Published:Updated:

விதைப்பந்து வீசினால் மரம் வளருமா? ஓர் ஆய்வு...

விதைப்பந்து வீசினால் மரம் வளருமா? ஓர் ஆய்வு...
News
விதைப்பந்து வீசினால் மரம் வளருமா? ஓர் ஆய்வு...

அலசல்த.ஜெயகுமார் - படம்: இ.பாலவெங்கடேஷ்

மீப காலமாகச் சமூக வலைதளங்களில் விதைப்பந்து குறித்து அதிகளவில் பரப்புரை செய்யப்படுகிறது. மரம் வளர்ப்பு மற்றும் சூழல்மீது ஆர்வம் கொண்டோர், விதைப்பந்து மூலமாக மரம் வளர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்ப்பு சாத்தியமா என்பது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். அவர்களின் கருத்துகள் இங்கே... விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்ப்பதை ஓர் இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறது ‘தாம்பரம் மக்கள் குழு’ அதன் ஒருங்கிணைப்பாளர் ஜனகன், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள், விதைப்பந்து வீசுவது மூலமாக மரம் வளர்ப்பைத் தொடங்கிவிட்டோம். சென்னை மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வர்தா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. அதனால் நாங்கள், சென்னையடுத்த தாம்பரம் பகுதியில் மரங்களை அதிகப்படுத்த முடிவு செய்தோம். தாம்பரத்தைச் சுற்றியுள்ள நன்மங்கலம் காப்புக் காடுகள், கவுரிவாக்கம் காப்புக் காடுகள், தாம்பரம் ரிங் ரோடு, கஸ்தூரிபாய் நகருக்குப் பின்னால் உள்ள மலை எனப் பல இடங்களிலும் விதைப்பந்துகளை வீசினோம்.     

விதைப்பந்து வீசினால் மரம் வளருமா? ஓர் ஆய்வு...

பூவரசு, வில்வம், வேம்பு, சரக்கொன்றை, வாகை, மகிழம், சீத்தா, கொடுக்காப்புளி போன்ற மரங்களின் விதைகளைச் சேகரித்தும் மற்றவர்களிடம் வாங்கியும் விதைப்பந்துகளை உருவாக்கினோம். இதுவரை 30 ஆயிரம் விதைப்பந்துகளைத் தயாரித்து வீசியிருக்கிறோம். தற்போது 50 ஆயிரம் விதைப்பந்துகளைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். கார்களில் பயணிப்பவர்களிடம் விதைப்பந்துகளைக் கொடுத்து, அவர்கள் மூலமாகப் பரவ வைக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தரிசு நிலங்கள், மலைப்பகுதிகள் என எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் விதைப்பந்துகளை வீசலாம். மழை பெய்யும்போது அந்த விதைப்பந்துகள் ஈரமாகி அதிலிருக்கும் விதை முளைத்து வளர்ந்துவிடும்.

இது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி மசனாபு ஃபுகோகாவின் கண்டுபிடிப்பு. நெல், பார்லி போன்றவற்றில் விதைப்பந்துகள் உருவாக்கிச் சோதனை செய்துள்ளார். இதைத் தன்னுடைய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதை அடிப்படையாக வைத்துதான் மர வளர்ப்புக்கான விதைப்பந்துகளை உருவாக்குகிறோம்” என்றார்.

இதுகுறித்துப் பேசிய ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில், “காக்கா போட்ட எச்சம் மூலமாக விதைகள் மரங்களாக வளர்ந்திருப்பதை அறிந்திருப்பீர்கள். அந்தத் தொழில்நுட்பம்தான் இது. உலகளவில் விதைப்பந்து தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரியான மண்ணில் மழை பெய்வதற்கு முன் வீச வேண்டும். விதைப்பந்து விழும் இடத்தைச் சுற்றி அதற்குத் தேவையான சத்தான மண், மட்கிய இலை தலைகள் ஆகியவை இருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். விதையிலிருந்து வேர் விடும்போது மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அப்போதுதான் விதைகள் முளைக்கும். இதையும் உறுதி செய்துகொண்டு விதைப்பந்துகளை வீசுவது நல்லது.

இதுவரை வீசிய விதைப்பந்துகள் முளைத்திருப்பது குறித்து ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்துத் தெரியவில்லை. அப்படி ஆய்வு மேற்கொண்டு நல்ல முடிவு கிடைத்தால் மட்டுமே வரும் காலங்களில் இப்பணியை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

விதைப்பந்துகள் மூலம் விதைக்கப்படும் மர விதைகளின் முளைப்புதிறன் குறித்துக் கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனத்தின் விஞ்ஞானி சிவக்குமாரிடம் பேசினோம்.      

விதைப்பந்து வீசினால் மரம் வளருமா? ஓர் ஆய்வு...

“காட்டிலுள்ள மரங்களிலிருந்து விழும் விதைகள், தானாகவே முளைத்து இன்னொரு மரமாக வளரக்கூடிய எளிய தொழில்நுட்பம்தான் இது. இப்படி விழும் 100 விதைகளில் 10 விதைகள் முளைக்கும். அதுபோலதான் விதைப்பந்துகளும். இந்த முறையில் விதைகளை நேரடியாகவும் வீசலாம். விதைப்பந்துகளாக்கியும் வீசலாம். ஆனால், அதை எந்தப் பகுதியில் வீசுகிறோம் என்பதுதான் முக்கியம். அதிகப் பரப்பளவில் உள்ள மலைகள் மற்றும் வனப்பகுதிகள்தான் விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்க்க ஏற்றவை. ஏற்கெனவே அந்தச் சூழலில் நன்கு வளர்ந்துள்ள மரங்களின் விதைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

அறிவியல் ரீதியாக, ஈரப்பதம் உள்ள மண்ணில்தான் விதைகள் முளைக்கும். அதனால், தமிழகத்தின் மழை மாதங்களான செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைகளை வீசினால் நல்ல பலன் கிடைக்கும்.

விதைப்பந்து வீசினால் மரம் வளருமா? ஓர் ஆய்வு...வேம்பு போன்ற மரங்களில் ஈரப்பதம் உள்ள விதைகள் கிடைக்கும். இப்படி ஈரப்பதம் உள்ள விதைகளை எடுத்து அப்படியே விதைப்பந்துகளாக்கலாம். கடினமான தோல் கொண்ட விதைகளை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்து விதைப்பந்து தயாரிக்கலாம். அப்போது அந்த விதைகளில் முளைப்புத்திறன் அதிகமாகும்.

வனப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் முளைத்து வரக்கூடிய மரம் வேம்பு. அதையடுத்து புங்கன், கருவேல், வெள்வேல், சந்தனம், சீத்தா போன்ற மரங்கள் வளரக்கூடும். அதனால் இம்மரங்களின் விதைகளைப் பயன்படுத்தி விதைப்பந்து தயாரிப்பது நல்லது.

தரிசு, கட்டாந்தரை, விவசாய நிலங்களில் வீசப்படும் விதைப்பந்துகள் வளர்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால், வீசும் இடங்களிலெல்லாம் விதைகள் முளைத்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பருவம், சூழலுக்கேற்ற மரங்கள், விதைப்புக்கான இடம் ஆகியவை சரியாக இருந்தால் வீசும் விதைப்பந்துகளும் சரியாக முளைக்கும். இதுகுறித்த விவரங்கள் தேவையெனில் எங்கள் அலுவலகத்தை அணுகலாம்” என்றார்.

தொடர்புக்கு, வன மரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூர்.

தொலைபேசி:
0422 2484178

வீரியமான விதைப்பந்து!

விதைப்பந்து தயாரிப்பை மேம்படுத்துவது குறித்து விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் சில விஷயங்களைச் சொன்னார். அவை இங்கே...

விதைப்பந்து வீசினால் மரம் வளருமா? ஓர் ஆய்வு...*தண்ணீரோடு மாட்டுச் சிறுநீர் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

*மாட்டுச்சாணத்தோடு மண்புழு உரம் சேர்த்தால் வீரியம் அதிகரிக்கும்.

*கறையான் புற்று மண்ணைப் பயன்படுத்தினால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

*விதைப்பந்து தயாரிக்கச் சிறிது சாம்பலைச் சேர்த்தும் தயாரிக்கலாம். இல்லையென்றால் விதைப்பந்துகள் ஈர நிலையில் இருக்கும்போது அதன்மீது சாம்பலைத் தூவிவிட்டால் பூச்சிகள் தாக்காது.

*புளி, சப்போட்டா போன்ற மர வகைகளும் இந்த முறையில் நன்றாக வளரும்.

*கடினத் தோல்கொண்ட விதைகளைத் தண்ணீர் கலந்த பஞ்சகவ்யா, மாட்டுச் சிறுநீரில் 2-லிருந்து 4 மணி நேரம் ஊறவைத்துப் பயன்படுத்தலாம்.

விதைப்பந்து தயாரிக்கலாம் வாங்க!

விதைப்பந்து தயாரிப்பது குறித்துப் பேசிய ஜனகன், “வளமான மண் 5 பங்கு, மாட்டுச் சாணம் அல்லது மண்புழு உரம் 3 பங்கு, சிறிதளவு சிறுதானிய விதைகள் (கீரை, மூலிகை விதைகளையும் பயன்படுத்தலாம்) ஆகியவற்றை நன்றாகக் கலந்து, தண்ணீர் ஊற்றிப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்க வேண்டும்.

ஒவ்வொரு உருண்டையின் நடுவிலும் சிறிய பள்ளம் ஏற்படுத்தி, அதில் மர விதையை (இரண்டு விதைகளைக்கூட பயன்படுத்தலாம்) வைத்து மீண்டும் மண் கொண்டு அடைத்து உருண்டைகளாக்க வேண்டும். இதை 2 மணி நேரம் வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயார். இதைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்” என்றார்.

தொடர்புக்கு, ஜனகன்,

செல்போன்:
94890 02820.