Published:Updated:

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!
ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

நீர்ப்பாசனம்துரை.நாகராஜன் - இரா.கலைச்செல்வன் - படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை, ‘நதிகள் இணைப்பு’ குறித்துதான். எந்தளவு நதிகள் இணைப்புக்கு ஆதரவுக்குரல் எழுகிறதோ, அதே அளவுக்கு அதற்கு எதிரான பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்கள் சூழல் ஆர்வலர்கள். 

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

கடந்த சில ஆண்டுகளுக்குமுன், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி டெல்டா பகுதிகளில் நிலவிய கடுமையான வறட்சியால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதைச் சரி செய்யும் நோக்கில் ‘பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம்’ என்ற திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றியிருக்கிறார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இதைத் தொடர்ந்து, ‘ஆந்திர மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நதிகளை இணைத்துவிட்டார். மற்ற மாநிலங்கள் நதிகளை இணைக்கத் தயாராக உள்ளனவா?’ என்ற பதிவு சமூக வலைதளங்களில் மிக வேகமாக வலம் வந்துகொண்டு இருக்கிறது. இதுகுறித்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் விவாதங்களும் நடந்து வருகின்றன. அதே சமயத்தில், ஆந்திர மாநிலத்தில் இத்திட்டம் குறித்துப் பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.   

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

இந்நிலையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம், அதனால் விவசாயம், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சாதக பாதகங்கள் குறித்து அறிய அம்மாநிலத்துக்கு பயணம் செய்தோம். இத்திட்டம் குறித்து பல்வேறு தரப்பினரிடம் பேசினோம். அவர்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

விஜயவாடா நகரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வத்தே சோபன திரிஸ்வர் ராவிடம் நதிநீர் இணைப்பு குறித்துப் பேசியபோது, “ஆந்திராவில் உள்ள பெரிய நதிகளில் ஒன்று கோதாவரி. மகாராஷ்டிராவில் உருவாகி சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா வழியாக 1,465 கிலோமீட்டர் தூரம் பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.   

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

இந்த ஆற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் 3 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. இதற்காக, கோதாவரி நதியைக் கிருஷ்ணா நதியோடு இணைக்க பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தயார் செய்யப்பட்ட திட்டம்தான் ‘போலவரம் நதிநீர் இணைப்புத் திட்டம்’. இத்திட்டத்தின் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாற்றுத்திட்டமாகத் தயார் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதுதான் ‘பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம்’.   

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

ஆனால், போலவரம் திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டால், பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம் தேவையற்றதாகிவிடும். அதனால், பட்டீசீமா திட்டம் தற்காலிகமானதுதான். ஆனாலும் இத்திட்டத்தால் கிட்டத்தட்ட 20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. தற்காலிகத் திட்டத்துக்காக அதிகப் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. நீர் வழித்தடங்களில் உள்ள மக்களை இடம்பெயரச் செய்வதில் பல்வேறு முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. இதுபோகப் போலவரம் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்காக ஆந்திராவை ஒட்டியுள்ள ஒடிசா மாநிலப் பகுதிகளிலும் மக்களை இடம்பெயரச்செய்ய வேண்டியுள்ளது. இப்பணியையும் ஆந்திர அரசேதான் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பணிகள் இன்னும் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கின்றன” என்றார்.    

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

ஆந்திர மாநில விவசாயச் சங்கத் தலைவர் நாகேந்திரநாத், “பட்டீசீமா திட்டம் முழுமையாக விவசாயிகளுக்குப் பயனளிக்கும் திட்டம்தான். கிருஷ்ணா டெல்டா மாவட்டங்களில் முன்னர் இருந்த வறட்சி, இத்திட்டத்தால் நீங்கி இப்போது விவசாயம் செழிப்பாக உள்ளது. இத்திட்டத்தின்மூலம் 2016-ம் ஆண்டில் மட்டும் 13 லட்சம் ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயனடைந்துள்ளன. போலவரம் நதிநீர் இணைப்பு முடிக்கப்பட்டுவிட்டால் பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம் தேவையற்றதாகிவிடும் என்பது உண்மைதான். ஒருவேளை ராயலசீமா தாண்டியும் நதிநீரைக்கொண்டு செல்லத் திட்டம் கொண்டுவரப்பட்டால், பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம் அதற்குப் பயன்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் கிருஷ்ணா டெல்டாவை ஒட்டிய மூன்று மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவியது. இப்போது பட்டீசீமா திட்டத்தால் கிருஷ்ணா டெல்டாவை ஒட்டிய மாவட்டங்கள் வறட்சியிலிருந்து தப்பித்துள்ளன. ஆனால், போலவரம் நதிநீர் இணைப்புக்காக அமைக்கப்பட்ட கால்வாயில் பட்டீசீமா திட்டத்தின்மூலம் நதிநீரைக் கலந்துவிட்டு அதற்கு 1,600 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். நதிநீர் இணைப்புத் திட்டங்களில் ஊழல் பெருவாரியாக நடந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆனாலும், விவசாய நிலங்கள் பயன்பெறுவதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. கோதாவரி நதியிலிருந்து கிருஷ்ணா நதிக்குத் திருப்பப்படும் நீர் வழித்தடங்களில் தொழிற்சாலைகள் அமையாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

ஆந்திர மாநிலத்தின் நீர் வளத்துறை அமைச்சர் தேவநேனி உமாமகேஸ்வர ராவைச் சந்தித்தபோது, “போலவரம் நதிநீர் இணைப்புத் திட்டம் முடியும் வரை காத்திருந்தால், கிருஷ்ணா டெல்டா பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். அதனால், உடனடித் தீர்வுக்காகத்தான் பட்டீசீமா திட்டத்தை ஐந்தே மாதங்களில் முடித்து, தண்ணீரைக் கிருஷ்ணா டெல்டாவுக்குத் திருப்பினோம். இதனால்,  கிருஷ்ணா டெல்டா மாவட்டங்கள் தற்போது பயனடைந்துள்ளன. போலாவரம் நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கான பணிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் அப்பணிகளை நேரில் சென்று பார்க்கலாம்” என்றார்.  

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

நீர் வளத்துறை அமைச்சரின் அனுமதியின் பெயரில் போலவரம் நதிநீர் இணைப்புத் திட்டப்பணிகள் மற்றும் ராஜமுந்திரி அருகில் உள்ள பட்டீசீமாவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டோம். போலவரத்தில் நதிநீர் இணைப்புக்காக ஏற்கெனவே மூன்று மலைகளை அகற்றியுள்ளார்கள். நாம் சென்றபோது, இரண்டு மலைகளை வெடிவைத்துத் தகர்த்துக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் இயற்கையின் அழகு மனசாட்சியே இல்லாமல் சூறையாடப்பட்டுக் கொண்டிருந்தது. பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டப் பணியிலிருந்த பொறியாளர் சிரஞ்சீவி, “ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிளான்டிலிருந்து தண்ணீர், பம்ப் மூலமாக உறிஞ்சப்பட்டுப் போலவரம் கால்வாயில் விழுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 24 பம்புகள், அதில் 12 குழாய்கள் என அமைக்கப்பட்டுத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்குமேல் தண்ணீர் இருந்தால் மட்டும்தான் தண்ணீரை எடுப்போம்” என்றார்.   

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

“இந்த நதிநீர் இணைப்புத் திட்டத்தை ராஜசேகர ரெட்டிதான் ஆரம்பித்து வைத்தார். சந்திரபாபு நாயுடு அதைத் தொடர்கிறார் அவ்வளவுதான். ஆனால், இவரே உருவாக்கியதுபோல மாயையை உருவாக்குகிறார்கள். இத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. பட்டீசீமா திட்டத்தால் கான்ட்ராக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும்தான் நல்லது நடந்திருக்கிறது. நீர் வளம் என்கிற பெயரில் பணத்தைச் சுருட்டுகிற வேலைதான் இது. கால்வாய்கள் அமைக்கப்பட்ட இடத்தில் குடியிருந்த மக்களுக்கு முறையாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. கோதாவரி தண்ணீரைத் திருப்புகிறவர்கள், கிருஷ்ணா நதிநீரைக் கடலில் கலக்க விடுகிறார்கள்” என்று அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவாஜி.    

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

ஆந்திராவில் இத்திட்டத்தின்மூலம் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று அனைத்துத் தரப்பிலும் சொல்லப்படுகிறது. ஆனால், சூழல் ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துத் தெளிவான வாதங்கள் இல்லை. இரண்டு நதிகளும் இணைக்கப்பட்டவுடன் முதன் முதலில் நடந்த சூழல் மாறுபாட்டுக்கான அறிகுறி, அந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்ததுதான். அதைத்தவிர, இதுவரை வேறு மோசமான விளைவுகள் ஏற்படவில்லை.

 நதிநீர் இணைப்பால், வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைத் திசை திருப்பி விவசாயத்தைச் செழிக்க வைக்கலாம், குடி நீர் பிரச்னையைத் தீர்க்கலாம் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அதற்காக அழிக்கப்படும் இயற்கை வளங்களைப் பின் எப்போதும் உருவாக்க முடியாது என்பது நிதர்சனம்.  

பழைய மொந்தையில் புதியகள்!

1940-
ம் ஆண்டிலேயே ஆந்திர மாநிலத்தில் நதிநீர் இணைப்புக்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்காக எஸ்.எல்.சேவேஜ் என்பவரின் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் குழு, அப்போதைய மதராஸ் மாகாணமாக இருந்த சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கிப் பயணம் செய்தது. அங்கிருக்கும் புவித்தன்மையை ஆராய்ந்து போலவரம் நதிநீர் இணைப்புக்குத் திட்ட வடிவம் தயாரித்துள்ளது. ஆனால், அப்போது இது செயல்படுத்தப்படவில்லை.

1980-ம் ஆண்டில் இத்திட்டம் அப்போதைய ஆந்திர அரசால் கையிலெடுக்கப்பட்டுச் சில காரணங்களால் நின்றுவிட்டது. 2004-ம் ஆண்டு மீண்டும் கையிலெடுத்தார் அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி. பதினாறாயிரம் கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவியோடு ராஜமுந்திரிக்கு அருகிலுள்ள போலவரம் எனும் இடத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

போலவரம் பகுதியில் பிரமாண்ட அணை அமைத்துத் தண்ணீரைத் தேக்கி, அதைக் கால்வாய் வழியாகக் கிருஷ்ணா டெல்டா, ராயல சீமா, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீரைக்கொண்டு செல்வதுதான் திட்டம். கிட்டத்தட்ட 70 சதவிகிதப் பணிகள் முடிந்த நிலையில், ராஜசேகர ரெட்டி இறந்துவிட்டார். அதன்பிறகு ஆந்திராவில் நிலவி வந்த அரசியல் சூழல், தெலங்கானா மாநிலப் பிளவு போன்ற காரணங்களால் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

2014-ல் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு இத்திட்டத்தின் பணிகளைக் கையிலெடுத்தார். ஆனால், இதை முடிக்க நீண்டகாலம் ஆகும் என்பதைத் தெரிந்துகொண்ட அவர், உடனடியாக விவசாயிகளுக்குப் பயன்கொடுக்கும் வகையில், பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்திவிட்டார். ஏற்கெனவே போலவரம் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்காக வெட்டப்பட்ட கால்வாய் பாதையில் நீரேற்று நிலையத்தை மட்டும் அமைத்து அதைத் தனித் திட்டமாக்கிவிட்டார் சந்திரபாபு நாயுடு.

2015-ம் ஆண்டில் கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைக்கும் ‘பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டு, ஐந்தே மாதங்களில் முழுமையாக முடிக்கப்பட்டது. பணிகள் தொடங்கிய 8 மாதங்களிலேயே நதிகள் இணைந்தன. கோதாவரி ஆற்றின் தண்ணீர், விஜயவாடா அருகே இப்ராஹீம் பட்டினம் அருகில் கிருஷ்ணா நதியில் கலக்கிறது. தென்னிந்தியாவின் முதல் நதிநீர் இணைப்பு இதுதான்.

இத்திட்டத்துக்காக ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட தொகை 1,300 கோடி. ஆனால், முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது 1,600 கோடி செலவாகியிருந்தது. இந்த நதிநீர் இணைப்பு, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நதிநீர் இணைப்பால் கோதாவரியிலிருந்து 2015-ம் ஆண்டு 8 டி.எம்.சி தண்ணீர் கிருஷ்ணா நதிக்குத் திருப்பி விடப்பட்டது. 2016-ம் ஆண்டு 55 டி.எம்.சி தண்ணீரும், 2017-ம் ஆண்டில் இதுவரை 28 டி.எம்.சி தண்ணீரும் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்தக் கால்வாய் வெட்டப்பட்ட பகுதியில் ஏற்கெனவே வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கான மாற்று இருப்பிடம், உதவித்தொகை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

‘‘இது தவறான விஷயம்!’’

த்திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துவருகிறார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சூழலியலாளர் சர்மா. அவர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. மின்னஞ்சல் மூலமாக நதிநீர் இணைப்பு குறித்துச் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“அரசாங்கத்தின் பழைய கணக்கின்படி, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இத்திட்டத்தால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவு நீரில் மூழ்கும். ஒடிசா மாநிலத்தில் 10 கிராமங்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் 23 கிராமங்கள், ஆந்திர மாநிலத்தில் 276 கிராமங்கள் என மொத்தம் 309 ஆதிவாசி கிராமங்கள் அழியும். லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடத்திலிருந்து இடம்பெயர வேண்டும். பெரும்பாலான பழங்குடியினர் இடம்பெயர்வதை விரும்புவதில்லை. ஆனால், அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினால், கோயா எனும் பழங்குடியினம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும்.

இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த, அந்தந்தக் கிராமங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. ஆதிவாசிகளின் மாற்று வாழ்விடங்களுக்காகவும் மறுவாழ்வுக்காகவும் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அரசாங்கம் சொல்லி வருகிறது. தேசியப் பழங்குடி கொள்கைப்படி ‘50 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடி மக்களை வெளியேற்றும் வகையில் எந்தத் திட்டங்களையும் ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் மேற்கொள்ளக் கூடாது’ என்று இருக்கிறது. அதனால் சட்டரீதியான பிரச்னைகளும் உள்ளன.

போலவரம் திட்டம் சரியான முறையில் இந்தியச் சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதிச் சான்று மற்றும் தடையில்லாச் சான்று ஆகியவற்றை முறையாகப் பெறவில்லை. ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதற்குமுன் போலவரம் திட்டத்துக்கு வாங்கிய அனுமதிச் சான்றைப் பயன்படுத்தி, பட்டீசீமா திட்டத்தை முடித்துள்ளார்கள். இதுவும் தவறான விஷயம்”

ஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்? - ஓர் அலசல்!

‘‘பாதிப்புகள் இப்போது தெரியாது!’’

நா
ம் ஆந்திர மாநிலத்தில் இருந்தபோது அங்கு வந்திருந்தார், ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங். அவரிடம் இத்திட்டம் குறித்துப் பேசியபோது, “நதிகளைக் குளங்களோடும் ஏரிகளோடும் இணைக்கலாம். ஆனால், ஒரு நதியை மற்றொரு நதியோடு இணைக்கக்கூடாது. அது மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு நதியின் தன்மையும் மண்ணைப் பொறுத்து மாறும். அதனால், இரண்டு நதிகளை இணைக்கும்போது நதிகளின் சூழலும் மாறும். நதி, தன்னுடைய போக்கில்தான் பாய வேண்டும். இப்போது நதிகள் இணைப்பின் பாதிப்புத் தெரியாமல் இருந்தாலும் இன்னும் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தெரிய ஆரம்பிக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு