வந்திருக்கும். உடனே அதை விதைக்கலாம்.

இதுபோன்ற மூன்றாம் கொம்பு முளைப்பு வந்த விதை நெல், குறுவை மற்றும் சம்பா பட்டங்களில் விதைக்கத்தான் சரியாக இருக்கும். தாளடி விதைப்புக்கு இரண்டாம் கொம்பு முளைப்பு வந்த விதைநெல்தான் உகந்ததாக இருக்கும்” என்றார். 

தொடர்புக்கு,

செல்போன்:

ராமலிங்கம்    : 78711 26888

மயில்வாகனன்    : 98849 04437

‘நெல்’ ஜெயராமன்    : 94433 30954

பாஸ்கரன்    :
94428 71049

விதைச் சேமிப்பில் பாரம்பர்ய உத்திகள்!

ஜீரோபட்ஜெட் சேமிப்பு!

ஜீரோபட்ஜெட் முறையில் விதைநெல் சேமிப்பு மற்றும் விதை நேர்த்தி குறித்துத் தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சில விஷயங்களைச் சொன்னார். “சணல் சாக்கைச் சாணிப்பாலில் நனைத்து இரண்டு நாள்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். அதில் விதை நெல்லைக் கொட்டி, கட்டி வைத்தாலே அதிக நாள்கள் இருப்பு வைக்க முடியும். இப்படிப் பாதுகாப்பாக வைக்கப்பட்ட விதை நெல்லை, விதைப்பின்போது விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

2 கிலோ பசுஞ்சாணம், 2 லிட்டர் பசுவின் சிறுநீர், 50 கிராம் சுண்ணாம்பு ஆகியவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, 12 மணி நேரம் வைக்க வேண்டும். இதில் 30 கிலோ விதை நெல்லை மூட்டையாகக் கட்டிப்போட்டு 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, தரையில் வைக்கோலைப் பரப்பி, ஊற வைத்த மூட்டையை வைத்து, அதன்மீது வைக்கோலைப் போட்டு மூடி வைக்க வேண்டும். பிறகு, இதன்மீது 30 கிலோ எடை கொண்ட கல்லை வைக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் வைத்திருந்து பிறகு எடுத்து விதைக்கலாம்” என்றார்.

இயற்கை முறையில் விதை நேர்த்தி!

விதைச் சேமிப்பில் பாரம்பர்ய உத்திகள்!



விதை நேர்த்தி செய்வது குறித்துப் பேசிய தஞ்சாவூர் மாவட்டம் தேனாம்படுகையைச் சேர்ந்த பாஸ்கரன், “கோட்டை கட்டாமல் சாதாரண முறையில் சணல் சாக்கில் விதை நெல்லைப் பாதுகாக்கும் விவசாயிகள், விதை நேர்த்தி செய்துதான் விதைக்க வேண்டும்.

பத்து லிட்டர் தண்ணீரில் அரைக்கிலோ கல் உப்பைக் கரைத்து அதில் விதை நெல்லைப் போட்டால்... கருக்கா மற்றும் முதிர்ச்சி அடையாத விதைநெல் ஆகியவை மேலே மிதந்துவரும். அவற்றை நீக்கிவிட்டு அடியில் தங்கி இருக்கக்கூடிய தரமான விதை நெல்லை மட்டும் எடுத்து, அவை மூழ்கும் வரை தண்ணீர்விட்டு அதில், 30 கிலோ விதை நெல்லுக்கு அரை லிட்டர் என்ற கணக்கில் பஞ்சகவ்யா சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு விதை நெல்லைச் சணல் சாக்கில் கட்டி வைத்து 12 மணி நேரம் கழித்து விதைக்கலாம்” என்றார்.