Published:Updated:

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”
பிரீமியம் ஸ்டோரி
“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017கண்காட்சிஜி.பழனிச்சாமி - படங்கள்: என்.ஜி.மணிகண்டன், சே.அபினேஷ், கோ.ராகவேந்திரகுமார்

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017கண்காட்சிஜி.பழனிச்சாமி - படங்கள்: என்.ஜி.மணிகண்டன், சே.அபினேஷ், கோ.ராகவேந்திரகுமார்

Published:Updated:
“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”
பிரீமியம் ஸ்டோரி
“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

சென்ற இதழ் தொடர்ச்சி...
 
ரோடு, திருச்சி ஆகிய மாநகரங்களில் 2015-ம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்திவருகிறது ‘பசுமை விகடன்’. இந்த ஆண்டு நான்காவது நிகழ்வாக, மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெற்றது ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2017’. கண்காட்சியின் நான்கு நாள்களிலும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. இக்கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேச்சாளர்கள் ஆற்றிய உரைகளின் சாராம்சங்கள் இங்கே...    

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

இரண்டாம் நாளன்று கருத்தரங்கின் காலை அமர்வில் ‘பாரம்பர்ய நெல் சாகுபடியும் விற்பனை வாய்ப்பும்’ என்கிற தலைப்பில் பேசினார் புதுச்சேரியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி கிருஷ்ணமூர்த்தி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

“ஒரு ஏக்கருக்கு 4 மூட்டை டி.ஏ.பி, 4 மூட்டை யூரியா, 2 மூட்டை பொட்டாஷ் போட்டாதான் நெல் விளைச்சல் எடுக்கமுடியும்னு நம்புன ஆள்கள்ல நானும் ஒருத்தன். 2007-ம் வருஷத்துல ஒருநாள் புதுச்சேரி அடுத்த பாகூர்ல ஒரு விவசாயக் கூட்டம் நடந்தது. அதுல நம்மாழ்வார் ஐயா பேசினதைக் கேட்டுத்தான் இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். பிறகு ‘பசுமை விகடன்’ ஏற்பாடு செஞ்சுருந்த ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிற்சியில கலந்துகிட்டேன். ஒன்பது வருஷமா பூங்கார், மாப்பிள்ளைச்சம்பா, கவுனி, கருங்குறுவை, சீரகச்சம்பா, கிச்சிலிச்சம்பானு பாரம்பர்ய நெல் ரகங்களைத்தான் மாத்தி மாத்திச் சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கேன்.  

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

நெல்லைக் கைகுத்தல் அரிசியாக்கி விற்பனை செய்றேன். பசுமை விகடன்ல வர்ற ‘பசுமைச் சந்தை’ பகுதி மூலமாவே அரிசியை விற்பனை செஞ்சுடுறேன். நிறைய பேருக்குப் பாரம்பர்ய விதைநெல்லைக் கொடுத்துப் பயிர் செய்யச் சொல்லிட்டிருக்கேன். நான் நாலு ஏக்கர்ல நெல் சாகுபடி பண்றேன். தொடர்ந்து நெல்லை விதைக்காம பச்சைப்பயறு, உளுந்துனு மாத்தி மாத்தி விதைப்பேன். உளுந்து அறுவடை முடிஞ்சதும் நெலத்துக்கு ஒரு மாசம் ஓய்வு கொடுத்துட்டுப் பசுந்தாள் பயிர்களை விதைப்பேன். அடுத்து ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தைக் கொட்டி நெல் விதைப்பேன். தோட்டத்துல நிறைய மரம் வளர்த்தா, இலைதழை உரத்துக்குப் பஞ்சமிருக்காது. நான் 36 செ.மீ இடைவெளி கொடுத்து ‘ஒற்றை நாற்று நடவு’ முறையிலதான் நெல் சாகுபடி செய்றேன்” என்ற கிருஷ்ணமூர்த்தி பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைத் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.  

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

அவரைத் தொடர்ந்து ‘தோட்டக்கலைப் பயிர்களும் பருவகாலப் பராமரிப்பு முறைகளும்’ என்ற தலைப்பில் பேச மேடையேறினார், குன்றக்குடி வேளாண்  அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன்.  

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

“விவசாயிகள் தங்களுக்குக் கிடைக்கும் தொழில்நுட்பங்களைத் தவறாது வயலில் பயன்படுத்தி வந்தால் இரண்டு மடங்கு விளைச்சலைப்பெற முடியும். நம் ஊருக்கும் மண்ணுக்கும் ஏற்ற பயிர் எதுவென்று அறிந்து பயிர்செய்ய வேண்டும். விதை முதல் அறுவடை வரை சரியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சாகுபடி செய்தாலும், பல நேரங்களில் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போய்விடுவது வேதனையான விஷயம். அதே நேரத்தில் மண்ணைப் புண்ணாக்கும் ரசாயன விவசாயத்தை விட்டொழித்து, மண்ணைப் பொன்னாக்கும் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் லாபத்தை அதிகரிக்க முடியும்.

ஒரு கைப்பிடி மண்ணில் 5 லட்சம் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ரசாயன உரங்களைப்போட்டு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழித்துவருகிறோம். அதனால், ரசாயன உரங்களைப் படிப்படியாகக் குறைத்து மண்ணை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். பயிரின் நலத்தை  மட்டும் பார்க்காமல், மண்ணுக்குள் இருப்பவற்றின் நலத்தையும் பார்க்க வேண்டும். மண்ணில் தேவையான அளவு துகள் இடைவெளி இருக்கவேண்டும். அப்போதுதான் வேர்களுக்குக் காற்றோட்டம் கிடைக்கும். ரசாயனப் பயன்பாட்டினால் மண் இறுகிவிடும். அதனால், தாவரங்களின் வேர் பரவுவது கடினமாகிவிடும். மண்ணின் தன்மை அறியாத விவசாயம், புண்ணின் தன்மை அறியாமல் செய்யப்படும் சிகிச்சைக்குச் சமம். 

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிப் பயிர்களை நாற்றுவிட்டு நடவு செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தி மற்றும் குழித்தட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். விதைகளை நுண்ணுயிர் உரங்கள்மூலம் விதைநேர்த்தி செய்துதான் விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்யும்போது முளைப்பு விகிதம் அதிகரிக்கும். குழித்தட்டு முறையில் நாற்று வளர்க்க, செறிவூட்டம் செய்யப்பட்ட தென்னை நார்க்கழிவுகளைப் பயன்படுத்தலாம்.

துல்லியப் பண்ணை முறையில் சொட்டுநீர்ப் பாசனம் செய்தால், ஏக்கருக்கு 40 டன் வரை தக்காளி அறுவடை செய்யலாம். பயிர்களில் இடைவெளியை அதிகரிக்கும்போது மகசூல் அதிகரிக்கும். பயிருக்குத் தேவையான திரவ உரங்களைச் சொட்டுநீர்க் குழாய்கள் வழியே கொடுக்கும்போது உரம் ஆவியாவது தடுக்கப்படும். கத்திரிச் சாகுபடியில் காய்ப்புழு மற்றும் தண்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த கடுமையான பூச்சிக்கொல்லி விஷத்தைத் தெளிக்கிறார்கள். ஆனால், இயற்கைப் பூச்சிவிரட்டிகள் மூலமே எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். பதினைந்து நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து வேப்பெண்ணெய் தெளித்து வந்தாலே பூச்சிகளை விரட்டிவிடலாம்.  

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

தோட்டக்கலைப் பயிர்களில் முக்கியமானது ‘மா’. பரம்பரை விவசாயிகள்கூடச் சின்னச்சின்னத் தொழில்நுட்பங்களைச் செய்யாமல் விடுவதால் மகசூலை இழக்கிறார்கள். அப்படியான சின்னத் தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் கவாத்து. மா மரங்களில் கவாத்து  செய்துவந்தால் தண்டுத்துளைப்பான் பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற முடியும். தண்டுத்துளைப்பான் வந்த பிறகு அதைப்போக்க முயற்சி செய்வதைவிட வருமுன் தடுப்பதுதான் சிறந்தது” என்றார்.

மாலை அமர்வில் முதல் நபராக மேடையேறி, ‘நல்ல லாபம்தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு’ என்ற தலைப்பில் பேசினார் திண்டுக்கல்லில் இயங்கிவரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் சிவசீலன்.  

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

“நாட்டுக்கோழி வளர்ப்பு லாபகரமான பண்ணைத்தொழில். புறக்கடைக் கோழி வளர்ப்பு முறையில் குடியிருக்கும் வீட்டில்கூட   கோழி வளர்க்க முடியும். ஆனால், திறந்தவெளியில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதுதான் சிறந்தது. அதில்தான் நாட்டுக்கோழிக்கான தன்மை இருக்கும். பண்ணையில் அடைத்து வளர்க்கும் கோழிகளுக்கு நாட்டுக்கோழியின் தன்மை இருக்காது.  10 பெட்டைக்கோழிகளுக்கு ஒரு சேவல் என்கிற கணக்கில் பராமரிக்க வேண்டும். சேவல் தேர்வில் அதிகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட கழுத்து, விரிந்த நெஞ்சு உடைய சேவல்கள் வீரியமாக இருக்கும்.

சேவலின் பின்னால் நின்று ‘த்தூய்’ என்று குரல் எழுப்பினால் ‘படார்’ என்று பறக்க வேண்டும். அதுதான் நல்ல சேவல். சண்டைக்காகவும் கௌரவத்துக்காகவும் வளர்க்கப்படும் சேவல்கள் 1 லட்ச ரூபாய் வரை விலை போகின்றன.

அதேபோல், நன்றாகத் தீவனம் மற்றும் தண்ணீர் எடுத்துக்கொண்டு சுறுசுறுப்பாகச் சுற்றி வருகிற பெட்டைக்கோழிகளைத்தான் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் தரமான முட்டைகளை அதிகளவு பெற முடியும். மேய்ச்சல் முறையில் வளர்த்தாலும் நாட்டுக்கோழிகளுக்குத் தாது உப்புகள் கலந்த ஊட்டமான அடர் தீவனங்களைக் கொடுப்பது அவசியம்   

“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்!”

பெட்டைக்கோழிகள் அவற்றுக்குப் பிடித்தமான இடங்களில் முட்டை இடும். தினந்தோறும் அவற்றைக் கவனித்து முட்டைகளைச் சேகரிக்க வேண்டும். முட்டைகளை வைக்கோலில் வைத்து, அதை மணல் நிரப்பிய சட்டியில் வைக்க வேண்டும். சரியாக முட்டையிடாத கோழிகள் வாயிலாக அடைகாக்கச் செய்யலாம். 30 முட்டைகளிலிருந்து அதிகபட்சமாக 25 குஞ்சுகள் எடுக்க முடியும். குஞ்சுகளுக்கு நோய்த் தடுப்பூசிகளைக் கட்டாயம் போட வேண்டும். சேவல் குஞ்சுகள் அதிகம் இருந்தால் அவற்றை 6 மாதங்கள் வரை வளர்த்து விற்பனை செய்து விட வேண்டும். கோழிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது ‘இன்குபேட்டர்’ மூலம் முட்டைகளைப் பொரிக்கலாம்.

முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு கோழி வளர்ப்பில் இறங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. அங்கு இலவசமாகவே நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார் சிவசீலன்.

அவர் பேசி முடித்த பிறகு ஏராளமானோர் அவரிடம் கோழி வளர்ப்பு குறித்துக் கேள்வி எழுப்பினர். அனைவருக்கும் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் பதில் சொன்னார் சிவசீலன்.

ஜீரோ பட்ஜெட் முறையில் பப்பாளி, வாழைச் சாகுபடி குறித்து வகுப்பெடுத்து இரண்டாம் நாள் கருத்தரங்கை நிறைவு செய்தார் முன்னோடி இயற்கை விவசாயி சக்திகுமார். ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம் உள்ளிட்ட ஜீரோ பட்ஜெட் இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து விரிவாகப் பேசிய சக்திகுமார், வாழை மற்றும் பப்பாளிச் சாகுபடியில் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் விளக்கினார்.

மற்ற கருத்துரையாளர்களின் உரை வீச்சுகள் அடுத்த இதழில்...