Published:Updated:

மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!
மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

சுற்றுச்சூழல்ஆர்.குமரேசன் - படங்கள்: தி.விஜய் - வீ.சிவக்குமார் - ரமேஷ் கந்தசாமி

பிரீமியம் ஸ்டோரி

‘தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதே பொழப்பா போச்சு’னு கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள். அதற்கு மனிதர்கள்தான் சரியான உதாரணம். இயற்கையாக இருந்த காடுகளை அழித்துவிட்டு, கான்கிரீட் காடுகளை உருவாக்கிக்கொண்டே போவதன் விளைவு... மாதம் மும்மாரி பெய்த மழை, இப்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட பெய்வதில்லை.   

மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

மிகத் தாமதமாகத் தவற்றை உணர்ந்த நாம், மீண்டும் மரம் வளர்ப்பைக் கையில் எடுத்துள்ளோம். இது ஆறுதலான விஷயம்தான் என்றாலும் ‘தற்போது நடப்படும் மரங்களும் போதாது. மிகக்குறுகிய காலத்தில் இன்னும் பல மடங்கு மரங்களை உருவாக்கினால்தான் அடுத்து வரும் சந்ததி ஓரளவாவது தப்பிக்க முடியும்’ என்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள். நம்முன் நிற்கும் இந்த இயற்கையின் சவாலைச் சமாளிக்க ஒரே வழி, ஜப்பான் நாட்டுத் தொழில்நுட்பமான ‘மியாவாக்கி’ முறைதான். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவாக்கி. இவர் அந்நாட்டில் உள்ள யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ‘இடைவெளி இல்லா அடர்காடு’ என்ற இவருடைய தத்துவத்தின்மூலம் குறைந்த பரப்பிலேயே அதிக எண்ணிக்கையிலான மரங்களை நட்டு வளர்க்க முடியும். அப்படி நடப்படும் மரங்கள் மிக வேகமாக வளர்வதுதான் ஆச்சர்யம்.   

மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

இம்முறையில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, குட்டிக் குட்டிக் காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியாவாக்கி. இவர் கண்டறிந்த முறை என்பதால், இவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு 2006-ம் ஆண்டு ‘புளூ பிளானெட்’ விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது சர்வதேசச் சுற்றுச்சூழல் அமைப்பு.

தற்போது தமிழகத்திலும் மியாவாக்கி முறை பிரபலமாகி வருகிறது. இம்முறையில் குட்டிக்காடுகளை உருவாக்கி வருவதோடு, பலருக்கும் மியாவாக்கி முறை குறித்துச் சொல்லிக்கொடுத்து வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆலோசகர் வின்சென்ட்.

“குப்பைகளை வெச்சே குட்டிக் காட்டை உருவாக்கும் அற்புதமான தத்துவம் இது. கழிவுகளும் காலி இடங்களும் இருந்தாலே போதும், ஒரு குட்டிக்காட்டை உருவாக்கிடலாம். இந்த முறை இன்னிக்கு உலகம் முழுக்கப் பிரபலமாகிட்டு வருது. ஒவ்வொரு நாட்டுலயும், அந்தந்த நாட்டுக்கு ஏற்ப இந்த முறையில சின்னச் சின்ன மாற்றங்களைச் செஞ்சு செயல்படுத்துறாங்க. நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி சில மாற்றங்கள் செஞ்சு, கோயம்புத்தூர் பகுதிகள்ல சோதனை முயற்சியா சில இடங்கள்ல மியாவாக்கிக் காடுகளை உருவாக்கியிருக்கேன். அத்தனை இடத்திலும் மரங்கள் அருமையா வளர்ந்திருக்கு. கோவை மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் இது சாத்தியமாயிருக்கு. இந்த முறையோட சிறப்பு என்னன்னா, பத்து வருஷத்துல ஒரு மரத்துக்கு என்ன வளர்ச்சி கிடைக்குமோ, அந்த வளர்ச்சி ரெண்டே வருஷத்துல கிடைச்சிடும்னு ஆய்வு முடிவுகள் சொல்லுது. ஆழமான குழிகளை எடுத்து அதில் கழிவுகளைப்போட்டு, நெருக்கமா செடிகளை நட்டுட்டாப் போதும். ஒளிச்சேர்க்கைக்காகச் சூரிய ஒளியைத் தேடிச் செடிகள் வேகமா வளர்ந்திடும். ஆழமான குழியில செடியை நடவு செய்றதால வேர் வேகமா கீழே இறங்கி, நல்லா நங்கூரம் பாய்ச்சி நின்னுக்குது. இப்படி குறைவான இடத்துல குட்டிக் குட்டிக் காடுகளை இம்முறையில் உருவாக்கிக் கொள்ளலாம்” என்ற வின்சென்ட் நடவு முறை குறித்துச் சொன்னார்.   

மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

“காலி இடங்கள்ல மூணடி ஆழத்துக்குக் குழியெடுக்கணும். அந்தக் குழிக்குள்ள நமக்குக் கிடைக்குற குப்பைகளைக் கொட்டி நிரப்பணும். மேலே அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம் மாதிரியான நுண்ணுயிர் உரங்களைப்போட்டுச் செடிகளை நெருக்கமா நட்டு வைக்கணும்.

இப்படி நடும்போது, நம்ம நாட்டு மர கன்றுகளா நடுறது நல்லது. சிலர் ரொம்பப் பெரிய செடிகளை நடுவாங்க. பெரிய செடிகளோட வேர் பிளாஸ்டிக் பாக்கெட்டைச் சுத்தியே இருக்கும். அந்தச் செடிகளை மண்ணில் நடும்போது வேர் நேராகப் போகாது. அதனால, நடுத்தரமான செடிகளை நடுறது நல்லது. இந்த முறையில, நான் நடவு செஞ்ச ஓர் இடத்துல அக்டோபர் மாசம் ஆறு அடி உயரத்துல இருந்த செடி, பிப்ரவரி மாசத்துல 12 அடி உயரத்துக்கு வளர்ந்திடுச்சு.
இந்த முறையைப் பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் கையிலெடுத்து, காலியான இடங்களிலெல்லாம் குட்டிக் குட்டிக் காடுகளை உருவாக்கணும். இப்படிச் செய்றதால குப்பையையும் முறையாகப் பயன்படுத்த முடியும். அதிக அளவிலான காடுகளையும் உருவாக்க முடியும்.

இந்த முறையில நடவு செய்ய ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையுள்ள மழைக்காலம்தான் சரியானது. நடவு செஞ்சதும் உயிர்த் தண்ணி, அதன்பிறகு ரெண்டு மூணு தண்ணி கொடுத்துட்டாப் போதும். பிறகு, தன்னால காடு உருவாகிடும்” என்ற வின்சென்ட் நிறைவாக,

“இந்த முறையில உலகளவுல ‘ஃபுட் பாரஸ்ட்’ங்கிற (Food Forest) முறைதான் அதிக இடங்கள்ல செயல்பாட்டுல இருக்கு. நமக்குத் தேவையான பழ மரங்களை நடவு செய்யலாம். 600 சதுர அடி இடத்துலகூட ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்து வகையான பழங்களும் கிடைக்கும். பழச்செடிகளை நடவு செஞ்சா, ஆறாவது மாசத்துல இருந்து பழங்களைப் பறிக்கலாம். இந்த முறையை அரசாங்கமும் வனத்துறையும் பொதுமக்கள்கிட்ட கொண்டு போய் ஓர் இயக்கமா செயல்படுத்தினா ரெண்டு மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறிடும்” என்றார்.

தொடர்புக்கு: வின்சென்ட், செல்போன் : 98940 66303

வியக்க வைக்கும் மியாவாக்கி

• குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள்.

• 1,000 சதுரஅடி நிலத்தில் 400 மரங்கள்.

• பூமியில் வெப்பம் குறையும்.

• காற்றில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.

• பறவைகளுக்கு வாழிடம் உருவாகும்.

• பல்லுயிர்ச் சூழல் மேம்படும்.

20 சென்ட் இடத்தில் 2,500 மரங்கள்! 

மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த ஆனந்த், மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கி வருகிறார். “நாங்க ஒரு குழுவா சேர்ந்து அவிநாசியில் இருபது சென்ட் நிலத்துல, ரெண்டாயிரத்து ஐந்நூறு செடிகளை மியாவாக்கி முறையில நடவு செஞ்சோம். இதுல அறுபத்தி மூணு வகையான மரங்களை நடவு செஞ்சிருக்கோம். இந்த முறையோட நோக்கம் பல்லுயிர்ப்பெருக்கத்தை மேம்படுத்துறதுதான். அந்தந்தப் பகுதியில வளரக்கூடிய மரங்கள், நம்ம நாட்டு மரங்களைத்தான் நடவு செய்யணும். நாங்க நடவு செஞ்ச இந்த எட்டு மாசத்துல செடிகள் ஏழடி உயரத்துக்கு வளர்ந்திடுச்சு. இப்போ இந்தத் தோட்டத்துக்கு நிறைய பறவைகள் வருது. இன்னும் சில மாதங்கள்ல இந்த இடம் ஒரு குட்டி வனமா மாறிடும்.  

மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

நாங்க ரெண்டரை அடி ஆழத்துக்கு மண்ணைத் தோண்டிட்டு, அந்தப் பள்ளத்துல பதினஞ்சு டிராக்டர் குப்பை எரு, ரெண்டு லாரி தென்னைநார்க் கழிவு, அரை டன் மண்புழுக் உரம், மூணு டன் பேரூராட்சி திடக்கழிவு உரம், ஒரு டன் மரத்தூள் போட்டு, அதுல செடிகளை நடவு செஞ்சோம். நடவு செய்யும்போது குடை மாதிரி அகலமா போற மரங்கள், உயரமா போற மரங்கள், உயரம் குறைவா இருக்கிற மரங்கள்னு கலந்து நட்டிருக்கோம். உயரமா வளர்ற மரத்துக்கு நடுவுல, கிளை பரப்புற மரம்னு மாத்தி மாத்தி நட்டிருக்கோம். ஒரு சதுர அடியில அதிகபட்சமா அஞ்சு செடிகள் வெச்சிருக்கோம்.   

மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

இந்த முறையை விவசாயத்துலயும் பயன்படுத்தலாம். வாழை, முருங்கை மாதிரியான பயிர்கள் காற்றடிக்கும்போது சாய்ஞ்சிடும். அந்த மாதிரியான நிலங்கள்ல காற்றுத் தடுப்பானா இந்த முறையைப் பயன்படுத்தலாம். வேலியைச் சுத்தி எட்டு அடி அகலத்துக்கு நெடுக பள்ளம் எடுத்து, இந்த முறையில மரங்களை வளர்த்தா காற்றுத் தடுப்பானாக அமையும். கழிவுகளை உரமாக்கிக் குறைஞ்ச இடத்துல மரம் வளர்க்க இது சிறந்த முறை. முடிந்தளவு நம்முடைய பாரம்பர்ய மரக்கன்றுகளை நடுவது நல்லது” என்கிறார் ஆனந்த்.

தொடர்புக்கு, ஆனந்த், செல்போன்: 89034 43249

மியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம்! - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

கழிவுகளில் வளரும் காடு!

தி
ண்டுக்கல் நகரில் இயங்கிவரும் திண்டி மா வனம் அமைப்பினர், அங்குள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மியாவாக்கி முறையில் மரங்களை நடவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாகப் பேசிய திண்டி மா வனம் அமைப்பைச் சேர்ந்த பாலாஜி, “எங்க அமைப்பு மூலமாக, கல்லூரிக்கு அருகிலுள்ள காலியிடங்களில் மரங்களை நடவு செய்திருக்கோம். 30 அடி நீளம், 16 அடி அகலம், ஆறடி ஆழம்னு குழிகளை எடுத்து... வெங்காயச் சருகு, வாழைமட்டை, தென்னைநார்க் கழிவுனு போட்டு, ஒவ்வொரு குழியிலும் 200 மரக்கன்றுகள் வரைக்கும் நடவு செஞ்சிருக்கோம். ஆறு மாசத்துல அபாரமா வளர்ந்துருக்கு, இந்த முறையில, குறைஞ்ச இடம் இருந்தாலே காடுகளை உருவாக்கிடலாம்” என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு