Published:Updated:

உலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்!

உலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
உலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்!

எச்சரிக்கைஆர்.குமரேசன்

‘விதைகளே பேராயுதம்‘ என்றார் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். இன்றைக்கு அந்த ஆயுதத்தை எதிரிகள் கையில் கொடுத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். எதிர்கால வாழ்க்கைக்காகப் பெரும் செல்வத்தைச் சேர்ப்பதைவிட, விதைகளைச் சேமிப்பதில் அதிக அக்கறை காட்டிய தமிழர்கள், இன்று விலை கொடுத்து விதைகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நம் மண்ணுக்கேற்ற, பருவத்துக்கேற்ற, சூழலுக்கேற்ற பாரம்பர்ய விதைகள் மறைந்துபோய்... நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் விதைகளை, ‘விதியே’ என விதைத்துக்கொண்டிருக்கிறோம்.   

உலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்!

ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக் கொண்டு போரிட்டு ஒரு நாட்டைக் கைப்பற்றுவது அந்தக்காலம். சிரமமில்லாமல் ஒரு நாட்டை அடிமைப்படுத்துவது இந்தக்காலம். அதற்கு அவர்கள் கையில் எடுத்த ஆயுதம்தான் விதைகள். பசுமைப் புரட்சிக்கு முன்பாக, பெரும்பாலான விவசாயிகளின் வீட்டில் விதைகள் இருந்தன. அக்கம் பக்கத்து விவசாயிகள் விதைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்த விதைகளும், அந்தந்தப் பகுதி மண்ணுக்கு ஏற்ற, பருவத்துக்கு ஏற்ற ரகமாக இருந்தன. இதனால், பெரும்பாலான நோய்கள் இல்லை. தற்சார்பு முறையில் விவசாயம் சிறப்பாக நடந்தேறியது.

பசுமைப் புரட்சிக்கு பிறகு, ‘அதிக மகசூல் கொடுக்கும் ரகங்கள்’ என்ற பெயரில் வீரிய விதைகளின் அறிமுகம், பாரம்பர்ய விதைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ளியது. அதிகப் பாலுக்கு ஆசைப்பட்டு, நாட்டு மாடுகளைத் தொழுவத்திலிருந்து வெளியேற்றி, கலப்பின மாடுகளுக்கு வரவேற்பு வளையம் வைத்தோம். இதேபோல, அதிக மகசூல் என்ற மகுடிக்கு மயங்கி, பாரம்பர்ய ரகங்களை விட்டு விலகி வந்துவிட்டோம். வீரிய விதைகளின் மீதான நமது மோகத்தைச் சரியாகப் பிடித்துக்கொண்ட விதை நிறுவனங்கள், வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப்போல, கொஞ்சம் கொஞ்சமாக விதைகளின் மறுமுளைப்புத் திறனை மழுங்கடித்து, ஒரு கட்டத்தில் மறுமுளைப்புத் திறனே இல்லாத விதைகளை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்!

இந்த விதை அரசியல் பற்றிப் பேசிய ‘நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர், “இந்தியாவில் 1966-ம் ஆண்டுக்கு முன்பாக விதை நிறுவனங்களோ, விதைச் சட்டமோ இல்லை. பசுமைப் புரட்சி தொடங்கிய பிறகுதான் விதை வணிகமயமானது. அதிக மகசூல் என்ற ஆசையைக் காட்டி, குள்ளமான நெல் ரகங்களை நமது வயலுக்குள் ஊடுருவவிட்டார்கள். நமது பாரம்பர்ய நெல், உயரமாக வளரக்கூடியது. ஒவ்வொரு பகுதியிலும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற ரகத்தைத்தான் பயிரிட்டார்கள். அதனால், நோய்த் தாக்குதல் இல்லை. எனவே பூச்சிக்கொல்லிக்கு வேலையே இல்லாமல் இருந்தது. அதிகளவில் கிடைத்த வைக்கோல் மாடுகளுக்குத் தீவனமாக இருந்தது.

ஆனால், அனைத்து பகுதியிலும் ஒரே நேரத்தில் இறக்கிவிடப்பட்ட குள்ள ரகங்களால், தட்பவெப்ப நிலையைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பூச்சிகள் வந்தன. நோய்த் தாக்கியது. அவற்றை அழிக்கப் பூச்சிக்கொல்லிகள் இறக்கி விடப்பட்டன. குள்ள ரகம் என்பதால் அதுவரை கிடைத்து வந்த வைக்கோலின் அளவு பாதியாகக் குறைந்தது. அதனால், மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்தது. மாடுகள் குறைந்ததால் உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை ஈடு செய்ய யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்கள் வயலுக்குப் படையெடுத்தன. ஆக, வீரிய விதை என்ற ஒன்றின் மூலமாக, நமது தற்சார்பு விவசாய முறைக்கு வேட்டு வைத்துவிட்டனர். நாட்டுப் பருத்தி ரகங்களிலிருந்து வீரியப் பருத்திக்கு விவசாயிகளை மாற்றியவர்கள், தற்போது மரபணு மாற்று பருத்தியைப் பயிரிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கிவிட்டார்கள்.  தமிழ்நாட்டில் விளையும் பருத்தியில் தற்போது 95 சதவிகிதம் மரபணு மாற்று பருத்திதான்” என்ற ஸ்ரீதர் தொடர்ந்தார்...    

உலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்!

“இந்தியாவின் நெல் ஆராய்ச்சியில் முக்கிய விஞ்ஞானி டாக்டர் ரிச்சாரியா. இவர் இந்தியாவின் பாரம்பர்ய நெல் ரகங்களாக 19 ஆயிரம் ரகங்களை இனம் கண்டு பட்டியலிட்டுள்ளார். அதில், ஒன்பது சதவிகித அளவு ரகங்கள் அதிக மகசூல் கொடுக்கக்கூடியவை என்பதையும் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளார். ஆனால், இந்த உண்மையை மறைத்துவிட்டு, வீரிய விதைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

பசுமைப் புரட்சிக்கு பிறகு விதைச் சந்தையில் நுழைந்த பெரும் நிறுவனங்கள், இன்றைக்கு உலகிலுள்ள பெரும்பாலான விதைகளுக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. பலவற்றைத் தங்களுடையதாக்க முயற்சி செய்துவருகின்றன. நெல் விளைச்சல், நுகர்வு இரண்டுமே மிகவும் குறைவாக உள்ள ஐரோப்பா, ஆயிரக்கணக்கான அரிசி ரகங்களுக்குக் காப்புரிமை கேட்டு வருகிறது. சின்சின்டா நிறுவனம், முப்பதாயிரம் அரிசி ரகங்களுக்குக் காப்புரிமை கேட்டு 2004-ம் ஆண்டிலே விண்ணப்பித்துள்ளது. ‘இந்த ரகங்களில் உள்ள மரபணு எங்களுடையது’ என்பது இந்த நிறுவனத்தின் வாதம். இதுபோல இன்னும் நான்கைந்து நிறுவனங்கள் ஒட்டுமொத்த விதைச் சந்தையையும் தங்கள் கையில் கொண்டு வரத் துடிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, காய்கறி மற்றும் பழப்பயிர்களின் விதைகள், விதை நிறுவனங்களின் கைக்குச் சென்றுவிட்டது. நெல், கோதுமை போன்ற உணவுத் தானியங்கள் இன்னமும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால், இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் எனச் சொல்ல முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை, உணவுத் தானிய விதை சந்தைதான் மிகப்பெரியது. எனவே, அதைக் கைப்பற்றுவதற்கான அத்தனை முயற்சியிலும் தற்சமயம் பெரும் விதை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதன் தொடக்கம்தான் தற்போது நெல் விதைகளைப் பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்யும் முயற்சி. இதுவரை, விதை நெல்லின் விலை கிலோ 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்குள்தான் இருந்தது. விதை நிறுவனங்களின் கைகளுக்கு நெல்லும் போனால், விலை பலமடங்கு அதிகரிக்கும். இந்த அபாயத்தைத் தடுக்கவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

உலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்!இந்த நேரத்தில் பாரம்பர்ய விதைகளை மீட்டெடுத்து அதைச் சேமித்து, பரவச் செய்வது மூலமாகத்தான் நமது விதைகளைக் காக்க முடியும். பன்னாட்டு விதை நிறுவனங்களின் வியாபாரச் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும். எங்கள் இயக்கம் மூலமாக, பாரம்பர்ய நெல் விதைகளை விவசாயிகளிடம் பரவச் செய்யும் விதமாக விதை திருவிழாக்கள் நடத்தி வருகிறோம். நம்மாழ்வார் ஐயா அவர்கள் தொடங்கி வைத்த இந்த விதைத் திருவிழா இன்றைக்குத் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், கர்நாடகா உள்ளிட்ட எட்டு மாநிலங்களுக்கு விரிவடைந்திருக்கிறது. இந்த இயக்கம் மூலமாக, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதை ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடம் பரவலாக்கியுள்ளோம். இதனால், பாரம்பர்ய விதைகள் பரவிக்கொண்டே இருக்கின்றன. இதில், அரசு ஒத்துழைப்புப் போதுமான அளவுக்கு இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்

கேரளாவில் வயநாடு பகுதியில் இருநூறு வகையான நெல் ரகங்களை விதைத்து, ‘நெல் பயோடைவர்சிட்டி பிளாக்’ உருவாக்கியுள்ளோம். அங்கு விவசாயிகள் யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம். அதில் தங்கள் பகுதிக்குத் தேவையான நெல் ரகத்தைத் தேர்ந்தெடுத்து விதை நெல்லை இலவசமாக வாங்கிச் செல்லலாம். பாரம்பர்ய நெல் விதையைக் கேட்டு வருபவர்களுக்கு... அந்த விவசாயி இருக்கும் பகுதியில் முன்பு எந்த ரகம் சிறப்பாக விளைந்ததோ அந்த ரகத்தை மட்டுமே கொடுக்கிறோம். இதனால், பூச்சி, நோயத் தாக்குதல் குறைகிறது” என்ற ஸ்ரீதர் நிறைவாக, 

“இந்தியாவைப் பொறுத்தவரை விதைப் பாதுகாப்புச் சட்டம் மிகவும் பலமானதாக இருக்கிறது. இங்கு கடைத் திறக்க நினைக்கும் உலக நாடுகளுக்கு இந்தச் சட்டம் இடைஞ்சலாக உள்ளது. தற்போதுள்ள சட்டப்படி மரபணுவை வைத்து, விதைக்குக் காப்புரிமை கோர முடியாது. இந்த விதியை மாற்ற வேண்டும் என உலக நாடுகள் இந்தியாவை நிர்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. இதுவரை இந்தியா இந்த நிர்பந்தத்துக்கு அடிபணியவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

தாராளமயமாக்கலில் 99 சதவிகிதம் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாத இந்தியா, தற்போது 80 சதவிகிதப் பொருள்களுக்கு அனுமதியளித்துள்ளது. இதில் பால் உள்ளிட்ட பொருள்களும் அடக்கம். தொடக்கத்தில் பால் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு அனுமதி அளிக்காத இந்தியா, தற்போது அனுமதியளித்துள்ளது. அதுபோல, விதைகள் விஷயத்திலும் இந்திய அரசு முடிவெடுத்து விட்டால், அதன் பிறகு இந்திய விவசாயத்தை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று எச்சரிக்கை செய்தார் ஸ்ரீதர்.

விதைகள் மீதான நமது அனுபவ அறிவுக்கும், பாரம்பர்ய விதைகளுக்கும் பேராபத்து சூழ்ந்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க... முடிந்தவரை ஒவ்வொருவரும் அவரவர் பகுதியில் விளையும் தாவரங்கள், தானியங்கள் போன்றவற்றின் விதைகளைச் சேமித்து, பரவலாக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நமது விதைகளுக்கு அழிவே இருக்காது.