Published:Updated:

கரும்புச் சாகுபடி... _ தண்ணீர் செலவைக் குறைக்கும் குழித்தட்டு நாற்று முறை

கரும்புச் சாகுபடி... _ தண்ணீர் செலவைக் குறைக்கும் குழித்தட்டு நாற்று முறை
பிரீமியம் ஸ்டோரி
News
கரும்புச் சாகுபடி... _ தண்ணீர் செலவைக் குறைக்கும் குழித்தட்டு நாற்று முறை

தொழில்நுட்பம்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

யற்கை விவசாயமாக இருந்தாலும் சரி, ரசாயன விவசாயமாக இருந்தாலும் சரி... அதில், சின்னச் சின்ன நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாளும் விவசாயிகள் வெற்றிகரமாக விளைச்சல் எடுத்து வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான் இந்துமதி ரமேஷ்குமார்.    

கரும்புச் சாகுபடி... _ தண்ணீர் செலவைக் குறைக்கும் குழித்தட்டு நாற்று முறை

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி செய்து கரும்புச் சாகுபடி செய்து நிறைவான வருமானம் ஈட்டி வருகிறார். உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள பாப்பான் குளம் கிராமத்தில் இருக்கிறது இந்துமதியின் பண்ணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் குளிர்காற்று... காற்றில் ஆடும் செழிப்பான தென்னை ஓலை மற்றும் கரும்பு பயிர்கள்... விசாலமான களத்து வாசல் கொண்ட அழகிய பண்ணை வீடு... பசுமைக்குடிலுக்குள் அணிவகுத்து நிற்கும் குழித்தட்டு நாற்றங்கால் என அம்சமாக இருந்தது இந்துமதியின் பண்ணை. கணவர் ரமேஷ்குமார் ஓட்டி வந்த காளைகள் பூட்டிய ரேக்ளா வண்டியில் இறங்கி நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தார் இந்துமதி.

மழை பொய்த்ததால் போர்வெல் பாசனம்


“நான் பி.எஸ்ஸி சைக்காலஜி படிச்சிருக்கேன். கல்யாணம் முடிச்சு இந்த வீட்டுக்கு மருமகளா வந்து பத்து வருஷமாச்சு. அமராவதி அணைப் பாசனப்பகுதி இது. ஆண்டு பயிரான கரும்புதான் இங்கே பிராதான வெள்ளாமை.

எப்பவுமே தண்ணீருக்குப் பஞ்சம் இல்லாத ஊரு. கரும்பை நட வேண்டியது உரத்தைப் போட்டு அணைத் தண்ணீரைப் பாய்ச்ச வேண்டியது, விளைஞ்ச கரும்பை வெட்டி அமராவதி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்ய வேண்டியது, இப்படி ஒரே மாதிரியான விவசாயம்தான் இங்க இருந்துச்சு. நஞ்சை விவசாயம் கொழிக்கிற வண்டல் மண் பூமி. இதைப் பழைய நஞ்சைனு சொல்லுவாங்க. ஆனா, இப்போ அந்தச் செழிப்பு இல்ல. ரெண்டு மூணு வருஷமா பருவமழை இல்லை. ஆத்துல தண்ணீர் இல்லை. அதனால, போர்வெல் போட்டுதான் வெள்ளாமையைக் காப்பாத்திட்டு இருக்கோம்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கரும்புச் சாகுபடி... _ தண்ணீர் செலவைக் குறைக்கும் குழித்தட்டு நாற்று முறை

எங்க குடும்பத்துக்கு மொத்தம் 30 ஏக்கர் பூமி இருக்கு. அதுல 10 ஏக்கர்ல கரும்பும், 10 ஏக்கர்ல தென்னையும் இருக்கு. 1 ஏக்கர் பரப்புல பசுமைக்குடில் அமைச்சு தக்காளி போட்டிருக்கோம். கரும்பு நாற்று வளக்குறதுக்காக 40 ஆயிரம் சதுரஅடியில் ஒரு பசுமைக்குடில் இருக்கு. மீதி நிலத்துல மக்காச்சோளம் போட்டிருக்கோம்” என்று முன்னுரை கொடுத்த இந்துமதி தொடர்ந்தார்...

பயிற்சியில் கற்றுக்கொண்ட தொழில்நுட்பம்

“வழக்கமா கரும்பில் இருந்து கரணைகளை வெட்டிதான் நடவு செய்வோம். ஆனா, இப்போ நாத்து உற்பத்தி செஞ்சு நடவு செய்ற முறை பிரபலமாகிட்டு இருக்கு. நாங்க அந்த மாதிரிதான் கரும்பு நடவு செய்றோம். எங்க பகுதியில் பெரும்பாலும் அமராவதி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்குத்தான் கரும்பு அனுப்புவோம்.

இங்க சொந்தமா கரும்பு ஆட்டி வெல்லம், சர்க்கரைனு தயாரிக்கிற பழக்கம் இல்லை. ஆலைக்குக் கரும்பு அனுப்புற விவசாயிகள் ஆலையில் உறுப்பினரா இருப்போம். இப்படிப் பதிவு செஞ்ச விவசாயிகளுக்கு அப்பப்போ ஆலையில் பயிற்சிகள் கொடுப்பாங்க. அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய ரகங்கள், புதிய தொழில்நுட்பங்கள், நீர் மேலாண்மை, உர மேலாண்மை பத்தியெல்லாம் அடிக்கடி சொல்லிக் கொடுப்பாங்க.

அப்படி ஒரு பயிற்சியில் நானும் என் வீட்டுக்காரரும் கலந்துகிட்டப்போதான் கரும்பில் குழித்தட்டுக் கரும்பு நாற்று உற்பத்தி முறையைப் பத்தி தெரிஞ்சுகிட்டோம். ஒரு வாரம் நடந்த அந்தப் பயிற்சியில, குழித்தட்டு நாற்று உற்பத்தி தொழில்நுட்பங்கள், அதனால கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்கிற லாபம்னு விரிவா தெரிஞ்சுகிட்டோம்.   

கரும்புச் சாகுபடி... _ தண்ணீர் செலவைக் குறைக்கும் குழித்தட்டு நாற்று முறை

ஆனா, பயிற்சியில கலந்துகிட்ட விவசாயிகள் இதுல பெரிசா ஆர்வம் காட்டல. ஆனா, நாங்க அதைச் செஞ்சு பார்த்துடறதுனு முடிவு பண்ணினோம்.

நாற்றாக நடவு செய்தால் கூடுதல் மகசூல்

உடனடியா அந்த வேலைகள்ல இறங்கி 40 ஆயிரம் சதுரஅடியில் பசுமைக்குடில் அமைச்சு, தேவையான நீர்ப்பாசன கருவிகளைப் பொருத்தினோம். மொத்தம் 25 லட்ச ரூபாய் செலவாச்சு. தோட்டக்கலைத்துறை மூலமா 12 லட்ச ரூபாய் மானியம் கிடைச்சது. ஆரம்பத்துல 20 ஆயிரம் நாற்றுகள உற்பத்தி செஞ்சதுல 7 ஆயிரம் நாற்றுகள்தான் தேறிச்சு. அதை ஒரு ஏக்கர்ல நடவு செஞ்சோம். வழக்கமா 11 மாசத்துல இருந்து 12 மாசத்துல அறுவடைக்கு வரவேண்டிய கரும்பு, 10 மாசத்துலயே வெட்டுக்கு வந்திடுச்சு. விதைக்கரணை நடவுல ஏக்கருக்கு சராசரியா 40 டன் தான் மகசூல் கிடைக்கும். ஆனா, நாற்றா நடவு செஞ்சபோது சராசரியா 50 டன் மகசூல் கிடைச்சது.

இதையெல்லாம் அக்கம் பக்கத்திலுள்ள கரும்பு விவசாயிகள்கிட்ட எடுத்துச் சொன்னோம். அவங்க எங்ககிட்டயே நாற்று உற்பத்தி செய்து தரச் சொன்னாங்க. அதைச் சோதனை அடிப்படையில் சாகுபடி செஞ்சு பார்த்த விவசாயிகள் நல்ல விளைச்சல் கிடைக்கவும், நாற்று நடவு முறைக்கு மாறிட்டாங்க. இந்த 5 வருஷத்துல நாங்களே லட்சக்கணக்கான நாற்றுகள உற்பத்தி செஞ்சு விற்பனை செஞ்சுருக்கோம். ஒரு நாற்று 1 ரூபாய் 80 காசுனு விலை வெச்சுக் கொடுத்துட்டு இருக்கோம்” என்ற இந்துமதியைத் தொடர்ந்து பேசினார் அவரது கணவர் ரமேஷ்குமார்.   

கரும்புச் சாகுபடி... _ தண்ணீர் செலவைக் குறைக்கும் குழித்தட்டு நாற்று முறை

தண்ணீர் செலவு குறையும்

“பசுமைக்குடில்ல வளரும் ஒரு ஏக்கருக்கான நாற்றுகளுக்கு 23 நாட்கள் மட்டும்தான் தண்ணீர்ப் பாசனம் செய்றோம். அதுவும் ஸ்பிரிங்ளர் மூலமா குறைந்த தண்ணீர்தான். 23 நாட்களுக்கும் சேர்த்தே 1,000 லிட்டர் தண்ணீர்தான் செலவாகும். ஆனா, வயல்ல விதைக்கரணையா நடவு செஞ்சா முதல் மாசம் 4 தடவை பாசனம் செய்ய வேண்டியிருக்கும். திறந்தவெளி வாய்க்கால் பாசனம் செய்றப்போ 4 தடவைக்கும் சேர்த்து 4 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகும். சொட்டுநீர்ப் பாசனமா இருந்தா 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனா, நாற்று உற்பத்தியில் நடவு செய்றப்போ தண்ணீரும் மிச்சமாகுது” என்றார் ரமேஷ்குமார்.

நிறைவாகப் பேசிய இந்துமதி, “நாங்க என்னதான் இயற்கை முறையில நாற்றுகள் உற்பத்தி செஞ்சு கொடுத்தாலும் பெரும்பாலான விவசாயிங்க அதை வயலில் நடவு செய்து ரசாயன இடுபொருள்களைத் தான் பயன்படுத்துறாங்க. முடிந்தவரை இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்துங்கனு சொல்றோம். இயற்கை விவசாயத்துல கரும்பு நாற்றுகள் மூலமா சாகுபடி செய்யும்போது தரமான விளைச்சல் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடைகொடுத்தார்.

நாற்றுகளை உற்பத்தி செய்வது எப்படி?

குழித்தட்டில் நாற்று உற்பத்தி செய்வது குறித்துப் பேசிய இந்துமதி, “ஒரு குழித்தட்டில்(ட்ரே) 50 குழிகள் இருக்கும். ஒன்றரை கிலோ செறிவூட்டம் செய்யப்பட்ட தென்னை நார்க்கழிவு, 100 கிராம் சலித்த சாணம், 100 கிராம் கோழி எரு, 1 கிராம் சூடோமோனஸ், 1 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழித்தட்டில் உள்ள குழிகளில் பாதியளவு நிரப்ப வேண்டும்.

60 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீர், 100 கிராம் கல் சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து கரைசலை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பரு விதைக்கரும்பில் உள்ள விதைப்பருக்களை மட்டும் வெட்டியெடுக்க வேண்டும். இதை, கரைசலில் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து உலர்த்த வேண்டும். பிறகு, குழித்தட்டில் உள்ள குழிகளில் குழிக்கு ஒன்றாக விதைக்க வேண்டும். அதன்பிறகு, தென்னைநார் கழிவு கொண்டு விதைப்பரு மறையுமாறு மூட வேண்டும். 

விதைத்த குழித்தட்டுகளைப் பசுமைக்குடிலுக்குள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி காற்று, வெளிச்சம், ஈரம் மூன்றும் படாதவாறு படுதாவால் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இப்படி மூடி வைத்தால்தான் பூஞ்சணம் தாக்காமல் இருக்கும். 7 நாட்கள் கழித்துப் படுதாவை எடுத்துவிட வேண்டும். இப்போது பருக்கள் முளைத்துக் காணப்படும்.

தொடர்ந்து பசுமைக்குடிலுக்குள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ‘பெட்’டில் குழித்தட்டுகளை வரிசையாக வைத்து தினமும் ஸ்பிரிங்ளர் மூலம் பாசனம் செய்ய வேண்டும். 25 நாட்களுக்கு மேல், குழிகளில் உள்ள அடர்த்தியான நாற்றுகளை அகற்றி தரமான நாற்றுகளை மட்டும் வைத்துப் பராமரிக்க வேண்டும். நடவுக்கு முன் நாற்றுகளின் நுனியை மட்டும் வெட்டி விடவேண்டும். பிறகு, வயலில் நடவு செய்ய வேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட ஒரு நாற்றிலிருந்து 20 கரும்புகள் கிளைத்துவரும்.

ஒரு கரும்பில் 10 விதைப்பருக்கள் எடுக்கலாம். ஒரு குழித்தட்டுக்கு 5 தாய் கரும்பு தேவைப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்ய 6,500 முதல் 7 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும். ஒரு ஏக்கருக்கு 150 குழித்தட்டுக்களில் விதைக்க வேண்டும். எப்படிப் பக்குவம் செய்தாலும் 80 சதவிகித அளவில்தான் தரமான நாற்றுகள் தேறும்” என்றார் இந்துமதி.

பஞ்சகவ்யாவில் தயாராகும் நாற்றுகள்

“ஒரு ஜோடி காங்கேயம் காளைகளும், நான்கு நாட்டு மாடுகளும் எங்க பண்ணையில இருக்கு. சுத்தமான நாட்டுப்பசுவில் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் ஐந்தையும் பயன்படுத்திதான் பஞ்சகவ்யா தயாரிக்கிறோம்.
 
இதுல தென்னைநார்க் கழிவை நனைச்சுதான் நாத்துகள உற்பத்தி செய்றோம். அதனால, கரும்புல வேர்கரையான் நோய், பூஞ்சாண் தாக்குதல் வரவே வராது” என்கிறார் இந்துமதி.