Published:Updated:

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16

200 சதுர அடி அங்காடியில்... ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வியாபாரம்!சந்தைஅனந்து, தொகுப்பு: க.சரவணன்

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16

200 சதுர அடி அங்காடியில்... ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வியாபாரம்!சந்தைஅனந்து, தொகுப்பு: க.சரவணன்

Published:Updated:
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16

வெகுஜனச் சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் கார் ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்திருக்கும் ‘ரீஸ்டோர்’ குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். வெறும் 200 சதுர அடி பரப்பளவில் இருந்த அந்த அங்காடியில், ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் வரை இயற்கை வேளாண் விளைபொருள்கள் விற்பனை நடந்தது. அதன் வெற்றிக்குக் காரணம் சரியான நிர்வாகம், முறையான நிதிக் கையாளல் ஆகியவைதான். சிறிய இடத்தில் இருந்தாலும், நுகர்வோர் நாடி வரத்தான் செய்தார்கள். அதனால், எங்கு ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி நடத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.

இயற்கை அங்காடிக்குப் பளபளப்பான உள் அலங்காரங்கள், குளிர்சாதன வசதிகள் ஆகியவை அவசியமில்லை என்பதை நிரூபித்தது ரீஸ்டோர். சரியான விலையில், நஞ்சற்ற, நம்பகமான பொருள்களை விற்பனை செய்தால், நுகர்வோர் நம்மைத் தேடி வருவார்கள். வெறும் லாப நோக்கத்தை மட்டுமேகொண்டு இயற்கை அங்காடிகளை நடத்துவதால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. லாபம் மட்டும்தான் நோக்கமென்றால், வெகுஜனச் சந்தைக்கும் இயற்கை அங்காடிகளுக்கும் வித்தியாசமே இருக்காது.

இதே சூழ்நிலையில், சிறு இயற்கை அங்காடிகளின் வணிகத்தைப் பெரு நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் அதிகமுள்ளது. பெரு முதலாளிகள் இயற்கைச் சந்தையைக் கையிலெடுத்தால், சிறு விவசாயிகளைக் கண்டுகொள்ளமாட்டார்கள். அதோடு, மொத்தக் கொள்முதல், இடைத்தரகர்கள், சுரண்டல், பொருள்களின் இருப்புக்காலத்தை அதிகரிப்பதற்கான செயல் முறைகள் போன்றவையும் அதிகமாகும். சிறு இயற்கை அங்காடிகளை நடத்த அதிகமானோர் முன் வரும்பட்சத்தில், பெரு நிறுவனங்களின் நுழைவைத் தடுக்க முடியும்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16

ஆனால், சிறுகடைகளை நடத்துவதில் ஏராளமான பிரச்னைகளும் உள்ளன. சிறு கடைகளில் சேமித்து வைக்க வசதி இருக்காது என்பதால், குறைவான அளவில் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். அதனால், விவசாயிகள் பொருள்களைத் தர யோசிக்கலாம். அதிகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடியாது. குறைவான கொள்முதல் என்பதால் போக்குவரத்துச் செலவு அதிகமாகும். ஆனால், கூட்டாக இணைந்து செயல்படுவதன் மூலம், இப்பிரச்னைகளைத் தடுக்க இயலும். பல இயற்கை அங்காடிகள் ஒன்று சேரும்போது முதலீடு, கொள்முதல், போக்குவரத்து, சேமிப்பு, ஆள் பற்றாக்குறை எனப் பல பிரச்னைகளை எளிதில் சமாளிக்கலாம்.

ரீஸ்டோர் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் உரை வீச்சுகளாலும், ‘பசுமை விகடன்’ நடத்திய விழிப்பு உணர்வுக் கூட்டங்களாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்ப ஆரம்பித்தனர். நேரடியாக விவசாயம் செய்ய முடியாத இளைஞர்கள் சிலர், விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அக்கறையுடன் எங்களை அணுகினார்கள். அப்படி வந்தவர்களில் 15 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கொண்டு உருவாக்கியதுதான், சென்னையில் இயங்கிவரும் ‘ஓ.எஃப்.எம்’(OFM) என்று அழைக்கப்படும், இயற்கை விவசாயிகள் சந்தை (Organic Farmers Market). இவர்கள், நடுத்தர வசதியுள்ள மக்கள் வசிக்கும் இடங்களில், சிறுகடைகளை வைத்து, நுகர்வோரையும், சிறு விவசாயிகளையும் இணைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16

இந்தச் சிறு கடைகளுக்கு அனுப்பும் வகையில், விளைபொருள்களைச் சேமித்துச் சுத்தப்படுத்தி, தரம் பிரித்து, பேக்கிங் செய்வதற்காக, ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்தோம். அதே இடத்தில் இயற்கை

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16

விளைபொருள்கள் விற்பனையும் செய்யப்பட்டது. கூட்டுறவு முறையில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்தது. இந்த இளைஞர்கள், சுழற்சி முறையில் இயற்கைப் பண்ணைகளுக்கு நேரில் சென்று... பொருளின் தரம் மற்றும் விவசாயிகளுடனான உறவுகளையும் உறுதி செய்வார்கள். மாதம் ஒருமுறை அனைவரும் இணைந்து கூடிப்பேசித் திட்டமிடுகிறோம். இந்தச் சிறு கடைகள் ஒவ்வொன்றும் தனித்தனிப் பெயரில் இயங்கினாலும், அனைத்துக் கடைகளிலும் ஓ.எஃப்.எம் என்ற பொதுப்பெயர் எழுதப்பட்டிருக்கும். விற்பனை தவிர்த்து, நுகர்வோர் விழிப்பு உணர்வும் இந்தச் சிறுகடைகள்மூலம் நடந்து வருகிறது.

ஒவ்வொரு கடையுமே 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில்தான் தொடங்கப்பட்டன. பொருள்கள் விளையும் ஊர், விவசாயிகளின் விவரம் ஆகியவை அங்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகின்றன. அனைத்துக் கடைகளிலுமே பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது. காய்கறிகளுக்கு ஆண்டு முழுவதும் ஒரே விலைதான் நிர்ணயிக்கப்படுகிறது. பெரு நிறுவனங்களின் பொருள்கள், ஆர்கானிக் பிராண்டுகள் ஆகியவை ஒருபோதும் விற்பனை செய்யப்படுவதில்லை. நுகர்வோரிடமிருந்து வரும் ஆலோசனைகள், புகார்கள் ஆகியவையும் அக்கறையுடன் அணுகப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், இவை வெகுஜனச் சந்தையின் தீங்குகளுக்கு மாற்றாகச் செயல்படுகின்றன. இயற்கை அங்காடி என்பது நஞ்சற்ற உணவை விற்பனை செய்வது மட்டுமல்ல, அதுவொரு சமூகப் பொறுப்பு என்பதை இந்தக் கூட்டு முயற்சியில் ஈடுபடும் அனைவருமே உணர்ந்துள்ளோம்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16

ஓ.எஃப்.எம் மையத்திலுள்ள அலமாரிகள், நாற்காலிகள், கம்ப்யூட்டர் போன்றவை வாடிக்கையாளர்களாலும் நண்பர்களாலும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டவை. அவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை என்றாலும், நல்ல நிலையில் இருந்தன. இந்த மையத்தில் எங்களுக்குத் தேவைப்படும் பொருள்களின் பட்டியல் எப்போதும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். எங்கள் மையத்துக்குப் புதிய பொருள்களை வாங்கக் கூடாது என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளோம். மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது மறு பயன்பாட்டுக்கு உதவும் பொருள்களே இங்கு பயன்படுத்தப் படுகின்றன.

ரீஸ்டோர் தனிக் கடையாக இயங்கி வருகிறது. ஓ.எஃப்.எம் கூட்டு முயற்சியாக இயங்கிவருகிறது. இதை அனைவருமே முயற்சி செய்து பார்க்கலாம். கூட்டுறவுச் செயல்பாடு என்பதுதான் அடிப்படை. பஞ்சாப், ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் இம்முயற்சியை முன்னெடுத்து வருகிறோம். மேலும் பெங்களூருவிலும் இதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களுக்கு வழிகாட்டுவது எங்களின் கடமை. வாருங்கள் கை கோப்போம்! விவசாயிகளையும், நுகர்வோரையும் வாழவைப்போம்.

தொடர்புக்கு,
அனந்து, செல்போன்: 94441 66779.

- விரிவடையும்

இயற்கை அங்காடிகளில் பூச்சி மேலாண்மை!

இயற்கை அங்காடிகளை நடத்துபவர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னை பூச்சிகள்தான். நஞ்சற்ற உணவு என்பதால், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்களில் நிச்சயம் வண்டுகளை எதிர்பார்க்கலாம். எனவே தானியங்களுக்குத் தக்கவாறு சூரிய ஒளியிலோ நிழலிலோ காயவைக்க வேண்டியது அவசியம். சூரிய ஒளியில் காய வைப்பதன்மூலம் சிறந்த முறையில் பூச்சிகளையும், நோய்த்தொற்றுகளையும் நீக்கலாம். அனுபவமுள்ளவர்கள்மூலம்... நெல், சிறுதானியங்கள், பருப்புகள், எண்ணெய் ஆகியவற்றைக் கெடாமல் சேமித்து வைக்கும் பாரம்பர்ய முறைகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

தானியங்கள் கொட்டி வைத்திருக்கும் கொள்கலன், மூட்டைகள் ஆகியவற்றைத் தினமும் அசைத்துவிட வேண்டும். குறிப்பாக அரிசிக்கு அசைத்துவிடுதல் மிக அவசியம். இதன்மூலம் பூச்சிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

காற்றில் உள்ள ஈரப்பதம், அரிசியின் ஆயுள்காலத்தைக் குறைத்துவிடும். காற்றுப்புகாத கன்டெய்னர்களில் வைக்கப்பட்டிருக்கும் அரிசியில் சீக்கிரம் புழுக்கள் வந்துவிடும். அதனால், பாரம்பர்ய அரிசி வகைகளை இரண்டு மாதங்களுக்குமேல் சேமித்து வைக்கக் கூடாது.

சலிப்பதன்மூலமும் தானியங்களிலுள்ள பூச்சிகளை நீக்கலாம். கோதுமை மற்றும் பருப்பு ஆகியவற்றைச் சலிக்க... 2.8 மில்லிமீட்டர் முதல் 3 மில்லிமீட்டர் அளவு துளையுள்ள சல்லடைகளைப் பயன்படுத்த வேண்டும். அரிசி, மக்காச்சோளம், சோளம் ஆகியவற்றுக்கு 2 மில்லிமீட்டர் அளவு துளையுள்ள சல்லடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

காய்ந்த மிளகாய், வசம்பு, மஞ்சள், லெமன் கிராஸ், வேப்பிலை ஆகியவற்றைச் சிறு துணியில் முடிந்து, தானியங்களுக்குள் போட்டுவைத்தால் பூச்சிகள் வராது. ஒரு கிலோ அரிசிக்குப் பத்துக் கிராம் வசம்புப் பொடி எனக் கலந்து வைத்தால் பூச்சிகள் வராது. அவ்வப்போது வேம்பு, நொச்சி, துளசி இலைகளைப் போட்டுச் சாம்பிராணிப் புகையைக் காட்டி வந்தாலும் பூச்சிகள் அழியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism