Published:Updated:

அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!

அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!

கண்டுபிடிப்புஇ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாசனத்துக்கும் குடிநீருக்குமான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வது தாமிரபரணி ஆறு. இதன் நீரைக்கொண்டு இப்பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. செழிப்பாக நெல் விளையும் பூமி என்பதால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலேயே நெல் ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டிருக்கிறது.    

அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!

இந்த ஆராய்ச்சி நிலையத்தில் வெளியிடப்பட்ட பல ரகங்கள், விவசாயிகளால் விரும்பிச் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு வெளியிடப்பட்ட சில ரகங்கள் வெளிநாடுகளிலும் பரவியிருக்கின்றன. இத்தகைய சிறப்பு மிகுந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் ஆறுமுகச்சாமியைச் சந்தித்து இங்கு உருவாக்கப்பட்டுள்ள ரகங்கள் குறித்துப் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!



“தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையிலுள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தைத் தலைமையகமாகக்கொண்டு, கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்திலுள்ள நெல் ஆராய்ச்சித் துறை, அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திரூர்குப்பம் நெல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அம்பாசமுத்திரம் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட மூன்றாவது நெல் ஆராய்ச்சி நிலையமாகும். இது 1937-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1943-ம் ஆண்டில் ‘ஏ.எஸ்.டி-1’ (அம்பை-1) என்ற ரகம்தான் இந்நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட முதல் ரகம்.

1943-ம் ஆண்டிலிருந்து 1997-ம் ஆண்டு வரை குட்டை, பருமன் ரகங்களில் 9, மத்தியச் சன்ன ரகங்களில் 11 என மொத்தம் 20 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 9 சிவப்பு அரிசி ரகங்கள். மீதி 11  வெள்ளை அரிசி ரகங்கள். இங்கு 8 ஏக்கர் பரப்பில் புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சித் திடல் அமைந்துள்ளது. 10 ஏக்கர் பரப்பில் விதைப் பெருக்கத்துக்காக அம்பை 16, 18 மற்றும் 19 ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.   

அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!

இங்கு வெளியிட்டுள்ளவற்றில் ஏ.எஸ்.டி-1 (ASD-1) முதல் ஏ.எஸ்.டி-10 வரையிலான நெல் ரகங்கள், தேர்வு செய்யப்பட்ட ரகங்கள். ஏ.எஸ்.டி-1 என்பது சிவப்புக்கார் சம்பா. ஏ.எஸ்.டி-5 கார்த்திகைச் சம்பா. ஏ.எஸ்.டி-8 தூயமல்லி. இவை மூன்றும் பாரம்பர்ய ரகங்களிலிருந்து உருவாக்கப்பட்டவை. ஏ.எஸ்.டி-11 முதல் ஏ.எஸ்.டி-20 வரையிலானவை ஒட்டு ரகங்கள்” என்ற ஆறுமுகச்சாமி தொடர்ந்தார்...

“ஒட்டு ரகங்களில் ஒன்றான ஏ.எஸ்.டி-16 (அம்பை-16) 1986-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது 30 ஆண்டுகளைக் கடந்து, இன்றும் பெருவாரியான விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் அதிகம் விற்பனையாகக்கூடிய ரகம் இதுதான்.  

அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!

கார் பருவத்தில் முக்கால்வாசி நெல் விவசாயிகள் அம்பை-16 ரகத்தைத்தான் நடவு செய்கிறார்கள். இந்த ரகம் குறைவான தண்ணீரிலும் செழித்து வளரும். மண்ணிலுள்ள சத்துகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய ரகம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கார் பருவத்துக்கும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பிசானம் பருவத்துக்கும் இந்த ரகம் ஏற்றது. இதன் வயது 115-லிருந்து 120 நாள்கள்.  இது குட்டை மற்றும் பருமனான அரிசியைக் கொண்டிருக்கும். இதை விவசாயிகள் ‘பெருவெட்டு அரிசி’ என்பார்கள். ஒற்றை நாற்று முறை நடவுக்கு ஏக்கருக்கு 3 கிலோ விதைநெல் தேவை. இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு 15 கிலோ விதைநெல் தேவை. சாதாரண நடவுக்கு ஏக்கருக்கு 25 கிலோ முதல் 30 கிலோ வரை விதைநெல் தேவைப்படும். 1990-களில் இந்த ரகத்தில் ஏக்கருக்கு 16 டன் வரை மகசூல் எடுத்து விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர். தற்போது ஏக்கருக்குக் குறைந்தபட்சமாக 3 டன் அளவும் அதிகபட்சமாக 4 டன் அளவும் மகசூல் கிடைத்து வருகிறது. இந்த நெல்லை அரைக்கும்போது 80 சதவிகிதம் வரை அரிசி கிடைக்கும்.

இந்த ரகத்தில் நெற்கதிர்கள் அறுவடை வரை சாயாமல் இருப்பதால் இயந்திரம்மூலம் எளிமையாக அறுவடைசெய்ய முடியும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் இந்த அரிசியைத்தான் சாப்பாட்டுக்கு அதிகம் பயன்படுத்தி வந்தனர். பிறகு சன்ன ரக மோகத்தில் இதைக் கைவிட்டு விட்டனர். ஆனாலும் இட்லி, தோசை, முறுக்கு ஆகியவற்றுக்கு ‘இட்லி அரிசி’யாக அதிகம் விற்பனையாகிறது. கேரள மாநில மக்கள் மீன் குழம்புடன் இந்த அரிசி சோற்றைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.   

அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!

கடந்த 7 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் குறைந்த கால வயதுடைய கார் பருவத்துக்கு ஏற்ற ‘அம்பை-21’ என்ற நெல் ரகத்தைக் கண்டுபிடித்துள்ளோம். தற்போது இந்த ரகத்தைப் பல்முனை ஆராய்ச்சிக்காகத் தமிழகத்திலுள்ள முக்கிய ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் கல்லூரிகள் ஆகியவற்றுக்குச் சோதனைக்காக அனுப்பியுள்ளோம். அடுத்ததாக, ‘அனுசரணை ஆராய்ச்சி’க்காகத் தமிழகம் முழுவதும் 150 விவசாயிகளின் நிலத்தில் பயிர் சோதனை செய்து, 2022-ம் ஆண்டில் இந்த ரகத்தை வெளியிட இலக்கு வைத்துள்ளோம்.    

அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!

எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் தனியாக ‘பயிர் மருத்துவ மையம்’ ஒன்று செயல்பட்டு வருகிறது. நெல், தென்னை, வாழை, காய்கறிகள், மலர்கள் போன்ற பயிர்களில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்கினால் பாதிக்கப்பட்ட செடிகளை விவசாயிகள் இங்கு கொண்டு வந்து கொடுப்பார்கள். அவற்றை இம்மையத்திலுள்ள பூச்சியியல் மற்றும் நோயியல் துறைப் பேராசிரியர்கள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவார்கள். அதோடு ஒவ்வொரு பருவத்திலும் பயிர்களைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள் மற்றும் அவற்றின் அறிகுறிகள் குறித்து மாவட்டத்திலுள்ள வட்டார வேளாண் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புகிறோம். இதோடு ரேடியோ மூலமும் விவசாயிகளுக்கு ஆலோசனை சொல்லிவருகிறோம்” என்ற ஆறுமுகச்சாமி நிறைவாக,

“தற்போது ஏ.எஸ்.டி (அம்பை) 1, 2, 3, 7, 8, 9, 16, 18, 19 மற்றும் 20 ஆகியவற்றின் ‘மாதிரி விதைநெல்’ எங்கள் ஆராய்ச்சி நிலைய விதைச் சேமிப்புக் கிடங்கில் உள்ளது. இதை விதைப்புக்காக விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிலையத்தில் ஆண்டுதோறும் 35 டன் அளவு  விதைநெல்லை விற்பனை செய்து வருகிறோம். இந்த ரகங்கள் குறித்துத் தகவல்கள் தேவைப்படும் விவசாயிகள், எங்கள் முகவரிக்கு அஞ்சல் அட்டையில் எழுதிப்போட்டாலே போதும். நாங்கள் உரிய தகவல்களைக் கொடுப்போம். தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்” என்றார்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம் – 627 401, திருநெல்வேலி மாவட்டம். 

தொலைபேசி: 04634 250215

அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!

உலகளவில் பிரசித்தி பெற்ற ஏ.எஸ்.டி-7 

புகையான் தாக்குதலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நெல் ரகங்கள் குறித்துப் பேசிய அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மையப் பூச்சியியல் துறை பேராசிரியர் அரியவனம் காத்தபிள்ளை, “1945-ம் ஆண்டில் எங்கள் மையம் மூலம் வெளியிடப்பட்ட ‘ஏ.எஸ்.டி-7’ என்ற ரகம், புகையான் தாக்குதலை எதிர்த்து வளரக்கூடியது. அதே நேரத்தில் கணிசமான மகசூலையும் தரும். இது மற்ற ரகங்களுடன் சேர்த்து மரபியல் இனவிருத்தி செய்யவும் ஏற்றது.

கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளின் பாரம்பர்ய ரகங்களுடன் இந்த ஏ.எஸ்.டி-7 ரக நெல்லைச் சேர்த்துப் புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஏ.எஸ்.டி-8, ஏ.எஸ்.டி-9, ஏ.எஸ்.டி-11 ஆகிய ரகங்களும் புகையான் தாக்குதலுக்கான எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனாலும் ஏ.எஸ்.டி-7 ரக நெல்தான் அனைத்தையும்விட சிறந்ததாக இருக்கிறது” என்றார்.

வீரிய ஒட்டுரக நெல் ஆராய்ச்சி!

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கோ.ஆர்.எச்-1, கோ.ஆர்.எச்-2, கோ.ஆர்.எச்-3, கோ.ஆர்.எச்-4 ஆகிய வீரிய ஒட்டு ரகங்களும்; ஆடுதுறை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஏ.டி.டீ.ஆர்.எச்-1 என்ற வீரிய ஒட்டு ரகமும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் கோ.ஆர்.எச்-3 மற்றும் கோ.ஆர்.எச்-4 ஆகிய இரண்டு நெல் ரகங்களை விவசாயிகள் பரவலாகப் பயிரிடுகிறார்கள். இந்த 5 வீரிய ஒட்டு ரகங்களை விடவும் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய வீரிய ஒட்டு ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.