Published:Updated:

விதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...

விதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
விதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...

விதைப் பண்ணைஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பெரும்பாலான விவசாயிகள் மேம்படுத்தப்பட்ட மற்றும் வீரிய ரக விதை நெல் வகைகளை மட்டுமே விதைப்புக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், விதை நெல் உற்பத்தி, நெல் சாகுபடிக்கு இணையான தொழிலாக வளர்ந்துவருகிறது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் விதைநெல் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் உள்ள விதைநெல் உற்பத்தி மையங்கள் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் அளவுக்கு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபகாலமாக விவசாயத்துக்குப் புதிதாக வரும் இளைஞர்கள் பலரும் விதைநெல் உற்பத்தியில் கால்பதித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கே.மனோகரன். கட்டடப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், தற்போது விதைநெல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.   

விதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...

காலைநேர இளம் வெயிலில் களத்தில் காய்ந்துகொண்டிருந்த நெல்லை வேலையாள்கள் பரப்பிக்கொண்டிருக்க, அப்பணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனோகரன். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“முன்னாடி நாட்டு ரக நெல்லைச் சாகுபடி பண்றப்போ, விவசாயிகளே அடுத்த போகத்துக்கான விதைநெல்லை எடுத்துப் பக்குவப்படுத்தி வெச்சுக்குவாங்க.  இப்போ எல்லோரும் குறுகிய காலத்துல அதிக விளைச்சல் கொடுக்குற வீரிய ரகங்களைத்தான் விரும்புறாங்க. அதனால, விதை நெல்லை வெளியேதான் வாங்கியாகணும். அதுக்கான விதைநெல் உற்பத்தி செய்ற வேலையைத்தான் நாங்க செய்றோம். நெல்லுல 13 சதவிகிதம் ஈரப்பதம் இருக்குற மாதிரி சேமிச்சு வெச்சு நடவு செஞ்சாத்தான் விளைச்சல் நல்லாருக்கும். ஈரப்பதம் அதிகமானால் மூட்டையிலேயே முளைவிட ஆரம்பிச்சுடும். தாராபுரம் பகுதியில் நிலவுற சீதோஷ்ண நிலைமையில் இயல்பாவே 13 சதவிகித ஈரப்பதம் இருக்குது. அதனாலதான் அதிகமான விதை உற்பத்தி மையங்கள் இங்கே செயல்படுது.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...

இங்கே உற்பத்தி செய்ற விதை நெல்லை அதிகபட்சம் 9 மாதங்கள் வரை இருப்பு வைக்க முடியும். சம்பா, குறுவை, கோடைனு மூணு போகம் நெல் விவசாயம் நடக்கும் டெல்டா மாவட்டங்களுக்குத் தேவையான விதை நெல்லில் 70 சதவிகித அளவு எங்க பகுதியில்தான் உற்பத்தியாகுது” என்ற மனோகரன், விதைநெல் உற்பத்தித் தொழில்நுட்பங்கள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்...

“ஏடிடீ - 37 (ADT), ஏடிடீ - 43, ஏடிடீ - 46, சி.ஆர் - 1009, ஏ.எஸ்.டி - 16, ஐ.டபிள்யூ பொன்னினு பத்து ரகங்களை இங்கே உற்பத்தி செய்றோம். எங்களுக்குத் தேவையான ரகத்தோட தாய் விதை நெல்லை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதைத் துறையில்தான் வாங்குறோம். வேற எங்கேயும் தாய் நெல் கிடைக்காது. சான்றுபெற்ற விதைநெல் உற்பத்தியாளர்கள் மட்டும்தான் தாய் நெல்லை வாங்கமுடியும். ஒவ்வொரு ரகத்துலயும் 50 கிலோ அளவு தாய் நெல் வாங்கிட்டு வருவோம். நிறைய ஆய்வுகள் செஞ்சு, அந்தச் சான்றிதழோடுதான் தாய் நெல்லைக் கொடுப்பாங்க.  இப்படி வாங்கிட்டு வர்ற தாய் நெல்லை விவசாயிகள்கிட்ட கொடுத்து, முறைப்படி நாற்றங்கால் அமைச்சு, பராமரிப்பு செய்து பயிர் செய்வோம். விதைப்பிலிருந்து அறுவடை வரைக்கும் விதைச் சான்றளிப்புத்துறை அலுவலர்கள் கண்காணிச்சுட்டே இருப்பாங்க. அறுவடை செஞ்ச பிறகு பக்குவப்படுத்தி மூட்டை பிடிக்கிறப்போவும் அவங்க ஆய்வு செய்வாங்க. ஒவ்வொரு கட்டத்துலயும் மாதிரி எடுத்துச் சோதனை செஞ்சுதான் சான்றிதழ் கொடுப்பாங்க.

தாய் நெல்லை விதைக்கிற வயல்ல, மற்ற  ரக நெல் கலப்பு இருக்கானு கண்காணிக்கணும். அப்படி ஏதாவது இருந்தால், அந்தச் செடிகளை அப்புறப்படுத்தணும். இதை ‘இடைக் கலைப்பு’னு சொல்வோம். ஒரு ஏக்கர் வயலுக்கு 25 கிலோ தாய் விதைநெல் கொடுப்போம். விதைச்சதில இருந்து குறுகிய காலம் 120, நடுத்தரம் 145, நீண்ட காலம் 165 நாள்ல 3 டன் வரை நெல் மகசூலாகும். இந்த நெல்லை ‘ஆதார நிலை-1’னு சொல்வாங்க. இதை விதைநெல்லா மட்டும்தான் பயன்படுத்தணும்.

அறுவடை செஞ்ச ஆதாரநிலை-1 விதை நெல் 18 சதவிகித ஈரப்பதத்துல இருக்கும். அதைக் களத்துல கொட்டி உலர்த்தி ஈரப்பதம் அளக்குற கருவி மூலமா அளந்து 13 சதவிகித ஈரப்பத நிலைக்கு வரும்போது எடுத்திடுவோம். உலர்த்தின நெல்லைச் சுத்தப்படுத்தும் இயந்திரத்துல கொட்டி... கருக்கா, கல், மண், பாளை, பதர், தூசு எல்லாத்தையும் நீக்குவோம். இப்படி நீக்கும்போது 15 சதவிகிதக் கழிவு இருக்கும். அதாவது 100 கிலோ நெல்லுல இருந்து 85 கிலோதான் சுத்தமான நெல் கிடைக்கும். அதுல இருந்து மூட்டைக்கு அரைக்கிலோ நெல் மாதிரியை எடுத்துச் சோதனைக்கு அனுப்புவோம்.    

விதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...

விதைச் சான்றளிப்புத்துறை அலுவலகத்துல பல சோதனைகள் செய்வாங்க. விதைக்கலப்பு இருக்கக் கூடாது. விதையில் 80 சதவிகிதத்துக்குமேல முளைப்புத்திறன் இருக்கணும். இப்படி இருந்தா, அதுக்குச் சான்றிதழ் கிடைக்கும். சான்றிதழ் வாங்கி வெச்சிருந்தாலும், சான்றளிப்பு அதிகாரிகள் எப்போ வேணும்னாலும் வந்து நாங்க சேமிச்சு வெச்சிருக்குற நெல்லை எடுத்துச் சோதனை செய்வாங்க” என்ற மனோகரன் விதைநெல்லின் அடுத்த நிலைகள் குறித்துச் சொன்னார்.

“ஆதாரநிலை-1 விதை நெல்லைக் கொண்டு சாகுபடி செய்யும்போது மகசூலாகும் நெல், இரண்டாம் தலைமுறை நெல்.  இதை ‘ஆதாரநிலை-2’னு சொல்வாங்க. இதை விதைப்புக்கும் உணவுக்கும் பயன்படுத்தலாம். விதைநெல்லா பயன்படுத்தும் பட்சத்துல ஆதாரநிலை-1க்கான அனைத்து சோதனைகளும் இதுக்கும் இருக்கும்.

ஆதாரநிலை-2 விதைநெல்லைச் சாகுபடி செய்யும்போது மகசூலாகுறது மூன்றாம் தலைமுறை நெல். இதைச் ‘சான்று நிலை’னு சொல்வாங்க.

இதை முழுக்க முழுக்க உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்தணும். அதை விதைக்க பயன்படுத்தினால் சரியான முளைப்புத்திறன் இருக்காது” என்று விதை உற்பத்தி பாடத்தை முடித்தார் மனோகரன்.

தாய்விதைக்குப் பதிவு செய்ய வேண்டும்!

தாய் விதை எனப்படும் கரு விதை அல்லது வல்லுநர் விதை குறித்து விளக்குகிறார் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நெல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்
டாக்டர் ஜெயப்பிரகாஷ்... “தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக் கழகத்தின் வாயிலாக அரசு விதைப்பண்ணைகள் மற்றும் தனியார் விதைப்பண்ணைகளுக்கு வல்லுநர் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் விதைப்பண்ணைகளுக்கான வல்லுநர் விதை வேண்டுவோர் ஓர் ஆண்டுக்கு முன்பே எங்களுடைய துறையில் வந்து முறைப்படி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

மூலவிதையான கரு விதைகளிலிருந்து பயிர்ப்பெருக்க வல்லுநரின் கண்காணிப்பில் ஏதாவதொரு ஆராய்ச்சி மையத்தில் அல்லது வேளாண்மைப் பல்கலைக்கழக வயலில் விதைப்பெருக்கம் செய்யப்படும். அந்த விதைப்பெருக்கத்தை விஞ்ஞானிகளும், சான்றிதழ் மையம் மற்றும் தேசிய விதைக்கழகத்தின் அதிகாரிகளும் ஒரு குழுவாக கண்காணித்து அந்த விதைப்பெருக்க நெல் அறுவடை செய்யப்படும். அதுதான் வல்லுநர் விதை. 

இதற்கு அடுத்த நிலை ஆதார விதை, அதற்கடுத்த நிலை சான்று விதை. இதன் ஒவ்வொரு நிலைக்கும் மஞ்சள், வெள்ளை, நீலம் என்று மூன்று நிற சான்றட்டைகள் வழங்கப்படும்” என்றார்.

தொடர்புக்கு, நெல் துறை, வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

தொலைபேசி:
0422 2474967

நமக்கு நாமே விதை உற்பத்தி!

விதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் முன்னோடி இயற்கை விவசாயி தாந்தோணி. பாரம்பர்ய ரகங்களைச் சாகுபடி செய்துவரும் இவர், தனக்குத் தேவையான விதைநெல்லைத் தானே உற்பத்தி செய்துகொள்கிறார்.

“வீரிய ரகம்னாத்தான் ஒவ்வொரு முறையும் விதையை வாங்க வேண்டியிருக்கும். பாரம்பர்ய ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செஞ்சா, விதை நெல்லுக்காக அலைய வேண்டியதில்லை. தவிர உரச்செலவு, பூச்சிக்கொல்லிச் செலவும் குறையும்.

நம்ம வயல்ல விளைஞ்ச நல்லா முத்தின தரமான நெல் மணிகளைப் பிரிச்செடுத்து சுத்தப்படுத்தி... பஞ்சகவ்யாவுல நனைச்சு களத்தில காய வெச்சு, சரியான ஈரப்பதத்தில எடுத்து வெச்சுட்டா போதும். ரெண்டு வருஷம் வரைக்கும் வீரியம் குறையாம இருக்கும். மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, வெள்ளைப்பொன்னினு பாரம்பர்ய ரகங்களைத்தான் நான் சாகுபடி செய்றேன். இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டா சுயசார்பா இருக்கமுடியும்” என்கிறார் தாந்தோணி.