Published:Updated:

“நதிகளை இணைத்தால் நாடு அழியும்..!”

“நதிகளை இணைத்தால் நாடு அழியும்..!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நதிகளை இணைத்தால் நாடு அழியும்..!”

தண்ணீர் மனிதரின் எச்சரிக்கை!நதிநீர்க.சரவணன் - படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

கோயம்புத்தூரில் இருக்கும் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ‘நதிகளை மீட்போம்’ என்று குரல் கொடுத்தபடி கன்னியாகுமரியிலிருந்து இந்தியா முழுவதும் 7 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம்செய்யக் கிளம்பியிருக்கிறார். இதற்கிடையே, ‘இந்தப் பயணத்தின் பின்னணியில் நதிகள் இணைப்பு என்கிற விஷயம் மறைந்திருக்கிறது. இதன் பின்னால் மத்திய அரசின் கரங்கள் இருக்கின்றன’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.  

“நதிகளை இணைத்தால் நாடு அழியும்..!”

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே நதிகள் இணைப்புக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது, நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு நதிகள் இணைப்பு விஷயம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் 14 இணைப்புகளையும் தீபகற்பப் பகுதியில் ஓடும் ஆறுகளில் 16 இணைப்புகளையும் செய்வதற்காக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இமயமலைப் பகுதியில் 2 இணைப்புகள், தீபகற்பப் பகுதியில் 14 இணைப்புகள் என மொத்தம் 16 இணைப்புகளுக்கான சாத்தியங்களைப் பற்றிய அறிக்கைகளையும் தயாரித்துள்ளது மத்திய அரசு.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஒடிசா போன்ற மாநில அரசுகள் இதற்குச் சம்மதம் தெரிவித்து, பல்வேறு கட்டங்களில் ஆயத்த வேலைகள் நடந்துவருகின்றன. நீர் வளத்துறை அமைச்சராகச் சமீபத்தில் நிதின் கட்கரி பொறுப்பேற்ற பிறகு 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 30 நதிகளின் இணைப்புத் திட்டங்களுக்கான முதற்கட்டப் பணிகள், இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் “நதிகள் இணைப்பு என்பது மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும். நாட்டையே அது பிளவுபடுத்திவிடும்’’ என்று கடுமையாக எச்சரிக்கை செய்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ‘இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ என்று போற்றப் படுபவருமான ராஜேந்திர சிங். ஜக்கி வாசுதேவின் நதிகள் மீட்புப் பேரணி, ஆந்திர மாநிலம், விஜயவாடா சென்றடைந்தபோது அங்கே நடைபெற்ற கூட்டத்தில் ஜக்கி வாசுதேவ் முன்னிலையிலேயே, ‘நதிகள் இணைப்பு என்பதை ஒருபோதும் நான் ஆதரிக்கமாட்டேன். நதிகளை மீட்க எப்போதும் துணை நிற்பேன்’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் ராஜேந்திர சிங்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நதிகளை இணைத்தால் நாடு அழியும்..!”

நதிகள் மீட்புப் பரப்புரை குறித்தும் நதிகள் இணைப்பு குறித்தும் சில கேள்விகளுடன் ராஜேந்திர சிங்கிடம் நாம் பேசினோம்.

“தமிழகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே ஈஷா ஆசிரமம் மற்றும் ஆதியோகி சிலை ஆகியவை விதிகளை மீறி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டுப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் உள்ளன. குறிப்பாக, நீரோடும் கால்வாயையே இதற்காக மூடிவிட்டார்கள் என்று நீதிமன்றத்தில் பழங்குடி மக்கள் சார்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. இத்தகைய சூழலில், நீங்கள் ‘நதிகளை மீட்போம்’ பரப்புரைக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது ஏன்?”
 
“எனக்கும் அந்த விமர்சனங்கள் தெரியும். நான் நதிகளை மீட்டெடுக்கும் ஒரு விஷயத்தில் மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த விஷயத்தை விவாதிக்கிறார். அதற்கான ஒரு சூழலை உருவாக்கியுள்ளார். அதனால்தான் ஆதரவு அளிக்கிறேன். நான் கடந்த 35 ஆண்டுகளாக (நீராதாரங்களுக்காக) வேலை செய்கிறேன். என் வாழ்வில் 9 நதிகளை மீட்டெடுத்திருக்கிறேன். என்னால் இவ்வளவு பேரைத் திரட்டமுடியாது. அவர்கள் திரட்டுகிறார்கள். ஜக்கிக்கு நதிகளை மீட்பதற்கான வழிமுறை, அறிவியல் எதுவும் தெரியாது. அதேசமயம், இதுகுறித்து நாம் கவலைப்பட வேண்டாம். நாம் ஆக்கபூர்வமாகப் பங்களிக்கும்போது, அவர்களும் ஆக்கபூர்வமாகப் பங்களிப்பார்கள்.’’

‘‘அக்டோபர் 2-ம் தேதி (நதிகள் மீட்பு குறித்த) முழுமையான ஒரு கொள்கை ஆவணத்தை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்போவதாக ஈஷா தரப்பில் சொல்லியுள்ளார்களே அதைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’’

‘‘அதன் பிரதி என்னிடம் உள்ளது. அதில் ஒன்றுமில்லை. அது 4 பக்க அறிக்கை. மிகவும் ஆரம்பகட்டத்தில் உள்ளது. என்னுடன் 2-3 மணி நேரம் விவாதித்தார்கள். நதிகளுக்கான உரிமைதான் இதன் மையக் கருத்தாக இருக்க வேண்டும் என்று நான் கூறியுள்ளேன். விஜயவாடாவில் நடைபெற்ற நதிகளைப் பாதுகாப்போம் நிகழ்ச்சியிலும் இதுபற்றிப் பேசியிருக்கிறேன்.”

“நதிகள் இணைப்பை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?”


“நதிகள் இணைப்பு என்பது சூழலியல் பேரழிவாக முடியும். என்னுடைய ரத்தத்தையும் உங்களுடைய ரத்தத்தையும் ஆய்வுசெய்யாமல் கலந்தால், எப்படி அழிவு ஏற்படுமோ, அப்படித்தான் அதுவும். ஒவ்வொரு நதிக்கும் தனித்துவமான ஓட்டம் உள்ளது. நதிகள் இணைப்பு, நாட்டைப் பிளவுபடுத்தும். அதன்மூலம் உருவாகும் வழக்குகளை நீதித்துறையால் சமாளிக்க முடியாது. அது,  சூழல் மாசுபாட்டையும் ஊழலையும் அதிகரிக்கும். நிதி ஆதாரப் பேரழிவு ஏற்படும். நதிகள் இணைப்புக்காக நீரை இறைக்க (பம்பிங் செய்வதற்கு) வேண்டுமென்றால், மின்சாரம் எங்கிருந்து வரும். இப்படி, நதிகளை இணைப்பதில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரச்னைகளை என்னால் பட்டியலிட்டுச் சொல்லமுடியும்.’’

‘‘சரி, நதிகளை மீட்டெடுக்க முடியும் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கிறார். நதிகளை மீட்டெடுப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்?’’

‘‘நதியில் தண்ணீர் ஓட வேண்டுமென்றால் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், குறிப்பாக மலைகளிலும் காடுகளிலும் அவற்றின் நீரோட்டத்தை இயல்பாக்க வேண்டும். இல்லையென்றால் மண்ணரிப்பு காரணமாக வண்டலெல்லாம் அடித்துச் செல்லப்படும். பெருவெள்ளம் வரும், அடுத்துக் கடும்வறட்சியும் வரும். அதைத்தான் தற்போது நாம் அனுபவித்து வருகிறோம். நீரோட்டத்தை இயல்பாக்குவது என்பது, நீரானது அதிவேகமாக வராமல், குறிப்பிட்ட வேகத்தில் ஓடிவரும் வகையில் செய்வதுதான்.  

“நதிகளை இணைத்தால் நாடு அழியும்..!”

இதற்கு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (காடுகள், மலைகள், மலையடிவாரங்கள்) மரங்கள் தேவை. இதன்மூலம், நீர்ப்பிடிப்பை அதிகரித்துச் சீரான வேகத்தில் நதிநீரை அதிகநாள் ஆற்றில் ஓடச்செய்ய முடியும். மெதுவான ஓட்டம் இருப்பதால், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். ஒவ்வொரு நதிக்கும் வெள்ள வடிநிலப் பகுதியுள்ளது. எங்கெல்லாம் அது தெளிவாக அறிவிக்கப்படவில்லையோ, அங்கெல்லாம் அவற்றை அடையாளம் காணவும் எல்லையிடவும் உறுதிசெய்யப்பட்ட எல்லையை அரசாங்கம் அறிவிக்கவும் மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நதியின் இருபுறமும் வெள்ள வடிநிலப் பகுதியில் கட்டடங்களோ, மாநகரங்களோ, ஆக்கிரமிப்புகளோ இருக்கக் கூடாது. ஜக்கி வாசுதேவின் நதிகள் மீட்பு இயக்கத்தினர் 1 கி.மீ தூரம் வரை மரங்கள் வளர்க்க வேண்டும் என்கிறார்கள். 1 கி.மீ தூரம் என்றில்லை. எவ்வளவு தொலைவுவரை வெள்ள வடிநிலம் இருக்கிறதோ, அதுவரை வேளாண்பயிர்கள், பழத்தோட்டங்கள், காடுகள் மட்டுமே இருக்க வேண்டும். இதன்மூலம் மண்ணரிப்பையும் ஆற்றில் வண்டல் படிவதையும் தடுக்க முடியும்.

வெள்ள வடிநிலப் பகுதி ‘பசுமை மண்டலம்’ (Green Zone) எனவும், ஆற்றில் நீரோடும் பகுதி ‘நீல மண்டலம்’ (Blue Zone) எனவும், உயர்வெள்ளப் பகுதி (High Flood Level), ‘சிவப்பு மண்டலம்’ (Red Zone) எனப்படும். நதியின் முழு நீளத்துக்குக் குறுக்கேயும் இருபுறமும் நிலத்துக்குள் நீரை அனுப்பும் சிறு அணைகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீராதாரங்கள் இருக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் உயர உயர, நதியில் நீர் ஓடத் தொடங்கிவிடும். இதெல்லாம் நதியின் அறிவியல். ராஜஸ்தான் மாநிலத்தில் உயிரிழந்த நதிகளை, இந்த அறிவியல் அடிப்படையில்தான் நான் மீட்டிருக்கிறேன்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ராஜேந்திர சிங்.

நதிகள் மீட்பா... இணைப்பா? மாற்றி மாற்றிப் பேச்சு!

டந்த மார்ச் மாத இறுதியில் ஈஷா இணையதளத்தில் ஜக்கி வாசுதேவ் எழுதியுள்ள கட்டுரையில் மிகத்தெளிவாக நதிகள் இணைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஆனால், ஜூலையில் நடந்த ‘நதிகள் மீட்போம்’ துவக்க விழா பற்றிய பத்திரிகைச் செய்திகளில், இந்தப் பரப்புரை நதிகள் இணைப்புக்கும் சேர்த்துத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘அறிவியல்பூர்வமாக எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு நதிகளை இணைத்துக்கொள்ளலாம்; சில நதிகளை இணைக்கமுடியும் என்று நான் நம்புகிறேன்’ என்று ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 7-ம் தேதி புதுச்சேரியில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய ஜக்கி வாசுதேவ், ‘நதிகள் இணைப்புக்குச் சட்டம் வேண்டும்’ என்று பேசியிருக்கிறார்.

இத்தகைய சூழலில், “ஜக்கி வாசுதேவ் மாற்றி மாற்றிப் பேசுவதும்... அவருடைய நதிகள் மீட்புப் பரப்புரைக்குப் பல்வேறு அரசுத் துறைகளும் பெருநிறுவனங்களும் ஆதரவு அளித்திருப்பதும், நதிகள் இணைப்புக்காக மத்திய அரசு மறைமுகக் காய்நகர்த்தல்களைச் செய்கிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது” என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.

அதேசமயம், “இது முழுக்க முழுக்க நதிகள் மீட்புப் பயணம் மட்டுமே. இது நதிகள் இணைப்புக்கானது அல்ல” என்று தங்கள் பரப்புரையிலேயே கூற ஆரம்பித்துள்ளது ஈஷா தரப்பு.