Published:Updated:

வாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்!

வாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்!
பிரீமியம் ஸ்டோரி
வாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்!

மானாவாரிகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: எஸ்.ராபர்ட்

வாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்!

மானாவாரிகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: எஸ்.ராபர்ட்

Published:Updated:
வாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்!
பிரீமியம் ஸ்டோரி
வாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்!

ற்று நீரில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்குக் கையில் அகப்படும் பொருள், எப்படி உயிர் காக்கும் கடவுளாகக் காட்சி தருமோ... அப்படித்தான் மானாவாரி விவசாயிகளுக்கு வரமாக வாய்த்திருக்கின்றன சிறுதானியங்கள். குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களின் வீரிய ரக மக்காச்சோளம், பி.டி பருத்திப் போன்றவற்றைச் சாகுபடி செய்து பெரும் நஷ்டத்துக்குள்ளான விவசாயிகளுக்கு, ஆபத்பாந்தவனாக மறுவாழ்வு கொடுத்துவருகின்றன சிறுதானியங்கள்.  

வாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்!

தமிழ்நாட்டில் அதிகளவில் வீரிய ரக மக்காச்சோளம், பி.டி பருத்தி ஆகியவற்றைச் சாகுபடி செய்யும் மாவட்டங்களில் ஒன்று பெரம்பலூர். இம்மாவட்டத்தில், மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், பருத்தி போன்றவற்றைச் சாகுபடி செய்து நஷ்டமடைந்த விவசாயிகள் நிறைய பேர் உண்டு.

இப்படிப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது ‘பாமரர் ஆட்சியர் கூடம்’ எனும் பொதுநல அமைப்பு.

இந்த அமைப்பினர், இப்பகுதி விவசாயிகளிடம் சிறுதானியங்களைச் சாகுபடி செய்யுமாறு பரப்புரை செய்து வருகிறார்கள். இவர்களது தொடர் முயற்சியால், இப்பகுதி விவசாயிகள் பலரும் சிறுதானியச் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாமரர் ஆட்சியர்கூட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.சரவணன், “மாநிலத் திட்டக் கமிஷன், தமிழ்நாடு அளவில் நடத்திய கணக்கெடுப்பில் கல்வி, மருத்துவம், தனிநபர் வருமானம் உள்ளிட்ட பல அடிப்படைத் தேவைகளில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கியிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, மாநிலத் திட்டக் கமிஷன் துணைத்தலைவராக இருந்த சாந்தஷீலா நாயர், வேப்பூர்ப் பகுதி மக்களின் வாழ்க்கையில் வளர்ச்சியை  ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வுசெய்யும் பணியை எங்களிடம் ஒப்படைத்தார்.

மாநிலச் சமச்சீர் வளர்ச்சி நிதித் திட்டத்தின்கீழ் 2013-14-ம் ஆண்டு வேப்பூர் ஒன்றியத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் எங்கள் அமைப்பு முழுமையாக ஆய்வு நடத்தியது. இப்பகுதி விவசாயிகள், உணவுப் பயிர்ச் சாகுபடியைக் கைவிட்டு, சுமார் 10 ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்களின் பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சாகுபடி செய்துவருவது தெரிந்தது.

அதனால், அந்த விவசாயிகள் சுயசார்பு இல்லாமல், விதை முதல் விற்பனை வரை அனைத்துக்கும் உரக் கடைக்காரர்களையே நம்பியிருக்க வேண்டிய சூழலில் இருந்தனர். மேலும், அதிக விளைச்சலுக்காக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை நாளுக்கு நாள் அதிகரித்ததால், விவசாயத்தில் செலவுகளும் கூடிக்கொண்டே இருந்தன. ரசாயன உரக்கடைக்காரர்களிடம் இடுபொருள்களைக் கடனுக்கு வாங்கி, அவர்களிடமே விளைபொருள்களையும் விற்பனை செய்து வந்ததால்... விவசாயிகளுக்கு மிகக்குறைவான வருமானம்தான் கிடைத்து வந்தது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்!

விவசாயிகளிடம் கணக்கு எதுவும் இல்லாததால், உரக்கடைக்காரர் சொல்வதுதான் வருமானம் என்ற சூழ்நிலையில் குறைவான வருமானத்துடன் மிகவும் சிரமப்பட்டனர். இயற்கைச் சீற்றங்கள் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டால், விவசாயிகளின் கணக்கில் கடன் ஏறிவிடும்.

ஆரம்பகாலங்களில் வரகு, இருங்குச்சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள்தான் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களது உணவுப் பழக்கமும் அவற்றைச் சார்ந்துதான் இருந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில், விவசாயிகள் தற்சார்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததும் எங்களின் ஆய்வில் தெரிய வந்தது. அதனடிப்படையில், இந்த மண்ணுக்கேற்ற சிறுதானியங்களைச் சாகுபடி செய்தால் மட்டுமே இவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும் எனத் தீர்மானித்தோம்” என்ற சரவணன் தொடர்ந்தார்...

“வேப்பூர் ஒன்றியத்திலுள்ள விவசாயிகளுக்குச் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் 2015-ம் ஆண்டில் ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். தொடர்ந்து விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று பரப்புரை மேற்கொண்டோம். ‘சிறுதானியங்களில் எரு மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்யலாம். விதைப்பு, களையெடுத்தல், அறுவடை ஆகியவைதான் வேலைகள். வறட்சி வந்தாலும் நஷ்டம் ஏற்படாது. ஓரளவுக்கு மழை கிடைத்தாலே ஒரு ஏக்கர் நிலத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைக்கும். உற்பத்தி செய்யும் சிறுதானியங்களை நாங்களே கொள்முதல் செய்து கொள்கிறோம்’ என்று விவசாயிகளிடம் எடுத்துச் சொன்னோம்.

ஆனாலும், 2015-16-ம் ஆண்டில் 7 விவசாயிகள் மட்டுமே சிறுதானியச் சாகுபடி செய்ய முன்வந்தனர். அவர்கள் மொத்தமாக ஐந்தரை ஏக்கர் நிலத்தில் வரகுச் சாகுபடி செய்தனர். அப்போது கிடைத்த 3 ஆயிரம் கிலோ மகசூலில் அவர்களது சொந்தத் தேவைக்கு 700 கிலோ வரகை எடுத்துக்கொண்டு மீதி 2,300 கிலோவை எங்களிடம் விற்பனை செய்தனர். ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் விலை கொடுத்தோம்.

2016-17-ம் ஆண்டில் 22 விவசாயிகள் வரகு, குதிரைவாலி, இருங்குச்சோளம் ஆகியவற்றைச் சாகுபடி செய்தனர். அதில் கிடைத்த மகசூலில், சொந்தத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக... 16,500 கிலோ வரகு, 500 கிலோ குதிரைவாலி, 500 கிலோ இருங்குச்சோளம் ஆகியவற்றை எங்களிடம் விற்பனை செய்துள்ளனர். ஒரு கிலோ வரகு 29 ரூபாய், ஒரு கிலோ குதிரைவாலி 34 ரூபாய், ஒரு கிலோ இருங்குச்சோளம் 40 ரூபாய் என்ற விலைக்குக் கொள்முதல் செய்தோம். நடப்பாண்டில் 65 விவசாயிகள் சிறுதானியம் சாகுபடி செய்ய முன்வந்துள்ளனர்.

நாங்கள் கொள்முதல் செய்யும் சிறுதானியங்களை ஆந்திராவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்தோம். அந்த நிறுவனம் விவசாயிகள் கூட்டமைப்புகளிடமிருந்து சிறுதானியங்களைக் கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டி இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்துக்கு விற்பனை செய்ததில் எங்கள் அமைப்புக்கு எந்த லாபமும் கிடையாது. அடுத்தகட்டமாக இப்பகுதியில் நாங்களே சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். அது சாத்தியமாகும்பட்சத்தில், விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும். தற்போது, லாபம் குறைவுதான் என்றாலும், தினசரி உணவு, அடுத்த சாகுபடிக்கான விதை ஆகியவை விவசாயிகளுக்குக் கிடைத்துவிடுகிறது. ரசாயன உரங்கள் தவிர்க்கப்படுவதால் மண்ணும் வளமாகிறது. இதன்மூலம் இவர்களது எதிர்காலமும் வளமாக இருக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

சிறுதானியங்களை உண்பவர்களுக்கு மட்டுமல்ல, விளைவிப்பவர்களுக்கும் வளத்தைக் கொடுக்கும் என்பதைப் பாமரர் ஆட்சியர் கூட அமைப்பினர் நிரூபித்து வருகின்றனர்.

தொடர்புக்கு, செல்போன்:

சரவணன்: 97512 37734

பொன்னுசாமி: 99529 45396

குரு: 73393 27112 

வாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்!

‘‘மழை நல்லா பெஞ்சிருந்தால் அதிக மகசூல் கிடைச்சிருக்கும்!’’

கீழ
பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி, “நான் 2011-ம் வருஷத்துல இருந்து 2 ஏக்கர் நிலத்துல பி.டி பருத்திச் சாகுபடி செஞ்சிக்கிட்டிருந்தேன். ஆரம்பத்துல 6 அடி உயரத்துக்குப் பயிர் வளர்ந்துச்சு. படிப்படியா வளர்ச்சி குறைஞ்சு போயி, போன வருஷத்துக்கு முந்துன வருஷம், மூணேகால் அடி உயரத்துக்குத்தான் பயிர் வளர்ந்துச்சு. ஏக்கருக்கு 6 குவிண்டால்தான் மகசூல் கிடைச்சுது. அதை விற்பனை செஞ்சதுல 28,200 ரூபாய் கிடைச்சது. ஆனா, அதுக்கு நான் செஞ்ச செலவு 30 ஆயிரம் ரூபாய். அதனாலதான் பருத்தியை விட்டுட்டு சிறுதானியத்துக்கு வந்தேன். ஒரு ஏக்கர்ல வரகையும் குதிரைவாலியையும் விதைச்சேன். மழை பெருசா கிடைக்கல. ஆனாலும் ஓரளவுக்கு மகசூல் கிடைச்சது. 120 கிலோ குதிரைவாலி கிடைச்சது. அதை வீட்டுக்கு வெச்சிக்கிட்டேன். 800 கிலோ வரகு கிடைச்சது. அதைக் கிலோ 29 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 23,200 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல செலவு 12 ஆயிரம் ரூபாய் போக,
11,200 ரூபாய் லாபம் கிடைச்சது. சாப்பாட்டுக்கு 120 கிலோ குதிரைவாலி கிடைச்சது” என்றார். ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குரு, “நாங்க தொடர்ச்சியா மூணு வருஷம் மக்காச்சோளத்தைச் சாகுபடி செஞ்சிட்டு இருந்தோம்.

2015-ம் வருஷம், ஏக்கருக்கு 15 குவிண்டால் மகசூல் கிடைச்சது. அதை விற்பனை செய்தப்போ, 18 ஆயிரம் ரூபாய் கிடைச்சது. ஆனா, நாங்க செஞ்ச செலவு 20 ஆயிரம் ரூபாய்க்குமேல. அதனால, போன வருஷம் 2 ஏக்கர் நிலத்துல குதிரைவாலி விதைச்சேன். மொத்தம் 1,200 கிலோ மகசூலாச்சு. ஒரு கிலோ 34 ரூபாய் வீதம் 20,400 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல 8,400 ரூபாய் லாபமா கிடைச்சது.

வரப்போரத்துல விதைச்சுவிட்ட இருங்குச் சோளத்துல 140 கிலோ மகசூலாச்சு. அதுமூலமா 5,600 ரூபாய் வருமானம் கிடைச்சது. மழை நல்லா பெஞ்சிருந்தால் இன்னும் அதிக மகசூல் கிடைச்சிருக்கும்” என்றார்.

இப்படித்தான் சிறுதானியச் சாகுபடி:  வரகு

ரு ஏக்கர் நிலத்தில் 3 டன் எரு போட்டு 2 சால் புழுதி உழவு ஓட்ட வேண்டும். மழை பெய்ததும் மீண்டும் 2 சால் உழவு ஓட்ட வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 6 கிலோ வரகு விதை தேவை. கொக்கிக் கலப்பையில் பலகையை மாட்டி 4 அங்குல ஆழத்துக்கு வரகைத் தெளித்து விதைத்து உழவு ஓட்ட வேண்டும். விதைத்த 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 100-ம் நாள் முதல் 130 நாள்களுக்குள் வரகு அறுவடைக்கு வரும். மழை அளவைப் பொறுத்து மகசூலின் கால அளவு மாறுபடும்.

குதிரைவாலி

ஒரு ஏக்கர் நிலத்தில் 3 டன் எரு போட்டு 2 சால் புழுதி உழவு ஓட்ட வேண்டும். மழை பெய்ததும் மீண்டும் 2 சால் உழவு ஓட்ட வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 5 கிலோ குதிரைவாலி விதை தேவை. கொக்கிக்கலப்பையில் பலகையை மாட்டி 4 அங்குல ஆழத்துக்குக் குதிரைவாலி விதையைத் தெளித்து விதைக்க வேண்டும். பிறகு உழவு ஓட்ட வேண்டும். விதைக்கும்போது விதையுடன் சாம்பல் கலந்து விதைத்தால், எறும்புகளிடம் இருந்து விதைகளைக் காப்பாற்றலாம். அதே சமயத்தில் சாம்பல் கலக்காமல் ஒரு கிலோ விதையைப் பரவலாகத் தூவி விடும்போது அவற்றைச் சாப்பிட வரும் எறும்புகள், மாவுப்பூச்சிகளை அழித்துவிடும்.

விதைத்த 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 95-ம் நாள் முதல் 110 நாள்களுக்குள் குதிரைவாலி அறுவடைக்கு வரும். மழை அளவைப் பொறுத்து மகசூல் கால அளவு மாறுபடும்.