Published:Updated:

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11
பிரீமியம் ஸ்டோரி
News
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11

தன்னிறைவு... தற்சார்பு, வளங்குன்றா தன்மை... - மாற்றுச்சந்தையின் தாரக மந்திரங்கள்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

ளரும் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின்மீது திணிக்கப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், அந்நாடுகளில் உள்ள விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பது குறித்துத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ‘இந்த விஷயங்கள் நமக்குத் தேவையா?’ என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால், மாற்று இயற்கை வேளாண் சந்தைகளைக் கட்டமைக்க விரும்புபவர்கள், கண்டிப்பாக வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘எவற்றால் நாம் கட்டப்பட்டுள்ளோம்?’ என்று தெரிந்தால்தானே அவற்றைக் களைந்து மாற்றுச் சந்தைகளைக் கட்டமைக்க முடியும்.   

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11

சமீபத்தில் தெலங்கனா மாநிலம், ஹைதராபாத் நகரில் ‘மண்டலப் பொருளாதாரப் புரிந்துணர்வு ஒப்பந்தம்’  (RCEP) தொடர்பான கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவின் பால் வணிகம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள்தான் உலகின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அளவு பாலை உற்பத்தி செய்கின்றன. அந்த நாடுகளில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிகளவில் மானியம் கிடைப்பதால், உற்பத்திச் செலவு மிக மிகக்குறைவு. அதுபோன்ற நாடுகளின் பாலுக்கு இந்தியாவில் இறக்குமதிக்கான வரிச்சலுகை அளிக்கப்பட்டால்... நம் நாட்டின் பால் விலையைவிட மிகக் குறைவான விலைக்கு அந்தப் பால் சந்தைப்படுத்தப்படும். அதனால் இந்தியாவில் பால் உற்பத்தி செய்யும் 15 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

நமது நாடுகளில் ஓரிரு மாடுகளை வளர்த்து பால் உற்பத்தி செய்பவர்கள்தான் அதிகம். அதனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை கோடிகளில் இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் மொத்தப் பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையே வெறும் ஆறாயிரம்தான். நியூசிலாந்தில் மொத்தமே பன்னிரெண்டாயிரம் நபர்கள்தான். அந்த நாடுகளில் ஒவ்வொரு பால் உற்பத்தியாளரும் நூறு, ஆயிரம் என்ற கணக்கில் மாடுகளை வளர்க்கிறார்கள். அந்த அளவுக்குக் கடனும் மானியமும் தாராளமாக அவர்களுக்குக் கிடைக்கின்றன.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11

அந்நாடுகளின் பாலை இந்தியாவில் விற்பனை செய்யும்பட்சத்தில் பெரு நிறுவனங்களுக்குச் சாதகமான சுகாதார விதிகளை நம் அரசின் சம்மதத்துடன் வடிவமைப்பார்கள். ஆனால், அங்கிருந்து இங்கு அனுப்பப்படும் பால் கெட்டுப்போகாமல் இருக்கக் கலக்கப்படும் ரசாயனங்கள் குறித்து மூச்சு விடமாட்டார்கள். இதையெல்லாம் நாம் புரிந்துகொள்வதற்கு முன்பே நம் நாட்டுப் பால் உற்பத்தியாளர்களில் கோடிக்கணக்கானோர் அந்தத் தொழிலிலிருந்து தூக்கி வீசப்பட்டிருப்பார்கள். இதே நிலைதான் அனைத்து விளைபொருள்களுக்கும் ஏற்படும். அதோடு துணி, மருந்து என அனைத்துமே நம்மீது திணிக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11இதுபோன்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வரும்போது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வளரும் நாடுகள் இறக்குமதி வரியை அதிகப்படுத்துவதை வளர்ந்த நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. வளர்ந்த நாடுகளில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள், அரசாங்கத்தையே விலைக்கு வாங்கக்கூடிய வல்லமை படைத்தவை. அதற்கு உதாரணமாக, ‘வாழைப்பழப் போர்கள்’ (Banana Wars) குறித்துச் சொல்லலாம்.

உலகம் முழுவதும் அதிகம் விற்பனையாகும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. மேலை நாடுகளில் அது விரும்பிச் சாப்பிடப்படுகிறது. 1800-களில் மலிவான உணவுப் பொருளாக வாழைப்பழம் இருந்தது. 1905-ம் ஆண்டு முதல் 1910-ம் ஆண்டு வரை மேலை நாட்டு நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் வாழைப்பழ வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. அந்த நிறுவனங்கள், வாழைப் பழங்கள் அதிகம் விளைந்த மத்திய அமெரிக்காவிலுள்ள ஹாண்டுராஸ் அரசைத் தங்கள் கைப்பாவையாக்கின. அந்நாட்டின் போக்குவரத்து, நிர்வாகம் அனைத்தும் இந்த நிறுவனங்களின் கைக்கு வந்தன.   

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11

இதேபோல, கோஸ்டாரிகா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் அந்த நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தின. இவற்றின் அடிப்படையில்தான் ‘வாழைப்பழக் குடியரசு’ (Banana Republic) என்ற சொல்லே உருவானது. நிலையற்ற நிறுவனங்களின் நலனுக்காகச் செயல்படும் பொம்மை அரசாங்கம், ஓரிரு பொருள்களை நம்பி நாட்டின் பொருளாதாரத்தை வைத்திருப்பதைக் குறிப்பதற்காக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

இப்படிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் ஒன்று மட்டுமே குறி. அதற்காக எதை வேண்டுமானாலும் இந்த நிறுவனங்கள் செய்யும். இப்படிப்பட்டவர்கள் கட்டமைக்கும் வெகுஜனச் சந்தைகள் சூழ்ச்சிகள் நிறைந்தவையாகத்தான் இருக்கும். அதற்கு மாற்றாக அறம் நிறைந்த, அண்மைச் சந்தைகளைக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

நம் நாட்டில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை வர்த்தகம் சமூகத்தின் பொறுப்பாகத்தான் இருந்தது. 90-ம் ஆண்டுகளில் நடந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, மேலை நாடுகளின் வர்த்தகக் கலாசாரம் இங்கும் ஊடுருவத் தொடங்கிவிட்டது. கட்டற்ற வணிகம், பல அடுக்கு விநியோகச் சங்கிலி ஆகியவை வெகுஜனச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டன. நுகர்வோருக்கும், உற்பத்தியாளருக்கும் பயன்படாத இதுபோன்ற சந்தைகள் உலகம் முழுக்கவே உள்ளன. அவை, பெரு நிறுவனங்களையும் இடைத்தரகர்களையும் மட்டுமே கொழிக்கச் செய்கின்றன. இதனால், பகுத்தறிவுக்கு ஒத்துவராத விலை நிர்ணயம், நச்சுத்தன்மை, கலப்படம், உணவுப்பொருள் குறித்த வெளிப்படையான தகவல் இல்லாமை, நுகர்வோருக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லாமை ஆகியவை உள்ளிட்ட பல பிரச்னைகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

உணவுப் பொருள்களின் தட்டுப்பாட்டை நீக்குவதற்காகவும் வேளாண் சார்ந்த தொழிலமைப்புகளின் வளர்ச்சிக்காகவும் தீட்டப்படும் திட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பாதிக்கக் கூடியவையாகத்தான் இருக்கின்றன. அதேபோல, அரசின் ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களும், விவசாயிகளின் தலையில்தான் விடிகின்றன. சந்தைக்குச் சம்பந்தமே இல்லாதவராக உணவை உற்பத்தி செய்யும் விவசாயி மாற்றப்படுகிறார்.

விவசாயிகள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், சுற்றுச்சூழல், தரம், உடல்நலன், மாற்று எரிசக்தி, நியாயவிலை... என எதைப்பற்றியும் கவலையில்லாமல்தான் வெகுஜனச் சந்தை இயங்கி வருகிறது.

பசுமைப் புரட்சியும் பணப்பயிர்களின் மீதான கவர்ச்சியும் விவசாயிகளை ஒற்றைப் பயிர்ச் சாகுபடிக்கு மாற்றிவிட்டதால், தங்களது உணவுத்தேவைக்கே வெகுஜனச் சந்தையைச் சார்ந்திருக்கிறார்கள், விவசாயிகள். அதோடு தான் செய்யும் விவசாயத்துக்கும் விதை முதல் விற்பனை வரை அச்சந்தையையே அவர் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

இந்த அவல நிலையை மாற்ற மிகச் சிறந்த வழி, சந்தையை ஜனநாயகப்படுத்துவதுதான். அதாவது பெரு நிறுவனங்கள் கையிலிருக்கும் சந்தையை, விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கைகளுக்கு மாற்றி, நுகர்வோருக்கும், உற்பத்தியாளருக்குமான இடைவெளியைக் குறைக்கவேண்டும். தன்னிறைவு, தற்சார்பு, வளங்குன்றா தன்மை ஆகியவைதான் நம் தாரக மந்திரங்களாக இருக்க வேண்டும்.

- விரிவடையும்  

அடகு வைக்கப்படும் தேசத்தின் இறையாண்மை!

ண்டலப் பொருளாதாரப் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த கூட்டம் நடந்த அதே வேளையில்... ‘தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் மண்டலப் பொருளாதாரப் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக் குழு’ சார்பில் ஹைதராபாத் நகரில் எதிர்ப்புக் கூட்டமும் நடைபெற்றது. ஜூலை 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் கலந்துகொண்டன.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், தொழிற்சங்கவாதிகள், தொழிலாளர்கள், சிறுகடைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சூழல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள்... எனப் பலரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், ‘வேளாண்மை மற்றும் விவசாயிகள்’, ‘தொழிலமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள்’, ‘சேவைகளைப் பெறுவது’, ‘பெண்களும் தடையற்ற ஒப்பந்தங்களும்’, ‘தலித் மக்களும், தடையற்ற ஒப்பந்தங்களும்’, ‘பழங்குடிகளும், இயற்கை வளங்களும்’ போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன. அதோடு ஊர்வலம், போராட்டம் ஆகியவையும் நடைபெற்றன.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட யோகேந்திர யாதவ், கவிதா குருகந்தி, கிரண் விஸ்ஸா, டாக்டர் பிரசாத் ராவ், டாக்டர் செங்குப்தா, அதுல்குமார் அஞ்சன், லீனா மெங்கானே, ரஞ்சா செங்குப்தா, விஜு கிருஷ்ணன் உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருமே, மண்டலப் பொருளாதாரப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்துமே நம் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் நாசமாக்குகின்றன என்றே முழங்கினர்.
‘இதுபோன்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், பொதுமக்கள் அரங்கம், பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் என எவற்றிலும் விவாதிக்கப்படாமலே கையெழுத்தாகின்றன. நம்முடைய பெயரால் நமக்குத் தெரியாமலேயே தேசத்தின் இறையாண்மை அடகு வைக்கப்படுகிறது’ என்ற கருத்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதோடு ‘இந்தியா மண்டலப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பிற தடையற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த ஆவணங்களை மக்கள் பார்வைக்கு வைத்து விவசாயச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற மக்கள் அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும்; இவை குறித்து நாடாளுமன்றத்தில் இந்திய அரசு விவாதிக்க வேண்டும்; மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்; நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் எந்தவித தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும் இந்தியாவில் நடைமுறைபடுத்த முடியாத வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்; அனைத்து மாநில அரசுகளும், மாநிலக் கட்சிகளும் இந்த ஒப்பந்தங்கள் குறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்’ போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மருந்துகளின் விலை உயரும் அபாயம்!

‘விவசாயத்தை அழிக்கவரும் புதிய பூதம்’ என்ற தலைப்பில், 25.07.2017-ம் தேதியிட்ட பசுமை விகடன் இதழில், ‘மண்டலப் பொருளாதாரப் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ (RCEP) குறித்து எழுதியிருந்தோம்.

கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பான 19-ம் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் 10 ஏசியன் (ASEAN) நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா ஆகிய 6 தடையற்ற வர்த்தகக் கூட்டாளி நாடுகளும் கலந்துகொண்டன. கூட்டத்தில் சரக்கு, சேவைகள் சார்ந்த வணிகம், முதலீடு ஆகிய மூன்று தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன. அவற்றின் கிளைகளாக அறிவுசார் சொத்துரிமை, மின்னணு வர்த்தகம், சட்டம் மற்றும் அமைப்புசார் பிரச்னைகள் போன்றவை குறித்தும் விவாதங்கள் நடந்தன. அதோடு, அரசு சார்பில், வர்த்தக அமைப்புகளின் கூட்டம் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட 16 நாடுகளையும் உள்ளடக்கிய மண்டலத்தில் சமச்சீரான முறையில் வர்த்தக வாய்ப்புகள், வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்க இந்த ஒப்பந்தம் உதவ வேண்டும் என இந்திய வர்த்தகத் துறையின் செயலர் ரீடா தியோதியா கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

ஆனால், 2002-ம் ஆண்டிலிருந்து நடந்துவரும் இந்தத் தடையற்ற வர்த்தகம் குறித்த பேச்சு வார்த்தைகள் விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு எதிரானதாகவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாகச் சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் பேச்சு வார்த்தைகள் குறித்த ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாமல், மிகுந்த ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்த 16 நாடுகளின் அமைச்சர்களுக்கான கூட்டம் நடக்கவிருக்கிறது. அதில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதன் விளைவுகளில் ஒன்றாக, பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் ஊடுருவும் காரணத்தால், இந்தியாவில் மருந்துகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.