Published:Updated:

தாராள வருமானம் தரும் தர்பூசணி! - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்!

தாராள வருமானம் தரும் தர்பூசணி! - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தாராள வருமானம் தரும் தர்பூசணி! - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்!

மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்

கோடைகாலத்தில் அதிகளவு விற்பனையாகும் பழங்களில் ஒன்று தர்பூசணி. இது இனிப்புச் சுவையோடு கூடிய நீர்ச்சத்து கொண்டிருப்பதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதனால் இதற்கான சந்தை வாய்ப்பு பெருகி வருகிறது. இதை மனதில் நிறுத்தி, தர்பூசணி சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டியிருக்கிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சிவானந்தம்.     

தாராள வருமானம் தரும் தர்பூசணி! - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்!

இவர் வீரிய ரக பச்சைத் தர்பூசணியை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சியிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காயாமொழி கிராமத்தில் இருக்கிறது சிவானந்தத்தின் தோட்டம்.

ஒரு காலைவேளையில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த சிவானந்தத்தைச் சந்தித்தோம். “நான் கல்லூரிப் படிப்பு முடிச்சுட்டு கோயம்புத்தூர்ல வேலைக்குச் சேர்ந்துட்டேன். ஆனா, கிராமத்துச் சூழல்ல இருந்து பழகின எனக்கு, அந்த நகரச்சூழல் ஒத்துக்கல. அப்படியே ரெண்டு மனசோட ஏழு வருஷத்தை ஓட்டிட்டு ஊர் திரும்பிட்டேன். அப்பா, அம்மாவுக்கு வயசாகிட்டதால அவங்களால விவசாயம் செய்ய முடியலை.  படிக்கும்போதே விவசாய வேலைகளையும் செஞ்சு பழகியிருந்ததால, குடும்பத்தொழிலான விவசாயத்தைக் கையிலெடுத்தேன்.

தாத்தா காலத்துல குப்பை உரத்தைத்தான்  நிலத்துல போடுவாங்க. பூச்சிங்க வந்தா அடுப்புச் சாம்பலைத் தூவி விடுவாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ரசாயன உரம் புழக்கத்துக்கு வந்ததும் அதுக்கு மாற ஆரம்பிச்சோம். அப்பா காலத்துல ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு பயன்படுத்தினாலும் தொழுவுரத்தையும் அடுப்புச்சாம்பலையும் பயன்படுத்துறதை நிறுத்தல. கிட்டத்தட்ட இயற்கை பாதி, செயற்கை பாதிங்கிற முறைதான். நானும் அதே மாதிரி விவசாயம் செஞ்சுட்டு இருந்தேன்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தாராள வருமானம் தரும் தர்பூசணி! - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்!

எங்களுக்குப் பக்கத்துத் தோட்டம் சக்தி குமார்ங்கிறவருக்குச் சொந்தமானது. அவர்தான் என்னை இயற்கை விவசாயத்துக்கு மாறச்சொல்லி இயற்கை இடுபொருள்கள் பத்தி சொல்லிக்கொடுத்தார்.

பக்கத்துல இருக்குற நாலுமாவடி கிராமத்துல, எங்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல வழக்கமா நெல் போடுவோம். மூணு வருஷத்துக்கு முன்னாடி நெல் பயிர்ல நோய் தாக்கி இலைகளெல்லாம் பழுப்பு நிறமா மாற ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்துலதான் மோர் கரைசலையும் ஜீவாமிர்தத்தையும் தெளிச்சுப் பாத்தேன். அதுல நல்ல பலன் கிடைச்சது. அதுக்கப்புறம் தான் இயற்கை விவசாயத்துல எனக்கு நம்பிக்கை வந்தது. அதிலிருந்தே முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன்” என்று தான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன சிவானந்தம் தொடர்ந்தார்.

“இங்க (காயாமொழி கிராமத்தில்) 3 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல 2 ஏக்கர் நிலத்துல எலுமிச்சை நட்டு ஒரு வருஷம் ஆகுது. ஒரு ஏக்கர் நிலத்துல  தர்பூசணியைச் சாகுபடி செய்து அறுவடை செய்தாச்சு. இந்த வருஷம் மாசிப்பட்டத்துல வீரிய ரக தர்பூசணியைப் போட்டேன். இந்த ரகத் தர்பூசணிக்குச் சந்தையில் தனி வரவேற்பு இருக்கு.

வழக்கமா எல்லோரும் விதைக்கிற தர்பூசணி 2 கிலோ எடையில் இருந்து 14 கிலோ எடை வரை இருக்கும். ஆனா, வீரிய ரகத் தர்பூசணி அரைக்கிலோ எடையிலிருந்து அதிகபட்சம் 3 கிலோ எடை வரைதான் இருக்கும். அதனால, ஒரு குடும்பத்துக்கு இது போதுமானதாக இருக்கும். அதனாலதான் இதை எல்லோரும் விரும்பி வாங்குறாங்க. அதில்லாம இந்தப் பழம் அடர் சிவப்பு நிறத்துல அதிக இனிப்புச் சுவை உடையதாவும் இருக்கிறதால தனி மவுசும் இருக்கு” என்ற சிவானந்தம் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.   

தாராள வருமானம் தரும் தர்பூசணி! - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்!

“ஒரு ஏக்கர் நிலத்துல மொத்தம் 12,483 கிலோ பழங்கள் மகசூலாச்சு. இயற்கை அங்காடிகள்ல சின்ன சைஸ் பழங்களைக் கிலோ பத்து ரூபாய்னு வாங்கினாங்க. பெரிய சைஸ் பழங்களைக் கிலோ 17 ரூபாய்னு வாங்கினாங்க. மொத்த அறுவடையில 1,070 கிலோ அளவுக்கு இருந்த சின்னப் பழங்களை விற்பனை செஞ்சதுல 10,700 ரூபாய் கிடைச்சது. மீதி, 11,413 கிலோ பழங்களைக் கிலோ 17 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 1,94,021 ரூபாய் கிடைச்சது. ஆக மொத்தம் 2,04,721 ரூபாய் வருமானமாகக் கிடைச்சது. இதுல எல்லாச் செலவும் போக 1,79,221 ரூபாய் லாபமாகக் கிடைச்சிருக்கு” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

நிறைவாகப் பேசிய சிவானந்தம், “வழக்கமா எல்லோரும் சாகுபடி செய்ற தர்பூசணியை நானும் சாகுபடி செஞ்சிருந்தா, இந்த விலை கிடைச்சிருக்காது. சந்தையில் தேவையுள்ள ரகத்தைத் தெரிந்துகொண்டு சாகுபடி செஞ்சதாலதான் நல்ல விலை கிடைச்சிருக்கு. எங்க பகுதியில் இந்த ரகத்தை ரொம்பக் குறைச்சலாத்தான் சாகுபடி செய்றாங்க. அதனாலதான் தனிச்சு இருக்கணும்னு, நான் இந்த ரகத்தை விதைச்சேன். அடுத்த வருஷம் மூணு ஏக்கர் நிலத்துல இதே ரகத் தர்பூசணியை விதைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்றார் கண்களில் நம்பிக்கை பொங்க.   

தொடர்புக்கு, சிவானந்தம், செல்போன்: 89032 16504 

நவதானியக் கரைசல்

கசூலைக் கூட்டுவதற்காக ‘ஜீரோபட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கர் சொன்ன மந்திரக் கரைசல் இது. கோதுமை, எள், தட்டைப்பயறு, பாசிப்பயறு, முழு உளுந்து, கொண்டைக்கடலை, மொச்சை, கானம், மக்காச்சோளம் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் எள்ளைத் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து முளைகட்ட விட வேண்டும். எள் முளைக்கத் தாமதமாகும் என்பதால், எள்ளை மட்டும் ஒரு நாள் முன்பாகத் தனியாக முளைகட்டவிட வேண்டும். (தானியங்களை வெள்ளைத்துணியில் போட்டுக் கட்டி, ஒருநாள் முழுக்கத் தண்ணீரில் மூழ்கும்படி வைத்திருந்து, மறுநாள் வெளியில் எடுத்து வைத்தால் முளை கட்டிவிடும்.) முளைகட்டிய அனைத்துத் தானியங்களையும் சேர்த்து ஆட்டு உரலில் இட்டுக் கூழ் பதத்தில் ஆட்டி எடுத்து, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் வைத்திருந்து, அடுத்த நாள் காலை நேரத்தில் பயிர்கள்மீது தெளிக்க வேண்டும்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்...

ரு ஏக்கர் நிலத்தில் வீரிய ரகத் தர்பூசணியைச் சாகுபடி செய்யும் விதம் குறித்துச் சிவானந்தம் சொல்லிய தகவல்கள் பாடமாக இங்கே...

“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தைச் சட்டிக்கலப்பை கொண்டு உழுது 10 நாள்கள் காயவிட வேண்டும். பிறகு ரோட்டோவேட்டர் கொண்டு உழுது 10 நாள்கள் காயவிட வேண்டும். பிறகு 6 அடி இடைவெளியில் அரை அடி ஆழம் ஓர் அடி விட்டம் இருக்குமாறு குழிகள் எடுத்துச் சொட்டு நீர்க் குழாய்களை அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் 1,200 குழிகள் வரை எடுக்க முடியும். ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ அளவு மட்கிய எருவைப்போட்டு மேல் மண்கொண்டு குழியை நிரப்பி 5 நாள்கள் ஆறவிட வேண்டும். பிறகு தண்ணீர் பாய்ச்சிக் குழிகளை ஈரமாக்கிவிட்டு மறுநாள் ஒரு குழிக்கு 3 விதைகள் வீதம் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை போதுமானது.

விதைத்த 5-ம் நாளுக்குமேல் முளைப்புத் தெரியும். 10-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 12-ம் நாளுக்குமேல் இலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கக்கூடும். இலைகளில் துளைகள் இருந்தால் இப்பூச்சிகள் தாக்கிவிட்டன என்று அர்த்தம். இப்பூச்சிகள், இலைகளை உண்டு விடுவதால் செடிகள் பட்டுப்போய் விடும். அதனால், இப்பூச்சிகளை வரவிடாமல் செய்ய வேண்டியது அவசியம். பத்து கிலோ சாம்பலுடன் 10 கிலோ நிலத்து மண்ணைக் கலந்து காலை நேரத்தில் இலைகள்மீது தூவிவிட வேண்டும். இப்படிச் செய்தால் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

விதைத்த 7-ம் நாளிலிருந்து வாரம் ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 15-ம் நாளுக்குமேல் நிலத்தில் கொடி படரத் தொடங்கும். இந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மோர்க்கரைசல் (1 லிட்டர் தயிரைக் கடைந்து 3 லிட்டர் அளவு மோராக மாற்றி 4 நாள்கள் புளிக்கவிட்ட கரைசல்), 200 மில்லி ஜீவாமிர்தக் கரைசல் ஆகியவற்றைக் கலந்து மாலை நேரத்தில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

விதைத்த 25-ம் நாளுக்குமேல் பூக்கத் தொடங்கும். 30-ம் நாளுக்குமேல் பிஞ்சு பிடிக்கும். 40-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மோர்க்கரைசல், 200 மில்லி ஜீவாமிர்தக் கரைசல் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். காய்கள் பருமனாகவும் எடை கூடுதலாகவும் இருக்க வளர்ச்சியூக்கியாக 50-ம் நாளில் நவதானியக் கரைசலைத் தெளிக்க வேண்டும். விதைத்த 60-ம் நாளுக்குமேல், பழங்கள் முதிர்ச்சி அடைவதைப் பொறுத்து அறுவடை செய்யலாம். பழங்களைத் தட்டிப் பார்த்தால், மந்தமான ஓசை கேட்டால் முதிர்ச்சி அடைந்துவிட்டது என்று அர்த்தம்.

விதை நேர்த்தி 

ஒரு லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலில் 50 கிராம் சூடோமோனஸ் சேர்த்துக் கலக்க வேண்டும். இதில் 200 கிராம் விதையைப் போட்டுப் பிசைந்து, நிழலில் ஒரு மணி நேரம் காய வைத்து எடுத்து, பிறகு விதைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் வேர் அழுகல் உள்பட வேர் சம்பந்தமான நோய்கள் தாக்காது. இந்தத் தொழில்நுட்பம் சிவானந்தத்தின் சொந்த அனுபவம்.

கார்த்திகை மாதத்தில் விதைக்கலாம்!

“வீரிய ரகத் தர்பூசணியைக் கார்த்திகை மாதத்திலிருந்தே விதைக்கலாம். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் இதன் தேவை அதிகம் இருப்பதால் அதற்கேற்றவாறு 75 நாள்களுக்கு முன்பு விதைத்தால் நல்ல வருமானம் பார்க்க முடியும்” என்கிறார் சிவானந்தம்.