Published:Updated:

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன்

ரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகளில் பலர், சர்க்கரை ஆலைகளைத்தான் முழுமையாக நம்பியிருக்கிறார்கள். உரியநேரத்தில் அறுவடை செய்யாமல் விடுவது, கொள்முதல் செய்த கரும்புக்குப் பணம் தராமல் இழுத்தடிப்பது போன்ற ஆலைகளின் செயல்பாடுகளால் விவசாயிகள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. ஆனால், ஆலையை நம்பாமல் சாகுபடி செய்யும் கரும்பைச் சர்க்கரையாக மதிப்புக்கூட்டி நல்ல லாபம் எடுக்கும் விவசாயிகளும் உண்டு.  

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், இலுப்பக்கோரை, மகாலிபுரம், அணைக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளில் பலர் ஆலைகளின் பிடியில் சிக்காமல்... நாட்டுச்சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை உற்பத்திசெய்து நிறைவான வருமானம் ஈட்டி வருகிறார்கள். இவர்களில் வீரமாங்குடியைச் சேர்ந்த கரும்பு விவசாயி இளஞ்செழியன், இயற்கை முறையில் கரும்புச் சாகுபடி செய்து... நிறைவான லாபம் ஈட்டி வருகிறார்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

ஒரு மதிய வேளையில் நாட்டுச்சர்க்கரை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளஞ்செழியனைச் சந்தித்தோம். “நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சுட்டுக் குடும்பத் தொழிலான விவசாயத்துக்கு வந்துட்டேன். பரம்பரை பரம்பரையா நாங்களே கரும்புச் சாகுபடி செஞ்சு நாட்டுச் சர்க்கரை, வெல்லம் தயார் செஞ்சுட்டு இருக்கோம். முன்னாடியெல்லாம் ரசாயன உரம் போடாமத்தான் கரும்புச் சாகுபடி செய்வோம். அதேமாதிரி நாட்டுச்சர்க்கரை தயாரிப்பிலும் ரசாயனப் பொருள்களைச் சேர்க்கமாட்டோம். ஆனா, காலப்போக்குல எல்லாம் மாறி, அதிக மகசூல் ஆசையில ரசாயன உரத்தைப் போட ஆரம்பிச்சோம். நாட்டுச்சர்க்கரை, வெல்லம் எல்லாம் ‘பளிச்’னு இருக்க, சில ரசாயனங்களைச் சேர்க்க ஆரம்பிச்சோம்.

பெரும்பாலானாவங்க ரசாயனம் பயன்படுத்தித்தான் நாட்டுச்சர்க்கரை தயாரிக்கிறாங்க. நான் மூணு வருஷமா இயற்கை முறையிலதான் கரும்புச் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். ரசாயனங்களை அதிகம் பயன்படுத்தாம நாட்டுச்சர்க்கரை, வெல்லம் ரெண்டையும் தயாரிச்சுட்டு இருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த இளஞ்செழியன் தொடர்ந்தார்.  

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

“எங்களுக்கு 15 ஏக்கர் நிலம் இருக்கு. மணலும் களியும் கலந்த இருமண் பாடு. பதிமூணு ஏக்கர்ல கரும்புச் சாகுபடியும் ரெண்டு ஏக்கர்ல நெல் சாகுபடியும் செய்றோம். இயற்கை விவசாயம் செய்றதுக்காக 7 நாட்டு மாடுகளை வளர்க்குறோம். ரசாயன முறையில கரும்புச் சாகுபடி செஞ்சா, அதிகபட்சமா ஏக்கருக்கு 35 டன் வரை மகசூல் எடுக்க முடியும். ஆனா, ஆரம்பத்துல மகசூல் அதிகம் கிடைச்சாலும், போகப்போக மகசூல் குறையத்தான் செய்யும். அப்போ உரத்தை அதிகமா கொட்ட வேண்டியிருக்கும். இதனால, உரச்செலவு அதிகமாகும். தண்ணீரும் அதிகமா தேவைப்படும். இதோட கரும்பைத் தாக்குற குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி தெளிச்சாகணும்

ஆனா, இயற்கை விவசாயத்துல அப்படியில்லை. போகப்போக மகசூல் அதிகரிச்சிட்டே இருக்கும். இயற்கைக்கு மாறுன முதல் போகத்துல 18 டன் மகசூல் கிடைச்சது. இரண்டாம் போகத்துல 20 டன் கிடைச்சது. இந்த ஆண்டு மூணாவது போகம். இப்ப 6 மாசப் பயிரா இருக்கு. பயிர் செழிப்பா, திடகாத்திரமா இருக்கு. இந்த வருஷம் 22 டன் அளவுக்குமேல கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இயற்கைங்கிறதால, அதிகபட்சம் 10 போகம் வரைக்கும் மறுதாம்பு மகசூல் எடுக்கலாம். ஆனா, ரசாயன உரம் போட்டா மூணு போகம் வரைதான் விளையும். இயற்கை விவசாயத்துல விளைஞ்ச கரும்பை அறுவடை செய்யாம விட்டாக்கூட 6 மாசம் வரைக்கும் தரம் குறையாமல் இருக்கு. அதனால, தேவைக்கேத்த அளவுக்கு அறுவடை செஞ்சுக்க முடியுது.   

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச்சர்க்கரை, வெல்லம் ரெண்டையும் காற்றும் தண்ணீரும் படாம வெச்சிருந்தா, 6 மாசம் வரை கெட்டுப்போகாது. ஆனா, ரசாயனம் கலந்து தயாரிச்ச வெல்லம் மூணு மாசம்கூடத் தாங்காது. அதுக்குமேல புளிச்சுப் போயிடும். இயற்கை முறையில் தயார் செஞ்ச நாட்டுச் சர்க்கரை, வெல்லத்துல சுவையும் கூடுதலா இருக்கும்” என்ற இளஞ்செழியன், வருமானம் குறித்துச் சொன்னார்.

“இயற்கைக்கு மாறின முதல் போகத்துல ஏக்கருக்கு 18 டன் கணக்குல 13 ஏக்கருக்கும் சேர்த்து 234 டன் கரும்பு கிடைச்சது. அதைச் சாறாக்கிக் காய்ச்சி 13 ஆயிரம் கிலோ நாட்டுச்சர்க்கரையும் 2,210 கிலோ வெல்லமும் தயாரிச்சு விற்பனை செஞ்சோம். ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரை 70 ரூபாய்னும் வெல்லத்தைக் கிலோ 75 ரூபாய்னும் விற்பனை செய்றோம்.   

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

ஆர்கானிக் கடைக்காரங்க தான் எங்ககிட்ட வாங்கிக்கிறாங்க. நாட்டுச்சர்க்கரைக்குத்தான் அதிகத் தேவை இருக்கு. நாட்டுச்சர்க்கரை விற்பனை மூலமா 9,10,000 ரூபாய் கிடைச்சது. வெல்லம் விற்பனை மூலமா 1,65,750 ரூபாய் கிடைச்சது. மொத்தம் 10,75,750 ரூபாய் வருமானம் கிடைச்சது.

இதுல உழவுல இருந்து சர்க்கரை தயாரிக்கிறது வரை எல்லா செலவுகளும்போக 3,98,190 ரூபாய் லாபம் கிடைச்சது. இன்னும் அடுத்தடுத்த போகங்கள்ல மகசூல் அதிகரிச்சா கூடுதல் லாபம் கிடைக்கும். அதேமாதிரி வருஷக்கணக்குல மறுதாம்பு விடலாங்கிறதால சாகுபடிச் செலவுகளும் குறையும். மகசூலும் அதிகரிக்கும்.

ரசாயன விவசாயக் கரும்பைவிட மகசூல் குறைவாக இருந்தாலும், இயற்கை விவசாயம் மூலம் இடுபொருள் செலவு குறைஞ்சிருக்கு. படிப்படியாக மகசூலும் அதிகரிச்சிட்டு இருக்கு. தண்ணீர்ப் பயன்பாடும் மிச்சமாயிருக்கு. ஆலைக்குப் போடும் கரும்புக்கு இணையான வருமானம் கிடைச்சிட்டு இருக்கு. இந்த வருமானம் இன்னும் அதிகரிக்கும். சர்க்கரை ஆலைக்குக் கரும்பைப் போட்டுட்டு பணத்துக்கு அலையுறதுக்கு, இது எவ்வளவோமேல். என் அனுபவத்துல, கரும்பு விவசாயத்துல சுயசார்பா நிக்கிறதுக்கு இயற்கை விவசாயமும் மதிப்புக் கூட்டும் முறையும்தான் சரியான வழி” என்று சொல்லிவிட்டுக் கொதித்துக் கொண்டிருந்த சாற்றைக் கிளறிவிடுவதில் மும்முரமானார்.

தொடர்புக்கு, இளஞ்செழியன், செல்போன்: 90427 75813  

மீன் அமினோ அமிலம்

ரு கிலோ நாட்டுச் சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் பிளாஸ்டிக் வாளியில் போட்டு காற்றுப் போகாமல் மூடி வைத்தால், 40-ம் நாள் தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள்  இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இத்திரவத்திலிருந்து துளி கூட கெட்ட வாடை வீசாது. பழ வாடை வீசும். இப்படி வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்று அர்த்தம்.

அமினோ அமிலம் என்பது வளர்ச்சி ஊக்கி. இதைத் தெளித்தால் பயிர்கள் பசுமை கட்டி வளர்ந்து நிற்கும். 10 லிட்டர் நீரில் 500 மில்லி அமினோ அமிலத்தைக் கலந்து தெளிக்கலாம். ஒருமுறை தயாரிக்கும் அமினோ அமிலத்தை ஆறுமாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும்போது அமிலத்தை எடுத்துக்கொண்டு வாளியை நன்றாக மூடி வைக்கவேண்டும். நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்தத் திரவத்தை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

வெல்லம் காய்ச்சும் கலை!

“ஒ
ரு டன் கரும்பை கிரஷரில் இட்டுப் பிழிந்தால் 650 லிட்டர் சாறு கிடைக்கும். ஒருமுறை காய்ச்சுவதற்கு 2 டன் கரும்பிலிருந்து சாறு எடுத்துப் பயன்படுத்துவோம். 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் 1,300 லிட்டர் சாற்றை ஊற்றிக் காய்ச்ச வேண்டும். அதிகமாகச் சாறு ஊற்றிக் காய்ச்சினால் பொங்கி வெளியில் வழிந்துவிடும். தீ மூட்டுவதற்குக் கரும்புச் சக்கையையே முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

சாறு காய்ச்சும்போது 100 கிராம் சமையல் சோடா, 100 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். காய்ச்சும்போது மேலே மிதந்துவரும் அழுக்கைச் சல்லடையால் நீக்க வேண்டும். இப்படி இரண்டரை மணி நேரம் காய்ச்சினால், பால் பதத்தில் சாறு பொங்கி அடங்கும். அப்போது 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கிளறினால், பாகு கொப்பரையில் ஒட்டாமல் திரண்டு பதமாக வரும். அடுத்த அரை மணி நேரத்தில், இறுகிய நிலைக்கு வரும். அந்தச் சமயத்தில் பாகை, 10 அடி நீளம் 10 அடி அகலம் 1 அடி உயரம் கொண்ட மரத்தொட்டியில் கொட்டி, இரும்புத் தகடுடன் கூடிய மரக்குச்சியால் நன்கு கலக்கிவிட்டால் உலர் பாகு கிடைக்கும். அதை உருண்டை பிடித்தால் வெல்லமாகிவிடும். அப்படியே உதிர்த்தால் சர்க்கரை கிடைக்கும்” என்கிறார் இளஞ்செழியன்.

அமுதக்கரைசல்

முதக்கரைசல்... இதை ‘நிலவள ஊக்கி’ என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். நோய்த் தாக்குதல் இல்லாமல் பயிர்கள் வளர உதவும். பொதுவாக 15 நாள்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாகக் காணப்பட்டால், வாரம் ஒருமுறைகூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

தயாரிப்பு முறை...

ஒருதடவை போட்ட மாட்டின் சாணம் (எந்த வகை மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), சிறுநீர் ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீரைச் சேர்க்கவேண்டும். இதை 24 மணி நேரம் நிழல்பாங்கான இடத்தில் வைத்தால் அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்குப் பத்து டேங்க் (1 டேங்க்-10 லிட்டர்) அளவுக்குத் தெளிக்கவேண்டியிருக்கும். பாசன நீரிலும் கலந்துவிடலாம்.

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

இப்படித்தான் இயற்கை கரும்புச் சாகுபடி!

ரு ஏக்கர் நிலத்தில் கரும்புச் சாகுபடி செய்யும் விதம் குறித்து இளஞ்செழியன் சொன்ன விஷயங்களைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

தேர்வு செய்த ஓரு ஏக்கர் நிலத்தை 2 சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு 2 டன் மாட்டு எரு, 6 டன் கரும்புச் சக்கை எரித்த கரித்தூள் ஆகியவற்றை நிலத்தில் போட்டு, 3 சால் உழவு ஓட்ட வேண்டும். அடுத்து 7 கிலோ தக்கைப்பூண்டு விதையைப் பரவலாகத் தெளித்து மூன்றரை அடி அகலம், முக்கால் அடி உயரத்தில் நீளவாக்கில் பார் அமைக்க வேண்டும். இரண்டு பார்களுக்கு நடுவில் தொடர்ச்சியாக விதைக்கரும்பை
(கோ-86032) ஊன்ற வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

கரும்பு நடவு செய்த 20-ம் நாளிலிருந்து 40 நாள்களுக்கு ஒருமுறை 800 லிட்டர் அமுதக்கரைசலோடு 500 மில்லி மீன் அமிலத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். நடவு செய்த 40-ம் நாளிலிருந்து 40 நாள்களுக்கு ஒருமுறை 800 லிட்டர் அமுதக்கரைசலோடு 500 மில்லி பஞ்சகவ்யாவை பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

30-ம் நாள் கரும்புக்கு அருகில் வளர்ந்துள்ள தக்கைப்பூண்டுச் செடிகளை மட்டும் வேருடன் பிடுங்கி, மண்ணுக்குள் புதைக்க வேண்டும். இருபது நாள்கள் கழித்து, மற்ற பகுதியில் உள்ள தக்கைப்பூண்டுச் செடிகளை ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழ வேண்டும். 75-ம் நாள் நிலத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். 80-ம் நாள் கரும்பு பயிரைச் சுற்றி மண் அணைத்து விட வேண்டும். அவ்வப்போது தோகைகளைக் கழித்து மூடாக்காக இட்டு வர வேண்டும்.

11-ம் மாதத்துக்கு மேல் கரும்பை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பிறகு நிலத்தில் 2 டன் மாட்டு எரு, 6 டன் கரும்புச் சக்கை எரித்த கரித்தூள் ஆகியவற்றை நிலத்தில் இட்டுத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம் கொடுத்துப் பராமரித்து வர வேண்டும். அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். மறு தழைவு கரும்பு 9-ம் மாதமே அறுவடைக்குத் தயாராகிவிடும்.

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

பஞ்சகவ்யா தயாரிப்பு!

தற்கு ஒன்பது பொருள்கள் தேவைப்படும், நாட்டு மாடு, கலப்பின மாடு என எந்த வகையான மாட்டிலிருந்து கிடைக்கும் பொருள்களையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

தயாரிப்பு முறை: கடலைப் பிண்ணாக்கைத் தயாரிப்பதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பே நீரில் ஊற வைத்து விடவும். பின்பு எல்லா பொருள்களையும் மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் கலந்து நிழலில் வைக்கவும். தூசு, தும்பு படாமல் இருக்க, மெல்லிய துணியால் வேடு கட்டி வைக்கலாம். தினமும் இந்தக் கலவையைக் கலக்கி விட வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளியேறி, நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகும். ஏழு நாள்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.  இதன்மூலம் ஏறத்தாழ 20 லிட்டர் பஞ்சகவ்யா கிடைக்கும்.

10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம் (கீரைக்கு மட்டும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்). ஒரு முறை தயாரித்த பஞ்சகவ்யாவை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இது எல்லா பயிர்களுக்கும் தெளிக்கவல்ல வளர்ச்சி ஊக்கியாகும். விதைநேர்த்தி செய்யவும் பயன்படுத்தலாம்.ஒரு ஏக்கருக்கு, 30 லிட்டர் பஞ்சகவ்யாவுடன் 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசனநீருடன் கலந்துவிடலாம்.

இதனால் மண்வளம் கூடும், அதிகப் பூக்கள் பூக்கும், காய் கனிகள் சுவையாக இருக்கும். பூச்சி நோயும் எளிதில் அண்டாது. விளைச்சலும் கூடுதலாகக் கிடைக்கும். பயிர் வளர்ச்சி குன்றி இருக்கும்போது, இதைத் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். பதினைந்து நாள்களுக்கு ஒருமுறையும் பயிர்களுக்குத் தெளித்து வரலாம். நெல் பயிருக்கு மட்டும் கதிர் வந்தவுடன் தெளிக்கக் கூடாது. அப்படிச் செய்தால், நெல்லின் தோல் கடினமாகி, அது மோட்டா ரக நெல்லாகிவிடும்.