Published:Updated:

காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!

காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!

#Analysisசூழல் ‘பூவுலகு’சுந்தரராஜன்

காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!

#Analysisசூழல் ‘பூவுலகு’சுந்தரராஜன்

Published:Updated:
காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!

காவிரி நதிநீரில் நமக்கான உரிமையை எழுத்துப்பூர்வமாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. காவிரி நதிநீரை முறையாக வழங்கும்பொருட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும், மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்திவருகிறது. இந்நிலையில் நதிநீர் இணைப்பு என்று சொல்லி மக்களின் கவனத்தைத் திசை திருப்ப பார்க்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. சில நாள்களுக்குமுன்பு பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்துவருவதாகத் தெரிவித்திருக்கிறது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு இந்த மண்மீது நிகழ்த்தப்பட இருக்கும் மிகப்பெரிய வன்முறை என்றே நதிநீர் இணைப்புப் பற்றிச் சொல்வேன். ஏனெனில் பசுமைப் புரட்சியின் விளைவால் ரசாயன உரங்கள் விவசாயத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைவிட விளைவுகள் அதிகம். இந்த விளைவுகளுக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் செலவிட்டு வரும் நிதியும் அதிகம்.

காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!

நாம் நினைப்பதுபோல் இணைத்துக்கொள்ள நதிகள் ஒன்றும் தண்ணீர்க் குழாய்கள் அல்ல. அவை ஒரு சூழல் மண்டலம், கலாசார, பண்பாட்டின் அடையாளம். நதிகள் இந்தப் பூமிக்கு மிகப்பெரிய சூழல் சேவைகளை (Eco System Services) ஆற்றிவருகின்றன. நதிகள் சென்று கடலில் கலப்பது நதியின் உரிமை. இது நதிகளின் நன்மைக்காக மட்டுமில்லை. இந்தப் பூமியில் உயிர்கள் தழைத்து வாழவேண்டுமென்றால், நதிகள் கடலில் கலப்பதுதான் ஒரே வழி. இதைச் சூழல் அறிஞர்கள் நன்கு அறிவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!

நதிநீர் இணைப்பு அரசியல், பொருளாதாரம், நீரியல், சமூகவியல், பல்லுயிரியல், விலங்கியல், மானுடவியல், புவியியல், இயங்கியல், சூழலியல் என்று எந்தப் பார்வையில் பார்த்தாலும் தேவையற்ற, அவசியமற்ற மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகும் திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சர்வதேச நதிநீர்ப் பங்கீட்டு விதிகளின்படி (ஹெல்சின்கி விதிகள்), காவிரி நதியில் தமிழகத்திற்கு உள்ள உரிமை ‘நீர்வழிப் பாதை உரிமை’ (Lower Riparian Rights). இதுபோன்று தமிழகத்துக்கு முழு உரிமையுள்ள காவிரியிலிருந்து நியாயமாக வழங்கவேண்டிய நீரை வழங்காமல் கர்நாடகம் மறுத்துவருகிறது. சொல்லப்போனால் நமக்கான தண்ணீர்த் தேவையைவிட, சூழலுக்கு உகந்த ஆற்றின் நீரோட்டத்தைத்தான் கேட்டு வருகிறோம். காவிரி நதிநீரைப் பெற்றுத்தராத மத்திய அரசுதான், தமிழகத்திற்கு உரிமையே இல்லாத கங்கை நீரைக் கொண்டுவந்து தரப்போகிறதா? அதுவும் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா என ஏழு மாநிலங்களைக் கடந்து கொண்டுவந்து தரப்போகிறதா, அப்படிக் கொண்டுவந்து தருவதற்கு அந்தந்த மாநில அரசுகள் ஒத்துக்கொள்ளுமா?

காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!

இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள தண்ணீர் வழக்குகளின் எண்ணிக்கை 26. உரிமையே இல்லாத கங்கையைக் கொண்டுவருவதாகச் சொல்வதன்மூலம் மத்திய அரசு சொல்ல வருவது என்ன, தமிழ் மக்களே... ‘கவலைப் படாதீர்கள், உரிமையுள்ள காவிரிக்காக நீங்கள் ஏன் போராடுகிறீர்கள், உரிமையில்லாத கங்கையைக் கொண்டுவந்து நாங்கள் தருகிறோம்’ என்பதுதான். நதிகளை இணைக்க வேண்டும் என்கிற குரல் ஏன் மற்ற மாநிலங்களில் இவ்வளவு உக்கிரத்துடன் ஒலிப்பதில்லை, தமிழகத்தில் மட்டும்தான் இந்தக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. யார் யாரெல்லாம் நதிநீர் இணைப்பு (கங்கை - காவிரி இணைப்பு) குறித்துப் பேசுகிறார்களோ அவர்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தடுக்கிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

நதிநீர் இணைப்பும் பொருளாதாரப் பார்வையும்

இந்த நதிநீர் இணைப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகச் சொல்லப்படுவது, இமயமலையிலிருந்து உருவாகும் 14 நதிகளையும் தீபகற்ப நதிகளையும் ஒன்றோடொன்று இணைப்பது. பிறகு ஓர் இடத்தில் கங்கை நதியுடன் காவிரியை இணைக்க வேண்டும் என்பதை முன்வைக்கிறது. இந்தத் திட்டத்துக்குத் தற்போது சுமார் 7 லட்சம் கோடி செலவாகும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் இது சாத்தியமா?

இன்றைய கணக்கின்படி நதிநீர் இணைப்புத் திட்டம் முழுவதையும் செய்துமுடிக்கச் சுமார் 20 லட்சம் கோடி செலவாகும். அதுவும் இனிவரும் ஆண்டுகளில் இன்னும் செலவுகள் அதிகமாகும். திட்டச் செலவுகள் அதிகரிக்கும் என்பதற்கு நம் கண்முன்னால் இருக்கும் உதாரணம் கூடங்குளம் திட்டத்தின் அலகுகள் 1 மற்றும் 2. கூடங்குளம் திட்டம் ஆரம்ப நிலையில் ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 13 ஆயிரம் கோடி. ஆனால், திட்டம் முடியும்போது அதன் செலவு 22 ஆயிரம் கோடி. நதிநீர் இணைப்பு முழுவதையும் செய்து முடிக்கும்போது அதன் மொத்தச் செலவு 30 லட்சம் கோடியைத் தொடலாம் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

காவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்!

மேற்சொன்ன திட்டச் செலவுகளைத்தவிர, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது கட்டப்படும் அணைகள், கால்வாய்கள் மற்றும் ஏனைய அடிப்படைக் கட்டுமானங்களைப் பராமரிப்பதற்கு (தூர்வாருவது, செப்பனிடுவது) ஆண்டுக்குச் சுமார் 2 லட்சம் கோடி வரை தேவைப்படும். மேலும், மத்தியக் காவல்படைபோல், நீர்வளப் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டு, நதிநீர் இணைப்பிற்காகக் கட்டப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களும், மத்திய நீர்வளப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். அப்படிச் செய்வதன்மூலம் மட்டுமே அந்தந்த மாநிலங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணைகள் கட்டுவதும் தங்கள் மாநிலத்தில் புதிதாக வரும் கால்வாய்களில் தங்கள் இஷ்டத்திற்குச் செயல்படுவதையும் கட்டுப்படுத்த முடியும். இந்த நீர்வளப் பாதுகாப்புப் படைக்கு ஆகும் செலவுகள் தனி.

இவ்வளவு பணம் செலவழித்த பிறகும் நாடு முழுவதற்கும் தண்ணீரைக் கொண்டுபோய்ச் சேர்க்கமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பதுதான் பதிலாக வரும். நாட்டிலுள்ள அனைத்து நதிகள், ஏரிகள், குளங்கள், குட்டைளைத் தூர்வாரி சீரமைத்து, அதை ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு 30 லட்சம் கோடி ரூபாயில் 10 சதவிகிதத் தொகைதான் செலவாகும். தன்னார்வலர்கள் நிறையபேர் சொற்பத் தொகையில் நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்து வருகிறார்கள். முதலில் அதைச் செய்யலாம். பிறகு, அறிவியல் ரீதியாக நீர்நிலைகளைப் பாதுகாப்பது பற்றி யோசித்துச் செயல்படலாம்.

நதிநீர் இணைப்புத் திட்டம் பொருளாதாரத்தில் பேரழிவைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது உண்மை. மக்கள் இதன்பொருட்டு விழிப்போடு இருப்பது அவசியம். தண்ணீர் வருகிறதே என்பதால், கண்மூடித்தனமாக ஆதரவுக்கரம் நீட்டுவது, நாளைக்கு மிகப்பெரிய சூழல் பிரச்னைகளைக் கொண்டுவந்து நம்முன் நிறுத்தும். அன்று நாம் இருக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக நம் சந்ததிகள் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.