Published:Updated:

இன்னொரு சதுரங்க வேட்டையா? - உஷார்... உஷார்!

இன்னொரு சதுரங்க வேட்டையா? - உஷார்... உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னொரு சதுரங்க வேட்டையா? - உஷார்... உஷார்!

களம்சே.த இளங்கோவன்

லைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம், தேசத்தையே உலுக்கிக்கொண்டிருந்த நேரத்தில், சென்னை நகரச் சுவர்களிலும் கார்களிலும் மின்னிய ஒரு வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அது...
“எட்டிப்போனாலும் தொடலாம்!
தட்டிப் போனாலும் எழலாம்!!
பட்டுப் போனாலும் நடலாம்!!!
உழவு நம் உயிருக்கு நேர்- விரைவில்
‘நம்ம விவசாயம்’..!”     

இன்னொரு சதுரங்க வேட்டையா? - உஷார்... உஷார்!

கவிதை போன்ற இந்த விளம்பர வாசகம் உண்மையிலேயே விவசாயிகளுக்கான குரல்தானா என்ற கேள்வி எழுந்தது. அதைப் பற்றி விசாரித்தபோது, வாரந்தோறும் புதன்கிழமை மதியம், ‘நம்ம விவசாயம்’ சந்திப்பு நிகழ்ச்சி ‘கதவு எண் - 50, ஆற்காடு சாலை, விருகம்பாக்கம்’ என்ற முகவரியில் நடைபெறுகிறது என்ற தகவல் கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்குச் சென்றோம். ஏராளமானோர் அங்கு குழுமியிருந்தனர். சிறிது நேரத்தில், உள்அறைக்கு வருமாறு அனைவருக்கும் அழைப்பு வந்தது. ‘சதுரமாக’ இருந்த அந்த அறைக்குள் சென்றோம். அங்கே, டிப்டாப் உடையில் இருந்த நால்வர், “விவசாயத்தைக் காக்க வந்தவர்களே வாங்க வாங்க!” என வரவேற்றனர்.

அவர்களின் விவசாய ‘வேட்டை’ இங்கிருந்தே தொடங்கியது.

“நமக்கெல்லாம் பீட்சா தெரியும், பர்கர் தெரியும், பிரியாணி தெரியும். இந்த உணவுக்கெல்லாம் பின்னாடி இருக்கிற விவசாயியோட வியர்வை தெரியுமா? அவர்களோட வலி தெரியுமா?” என்றார் நால்வரில் ஒருவரான கார்த்திக்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்னொரு சதுரங்க வேட்டையா? - உஷார்... உஷார்!

“விவசாயம் இல்லைனா இந்த நாடே இல்லை. அதைக் காப்பாத்துற வேலையைத்தான் நாம கையில எடுக்கிறோம். சிறுதுளிப் பெருவெள்ளம். இந்தச் சிறுதுளிகளெல்லாம் (நம்மைக் காட்டிப் பேசுகிறார்) ஒன்று சேர்ந்தால், நம்ம விவசாயத்தைக் காப்பாத்தலாம். அதுவே நம்ம விவசாயம்” என்றவரின் பேச்சை நம்மைத் தவிரச் சுற்றி இருந்தவர்கள் வாய்பிளந்து கேட்டனர். இதையே எதிர்பார்த்திருந்தவராக உற்சாகமான குரலில் மூன்று விஷயங்களைப் பட்டியலிட்டார்.

1. உங்ககிட்ட பணம் இருக்கு. விவசாயத்தைக் காப்பாத்தணும் என்கிற ஆசை இருக்கு. ஆனா, அதை நீங்க இறங்கிச் செய்ய முடியாது என்றால், அந்தப் பணத்தை ஒரு அக்ரிமென்ட் போட்டு நம்ம விவசாயத்துல முதலீடு பண்ணுங்க.

2. எங்ககிட்ட பணம் இல்லை. ஆனால், விவசாயத்தின் மீது ஆர்வமிருக்கிறது. அப்படியென்றால், நம்ம விவசாயம் மூலமாக அக்ரிமென்ட் போட்டுக்கொண்டால், நாங்கள் நிலம் தருகிறோம். அதில் நீங்கள் விவசாயம் செய்யலாம்.    

3. எங்ககிட்ட நிலமும் இல்லை. விவசாயம் செய்வதற்கான இடுபொருள்கள் உள்ளிட்ட எதுவுமே இல்லை என்றாலும் பிரச்னையில்லை. ஆர்வமிருந்தால் போதும். எங்ககிட்ட அக்ரிமென்ட் போடுங்க. ‘நம்ம விவசாயமே’ நிலமும் இடுபொருள்களும் கொடுத்து விவசாயம் செய்ய உதவும்.   

இன்னொரு சதுரங்க வேட்டையா? - உஷார்... உஷார்!

‘‘இந்த மூன்றிலுமிருந்து வருகிற லாபத்தில் பெரும் பங்கு, உற்பத்தியில் ஈடுபடுகிற உங்களுக்கே தரப்படும். குறைந்த பங்கை மட்டும் நாங்கள் எடுத்துக்கொள்வோம். ஏனென்றால், நம்ம விவசாயத்தைத் திறம்பட நடத்த வேண்டுமல்லவா?”  என்றவரிடம், “இதுக்கெல்லாம் எங்கிருந்து பணம் வருது?” என்றார் கோயமுத்தூரிலிருந்து வந்த விவசாயி ஒருவர். “உங்ககிட்ட இருந்துதான்” எனச் சட்டெனப் பதிலளித்த பிரசங்கவாதிகள், தொடர்ந்து, “ ‘பணம் இருக்கு. ஆனா, விவசாயம் செய்ய முடியலை’ என்று சொல்கிறவர்கள் கொடுக்கிற பணத்தை, ‘ஆர்வமிருக்கு ஆனா பணமும் நிலமும் இல்லை’ என்று சொல்கிறவர்களிடம் கொடுப்போம். ஒருவகையில் இது பண்டமாற்று முறை போல்தான்” என்றார். தொடர்ந்து பிரசங்கம் செய்தவர், “நீங்கள் உற்பத்தி செய்கிற விளைச்சலை விற்க ‘நம்ம விவசாயம் - சூப்பர் மார்க்கெட்’ என்ற திட்டமும் இருக்கிறது. நாங்கள் நடத்தப்போகிற இந்தச் சூப்பர் மார்க்கெட்டில், நீங்கள் விளைவித்த பொருள்களைப் பாக்கெட் செய்து, உங்கள் படத்துடன் முகவரியையும் அச்சடித்து வைப்போம். இது, இந்த உலகத்தையே இயக்குகிற விவசாயிக்குச் செய்கிற கௌரவம்” என்றார்.

“அரசிடம்  அனுமதி வாங்கியுள்ளீர்களா? உங்கள் பதிவு எண் என்ன? நம்ம விவசாயம் அமைப்பை யார் நடத்துகிறார்கள்?” எனச் சேலத்திலிருந்து வந்திருந்த விவசாயி ஒருவர் கேள்விகளை அடுக்க...

“நாமெல்லாம் சேர்ந்துதான் நடத்துகிறோம். இதுவரை 2,000 பேர் இத்திட்டத்தில் இணைந்து முதலாளியாக இருக்கிறார்கள். இங்கே உறுப்பினர்கள் எல்லோருமே முதலாளிகள்தான். அரசு அனுமதியை விரைவில் வாங்குவோம். பிரஸ் மீட் வைத்துப் பெரியளவில் விளம்பரப்படுத்த உள்ளோம். எவ்வளவுக்கெவ்வளவு நம்ம விவசாயம் வளர்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு லாபம்” என்றார்கள் உரத்த குரலில்.    

இன்னொரு சதுரங்க வேட்டையா? - உஷார்... உஷார்!

இதற்கிடையே, ஆர்.கே தயாரிப்பில் அன்பரசன் இயக்கத்தில், சி.சத்யா இசையமைப்பில், ‘நம்ம விவசாயம்’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளனர் ‘நம்ம விவசாயம்’ அமைப்பினர். சினிமா பிரபலங்கள் சிலரைக்கொண்டு விளம்பரப் படங்களும் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ‘நம்ம விவசாயம்’ அமைப்பின் அதிகாரபூர்வ குழுவைத் தொடர்புகொண்டோம். கிரண் என்பவர் பேசினார். “விவசாயத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதே நம்ம விவசாயம். இது இல்லாமல், ‘நம்ம கல்வி, நம்ம மருத்துவம், நம்ம கோல்டு ப்ளஸ், நம்ம குடிசை பிராப்பர்ட்டி, நம்ம உணவுகள்’ என மேலும் பல ஐடியாக்கள் இருக்கின்றன. விரைவில் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவோம், இது ஆரம்பம்தான்” என்றார்.

“இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் யார்? இவ்வளவு பெரிய திட்டத்துக்கு முதலீடுகள் எங்கிருந்து வருகின்றன” என்ற கேள்விகளுக்கு “விரைவில் பிரஸ்மீட் வைப்போம். அப்போது தெரிந்துகொள்வீர்கள்” என்று தொடர்பைத் துண்டித்தார். சில மணித்துளிகளில் மீண்டும் தொடர்பு கொண்டவர், “இப்போதைக்குச் செய்தி ஏதும் வேண்டாம் என்று எங்கள் குழு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். அதனால் செய்தி வெளியிட வேண்டாம்” என்றார்.

“ஏற்கெனவே இரண்டு கோடி ரூபாயில் இதேபோல எம்.எல்.எம் மார்க்கெட்டிங் பாணியில் கோல்டு வணிகத்தைத் தொடங்கியவர்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் ரூ.20 கோடி வரை சம்பாதித்துள்ளனர். வட இந்தியப் பெரு முதலாளிகள் சிலரும் இதில் ஈடுபட்டுள்ளனர். சேலம், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டவர்களும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடுசெய்து இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ‘விவசாயிகள், பிற துறையினர், பிரபலங்களை’ 65 நாள்களுக்கு ஓர் இடத்தில் அடைத்து, ‘பிக்பாஸ் பாணி’யில் நிகழ்ச்சி நடத்தும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன” என்கின்றனர் இதன் பின்னணி அறிந்த சிலர்.

இயற்கையாலும் அரசாங்கத்தாலும் வஞ்சிக்கப்பட்டு வாடிப்போயிருக்கிறது விவசாய வர்க்கம். விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் இல்லை, விளைபொருள்களுக்கு நல்ல விலை இல்லை, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லை எனப் பல்வேறு பிரச்னைகளால் கருகிப்போயிருக்கிறது நம்ம ஊர் விவசாயம். இந்த நிலையில், நடிகர்-நடிகைகளை வைத்துக் கவர்ச்சிகர விளம்பரம், ஆலோசனைக் கூட்டம், பண வசூல் எனப் பளபளப்பாக இருக்கிறது இவர்களின் பாதை. இது உண்மையிலேயே விவசாயிகளுக்கு முன்னேற்றப் பாதையாக இருக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பமும்.

அதே நேரம்... ஈமு கோழி, தங்கக் காசு, காந்தப் படுக்கை, எம்.எல்.எம் மோசடிகளும் நம் கண் முன்னே நிழலாடுவதையும் தவிர்க்க முடியவில்லை.

-ஜூனியர் விகடன் இதழிலிருந்து...

‘‘வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்!’’ 

இன்னொரு சதுரங்க வேட்டையா? - உஷார்... உஷார்!“இ
தெல்லாம் சாத்தியம்தானா?” என்ற கேள்வியைக் காவிரி டெல்டா விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணத்திடம் கேட்டோம்.

“ஒரு கிராமத்தில் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால், ஒருவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை, என்னென்ன உணவு தேவை என்று பட்டியலிட்டு, ஒரு மதிப்பிடல் நடக்கும். அதன் பிறகு ஒரு லட்சம் பேரும் இணைந்து, தங்கள் கிராமத்துக்குத் தேவையானவற்றை விளைவித்து, தேவைக்கேற்ப சமமாகப் பங்கிட்டுக்கொள்வார்கள். இந்தக் கிராமத்தைத் தற்சார்புப் பசுமைக் கிராமம் என அழைக்கலாம். இந்தத் திட்டத்தைத்தான், மறைக்கப்பட்ட பொருளாதார மேதை ‘ஜெ.சி.குமரப்பா’, 1945-48-களிலேயே விரிவாகப் பதிவுசெய்துள்ளார். ஒருவகையில், இதைக் கூட்டுறவுப் பண்ணை என்றும் அழைக்கலாம். ‘நம்ம விவசாயம்’ பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், யாராக இருந்தாலும் மக்களைக் கூட்டுப் பங்காளியாக இணைத்துக்கொண்டு விவசாயத்தை விரிவுபடுத்துவது வரவேற்கத்தக்கதே. அதேநேரம், விவசாயத்துக்காக உழைக்க வேண்டும் என்று கருதுபவர்களிடம் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தங்களின் நோக்கம், செயல்பாடுகள், திட்டங்களை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்” என்றார் அழுத்தமாக.