Published:Updated:

வறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்!

வறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்!

மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

‘வெள்ரீ... வெள்ரீ’ பேருந்தில் பயணிப்பவர்கள் பல இடங்களில் கேட்டிருக்கும் வார்த்தைகள் இவை. அழகாகக் கீறப்பட்ட வெள்ளரிக்காய்களைக் கூடையில் அடுக்கி... பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், ரெயில்வே கேட்கள் என வண்டிகள் நிறுத்தப்படும் பல  இடங்களில் கூவிக் கூவி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. பிரயாணத்தின் போதான நா வறட்சியைத் தணிக்கப் பெரும்பாலானோர் வெள்ளரியை வாங்கிச் சாப்பிடுவார்கள். இந்த வெள்ளரிக்கு ஆண்டு முழுவதுமே விற்பனை வாய்ப்பு இருந்தாலும், கோடைக்காலங்களில் மிக அதிகமாக இருக்கும். 

வறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்!

உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு நீர்ச்சத்தை உடலில் நிலைநிறுத்தி வைக்கும் பணியைச் செய்கிறது வெள்ளரி. மேலும், வெள்ளரி பயன்படுத்தி ஜூஸ், சாலட், தயிர்ப் பச்சடி... எனப் பலவித உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இப்படித் தேவை அதிகமாக உள்ள பயிராக இருக்கிறது வெள்ளரி. தண்ணீர்ப் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளில்கூட நன்கு விளைவதால், இதைப் பலரும் சாகுபடி செய்துவருகிறார்கள். இப்படியான வெள்ளரியை இயற்கை முறையில் சாகுபடி செய்துவருகிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் கந்தசாமி.

விருதுநகர் - மதுரை சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சத்திரரெட்டியாபட்டி கிராமம். இக்கிராமத்தில் தொடர்வண்டித் தடத்தின் அருகிலிருக்கிறது கந்தசாமியின் தோட்டம். வெள்ளரி அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த கந்தசாமியை, ஒரு காலைவேளையில் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

இரண்டு வெள்ளரிப் பிஞ்சுகளை நமக்குச் சாப்பிடக் கொடுத்தவர், பிறகு மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார். “பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்தக் கிராமத்துலதான். ஆரம்பத்துல இருந்தே விவசாயம்தான் தொழில். வானம் பார்த்த பூமிங்கிறதால மானாவாரி விவசாயம்தான். நான் ஓவிய ஆசிரியருக்கான பயிற்சி முடிச்சிருக்கேன். அஞ்சு வருஷமா அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியரா வேலை பாக்குறேன். நான் மேல்நிலைப் பள்ளி படிப்பு முடிச்சவுடனேயே விவசாயம் பார்க்க வந்துட்டேன். விவசாயத்தைப் பார்த்துக்கிட்டேதான் ஓவிய ஆசிரியர் பயிற்சிக்கும் போனேன். அப்பா காலத்துல இருந்தே ரசாயன உரம்தான் போடுவோம். உளுந்து, பாசிப்பயறு, துவரை, கொத்தமல்லி, கொண்டைக்கடலை, கம்பு, கேழ்வரகுனு மானாவாரி விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தோம்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்!

மூணு வருஷத்துக்குமுன்ன ஒரு கல்யாண விசேஷத்துல கொடுத்த தாம்பூலப் பையில ‘உயிருள்ள இயற்கை உணவுகள்’ங்கிற புத்தகத்தை வெச்சுருந்தாங்க. அந்தப் புத்தகத்த படிக்கும்போது காய்கறிகளோட மருத்துவக் குணங்கள், ரசாயன உரங்களால வர்ற தீமைகள், இயற்கை விளைபொருள்களோட நன்மைகள் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே, எனக்கு இயற்கை விவசாயத்துமேல ஆர்வம் வந்து, தோட்டக்கலைத்துறை அலுவலகத்துல போய் விசாரிச்சேன். அவங்கதான் இயற்கை விவசாயப் பயிற்சிகள்ல கலந்துக்கங்கனு சொன்னாங்க. அதுபத்தின பயிற்சிகள்ல கலந்துகிட்டுப் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிப்புப் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு, மூணு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். வீட்டுக்குப் பக்கத்திலேயே கிணத்துப்பாசனத்தோடு இந்த நிலம் கிடைச்சது. 

இந்த நிலத்தோட மண், தண்ணீர் ரெண்டையும் பரிசோதனை பண்ணிப் பாத்ததுல தக்காளி, சின்ன வெங்காயம் ரெண்டும் நல்லா வரும்னு சொன்னாங்க. இயற்கை முறையில ரெண்டையும் சாகுபடி செஞ்சேன். ரெண்டுமே நல்லா விளைஞ்சது.அடுத்தடுத்து வெண்டை, பீர்க்கன், மிளகாய், மிதிப்பாகல், கொத்தவரை, வெள்ளரினு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். எல்லாமே நல்ல முறையில விளைஞ்சது. மழை இல்லாததால சொந்த நிலமான ஆறு ஏக்கர் மானாவாரி நிலத்தையும் சும்மாதான் போட்டு வெச்சிருக்கேன். இந்த மூணு ஏக்கர் நிலத்துல மட்டும்தான் இப்போ விவசாயம் செய்றேன். முழு இயற்கைக்கு மாறி மூணு வருஷம் ஆச்சு” என்று, தான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன கந்தசாமி, தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.  

வறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்!

“இங்க 40 சென்ட் நிலத்துல ரெட் லேடி ரகப் பப்பாளி போட்டு அறுவடை முடிஞ்சுடுச்சு. ஒரு ஏக்கர் நிலத்துல வெண்பூசணியையும் 20 சென்ட் நிலத்துல சர்க்கரைப் பூசணியையும் விதைச்சிருக்கேன். 90 சென்ட் நிலத்துல தக்காளிச் சாகுபடி செய்றதுக்காகப் பலதானிய விதைப்புச் செஞ்சிருக்கேன். 50 சென்ட் நிலத்தை ரெண்டா பிரிச்சு நாட்டு வெள்ளரி போட்டிருந்தேன். 25 சென்ட் நிலத்துல பறிப்பு முடிஞ்சது. மீதி 25 சென்ட் நிலத்துல பறிப்பு ஆரம்பிச்சிருக்கு” என்ற கந்தசாமி வெள்ளரி மூலம் எடுத்த மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“25 சென்ட் நிலத்துல 45-ம் நாள்ல இருந்து 121-ம் நாள் வரை காய் பறிச்சேன். பறிப்பு ஆரம்பிச்ச 40 நாள்கள் தினமும் காய் கிடைச்சது. அடுத்த 15 நாள்கள்ல 2 நாள்களுக்கு ஒருமுறை காய் பறிச்சேன். கடைசி 20 நாள்கள்ல 3 நாள்களுக்கு ஒருமுறை காய் கிடைச்சது. ஆக மொத்தம் 1,209 கிலோ வெள்ளரிக்காய் மகசூல் ஆனது. ஒரு கிலோ வெள்ளரி 25 ரூபாய்ல இருந்து 35 ரூபாய் வரைக்கும் விற்பனையாச்சு. இயற்கைக் காய்னு எந்தவிதமான கூடுதல் விலையும் கிடைக்கல. மொத்தக் காய்களையும் விருதுநகர் காய்கறிச் சந்தையிலதான் விற்பனை செஞ்சேன். மொத்தம் 1,209 கிலோ காய்களை விற்பனை செஞ்சது மூலமா 32,255 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல செலவு 12,250 ரூபாய் போக 20,005 ரூபாய் லாபமா கிடைச்சுது” என்றார் கந்தசாமி.

நிறைவாகப் பேசியவர், “இப்போ அடுத்த 25 சென்ட் நிலத்துல பறிப்பு ஆரம்பிச்சிருக்கு. வெள்ளரிக்குச் சந்தையில எப்பவும் தேவை இருக்கு. அதுக்குத் தேவையான தண்ணி மட்டும் கொடுத்துப் பராமரிச்சா, நிறைவான மகசூல் எடுக்க முடியும். அதுக்கு வெள்ளரி ரொம்பத் தோதான பயிர்” என்று புன்னகையோடு சொல்லிய கந்தசாமி, அறுவடைப் பணியில் மும்முரமானார்.  

தொடர்புக்கு, கந்தசாமி, செல்போன்: 90034 88066.   

இயற்கை வெள்ளரிச் சாகுபடி!

25
சென்ட் பரப்பில் வெள்ளரிச் சாகுபடி செய்வது குறித்துக் கந்தசாமி சொல்லிய விஷயங்கள் பாடமாக இங்கே...    

வறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்!

இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் நாட்டு வெள்ளரிக்குப் பட்டம் கிடையாது. இது கொடி வகை தாவரம் என்பதால் உழவும் தேவையில்லை. ஆறு அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவு குழியெடுத்து, ஒருநாள் முழுவதும் காயவிட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழிக்குள்ளும் அரை அடி ஆழத்துக்குமேல் மண்ணை நிரப்பிக் குழியின் 4 மூலைகளிலும் தலா ஒரு விதை என, ஒவ்வொரு குழிக்கும் 4 விதைகளை ஊன்றி மண்கொண்டு மூடித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கால் கிலோ அளவு விதைகளை 250 மில்லி பஞ்சகவ்யாவில் போட்டுப் பிரட்டி, 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைத்தால் வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. விதைத்த 4-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 5-ம் நாளுக்குள் விதைகள் முளைத்து வரும். மண்ணில் ஈரப்பதம் காயாத அளவுக்குத் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சிவர வேண்டும்.

விதைத்த 10, 20 மற்றும் 35-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 12-ம் நாளில் 25 கிலோ மண்புழு உரம், அரைக்கிலோ பாஸ்போபாக்டீரியா, அரைக்கிலோ சூடோமோனஸ், 200 கிராம் அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு செடிக்கும் ஒரு கைப்பிடி அளவு வைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

22-ம் நாள் களை எடுக்க வேண்டும். பிறகு, 30 கிலோ தொழுவுரம், 5 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 2 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 3 கிலோ ஆமணக்குப்பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு குழியிலும் ஒன்றரைக் கைப்பிடி அளவு வைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

22-ம் நாளுக்குமேல், கொடி வீசத்தொடங்கும். ஆங்காங்கு மொட்டுகளும் தென்படும். இந்த நேரத்தில் சிவப்பு நிற வண்டுத் தாக்குதல் இருக்கும். அதனால், 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.

30-ம் நாளுக்குமேல் பூக்கள் பூத்து, 38-ம் நாளுக்குமேல் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். இந்த நேரத்தில் பழ ஈக்களின் தாக்குதல் இருக்கும். அதனால், 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும். விதைத்த 45-ம் நாளுக்குமேல் அறுவடை செய்யலாம்.

சுவையான வெள்ளரிப்பழம்!

வெ
ள்ளரிக்காயைப் போலவே வெள்ளரிப் பழத்தையும் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். பழுத்த பழங்களை வெடிப்பு விழாத நிலையில் பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். சில நாள்களில் இப்பழங்களில் வெடிப்பு ஏற்படும். அப்போது, பழத்தைப் பிளந்து விதைகளை நீக்கிவிட்டு, சதைப்பகுதியில் நாட்டுச் சர்க்கரையைத் தூவி 10 நிமிடங்கள் வெயிலில் வைத்தால், பழம் முழுவதிலும் இனிப்புச்சுவை பரவிவிடும். இதை எடுத்துச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!

லா கால் கிலோ இஞ்சி, பூண்டு, 100 கிராம் பச்சை மிளகாய் ஆகியவற்றை உரலில் இடிக்க வேண்டும். இதை மண்பானையில் போட்டு 1 லிட்டர் தண்ணீரில் 2 நாள்கள் ஊற வைத்து வடிகட்டினால் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் தயார்.

விதைக்கு அலைய வேண்டாம்!

“நா
ட்டு ரக வெள்ளரி என்பதால் அடுத்த போக விதைப்புக்கு விதையைத் தேடி அலைய வேண்டியதில்லை. விளைவிக்கும் வெள்ளரியிலேயே விதைகளை எடுத்துக்கொள்ளலாம். அறுவடை ஆரம்பித்து 3 பறிப்புகள் முடிந்த பிறகு நீளமான, திரட்சியான காய்களை விதைக்காகப் பழுக்கவிட வேண்டும். கொடியில் தானாகவே பழுத்து வெடித்த பிறகு, பழத்தைப் பிளந்து விதைகளை வழித்தெடுக்க வேண்டும். அதோடு, அடுப்புச்சாம்பலைக் கலந்து வெயிலில் காய வைத்துத் துணியில் முடிந்து வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்கக் கூடாது. விதைகளை 40 நாள்கள் வரை விதை உறக்கத்தில் வைத்துப் பிறகு விதைக்கலாம்” என்கிறார் கந்தசாமி.

ஆண்மைக் குறைவைப் போக்கும் வெள்ளரி விதை 

வறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்!வெ
ள்ளரியின் மருத்துவக் குணங்கள் குறித்துத் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்தமருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசியபோது, “வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. செரிமானக் கோளாறு உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடலாம். இதில் கலோரி குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். வெள்ளரி விதைக்கு மருத்துவக் குணம் உண்டு.

சிறுநீரக நோய்களைக் குணமாக்கும் நீர்முள்ளிக் குடிநீரில் இதன் விதை சேர்க்கப்படுகிறது. இவ்விதையைப் பசும்பால் விட்டு மைபோல அரைத்துக் காலை, மாலை என இரு வேளைகள் உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவர, ஆண்மைக்குறைவு நீங்கும். இவ்விதையில் கஷாயம் செய்து குடித்துவர, கல் அடைப்பு மற்றும் சிறுநீர்ப் பாதை எரிச்சல் குணமாகும். பிறந்த குழந்தை மற்றும் சிறு வயது குழந்தைகள் சிறுநீர் கழிக்கவில்லையென்றால் வெள்ளரி விதையை இளம் வெந்நீர்விட்டு அரைத்து அடிவயிற்றில் பூசினால் சிறுநீர் பிரியும்” என்று ஆலோசனை வழங்கினார்.

வேப்பங்கொட்டைக் கரைசல்

2 கிலோ
வேப்பங்கொட்டையை உரலில் இடித்து, அதை மண்பானையில் போட்டு 3 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை இரண்டு நாள்கள் ஊற வைத்து வடிகட்டினால் வேப்பங்கொட்டைக் கரைசல் தயார்.