Published:Updated:

“அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை... உரிமையைக் கேட்கிறோம்!”

“அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை... உரிமையைக் கேட்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை... உரிமையைக் கேட்கிறோம்!”

நாட்டு நடப்புதுரை.நாகராஜன் - படங்கள்: க.மீனாட்சி

கில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பல மாநில விவசாயிகள், விவசாயச் சங்கத் தலைவர்கள் இணைந்து ‘அகில இந்திய விவசாயிகள் விடுதலைப் பயணம்’ (கிஸான் முக்தி யாத்ரா) என்ற பெயரில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

“அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை... உரிமையைக் கேட்கிறோம்!”

நிலமுள்ள விவசாயிகள், நிலமில்லாத குத்தகை விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீன் பிடிப்போர் என அனைத்துத் தரப்பினருக்கும் இழந்த கவுரவத்தை மீட்டுக்கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர் இப்பயணக்குழுவினர். அதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயணம்செய்து விவசாயிகளின் பிரச்னைகளை அறிந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ‘உற்பத்திச் செலவுடன் வாழ்க்கைச் செலவுக்காக 50% விலை நிர்ணயம் எனும் தேசிய விவசாயிகள் கமிஷனின் பரிந்துரையைச் சட்டபூர்வமான உரிமையாக்க வேண்டும்’ என்ற விஷயமும் இப்பயணத்தின்மூலம் வலியுறுத்தப்படுகிறது.

‘ஜெய் கிஸான் அந்தோலன்’ அமைப்பின் தலைவர் வி.எம்.சிங், யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயச் சங்கத் தலைவர்கள் இப்பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி இக்குழுவின் முதல்கட்டப் பயணம் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்டமாகத் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பயணம்செய்த விவசாயிகள் குழுவினர், கடந்த செப்டம்பர் 19-ம் தேதி சென்னையை வந்தடைந்தனர். தொடர்ந்து இரண்டு நாள்கள் தமிழ்நாடு முழுவதும் பயணம்செய்து விவசாயிகள் பிரச்னைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.

தமிழகப் பயணத்தின்போது இப்பயணக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களையும் விவசாயிகளையும் சந்தித்துப் பேசினர். இந்நிகழ்வில், இயற்கை விவசாயியும் நடிகருமான பிரகாஷ்ராஜ், ‘ரீ ஸ்டோர்’ அனந்து, தஞ்சை மாவட்டக் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுந்தர விமல்நாதன், தமிழ்நாடு  வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை... உரிமையைக் கேட்கிறோம்!”

நிகழ்வில் பேசிய நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பின் தலைவரும் போராளியுமான கவிதா குருகந்தி, “விவசாயிகள் இழந்த கௌரவத்தை மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதுதான் இப்பயணத்தின் நோக்கம். கடனிலிருந்து நிரந்தர விடுதலை பெறுவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு பயணம் தொடர்ந்து வருகிறது. நவம்பர் 20-ம் தேதி பயணம் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து அனைத்து நாள்களும் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் விவசாயிகளின் பாராளுமன்றம் நடைபெறும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ‘ஜெய் கிஸான் அந்தோலன்’ அமைப்பின் தலைவர் வி.எம்.சிங், “விவசாயிகளுக்கு இப்போது மதிப்பு இல்லை. விவசாயிகள் இல்லையென்றால் யாருக்கும் உணவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகள் தற்கொலை அதிகமாகியுள்ளது. அதற்கான காரணம் கடன் தொல்லை, வறட்சி ஆகியவைதான். விவசாயிகளின் தற்கொலையைக் குறைத்து விவசாயிகளைக் கவுரவிப்பதற்காகத் தான் இந்தப் பயணம். இதன்மூலம் விவசாயிகளின் பல பிரச்னைகளைக் கேட்டறிந்துள்ளோம். அகில இந்திய அளவில் விவசாயிகளையும் ஒன்றிணைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப் போராடுவோம்” என்றார்.

நிகழ்வில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், “பூமியோட மதிப்பு அதிகமாயிடுச்சு. விவசாயியுடைய மதிப்பு குறைஞ்சு போச்சு. இங்கே விலை மதிப்பு கட்டடத்துக்குத்தான், விவசாயிகளுக்கு இல்லை. விவசாயிக்குத் தண்ணி இல்லைங்கறது பிரச்னை இல்ல; தன்மானம்தான் பிரச்னை. அதனால்தான் விவசாயிகள் தற்கொலை அதிகமா நடக்குது. விவசாயி பிச்சைக்காரன் கிடையாது. அவன் கேக்குறது ‘என் பொருளுக்குச் சரியான விலை கொடுங்க’னுதான். தேர்தல் நேரத்துல மட்டும் விவசாயிகளுடைய கஷ்டம் புரியுற அரசியல்வாதிகளுக்கு, அதுக்கப்புறம் எல்லாம் மறந்துடுது. மாநில அளவில் எங்கே போராட்டம் நடத்தினாலும் அரசாங்கம் அதைக் கலைச்சிவிட்டுடுது. அதனால, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் ஒண்ணா போராடணும். அப்போதுதான் விவசாயிகளுக்குக் கேட்டது  கிடைக்கும். விவசாயிகளை மாநிலவாரியா பிரிக்கக் கூடாது. விவசாயிகள்னா ஒரே கூட்டம்தான்.

விவசாயிகள் அரசாங்கத்துக்கிட்ட பிச்சை கேட்கல, உரிமையைக் கேட்க வந்திருக்காங்க. இது ஒரு பலமான கூட்டம்னு ஆள்கிறவர்களுக்கு இப்போதான் தெரியவந்திருக்கு” என்றார்.

பயணத்தின் நிறைவாக நவம்பர் 20-ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டம் ஆரம்பிக்கிறது. அன்றே டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறார்கள்.