Published:Updated:

“ஆக்கிரமிப்பு அரக்கன்களுக்கு ஆப்பு! அதிகார வர்க்கத்துக்குக் காப்பு?”

“ஆக்கிரமிப்பு அரக்கன்களுக்கு ஆப்பு! அதிகார வர்க்கத்துக்குக் காப்பு?”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஆக்கிரமிப்பு அரக்கன்களுக்கு ஆப்பு! அதிகார வர்க்கத்துக்குக் காப்பு?”

உற்சாக ஜூனியர் கோவணாண்டி...கடிதம்ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

ய்யா நியாயன்மாருங்களே... ஒரு நாளும் இல்லாத திருநாளா, போன தடவை என் பஞ்சாயத்தை உங்களோட ஆரம்பிச்சேன். அது என்னடான்னா, இந்தத் தடவையும் உங்ககூடவே பஞ்சாயத்தைத் தொடர்ற மாதிரியாகிடுச்சி. அதாவது, நீதிமன்றங்கள்ல தரப்படுற தீர்ப்புகளையும், அதையொட்டி நியாயன்மாருங்களான நீங்க எடுத்து வைக்கிற அவதானங்களையும் பத்திக் கடந்த இதழ்லதான் பேசியிருந்தேன். சொல்லப்போனா, ரொம்பவே வருத்தப்பட்டுப் பாரம் சுமந்திருந்தேன். என்ன ஆச்சர்யம், அந்த வருத்தத்தைச் சுமந்துகிட்டு வந்த ‘பசுமை விகடன்’ இதழ்கள் கடைகள்ல தொங்கிக்கிட்டிருக்கும்போதே... மயிலிறகால வருடிவிடற மாதிரி, என்னோட பேச்சுக்கே ஒரு மரியாதை கிடைச்ச மாதிரி, அதிரடியா உத்தரவைப் போட்டுப் புளகாங்கிதப்பட வெச்சுட்டீங்க.  

“ஆக்கிரமிப்பு அரக்கன்களுக்கு ஆப்பு! அதிகார வர்க்கத்துக்குக் காப்பு?”

‘எங்கே... நீதி செத்து, சுண்ணாம்பா போயிடுமோ’னு ரொம்ப ரொம்பப் பயந்து கிடந்தேன். ஆனா, சென்னை உயர் நீதிமன்றத்தோட ரெண்டு நியாயன்மாருங்களும் (நீதிபதி ஹூலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி டீக்காராமன்) அதுக்கு உயிர்த் தண்ணி ஊத்திட்டீங்க. ‘யாரெல்லாம் நீர்நிலைகள் இருக்கிற ஆக்கிரமிப்புகளை அகற்றாம இருக்காங்களோ... அவங்கமேல போலீஸ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கணும். இனிமே ஆக்கிரமிப்பு வழக்குகளை உயர் நீதிமன்றத்துல மட்டும்தான் விசாரிக்கணும்’னு வெச்சீங்க பாருங்க ஆப்பு... செம ஆப்பு!

இந்த விஷயத்தைப் பத்தி பேசுறதுக்கு முன்னாடி உங்களுக்குச் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தவேண்டிய கடமை எனக்கு இருக்குதுங்கய்யா. இதை உங்களுக்கு நான் திருப்பி வெக்கிற ஆப்புனு மட்டும் தயவு செய்து தப்பா நினைச்சுடாதீங்க. நான் சொல்ல வர்றது நூத்துக்கு நூறு உண்மைங்க அய்யா. அதுக்கும் ஒரு நியாயம் செய்துட்டு, மத்தவங்களப் பத்தி பேசுனா நல்லாயிருக்குமேங்கிறதுக்காகத்தான் முதற்கண் வணக்கமா இதை உங்ககிட்ட இப்ப சொல்லி வெச்சுக்கிறேன்.

அதாவது, இப்படி நீர்நிலைகளை ஆக்கிரமிச்சிருக்கிற பட்டியல்ல, நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்களே நிறைய இடம்பிடிச்சுருக்குதுங்கய்யா. குறிப்பா, நீதி தவறினதுக்காக உயிரையேவிட்ட பாண்டிய நெடுஞ்செழியன் ஆண்ட மதுரையில இருக்கிற உயர் நீதிமன்றக் கிளையே ஒரு கண்மாய்க்குள்ளதாங்கய்யா இருக்குது. அப்புறம் ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருக்கிற மாவட்ட நீதிமன்றம்னு சொல்லிக்கிட்டே போகலாமுங்கய்யா. இப்ப ஆக்கிரமிப்புகளை அகற்றணும்னா... இதுங்களையும் சேர்த்துத்தானே அகற்றியாகணும். உலகத்துக்கே ஒரு முன்னுதாரணமா... இந்த நீதிமன்றங்களையெல்லாம் முதல்ல இடம் மாத்தி, வேற இடத்துல கட்டச் சொல்லிட்டு, பழையபடி அந்த நீர்நிலைகளை உயிர்ப்பிக்கணும்னு உத்தரவு போட முடியுமானு யோசிங்க நியாயன்மார்களே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஆக்கிரமிப்பு அரக்கன்களுக்கு ஆப்பு! அதிகார வர்க்கத்துக்குக் காப்பு?”இது சும்மா ஒரு அவதானம்தானுங்க. இதை நீங்க பெருசா எடுத்துக்காட்டியும், உங்களுக்கும் நாட்டுநடப்புப் பத்திக் கொஞ்சம் சொல்லி வைக்கணும்ல, அதுக்காகத்தான் முதல்லயே இதைச் சொன்னேன். இப்போ உங்களோட தீர்ப்பு, உத்தரவுகள், அவதானங்கள் பக்கம் நாம நகர்வோம்.

ரெண்டு நியாயன்மார்களும் இப்ப போட்டிருக்கற உத்தரவு.... சும்மா நெத்தியடிதான். உங்களோட அதிரடியிலயும் நிறைய நியாயமிருக்குதுங்கய்யா. அதாவது, இந்த வழக்கு கிட்டத்தட்ட 10 வருஷத்தை நெருங்கிக்கிட்டிருக்கு. தமிழ்நாட்டு நீர்நிலைகள்ல இருக்கிற ஆக்கிரமிப்புகளை அகற்றணும்னு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது 2009-ம் வருஷம். இத்தனை வருஷமாவும் ஒரு துளிகூட அரசாங்க இயந்திரம் அசையலனா, கோபப்படாம இருக்க முடியுங்களா...
இந்த உத்தரவை நிறைவேத்தவே இல்லனுதான் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடைப் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், 2015-ம் வருஷம் உயர் நீதிமன்றத்துல வழக்குப் போட்டாரு. அப்பவும், உடனடியா ஆக்கிரமிப்புகளை அகற்றணும்... அத்தனை மாவட்ட கலெக்டர்களும் உயர் நீதிமன்றத்துல அறிக்கை தாக்கல் செய்யணும்னு அதிரடியா உத்தரவு வந்துச்சி. ஆனாலும் நம்ம அரசாங்க எந்திரம் அசையலையே!
நீர்நிலைகள்ல இருக்கிற ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு போட்ட 2009-ம் வருஷத்துக்குப் பிறகுதான் சென்னை, விருகம்பாக்கம் ஏரி மொத்தத்தையும் ஆக்கிரமிச்சி... இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எல்லாத்துக்கும் வான் உசரத்துக்கு வீடுகட்டுற திட்டத்தையே போட்டாங்க. இவ்வளவு ஏன், வான்புகழ் வள்ளுவருக்குக் கோட்டம் கட்டி வெச்சிருக்கிறதே... நுங்கம்பாக்கம் ஏரியை ஆக்கிரமிச்சுத்தானுங்கய்யா. இப்படிப் பழைய கதையையெல்லாம் தோண்டித் துருவ ஆரம்பிச்சா... ரொம்பவே நாத்தமடிக்குமுங்கய்யா.

சென்னையில அடையாறு, கூவம் ஆறுகள், இன்னும் ஏரிகள்னு எல்லாத்தையும் ஆக்கிரமிச்சு, பெரிய பெரிய மால்களைக்கூட கட்டி வெச்சிருக்காங்க. கூவத்துல இருக்கிற ஒரு மாலுக்கு எதிர்த்தாப்புல பார்த்தீங்கனா... கிறிஸ்தவ மதத்தைப் பரப்புறதுக்காகப் பெரிய கூடாரத்தைக் கூவத்துக்குள்ள கட்டி வெச்சிருக்காங்க. கொஞ்சம் கோயம்பேடு பக்கம் போனீங்கனா... பெரிய ஓட்டல் ஒண்ணையே கட்டி வெச்சிருக்காங்க.

ஆக்கிரமிப்புகளுக்கு எதிரா அப்பப்ப நடவடிக்கை எடுக்கிற மாதிரி நடிக்கவும் செய்யுறாங்க நம்ம அரசாங்க அதிகாரிங்க. உதாரணத்துக்குச் சென்னை புறநகர்பகுதியில இருக்கிற மாடம்பாக்கம் ஏரியை எடுத்துக்குவோமுங்கய்யா. 2013-ம் வருஷமே அதுல இருக்கிற ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துறதுக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாச்சு. ஆனா, கடைசிக் கட்டத்துல கொஞ்ச ஆக்கிரமிப்புகளை மட்டும் விட்டுட்டு, ‘இது சம்பந்தமா சட்டப் பிரச்னை இருக்கு. இதைப் பத்திப் பேசி, பிறகு அகற்றலாம்’னு சொல்லி அப்படியே விஷயத்தை ஊத்தி மூடிட்டாங்க. அன்னிக்கு 10 சதவிகிதமா இருந்த அந்த ஏரியோட ஆக்கிரமிப்பு, இன்னிக்கு 30, 40 சதவிகிதத்தைத் தாண்டி போயிடுச்சி. சீக்கிரமே ஏரி காணாம போனாலும் ஆச்சர்யப் படுறதுக்கில்லை. இதுல கொடுமை என்னன்னா... ஏரியில இருந்து தண்ணி பாய்ஞ்சி வெளியில வர்ற கலங்கல் பகுதிக்கு நேரா, ஒரு பூங்காவையே உருவாக்கியிருக்கு அந்தப் பகுதி உள்ளாட்சி நிர்வாகம். ஒருவேளை ஏரி நிறைஞ்சி தண்ணியைத் தொறந்துவிட்டா... அந்தப் பூங்காவே காலி. அதுமட்டுமா, இந்த ஏரியோட கரையைக் கடந்த 2015-ம் வருஷ வெள்ளத்தப்ப... மூணு தடவை உடைச்சிவிட்டுருகாங்க ஆக்கிரமிப்பு செய்திருக்கிறவங்க. ஏன்னா, ஏரியில தண்ணி நிறைஞ்சா... அவங்க வீடுகள் எல்லாம் மூழ்கிடுமாம். இதுமட்டுமில்ல. அந்த ஏரியைச் சுத்திப் பெருசு பெருசா பல மாடிக்கட்டடங்களும் வந்தாச்சு. அந்தக் கட்டடத்துல இருக்கிறவங்கள்ல பலரும்கூட்டுச் சேர்ந்துகிட்டுதான் ஏரிக்கரையை உடைச்சிருக்காங்க.

இதுக்கு எதிரா பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கல. இன்னிக்கும்போய்ப் பாருங்க, அந்த ஏரியை நம்பி பல நூறு ஏக்கர்ல விவசாயம் நடக்குது. சென்னையை ஒட்டியே இப்படிப் பிரமாதமான விவசாயம் நடக்குதானு ஆச்சர்யப்பட்டுப் போயிடுவீங்க. ஆனா, ஏரியோட கரையை உடைச்சி விடறதால, வருஷம் முழுக்க நடக்க வேண்டிய விவசாயம்... பாதி நாள்தான் நடக்குது. இப்படி ஏரிகள், ஆறுகள், குளங்கள்னு பட்டியல் போட்டுக்கிட்டே போகலாம்.

இத்தனைக்கும் ஆறு, குளம், ஏரி இதையெல்லாம் காப்பாத்தறதுக்குனு பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்னு பெரும்பெரும் துறைகளே இயங்கிக்கிட்டிருக்கு. மாசமானா ஆயிரமாயிரமா... லட்சம் லட்சமா சம்பளத்தை வாங்கிப் பாக்கெட்டுல போட்டுக்கிற ஊழியர்கள், கரைகளைக் காப்பாத்துறதுக்காவே வேலை பார்க்கிறதா, அந்த அலுவலகப் பட்டியல் அலறுது. ஆனா, இவங்கள்ல பலபேருதான் ஆக்கிரமிப்புக்குத் துணைபோறவங்களே!

அய்யா, ஆக்கிரமிக்கிறதுங்கிறது நம்ம ஜீன்லயே இருக்கும்போல. அதனாலதானே அந்தக் கால ராஜாக்கள் தொடங்கி, இந்தக் காலக் கூஜாக்கள் வரைக்கும் அதை விடாம செய்துகிட்டே இருக்காங்க. ஆக்கிரமிப்புல பல ரகம் இருக்கு. எதை எதையோ ஆக்கிரமிக்கிறாங்க. ஆனா, இந்தக் காடுகளையும், ஆறுகளையும், இயற்கை வளங்களையும் ஆக்கிரமிக்கிறது... தன் தாயோட மார்புக் காம்புகளை அறுத்து எறியறதுக்குச் சமம்னு ஏன் இந்த ஜென்மங்களுக்குத் தெரியல. எனக்குப் புரியலீங்க அய்யா.  ‘இவனுங்களுக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாது... வேற வேற வேட்டைக்காரன் வேணும்’னு, இளைய தளபதி பஞ்ச் குத்துவாரு பாருங்க, அதுமாதிரி, இவனுங்களுக்கெல்லாம் ‘நீதிபதிங்கள்லாம் போதாது.... வேற வேற நியாயன்மாருங்க வேணுமுங்க’. அந்த வகையில நீங்க ரெண்டுபேரும் இப்ப வேற வேற நியாயன்மாருங்க மாதிரி சாட்டையைத் தூக்கியிருக்கிறத பார்க்குறப்ப... புல்லரிக்குதுங்கய்யா.

‘எவனெல்லாம் ஆக்கிரமிப்புகளை அகற்றாம, அரசாங்கச் சம்பளத்தை வாங்கித்தின்னுட்டு, அடுத்தவன்கிட்ட கைநீட்டிக் காசை வாங்கிக்கிட்டு, அரசாங்கச் சொத்துகளை ஆட்டைய போடுறதுக்குத் துணைபோறானோ... அவனையெல்லாம் புடிச்சி ஜெயில்ல போடுங்கனு, போட்டீங்க பாருங்க ஒரு போடு. செம தில்லான விஷயமுங்க.

அதேசமயம் ஆக்கிரமிப்பு தொடர்பா நடவடிக்கை எடுக்காதவங்கள மட்டும் ஆப்பு வெச்சா பத்தாது. ஆக்கிரமிப்பைச் செய்தவங்க... அதுக்குத் துணைபோன அரசியல்வாதிங்க, அதிகாரிங்கனு அத்தனை மாப்புங்களுக்கும் சேர்த்தேதான் வைக்கணும் பெரிய ஆப்பு. அப்பத்தான் நாளப்பின்ன நீர்நிலைகளை ஆக்கிரமிக்கிறவன் பயப்படுவான். குறிப்பா, இந்த வழக்குல உயர் நீதிமன்றம் உத்தரவு போட்ட 2009-ம் வருஷத்துல முதலமைச்சரா இருந்தது கருணாநிதி. அடுத்தாப்புல ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதா (ம்... போய்ச் சேர்ந்துட்டாங்க). நடுநடுவுல ஆட்சியைப் பார்த்துக்கிட்டது ஓ.பன்னீர்செல்வம்.

அடுத்தாப்புல ஆட்சியை ஆட்டையப்போட பார்த்த கும்பல்கிட்ட இருந்து, செமத்தையா ஆட்டைய போட்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி. அதனால, 2009-ம் வருஷத்துல இருந்து, இன்னிவரைக்கும் தமிழ்நாட்டுல பொறுப்புல இருந்த, இருக்கிற அரசியல்வாதிங்க, அதிகாரிங்க எல்லாருமேதான் இந்த ஆக்கிரமிப்புக்குப் பொறுப்பு. அதனால, தயவுதாட்சண்யம் பார்க்காம மொத்தப் பேத்தையும் கூண்டுல ஏத்துங்க. கூண்டோடு ஜெயிலுக்கும் அனுப்புங்க. நாடு மேற்கொண்டு நாசமா போகாம தடுத்து நிறுத்துங்க. உங்களுக்குக் கோடிப் புண்ணியமா போகும்.

இப்படிக்கு, ஜூனியர் கோவணாண்டி.

‘அந்த 13 கலெக்டர்களும் கண்டிப்பா ஆஜராகணும்!’

யர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தமிழ்நாட்டுல மொத்தமுள்ள 32 மாவட்டங்கள்ல, 19 மாவட்ட கலெக்டருங்க ஆக்கிரமிப்பு அகற்றினது தொடர்பான அறிக்கையைக் கோர்ட்டுல தாக்கல் செய்தாங்க. ஆனா, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்பட 13 மாவட்ட கலெக்டருங்க தாக்கல் செய்யவே இல்லை.

அதனால, இந்த 13 கலெக்டர்களையும் நேர்ல ஆஜராகச் சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதிங்க உத்தரவு போட்டாங்க. ஆனா, தமிழக வருவாய்த்துறைச் செயலாளர் சந்திரமோகன் நேர்ல ஆஜராகி, அந்த 13 கலெக்டர்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றினது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தார். அந்தக் கலெக்டருங்க ஆஜராக முடியாததுக்கான காரணங்களையும் சொன்னார். இதை ஏத்துக்காத நீதிபதிங்க, ‘அக்டோபர் மாசம் 12-ம் தேதி அந்த 13 கலெக்டர்களும் நீதிமன்றத்துல கண்டிப்பா ஆஜராகணும்’னு உத்தரவு போட்டிருக்காங்க.

பார்ப்போம்... சாட்டை இன்னும் எதுவரைக்கும் வீசும்னு!