Published:Updated:

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15

விளைப்பொருள்களுக்குச் சீரான விலை... விவசாயிகளுக்கும் லாபம்... நுகர்வோருக்கும் லாபம்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

வெகுஜனச் சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

வெகுஜனச் சந்தை, ஆண்டாண்டு காலமாகவே சிறு குறு விவசாயிகளுக்கு எதிராகத்தான் உள்ளது. அவர்களின் விளைப்பொருள்களை விற்பனை செய்யும் சந்தையைக் கட்டுப்படுத்தவோ அதில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவரவோ முடிவதில்லை. பயிர் வளர் சூழல், தவறான உற்பத்தி முறை, மண்ணுக்கும் பருவகாலத்துக்கும் உகந்த பயிர்களைத் தேர்ந்தெடுக்காமை போன்ற காரணங்களால் விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15

எடை விஷயத்தில்கூட விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள். எடையில் மட்டுமே விவசாயிகளுக்கு 15 சதவிகித அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. நியாயமான விலை, உடனடிப் பணப்பட்டுவாடா போன்றவை விவசாயிகளுக்கு முக்கியமான பிரச்னைகளாக இருந்துவருகின்றன. பாதுகாப்பில்லா உணவுப்பொருள், நியாயமற்ற விலை... போன்ற காரணங்களால் நுகர்வோருக்கும் வெகுஜனச் சந்தை நெருக்கடியைத்தான் கொடுக்கிறது. விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருந்த சூழலில்... சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காகவும் பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு நிலைத்த வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கவும் சில தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்ததுதான், சென்னையில் இயங்கிவரும் ‘ரீஸ்டோர் இயற்கை அங்காடி’.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15


விவசாயிகள் விளை பொருள்களுக்கான விலையை நிர்ணயிக்க முடியுமா, இயற்கை முறையில் விளைவித்த தரமான பொருள்களை மாநகரச் சந்தைக்குத் தொடர்ந்து கொண்டுவர முடியுமா, ஆரோக்கியமான விளைபொருள்களை நுகர்வோருக்குச் சரியான விலையில் கொண்டு சேர்க்க முடியுமா, நம்பிக்கை அடிப்படையிலான இந்த வணிக மாதிரியைப் பல இடங்களில் மீட்டுருவாக்கம் செய்ய முடியுமா போன்ற பல கேள்விகளுடன்தான் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.

தொடக்க காலத்தில், சென்னையில் ஒரு சிறுதானிய இரவு உணவு விழாவுக்கு ஏற்பாடு செய்தோம். அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஊக்கம் கொடுத்ததன் உற்சாகத்தில் ஒரு சிறிய ‘கார் ஷெட்’டில் இயற்கை அங்காடியைத் தொடங்கினோம். 

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15

2010-ம் ஆண்டில், ‘இங்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்கிறார்கள்’ என்ற தலைப்பில் ‘பசுமை விகடன்’ இதழில் ரீஸ்டோர் அங்காடி குறித்து ஒரு கட்டுரை இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து, நுகர்வோர் பெருக ஆரம்பிக்க... அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது அங்காடி. இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கு நேரடியாகச் சென்றுபார்த்துத் தானியங்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், மாசாலா பொருள்கள் என்று வாங்கினோம். வாரம் ஒருமுறை காய்கறிகளும் கீரைகளும் வரத்தொடங்கின.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15


 ‘பாலித்தீன்’ பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்து, கெட்டியான காகிதப் பைகளைத் தயாரித்தோம். ஒவ்வொரு சனிக்கிழமையும் காய்கறிகளை இறக்குவது, பிரிப்பது, சுத்தம் செய்வது, அடுக்குவது... எனப் பரபரப்பாக இயங்குவோம். சந்தைகளைத் தாண்டி, விவசாயிகளின்மேல் அக்கறை கொண்ட நல்ல இதயங்களுக்கிடையில் உறவுகளும் பலப்படத் தொடங்கின.

ரீஸ்டோர் வெறும் சந்தையாக மட்டுமே நின்றுவிடாமல், வேளாண்மை, சுற்றுச்சூழல் சம்பந்தமான விவாதங்கள், படத்திரையிடல், விவசாயிகளுடனான கலந்துரையாடல், பண்ணைகளை நோக்கிய பயணம், சிறுதானிய உணவு தயாரிப்புப் பயிற்சிகள்... எனவும் பயணிக்கத் தொடங்கியது. வாரச்சந்தைகள், திருவிழாக்களைப்போலக் களைகட்டின. மாநகரத்து மக்கள் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல், ஒத்த கருத்துள்ளவர்களைச் சந்திக்கவும் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும் அங்கே கூடத் தொடங்கினர்.

வளங்குன்றா வேளாண் முறையில் சூழலுக்குத் தீங்கில்லாமல் விளைவிக்கப்பட்ட பொருள்களை மட்டும் வாங்குவது, சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தே பெரும்பாலான பொருள்களைப் பெறுவது  என்று முக்கியமான பணிகளை முன்னெடுத்தோம்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15

நூறு சதவிகித இயற்கைப் பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்கிறோம்.  பிஸ்கெட், ஊறுகாய் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக இருந்தாலும்... அவை 100 சதவிகித இயற்கைப் பொருள்கள்மூலம் தயாரிக்கப்பட்டது என்பதை உறுதி செய்துதான் பொருள்களை வாங்குகிறோம். ‘ஃபுட் மைலேஜை’ குறைப்பதற்காகப் பெரும்பாலும் சென்னைக்கு மிக அருகிலிருந்துதான் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் உற்பத்தியாகாத கோதுமை, மசாலா பொருள்கள் ஆகியவை மட்டுமே வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப் பட்டன. அவையும் 100 சதவிகித இயற்கைப் பொருள்கள்தான் என்று உறுதி செய்யப்பட்டன. அதேபோலச் சிறு குறு விவசாயிகளின் விளை பொருள்களுக்கும் பாரம்பர்ய ரகங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டன. பெரும்பாலும் உற்பத்தியாளர்களே விலை நிர்ணயிக்க முடியும். பொருள்கள் வாங்கும் பண்ணை, விலை நிர்ணயம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப் பட்டது. நுகர்வோரை நேரடியாக உற்பத்தியாளருடன் இணைப்பதில் கவனம் செலுத்துகிறோம்.

அங்காடி வளர வளர, வேலைப்பளுவைக் குறைக்கப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர். அங்காடியின் தினசரி வேலைகளைப் பணியாளர்கள் பார்த்துக்கொள்ள, வரவு-செலவுக்கணக்கு, வங்கி வேலைகள், பணப்பட்டுவாடா ஆகியவற்றில் இன்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு தொடர்கிறது.
தற்போது பணியாளர்களே நிறுவனத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். சமீபகாலமாக, சமூக அக்கறைகொண்ட, ஓரளவு வருமானத்தைத் தரக்கூடிய ஆரோக்கியமான பணிச்சூழல் நிலவும் நிறுவனமாக  விரிவடைந்துள்ளது.

சுரண்டல் மிகுந்த, சோர்வடையச் செய்யும் வேலைகளுக்கு மாற்றாக, ஆங்கிலம் தெரியாதவர்களின் சுய முன்னேற்றம், வருமானம் மற்றும் மனநிறைவு ஆகியவற்றுக்கு  வழிவகுத்துள்ளோம். பணியாளர்களுக்கு லாபத்தில் ஒரு சிறு பங்கு பிரித்தளிக்கப்படுகிறது. தவிர, பணியாளர்களுக்கான ஆரோக்கியமான உணவு உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம்.

அங்காடி தொடங்கப்பட்ட காலத்தில் அங்ககச் சான்றிதழ்கள் வாங்க, விவசாயிகள் அதிகத்தொகை செலவுசெய்ய வேண்டியிருந்ததால்... இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் நம்பிக்கை அடிப்படையிலும், நேரடிப் பார்வையிலும் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதோடு, வெளி மாநிலங்களிலிருக்கும் பல இயற்கைக் கூட்டமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதால், தரம் மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டன.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15

வெளிச்சந்தையில் விலை அதிகரிக்காத நிலையிலும் அதைவிட 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கொடுத்துக் கொள்முதல் செய்கிறோம். ஆண்டு முழுவதும் காய்கறிகளுக்குச் சீரான விலை வைத்து விற்பனை செய்கிறோம். சுரைக்காய், கத்திரி, தக்காளி போன்ற உள்ளூர்க் காய்கறிகள், ஆண்டு முழுவதும் ஒரு கிலோ 45 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற மலைக்காய்கறிகள், ஆண்டு முழுவதும் ஒரு கிலோ 55 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகள் பாதிப்படைவதில்லை. மாறாக, தொடர்ந்து இயற்கை முறையில் விளைவிப்பதை நோக்கி உந்தப்படுகிறார்கள்.

பாலித்தீன் பைகளுக்கு மாற்றாகக் காகிதப்பைகள் பயன்படுத்தப்பட்ட போதும், அவற்றில் சில இடர்ப்பாடுகளும் இருந்தன. அவற்றின் விலை அதிகமாக இருந்தது. அவற்றில் வைக்கப்படும் பொருள்களில் மழைக்காலங்களில் பூஞ்சணத்தொற்று ஏற்பட்டது. அதனால், ஒரு கட்டத்தில் அதிக அடர்த்திகொண்ட மறுசுழற்சி செய்யத்தக்க பாலித்தீன் பைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆனாலும், இவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகப் பொருள்கள் வாங்கவரும் நுகர்வோரையே பைகளையோ பாத்திரங்களையோ கொண்டுவரப் பழக்கி வருகிறோம். எண்ணெய்க்குச் சில்வர் பாத்திரங்களைக் கொண்டுவரச் சொல்கிறோம் இந்த வணிகத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் மாடித்தோட்டம், நகரத்தோட்டம், வீட்டுக்கல்வி ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள், பயிற்சிகள், பாதுகாப்பான உணவுக்கு ஆதரவான போராட்டங்கள், மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றையும் முன்னெடுத்து வருகிறோம்.

இவ்வளவு இருந்தாலும், ஒரு விவசாயியின் மொத்த விளைபொருள்களையும் எங்களால் வாங்கிவிட முடிவதில்லை. அதனால், விவசாயி மீதிப்பொருள்களுக்கு வெளிச்சந்தையைத்தான் நாட வேண்டியுள்ளது.

சில நேரங்களில், வெளிச்சந்தையில் அதிக விலை கிடைக்கும்போது, விவசாயிகள் இங்கே விற்பனை செய்வதில் தயக்கம் காட்டுவதால் சுணக்கம் ஏற்படுகிறது. இடநெருக்கடி மிகுந்த சென்னையில் விளைபொருள்களைச் சேமித்து வைத்து விற்பதும், பதப்படுத்தி விற்பதும் சவாலான விஷயங்களாகத்தான் உள்ளன. இத்தனை சவால்களையும் மீறித்தான் இயற்கை அங்காடிகள் செயல்பட்டுவருகின்றன.

-விரிவடையும்