Published:Updated:

உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!

உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!

பயிற்சி இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!

பயிற்சி இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்குக் கொண்டாட்டம்தான். நாள் முழுவதும் விளையாடியே பொழுதைப் போக்குவார்கள். ஆனால், ஒரு கிராமத்தில் பள்ளி மாணவர்கள் ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும் விவசாயப் பயிற்சி எடுக்கக் கூடி விடுகிறார்கள். இப்படி ஆச்சர்யப்படுத்துவது தூத்துக்குடி மாவட்டம், சக்கிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்தான். இவர்கள் பயனுள்ள முறையில் விடுமுறை நாள்களைக் கழித்துவருகிறார்கள். இவர்களுக்குப் பயிற்சியளிப்பவர் இதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மலையழகு. ஒரு காலைவேளையில், சிறுவர் சிறுமிகளுக்கு விவசாய வேலைகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த மலையழகுவைச் சந்தித்தோம். “நான் எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்கப்புறம், அப்பாவோடு விவசாயம் பாக்க வந்துட்டேன். முப்பத்தேழு வருஷமா விவசாயம் செய்திட்டிருக்கேன். எங்க பகுதி முழுசும் மானாவாரி விவசாயம்தான். உளுந்து, பாசிப்பயறு, தட்டப்பயறு, சோளம்னு விவசாயம் செய்றோம்.

உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!

 உழவுப்பணியில் ஆர்வமுடன் சிறுவர் சிறுமியர்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்க கிராமத்துல மொத்தம் 200 வீடுகள் இருக்கு. முன்னாடி எல்லாருமே விவசாயம்தான் செஞ்சிட்டு இருந்தாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி கூட, எங்க கிராமத்துல 60 ஜோடி வண்டி மாடுகள் இருந்துச்சு. ஆனா, இப்போ ரெண்டு வண்டி மாடுகள் மட்டும்தான் இருக்கு. அந்தளவுக்கு விவசாயம் குறைஞ்சு போயிடுச்சு. ஆம்பிளைங்க எல்லாம் கரிமூட்டம் போடுற வேலைக்குப் போறாங்க. தோட்டத்துல களை எடுத்துக்கிட்டு இருந்த பொம்பளையாளுங்க எல்லாம், நூறு நாள் வேலைக்கும் கரிமூட்டம் போடறதுக்கும் போறாங்க. விவசாயத்த விட்டுடக்கூடாதுங் கறதுக்காக ஒரு சில வீடுகள்ல மட்டும் கலப்பையைப் பத்திரப்படுத்தி வெச்சிருக்காங்க.

இத்தனை நாள் எனக்குச் சோறு போட்ட விவசாயத்தை விட மனசில்லை. லாபமோ நட்டமோ விடாம விவசாயம் செய்திட்டிருக்கேன். ‘அழுது கிட்டிருந்தாலும் உழுதுக் கிட்டிரு’னு சொல்லுவாங்க. நானும் இப்போ வரை அதைச் செய்திட்டிருக்கேன். இதுவரைக்கும் என் நிலத்துல டிராக்டர் இறங்குனதில்லை. மாடு பூட்டிதான் உழவு செய்றேன். இப்படிக் கலப்பையால் ஆழமா உழுது விதைச்சா, ஒரு மழை கிடைச்சாகூடத் தண்ணி நிலத்துக்குள்ள இறங்கி, பயிர் பங்கமில்லாம வெளையும்” என்ற மலையழகு தொடர்ந்தார்...

“என்னோட ரெண்டாவது மகன் ராஜ்குமார், ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளில அஞ்சாம் வகுப்பு படிக்கான். பள்ளிக்கூடத்துல லீவு விட்டா அவனையும் காட்டுக்குக் கூட்டிட்டு வந்திடுவேன். அவனும் ரொம்ப ஆர்வமா  வேலைகளச் செய்வான். உழவு வேலை இருந்தா, மாட்டுக் கழுத்துல மேக்கால் கட்டுறது, தூம்புக்கயிறு கட்டுறதுனு எல்லா வேலைகளையும் செய்வான். உழும்போது கூடவே வருவான். அப்போ எப்படி உழணும்னு அவனுக்குச் சொல்லிக்கொடுப்பேன்.  மாட்டை ஏர்ல பூட்டிவிட்டா, ஒத்தையாவே உழவடிச்சிருவான். சின்னப்பையன்கிறதால மாடுகளைத் திருப்பிவிடுறது மட்டும் அவனால முடியாது. போகப்போகக் கத்துக்கிடுவான்.

உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!

இப்படி இவன் காட்டுல உழவடிக்குறதைப் பார்த்த அவனோட சிநேகிதக்காரப்பயலுக மூணு பேர், ‘எங்களுக்கும் உழவடிக்கச் சொல்லிக்கொடுங்க மாமா’னு கேட்டாங்க. பிறகு, அவங்களுக்கும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படியே ஒவ்வொரு வாரமும் ரெண்டு மூணு பயலுக உழவு கத்துக்கப் புதுசா வர ஆரம்பிச்சாங்க. பொம்பளப் பிள்ளைகளும் வர ஆரம்பிக்க, அவங்களுக்கும் களை எடுக்குறது மாதிரியான வேலைகளைக் கத்துக் கொடுத்திட்டிருக்கேன். உழவு, விதைப்பு, களை எடுக்குறதுனு எல்லா வேலைகளையும் எங்க ஊர் பயலுங்க கத்துக்கிட்டு இருக்காங்க. இப்போ பசங்களும் பிள்ளைகளும் சேர்ந்து மொத்தம் 15 பேர் விவசாயம் கத்துக்க வர்றாங்க. எல்லாருமே அஞ்சாப்பு படிக்கிற பிள்ளைங்க. பிஞ்சு மனசுலேயே ஆர்வம் இருக்கிறதால, நானும் நல்லா கத்துக் கொடுத்திட்டிருக்கேன்” என்றார் உற்சாகமாக.

பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவ மாணவிகளிடம் பேசியபோது, “எங்களுக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு. மலையழகு மாமா பொறுமையா எங்களுக்குச் சொல்லிக் கொடுக்குறார். எங்களை விட்டா நாங்களே எல்லா வேலைகளையும் செஞ்சுடுவோம்” என்றவர்கள் மேழி, கலப்பை, ஏர் அனைத்தையும் காட்டி, எப்படிப் பொருத்தி உழவு செய்வது என நமக்கு விளக்கினார்கள்.

உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!

தொடர்ந்து பேசியவர்கள், “உழவடிக்கும் போது ஆழமா உழுத மண்ணுல இருந்து ஒரு வாசனை வரும் பாருங்க. அந்த வாசனை செமயா இருக்கும். உழவுக்கு அடுத்து விவசாயத்துல முக்கியமானது விதைப்பு. விதைப்புச் சரியா இருந்தாத்தான் பயிர் வளர்ச்சி சரியா இருக்கும். மானாவாரி நிலத்துல விதையை எப்படி வீசி விதைக்கணும்னு மலையழகு மாமா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்று விதைப்பு மற்றும் களையெடுக்கும் பணிகளைச் செய்து காட்டிய சிறுவர்கள், தானியங்களின் பெயர்களைக்கூடச் சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த மாணவர்கள் படித்துவரும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், “எங்க பசங்க விவசாய வேலைகளை ஆர்வமா கத்துக்கிறது, எங்களுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. அவங்களோட விவசாய ஆர்வத்தால பள்ளியிலேயே புடலை, பீர்க்கன், பூசணி, வெள்ளரினு விதைச்சிருக்கோம். அந்தப்பசங்களே தோட்டத்தைப் பார்த்துக்கிறாங்க. இளம் வயசுலேயே விவசாய வேலைகளையும் விவசாயிகளோட கஷ்டத்தையும் எங்க பசங்க தெரிஞ்சு வெச்சிருக்காங்க. அதனால, அவங்க சாப்பிடற சத்துணவுல சோறுல ஒரு பருக்கையைக்கூட சிந்தாம கவனமாச் சாப்பிடுவாங்க. தேவையான அளவுக்குத்தான் சாப்பாடு வாங்குவாங்க. தட்டுல வீணாக்க மாட்டாங்க. எல்லாப் பள்ளிக்கூடங்கள்லயும் இந்த மாதிரி பயிற்சிகளைக் கொடுக்க ஆரம்பிச்சா அடுத்த தலைமுறை நல்லபடியா உருவாகும்” என்றார்.

நிறைவாகப் பேசிய மலையழகு, “என்னோட அரை ஏக்கர் நிலத்தைத் தனியா ஒதுக்கி உழவு போட்டுத் தயாரா வெச்சிருக்கேன். அடுத்த மழை பெஞ்சதும் இந்தப் பசங்களை வெச்சே பாசிப்பயறுச் சாகுபடி செய்து, அதுல விளையுறதை அவங்களுக்கே பிரிச்சுக் கொடுக்கலாம்னு இருக்கேன். தன் கையால உழுது, விதைச்சு, களை எடுத்து, அறுவடை செஞ்சு அதைச் சாப்பிடுறப்போ கிடைக்கிற சந்தோஷம் எதுலயும் கிடைக்காது” என்றார் உறுதியாக.

உழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்!

‘சிறுபிள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அனுபவம் இல்லாத சிறுவர்கள் விவசாயம் செய்தால் பலனளிக்காது என்பதுதான் இதன் அர்த்தம். ஆனால், விவசாயி மலையழகு கொடுக்கும் பயிற்சியால் இனி இந்தச் சிறு பிள்ளைகள் செய்யும் வெள்ளாமை நிச்சயம் வீடு வந்து சேரத்தான் போகிறது.

‘பலகுடை நீழலும் தங்குடைக்கீழ் காண்பர் அலகுடை நீழ லவர்’ - (பல அரசர்களின் குடை நிழல்களையும் தன் குடைக்குக்கீழ் கொண்டுவரும் வல்லமை கொண்டவர்கள் உழவர்கள்) எனும் வள்ளுவனின் வாக்கை இம்மாணவர்கள் மெய்ப்பிப்பார்கள் என நம்புவோம்!

தொடர்புக்கு,
மலையழகு,
செல்போன்: 96777 03721.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism